ஏவி.எம்.ராஜன் – புஷ்பலதா தம்பதியின் பாதையை மாற்றிய வாழ்க்கை அதிசயம்
1935ஆம் ஆண்டு பிறந்த ஏவி.எம்.ராஜனுக்குத் தற்போது 76 வயதாகிறது. தீவிர இந்து பக்தராக இருந்தவர், சினிமா துறையில் 20 ஆண்டுகளில் 52 படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். வயது மாற்றத்தின் காரணமாக நடிப்பை விடுத்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். தொடர் நஷ்டம் ஏற்பட்டது. நிலபுலன், சொத்து, கார் பங்களாக்களை இழந்தார். மேலும் 15 லட்ச ரூபாய் கடன். படம் எடுக்க வழியில்லை. மீண்டும் நடிக்க முடியாது. உடல் மொழிந்து உருமாறியிருந்தது. தற்கொலை முயற்சி செய்யப்போய் ஒரு கட்டத்தில் இவர் கிறிஸ்துவ மதத்தைத் தழுவினார். தன்னை ஏசுவின் அடிமை என்றே அழைக்கத் தொடங்கினார். இவருக்குக் கடன் கொடுத்தவர்கள் 15 லட்ச ரூபாயைத் திரும்பத் தரவேண்டாம் என்று கூறிவிட்டார்கள். முழு நேர கிறிஸ்துவ பிரசாரகராகத் தன்னை மாற்றிக்கொண்டார்.
சினிமா வாழ்க்கை
1935ஆம் ஆண்டு திருச்சி அருகில் உள்ள புதுக்கோட்டையில் பிறந்த ராஜனின் இயற்பெயர் சண்முகசுந்தரம். தந்தை சிறந்த முருக பக்தர். சேவை செய்ய ஆசிரமத்தை நிர்வகித்து வந்தார்.
ஏவி.எம். ராஜன் புதுக்கோட்டையில் உள்ள கிறிஸ்டியன் ஸ்வீடன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார் அங்கு மார்ட்டின் மதுரம் என்பாரிடம் கல்வி பயின்றதோடு அவரிடம் வேதாகமத்தை முழுமையாகப் படித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். அவரது பெற்றோர் அவரைக் காவல் துறை அதிகாரியாகவே விரும்பினார். ஆனால் ஒரு விபத்தில் ராஜனின் ஒரு கை எலும்பு முறிந்தது. அதனால் அவரது ஆசை நிராசையானது. சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் பணியாற்றினார். சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. தனது தந்தையின் நண்பர் பாடலாசிரியர் கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் உதவியால் சினிமாவில் நடிக்க முனைந்தார்.
(எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் இடம்பெற்ற குற்றம் புரிந்தவன் வாழ்விலே என்ற பாடலையும், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற படத்தில் வரும் எளியோரை தாழ்த்தி என்ற பாடலும் உள்பட பல பாடல்களை எழுதியுள்ள கவிஞரான இவர் நடிக்க வாய்ப்பும் தேடிக் கொடுத்தார்.
அதன்படி, 1957ஆம் ஆண்டு கண்ணதாசன் தயாரிப்பில் வெளியான ‘சிவகங்கைச் சீமை’ என்ற படத்தில் சில காட்சிகளில் தோன்றினார் ஏவி.எம்.ராஜன். படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் காட்சிகளின் நீளம் கருதி ராஜனின் காட்சிகள் மட்டும் வெட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாடலாசிரியர் கு.சா.கிருஷ்ணமூர்த்தி தான் பாட்டெழுதும் திரைப்படங்களில் ராஜனுக்கு வாய்ப்புத் தேடிக் கொடுத்தார்.
பிரபல நகைச்சுவை நடிகர் டி.எஸ்.துரைராஜ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான ‘ஆயிரங்காலத்துப் பயிரு’ என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் ஏவி.எம். நிறுவனத்தில் மாதச் சம்பள கலைஞராக இணைந்தார். ஆரம்பத்தில்; நூறு ரூபாயில் ஆரம்பித்த இவரது மாதச் சம்பளம் 250 ரூபாயாக உயர்ந்தது.
1963ல் ஏவி.எம். தயாரிப்பில் ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ‘நானும் ஒரு பெண்’ படத்தின் மூலம் ஹேண்ட்சம் ஹீரோவாக மாறினார். இந்தப் படத்தின் மூலம் ராஜன் என்று அறிமுகமானவர் அடுத்தடுத்த படங்களில் ஏவி.எம்.ராஜன் ஆனார்.
இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. எம்.ஜி.ஆருடன் நவரத்தினம், சிவாஜியுடன் பார் மகளே பார், ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு, தில்லானா மோகனாம்பாள், கலாட்டா கல்யாணம், சிவகாமியின் செல்வன், மனிதரில் மாணிக்கம் மற்றும் எஸ்.எஸ்.ஆருடன் அல்லி, எம்.ஆர்.ராதாவுடன் எங்க வீட்டு பெண், ஜெமினி கணேசனுடன் வீர அபிமன்யு, பந்தயம், திருமகள்,
கே.பாலசந்தரின் மேஜர் சந்திரகாந்த், முத்துராமனுடன் கொடி மலர், சந்திரபாபுவுடன் தட்டுங்கள் திறக்கப்படும், பி.ஆர்.பந்துலுவின் நம்ம வீட்டு லட்சுமி, சோ.வுடன் மனம் ஒரு குரங்கு, ஜெய்சங்கருடன் ஜீவனாம்சம், ரஜினியுடன் தாய் மீது சத்தியம், பில்லா, தீ போன்ற படங்களில் நடித்து நடிப்பில் தனி முத்திரை பதித்தார்.
துளசிமாடம், சித்ராங்கி, என்னதான் முடிவு, கற்பூரம், சக்கரம், பூவும் பொட்டும், அன்னையும் பிதாவும், அனாதை ஆனந்தன், தரிசனம், புகுந்த வீடு, மணிப்பயல், துலாபாரம், மகளுக்காக ஆகிய படங்கள் இவரது மாபெரும் நடிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கின.
எம்.எம்.ஏ. சின்னப்பா தேவரின் தயாரிப்பில் 1975ஆம் ஆண்டு வெளியான ‘திருவருள்’ படத்தில் இவர் நடிப்பு பார்ப்பவர்களுக்கு பக்தியைப் பொங்கவைக்கும் நடிப்பை செலுத்தியிருப்பார்.
இவர் கடைசியாக நடித்த தமிழ்ப்படம் வீரன் வேலுத்தம்பி. தயாரிப்பாளராக இவர் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். ‘கற்பூரம்’ படத்தில் நடித்த இவருக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மீனாட்சியை மணம் புரிந்தார். 3 மகன்கள், 1 மகள் உள்ளனர். தொடர்ந்து தன்னுடன் நடித்த புஷ்பலதாவைக் காதல் மணம் செய்தார். இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
1988 முதல் ராஜன் முழுநேர கிறிஸ்தவ போதகரானார். அதன் பிறகு திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடிப்பதை நிறுத்தினார். இவரது மனைவி புஷ்பலதா பிறப்பால் கத்தோலிக்கர். இவர் கோவையைச் சேர்ந்தவர். ராஜனின் மதமாற்றத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பமும் முழுநேர ஊழியம் செய்து வருகிறது.