அவைதீகத்தில் விளைவது அழகு

 அவைதீகத்தில் விளைவது அழகு

நாவலாசிரியர், கவிஞர் துரை.நந்தகுமார் எழுதிய ‘ம்மா’ கவிதை நூல் வெளியீட்டு விழா 2.4.2023 ஞாயிறு மாலை எழும்பூர் இக்ஸா அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன், அமிர்தம் சூர்யா, மானா பாஸ்கர், மா.வான்மதி ஆகியோர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பசுமைக்காவலர் வானவன் வரவேற்புரை நிகழ்த்தினார். டாக்டர் எஸ். வரதராஜன் அவர்கள் நூலை வெளியிட, டாக்டர் எம். நடராஜன் அவர்களும் இன்ஜினியர் ரமேஷ் அவர்களும் நூலைப் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார் பிரியா மனோகரன்.

கவிஞர் துரை.நந்தகுமார் தனது தாயார் மறைவை நினைவுகூரும் வகையில் அவரது 72 வயதை நினைவுறுத்தும் 72 கவிதைகளை இந்த நூலில் உணச்சிவயப்பட்டு எழுதி உள்ளார். அந்த அரங்கில் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் வே.எழிலரசு நூல் குறித்து உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து தன் முகநூல் பக்கத்தில் எழுதிய ஆய்வுரை இங்கே…

“நண்பர் துரை.நந்தகுமார் எழுதிய ‘‘ம்மா…” நூல் வெளியீட்டு நிகழ்வில் அரங்கம் நிறைந்திருந்ததன் காரணம் நந்தா கவிதைகளில் உள்ள ஈர்ப்பு மட்டுமல்ல, எல்லோருக்குள்ளும் ஒரு எம்.ஜி.ஆர். இருக்கின்றார். அவர் ஆழ்மனதில் ‘தாயில்லாமல் நானில்லை’ என்று பாடிக்கொண்டே இருக்கிறார்.

எனது உரையில் நந்தாவுக்கும் எனக்குமான உறவு நெருக்கமானதற்குக் காரணம் பாக்கியம் சங்கர் & சு.வெங்கடேசன் என்று குறிப்பிட்டேன்.

சங்கரின் ‘நான்காம் சுவர்’ மற்றும் சு.வெ.வின் ‘வேள்பாரி’ ஆனந்த விகடனில் வந்த போது வாரா வாரம் இருவரின் படைப்புகள் குறித்துப் பேசிக் களிப்போம். சங்கர் வான்மதியின் பாவையர் மலரில் ‘தேநீர் இடைவேளை’ எழுதியபோதே நான் அவரின் தீவிர வாசகன்.

எனக்கும் நந்தாவுக்கும் ஒன்றுபோல் இருக்கும் வாசக ருசி எங்கள் பிணைப்பை உறுதியாக்கியது. இதை எழுதும் இந்தக் கணத்தில் தோன்றுகிறது.

வேள்பாரியும் நான்காம் சுவரும் வெவ்வேறு வகைமைகள். இரண்டையும் கொண்டாடும் மனநிலை எப்படி?

நா.சுவர் எதார்த்த எழுத்து. வேள்பாரி வரலாறு பிசைந்த புனைவு.

சங்கருடையது மக்கள் மொழி. வட்டார  வழக்கு. அதுவும் தொல்காப்பியம் சொல்வதாகச் சொல்லப்படும் இழிசனர் வழக்கு.

வேள்பாரியோ செவ்வியல் நடை. முன்னது நிகழ். பின்னது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை.

முன்னதில் கண் எதிரே உலவும் மாந்தர்கள். தோட்டிகள், கட்டணக் கழிப்பறை காவலர், பறை அடிப்போர், பிணம் அறுப்போர், சுடலை பணியாளர், சாவுக்கூத்து ஆடுவோர், கஞ்சா, சல்பட்டா  சொண்டி சோறு, எக்செட்ரா.. ஒயிட் காலர்ஸ் பாஷையில் தெருப்பொறுக்கிகள். நுனி நாக்கு இங்கிலீஷ் மேதைகளுக்கு uncivilized bastards.செந்தமிழ் செல்வர்களின் வசை மொழியில் ‘பலாபட்றை’

ஆனால் வெங்கடேசன் படைப்பில்  உயிர்த்தெழுந்தவர்கள் வேளிர். சாதித் திமிரோடு நான் வேளாளன்டா என்று இரகசிய பூணூல் வருடிகள் தங்கள் ஜீன் என்று சொல்லிக்கொள்ளும் வேளிர் என்றாலும் அவர்கள் இவர்கள் அல்ல.

சு.வெ.வின் படைப்பில் உயிர்கொண்டு உலவியவர் ஆதிகுடிகள்.

சங்கரின் படைப்பிலும் ஆதி குடிகள்தான்.

மூவேந்தர்களுக்குப் பரம்பு மக்கள் காட்டுப் பசங்க.

நம்மள மாதிரி பாதுகாப்பான வாழ்க்கை கெடச்சவங்களுக்கு சங்கரின் படைப்பு மாந்தர்கள் ‘காட்டானுங்க’

இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்த பரம்பை அழித்தவை பேரரசுகள்.

சங்கர் படைப்பில் வரும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துக் கொண்டிருப்பவையும் பேரரசுகள்தான்.

எழுது முறைமையில் கால வரைதலில் மாற்றங்கள் இருந்தாலும் இரண்டு படைப்புகளின் கலை நோக்கமும் ஒன்றே என்பதை எங்கள் இருவரின் ஆழ்மனங்கள் அறிந்துகொண்டன போலும். அதனால்தான் இரண்டு பேரையும் கொண்டாடி இருக்கிறோம்.

“ம்மா…” நூல் அறிமுக நிகழ்வில் நான் உரையாற்றியதை நண்பர் ரியாஸ் எனக்கு அரசியல் கட்டுரைகள் எழுத வருமென நான் அறியச் செய்தவர். அவர் அரங்கில் இருந்தது மகிழ்ச்சி.

என் கதைகள் கல்கியில் பிரசுரமாகக் காரணமாக இருந்த அமிர்தம் சூர்யா அரங்கில் இருந்தார்.

என் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளைத் தொடக்க காலத்திலிருந்தே தனது ‘கல்வெட்டு பேசுகிறது’ இதழில் பிரசுரித்த கவிஞர் சொர்ணபாரதி வந்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும். என்னை எழுத்தாளராக நிலை நிறுத்தியவர் இந்த மூவரே!

‘முகவை’ வருவதாக இருந்தார். கடைசி நேரத்தில் குறுக்கிட்ட பணியில் வர முடியவில்லை. He is always on the wheels.’எந்திரங்களோடு பயணிப்பவர்’.

வட சென்னையின் பெருமிதங்களில் ஒருவரான கனகா பாலன் அரங்கில் இருந்தார். அவரின் கதை மொழி சிலாகித்துக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று.

காட்டுக்கு விறகொடிக்கப் போன

நிறை மாத சூலி சரசு

வெயில் கொடுமை தாளாமல்

மரத்தின் நிழலில் அமர்கிறாள்.

அது முள்மரம்.

கனகா எழுதுகிறார்

“முள் மரமாக

இருந்தாலும் நிழலென்ன

குத்தவா போகிறது?”

“பாறைக்குளத்து மீன்கள்” தொகுப்பு குறித்து தனியாக இன்னொரு நாள் எழுதுகிறேன்.

தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவரும் சிறந்த சிறுகதை எழுத்தாளருமான கவிஞர் தங்க ஜெயபால் (ஜோதி) அரங்கில் இருந்தார்.

அவரின் ‘முகாம் வாசலில் கடவுளின் புலம்பல்’ மற்றும் ‘கவிதைக்காரி’ நூல்களைக் கொடுத்தார். கடவுளின் புலம்பல் ஏற்கெனவே வாசித்துவிட்டேன். (அணிந்துரை எழுதுவதற்காக.) ஆனால் வாசிப்பு இன்பத்திற்காக இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

‘அம்மா’ இலக்கியம் என்றாலே முன்பெல்லாம் மாக்ஸிம் கார்க்கிதான் நினைவில் வருவார்.

இப்போது கவிஞர் நிமோஷினி விஜயகுமார் ‘அம்மா அட்டிகை நான்’ தொகுப்பு. மூன்று பத்தாண்டுகளுக்கு முன்பே கவிதை வாசகர்களின் கவனத்தை கவ்விய முக்கிய தொகுப்பு என்றுதான் ஆரம்பம் செய்தேன்.

சரி.

‘அம்மா’ கவிதைகள் அகத்திணையா? புறத்திணையா?

தலைவி குறித்து அதாவது காதலி குறித்து அதாவது so called பொண்டாட்டி குறித்து எழுதினால் டவுட்டே இல்லை. அகம்தான். ஆனால் இந்த அம்மாக்கள் எழுதுன பாட்டெல்லாம் அல்லது அம்மாக்கள் Feelingsஐ சொல்ற பாட்டெல்லாம் ஏங்க புறநானூறுல வருது?

‘ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே’ (பு.நா: பாடல்: 312) எழுதுனவர் புலவர் பொன்முடியார். Maternity ward ல அட்மிட் ஆனதுமே எழுதியிருப்பார் போலும்.

எல்லா அம்மாவும் பெத்த புள்ளை கையில் வேல் எடுத்துக் கொடுத்து தலை சீவி வெள்ளுடை உடுத்தி ‘செல்க செருக்களம்’ என்று போர்ப் பறை ஒலிக்கும் திசை நோக்கி விரல் நீட்டியிருக்கிறார்கள்.

சங்க இலக்கியத்தை நான் ஆழமாக கற்றவனில்லை. reference readingதான். அதாவது நுனிப்புல் வாசிப்பு. நுனிப்புல் ருசியை பசுக்களே அறியும். விசும்பும் அறியும்.

நந்தா தனது கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயத்தைக் கேட்டபோது “ஏன் இவ்வளவு அவசரமா எழுதணும்? வெளியிடணும்”னு கேட்டேன்.

அவர் சொன்னார்: “கண்ணீரின் ஈரத்தை உலரும் முன்பே  பதிவாக்கி விட வேண்டுமென்ற துடிப்பு”.

அதுவும் சரிதான்.

கொஞ்ச நாளாச்சுன்னா கா.நா.சு. அவுங்க அம்மா பத்தி எழுதுனா மாதிரி ஆயிடும்.

அது என்ன கா.நா.சு. கவிதை?

கா.நா.சு. தனது அம்மா, அப்பா இருவரின் மரணத்தைக் குறித்தும் கவிதை எழுதி இருக்கிறார். கவிதையின் தலைப்பு ‘நினைவுப் பாதை’. தலைப்பில் ஒரு தகவல் உணர்த்தப்பட்டிருக்கிறது. அவர்கள் இறந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுதப்பட்ட கவிதை அது என்பதை.

“இரவு சாப்பிட உட்கார்ந்ததும்

பாட்டி சாதம் போட்டு சாம்பார்

வார்த்ததும்

பக்கத்து அறையில்

உரக்க முனகல் கேட்டு

எழுந்து போய் பார்க்க

செத்து கிடந்த தாய் உருவம்

அடியோடு

மறந்துவிட்டது

ஆனால்…”     

எப்படி மறக்க முடியும்?

மறக்க கூடுமெனில்

அதற்கான காரணங்கள் இருக்கக்கூடும்.

அடுத்து தந்தையின் மரணத்தை எழுதும்போது தாயின் மரணம் மறந்து போனதற்கான காரணத்தை ஊகிக்க முடிகிறது.

“ஆனால் தாயை இழந்தவன் அழ வேண்டிய மாதிரியா அழுதாய் என்று மறுநாள் பாட்டி கேட்டது மட்டும் பசுமையாய் நினைவில் பதிந்திருக்கிறது.

தகப்பன் இறந்தபோது சாக வயது வந்துவிட்டது கருமத்தில் கண்ணாக இருந்தது கண்ட புரோகிதர் என்ன சிரத்தை என்ன சிரத்தை என்று வைதிகமாகப் பாராட்டியது நினைவில் இருக்கிறது.”

இந்தக் கவிதையை வாசிக்கும்போது கவிஞனின் குடும்பத்தின் பின்னணியை குல ஆச்சாரங்களை நினைவில் நிறுத்தி வாசித்தால் கவிதையின் ஆழம் புரியும்.

அந்தக் குடும்பத்தில் இறப்புக்கு மரியாதை என்பது சடங்குகளில் இருக்கிறது.

மரணம் நிகழ்ந்த வீட்டில் மனித மனங்கள் முழு பிரக்ஞையோடு இயங்க மறுக்கின்றன.

“இழப்பின் வலியை மறக்கடிக்கும்

வேலையை மதம் சார்ந்த சடங்குகள்

ஏற்றுக் கொள்கின்றன.

அவை வலியையும் துயரத்தையும் மட்டுமல்ல, நிகழ்வையே கொஞ்சம் மறக்கடித்து விடுகின்றன.”

அந்தக் கோபம் கவிதையின் இறுதிப் பகுதியில் வெளிப்படுகிறது.

“குப்பையைக் கூட்டி அப்புறப்படுத்த

உயிரற்ற உடலை எடுத்தெரிக்க

எத்தனை சடங்குகள் எத்தனை புராண சப்பைக்கட்டுகள்

என்று நினைத்ததும் நினைவில் இருக்கிறது.”

ஆக, கவிஞனுக்கு மூன்று விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கின்றன.

முதலில் பாட்டியின் வசவு.

அதற்குக் காரணம் மரணத்திற்குப் பின் வந்த சடங்குகள்.

ஆக, பாட்டியின் ஏசலில் உள்ள நியாயம் கவிஞனுக்குப் புரிகிறது. அம்மாவின் மரணத்தில் அழாததன் குற்ற உணர்வு அவனை எரிக்கிறது.

இரண்டாவது ஞாபகம் புரோகிதர் பாராட்டு.

ஆனால் அந்தப் பாராட்டு கவிஞனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

எனவே தான் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் (புனிதமாக பொதுப்புத்தியில் கருதப்படுபவை) கவிஞனின் கவிதையில் குப்பைகள் ஆகிவிடுகின்றன.

மூன்றாவது ஞாபகம் சடங்குப் பொருட்களை குப்பைகள் என்று நினைத்தது.

கவிதையின் இறுதி வரிகள் மிகவும்

முக்கியமானவை.

“புத் என்ற நரகம்

மெய்யோ பொய்யோ

என்று காணும்

நினைவு பெற்று இருக்கின்றேன்.

தெரிந்து சொல்வேன்.”

இந்தத் ‘தெரிந்து சொல்வேன்’ என்பதில் உள்ள கிண்டல், கூற்று

முறைமையில் உள்ள மென்மையினால் போர்த்தி மறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நமக்கு அந்தத் தொந்தரவுகள் இல்லை. அதனால்தான் ‘ம்மா…’ சொல்கிறது.

“மின் தகனத்தின்போது

அம்மாவை ஏற்றுக்கொண்ட நெருப்பு

அதீத அழகாய் இருந்தது.

கலந்து விட்டார்;

மறுநாள் கடலில் கரைத்தும் விட்டேன்.

தற்போது கடல் பேரழகு.”

வைதீகத்தில் விழுவது குப்பையென

கா.நா.சு.வின் கவிதைப் பேசுகிறது.

அவைதீகத்தில் விளைவது அழகு என துரை.நந்தகுமாரின் கவிதைப் பேசுகிறது.

மூலவன்

1 Comment

  • நேர்த்தியா விமர்சனம். மகிழ்கிறேன் சார்

    துரை. நந்தகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...