‘குக் வித் கோமாளி’யில் அந்தச் சொல் தேவையா?
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி வாரந்தோறும் சனி. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் கலையை முக்கியத்துவமாகக் கொண்டு வெளியாகும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது. காரணம் இந்நிகழ்ச்சியில் இந்நாள், முன்னாள் நடிகர், நடிகைகள், டி.வி.தொடர் நடிகர்கள், யூடியூப் செலப்ரிட்டிகள் பங்குபெற்று கலாட்டாவாக நடைபெறும் நகைச்சுவை நிறைந்தது குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சியில் வெறுக்கத்தக்க சொல் ஒன்று இடம்பெறுவது பார்வையாளர்களை முகம்சுளிக்கவைக்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும் யாராகிலும் ஒருவர் ‘செருப்பால் அடிப்பேன்’ என்கிற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
நேற்றைய எபிசோட்டில் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் வி.ஜே. விஷால் வெளியேற்றப்பட்டார். தற்போது மைம் கோபி மட்டுமே ஆண்களில் உள்ளார். ஏற்கெனவே காளையன் உள்ளிட்டோர் வெளியேறினர். தற்போது பெண் போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமையல் போட்டியில் ஈடுபட்ட பலர் தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து பிஸியாக இருக்கிறார்கள். சில படங்களின் புரமோஷனுக்கும் இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்கின்றனர் படக்குழுவினர்.
இந்த நிகழ்ச்சியின் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனைவருக்கும் வாய்ப்பை சரிசமமாக வழங்குகிறார். அனைவரையும் மரியாதையாக நடத்துகிறார்கள். செக்ஸ் நடிகையான சகிலாவை அம்மா அம்மா என்று அழைத்து ஒரு பெண்ணுக்கு தரவேண்டிய மரியாதையை ஒரு பெரிய நிகழ்ச்சியில் தந்ததோடு அல்லாமல் அவர் பொதுவெளியில் கௌரவத்தைத் தந்தது அந்நிகழ்ச்சி என்றால் மிகையில்லை.
குக் வித் கோமாளியில் நடித்த தர்ஷன் கதாநாயகனாக உயர்ந்தார். சார்பட்டா படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக உயர்ந்தார். விஜய் டிவி காமெடியன் புகழ் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தார். செல்லதுரைக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. சிவாங்கிக்கு விளம்பரப் பட வாய்ப்புகள் வந்தது. குரேஷி சிறந்த காமெடியனாக, டைமிங் அன்ட் ஸ்டான்ட் அப் காமெடியனாக உயர்ந்து வருகிறார்.
இப்படிப்பட்ட சிறப்பான நிகழ்ச்சியில் தேவையற்ற ஒரு சொல் அடிக்கடி இடம் பெறுவது வருத்தத்தை அளிப்பதாக பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அதுதான் செருப்பால் அடிப்பேன் என்கிற சொல்.
கடினமாக வார்த்தைகளில் மிகவும் கடினமானது செருப்பால் அடிப்பேன் என்கிற சொல். மிகவும் பிரபலமான, லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியில் செருப்பால் அடிப்பேன் என்கிற சொல் சர்வசாதாரணமாக நிகழ்ச்சியில் இரண்டு மூன்று இடங்களில் இடம்பெறுகிறது. இதைக் கேட்கும் இளைய தலைமுறையினர் இது சாதாரண சொல்தான் என்று அவர்களும் சர்வசாதாரணமாக பயன்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திவிடும். நேற்றைய நிகழ்ச்சியில் இரண்டு இடங்களில் வெளியானது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷல் எஃபெக்ட் டி.ஜே. எனப்படும் இசை, டையலாக் சேர்ப்பு அருமையாக உள்ளது என்றால், எடிட்டிங் மிகப் பிரமாதம். அதில் கண்ணியமான சொற்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒன்றிரண்டு கண்ணியக் குறைவான சொற்களான பிச்சை எடு, பரதேசி போன்ற சொற்களையும் குறிப்பாக செருப்பால் அடிப்பேன் என்கிற சொற்களையும் தவிர்க்கலாம் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
1964ஆம் ஆண்டு வெளியான ‘காதலிக்க நேரமில்லை’ என்கிற முழு நகைச்சுவை திரைப்படம் வெளியானது. அதில் நடிகர் பாலையாவும் நடிகர் நாகேஷும் பேசும் ஒரு காட்சியில் பாலையா சொல்வார், “டேய், உன்னை நான் பெத்தேன் பாரு. என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும்” என்பார்.
அதற்கு நாகேஷ் “நான் உங்களுக்கு மகனா பொறந்தேனே நான் எதால அடிக்கிறது. இல்லை, கேட்கிறேன்?”
பாலையா “நான் அடிச்ச செருப்பை கீழே போடறேன். அதால நீயே அடிச்சிக்கோ” என்பார்.
இந்த வசனம் அன்றைய நாளில் விமர்சிக்கப்பட்டது. சென்ஸார் போர்டில் அந்த வசன ஒலி நீக்கப்பட்டது.
அதன்பிறகு பல படங்களில் செருப்பால் அடிப்பேன் என்கிற வசனம் இடம்பெறுகிறது. தற்போதைய ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களில் கெட்ட வார்த்தைகள் அப்படியே இடம்பெறுகிறது. அதற்கு சென்ஸார் தேவை என்கிற கருத்து பொதுமக்கள் மத்தியில் இடம் பெற்று வருகிறது.
இந்த நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்குள்ளிருந்து குடும்பத்தோடு பார்க்கும் நகைச்சுவை தொடரான குக்வித் கோமாளியில் ‘செருப்பால் அடிப்பேன்’ என்கிற சொல் பயன்படுத்துவதை நீக்கவேண்டும் என்கிற குரல் எழுந்திருக்கிறது. குக் வித் கோமாளி டீம் அன்ட் இயக்குநர் இதைக் கவனிப்பாராக.