எழுத்தாளர் பார்வையில் ‘அயோத்தி’ திரை விமர்சனம்
எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை இந்திரா சௌந்தரராஜன் அவர்கள் தம் முகநூலில் ‘அயோத்தி’ படம் குறித்தும் தற்காலத் தியேட்டர் அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டிருந்தார். மார்ச் 27 திரையரங்க தினத்தை முன்னிட்டு இங்கே வழங்கப்படுகிறது…
மறுபடியும் ஒரு தா….மதமான விமர்சனப் பதிவு.
மன்ச்ச்ச்சூ….
நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகரோடு பேசும்போது அயோத்தியின் பாதிப்பில் இருந்து விடுபடாதவராகவே தெரிந்தார்.
ஒரு எழுத்தாளனையே உருகவைக்கும் ஒரு திரைப்படமாக அது இருப்பதை நான் அப்போது புரிந்துகொண்டேன்.
சமீபத்திய ஹீரோயிசப்படங்கள் இனி தியேட்டருக்கே போகக்கூடாது என்று என்னை மாற்றியிருந்தது.
நூறு பேர் அடிக்க வந்தாலும் ஹீரோவுக்கு மட்டும் எதுவும் ஆகாது என்கிற அந்த கஜானனப் பொய்யை எவ்வளவுதான் ஜீரணிப்பது?
அதேபோல பாடல் காட்சிகளில் ராணுவ ஒழுங்கில் ஒரு கூட்டமாக வந்து ஆடிவிட்டு காணாமல் போகும் அந்த நடனக்காரர்களையும் எத்தனை முறைதான் பார்ப்பது?
பெரிய கொடுமை-அந்த நாள் அஞ்சலி படம் போல, அரை இருட்டு முக்கால் இருட்டில் மென் அரக்கு நிறத்தில் ஒளிப்பதிவு என்பது இன்றைய ஃபேஷனாம். கண்கள் வலிக்க இதை எப்படிப் பார்ப்பது?
இதெல்லாம் என்னை தியேட்டரைவிட்டுவிலக்கிவிட்டது. Home theatre களில் பார்க்கையில் இந்த க்ளீஷே கண்றாவிகளை தாண்டும் option இருக்கிறது.
எனவே இனி Netflix தான் எனது தேவிபாரடைஸ், ப்ரைம் விடியோ தான் எனது சத்யம் தியேட்டர் என்கிற சங்கல்பத்தில் இருந்த நான் நண்பர் PKP யால் தியேட்டருக்கு போனேன்.
அயோத்தி என் மனதை உழுது நெகிழ்த்தி கதற வைத்துவிட்டது.
அந்த நாட்களில் கற்பகம் என்கிற KSG யின் படம் பார்த்து நெகிழ்ந்தழுத பிறகு இன்று அயோத்தியே அந்த வாய்ப்பை தந்தது.
சினிமா மொழி தெரிந்தும், புரிந்தும் இதை இயக்கிய புதிய இயக்குநர் மந்திரமூர்த்திக்கு ஒரு பொன் முத்தம்.
மனிதம் எத்தனை உயர்வானது என்பதை பொன் முத்திரையிட்டு சொல்லியிருக்கிறார்கள்.
இதன் கதை எஸ்.ரா… உபயத்தால் வானத்து மத்தாப்பாய் ஊருக்கே தெரிந்த ஒன்றாகிவிட்டதால் அதனுள் போக விரும்பவில்லை
இதில் நடித்தவர்கள் குறிப்பாக அந்த வட இந்திய குடும்பம் …. நடிக்கவில்லை. வாழ்ந்துள்ளனர்.
இயக்குநர் அந்த வாழ்வை ரகசியமாக அவர்களுக்கு தெரியாமல் படம்பிடித்ததுபோல்தான் தெரிகிறது.
ஒரு பயணம் – அதிலொரு விபத்து – அந்த விபத்துக்களம்-அதில் சம்மந்தப்படுபவர்கள் – அதன் விளைவு -என நீளும் திரைக்கதைக்குள் இன்றைய நம் வாழ்வின் அத்தனை சாதக பாதகங்களும் மிகையின்றி சொல்லப்பட்டிருக்கிறது.
போலீஸ் ஸ்டேஷனில் பாடப்படும் அந்த பாடல் மட்டும் திருஷ்டி..
திரைக்கதையில் பாத்திர வார்ப்பில் அப்பாக்காரரை கோபக்கார முசுடாக மட்டுமே காட்டியிருக்கலாம். ராமபக்தராக காட்டியதில் கொஞ்சம் நெருடுகிறது.. அதேசமயம் கடவுள் பக்தியுள்ள பலர் மானுட விழிப்பில்லாத மூடர்களாக இருப்பதையும் பார்க்க முடிவதால் அதை ஏற்பதில் தவறில்லை.
ஹீரோ சசி அடக்கி வாசித்தே ஜெயிக்கிறார். அவருக்கு இது வாழ்நாள் பாத்திரம்.
வசனங்களில் வார்த்தை ஜாலங்களற்ற ஒரு கனகச்சிதம். புத்திசொல்லவும், வீரவசனம் பேசவும்.. சீமான் போல் ஓஹோவெனப் பொங்கி எழவும் மிக மிக வாய்ப்பு மிகுந்த களத்தில் அவைகளைத் தவிர்த்து, அந்த இடத்தில் உருக்கமான முகபாவங்களே போதுமானது என நம்பி செயல்பட்ட இயக்குநரின் துணிவும் முடிவும் ஆஸ்காருக்குரியது.
கதையின் நாயகிக்கும் அவள் தம்பிக்கும் நான் மானசீக மகுடம் சூட்டி மகிழ்ந்தேன்.அம்மா பாத்திரமும் சும்மா இல்லை – பிணமாய் கிடந்து நடிப்பதுதான் நடிப்பின் உச்சம்.
முசுட்டு அப்பனாக வாழ்ந்த ஹிந்தி நடிகருக்கு ஒரு விருது உறுதி.
நன்றி PKP..
நெகிழ்ந்து அழுவதே ஒரு தனி சுகம்.
அது உங்களால் நிறைய கிடைத்தது.
எழுத்தாளர் இந்திரா சௌந்தராராஜன்