புதுமையான முறையில்  சமூக மாற்றத்திற்கான தத்தெடுப்பு விழா

 புதுமையான முறையில்  சமூக மாற்றத்திற்கான தத்தெடுப்பு விழா

நண்பர்களே, நாம் கல்யாண நிகழ்வுக்குச் சென்றிருப்போம். காதுக் குத்து, வளைகாப்பு, புதுமனை புகுவிழா,  மஞ்சள் நீராட்டு விழா என பல்வேறு விதமான நிகழ்வுகளுக்கு சென்றிருப்போம். ஆனால் தத்தெடுத்த குழந்தையை  அறிமுகப்படுத்தும் புதிய சமூக மாற்றத்திற்கான ஒரு விழாவிற்கு  நான் சென்றிருந்தேன். எனக்குள் மிகப்பெரிய ஒரு ஆச்சரியம்.  மகிழ்ச்சி.

தத்து எடுத்ததை  விரிவாக அனைவருக்கும் தெரிவிக்கும் விதத்தில் மிக நேர்த்தியாக நிகழ்விற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தமிழ்நாடு மின்சாரத் துறையில் இருந்து  பணி ஓய்வு பெற்ற காரைக்குடி தோழர் அழகர்சாமி அவர்களது வீட்டிற்கு,  தமிழ்நாடு அரசின் குழந்தைகள் மையத்திலிருந்து  சங்கீதா என்ற பெண்ணை தத்தெடுத்ததை  அறிமுகப்படுத்தும் நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

என்னுடன் வந்திருந்த அனைவருக்கும் இந்த நிகழ்வு புதுமையான முறையில் அமைந்திருந்தது. முதலாவதாகப் பேசிய ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாதவன் அவர்கள், “இந்நிகழ்வு சமூக  மாற்றத்திற்கான ஒரு முன்னெடுப்பு” என்று தெரிவித்தார். 

“எத்தனையோ விழாக்களுக்கு, நிகழ்வுகளுக்குச் சென்று இருக்கின்றோம். ஆனால் தத்தெடுப்பு நிகழ்வுக்கு நாங்கள் வந்திருப்பது இதுவே முதல்முறை. மிகுந்த மகிழ்வாக இருக்கின்றது” என்று கூறினார்.

காரணம் முதலாவதாகப் பேசிய தோழர் அழகர்சாமி அவர்கள் தங்களது வாழ்க்கையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால் ஏற்பட்ட பல்வேறு விதமான இன்னல்களை வெளிப்படையாக விரிவாக அனைவருக்கும் விளங்கும் வகையில் விளக்கினார்கள்.

குழந்தை இல்லாததால் சிலரின் பேச்சுகளால் தங்களுக்கு ஏற்பட்ட பல்வேறு விதமான மன உளைச்சல்கள், குழந்தை உருவாவதற்கு உடல்ரீதியாகப் பல விதமான ஆயுர்வேதா, சித்தா, அலோபதி வைத்தியங்களுக்குச் சென்று அதன் மூலமாக உடலில் ஏற்பட்ட பல்வேறு விதமான இடர்ப்பாடுகள், பண விரயங்கள் அனைத்தையும் மிகத் தெளிவாக, விரிவாக விளக்கினார்கள்.

 அவர்களது தங்கை பேசும்போது, “ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு பத்து மாதங்கள் ஆகும். ஆனால் இந்தக் குழந்தையைத் தத்தெடுப்பதற்கு பதினோரு மாதங்கள் ஆகிவிட்டது.

 அரசு குழந்தைகள் மையத்தில் இருந்து குழந்தையைத் தத்தெடுப்பது என்பது பல்வேறுவிதமான அரசின் நடைமுறைகளைப் பின்பற்றி அதன் பிறகுதான் அவர்கள் குழந்தையைத் தத்து கொடுக்கின்றனர். அதுவும் நல்ல விஷயம் தான்” என்று தோழர் அழகர்சாமி அவர்கள் தெரிவித்தார்.

அரசினுடைய நடைமுறைகள் மிகத் தெளிவாக இருப்பது நன்றாகப் பிடித்தமாக இருந்தது என்றும் தெரிவித்தார். ஏனென்றால் ஒரு குழந்தையைக் கொடுப்பதற்கு முன்பாகப் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் அந்தத் துறையினர் நடத்திவிட்டு அதன் பிறகுதான் தருகின்றனர்.

தமிழக அரசின் குழந்தைகள் மையத்தில், முதலாவதாக, குழந்தையைத் தத்தெடுக்க வரும் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். பிறகு அந்தக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். துறை ரீதியாகத் தத்தெடுக்கக் கூடிய பெற்றோரின் வீட்டிற்குச் சென்று ஆய்வு செய்கின்றார்கள்.

அதையும் மூன்று, நான்கு முறை பல்வேறு விதமான அதிகாரிகள் வந்து ஆய்வு செய்கின்றார்கள். அதன் பிறகு அவர்கள் மீது எந்தவிதமான குற்ற நடவடிக்கையும் இல்லை என்று ஆதாரங்களும் பெற்றுக் கொள்கின்றனர்.

 பல நாட்கள் இரு தரப்பினரும் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். பிடித்திருந்தால் மட்டுமே அவர்களைத் தத்து  எடுப்பதற்கு அனுமதி அளிக்கின்றனர்.

குழந்தைகள் மையமும் மிகவும் சிறப்பாக, பாதுகாப்பாக இருப்பதாகத் தோழர் அழகர்சாமி அவர்கள் தகவல் தெரிவித்தார்கள். பத்து மாதத்திற்கும் மேலாகப் பல்வேறு முயற்சிகள் எடுத்து,  தங்களைத்தான்  அந்தக் குழந்தை தத்தெடுத்து உள்ளது என்று அவர் தெரிவித்தபொழுது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தோழர் அழகர்சாமி அவர்கள் வெளிப்படையாக்க கூறிய பல்வேறு தகவல்கள் இன்றைய சமுதாயத்திற்கும், சமூகத்திற்கும் நல்ல பயனுள்ள தகவலை  ஏற்படுத்துவதாக அமைந்து இருந்தது. 

கருத்துப் பரவல் என்பது மிக முக்கியமான விஷயம். பல குடும்பத்தினரும் இவருடைய அனுபவங்களைப் பார்த்து அதிகமான தகவல்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தை இல்லாதவர்கள், குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை விடுத்து இது போன்று காப்பகத்தில் இருக்கக்கூடிய குழந்தைகளைத் தன் குழந்தையாகத் தத்தெடுத்து வளர்க்க முன்வந்தால், இந்தச் சமூகம் முன்னேற்றம், சமுதாய முன்னேற்றம் மிக எளிதாக வந்துவிடும்.

தற்போது சங்கீதா மகளாகக் கிடைத்த மகிழ்ச்சியான நிகழ்வையும் மிக இலகுவாக அனைவருக்கும் விளங்கும் வகையில் தோழர் அழகர்சாமி அவர்கள் எடுத்துரைத்த விதம் மிக அருமை. பாராட்டுகள் தோழர்.

 சங்கீதா அவர்களும் மிகவும் நல்ல முறையில் சாந்தமாக இருந்தார்கள். தோழர் அழகர்சாமியின் வீட்டிற்குச் சென்று  பார்த்தபோதும், அவர்கள் நல்ல முறையிலேயே பழகினார்கள்.

இந்தத் தத்தெடுப்பு அறிமுகப்படுத்தும் விழாவானது, மிக நேர்த்தியாக, மிக அருமையாக நல்ல உணவுடன் அமைந்திருந்தது. உணவும்  நன்றாக அனைவருக்கும் அன்புடன் பரிமாறப்பட்டது.

இது போன்று தத்தெடுக்கும் நிகழ்வுகள் சமூக மாற்றத்திற்கான நிகழ்வுகளாக வருங்காலத்தில் அமைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும்.

குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டுக்கொண்டு இருப்பதைவிட நமக்குக் கொடுத்த குழந்தை இதுதான் என்று ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அந்தக் குழந்தையின் மீது பிரியமாக நாம் வாழ்க்கை நடத்தினால் நமது வாழ்க்கை மிகச் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

எனவே குழந்தை இல்லாதவர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதைவிட நமக்காக இந்தக் குழந்தை இந்த உலகத்தில் இருக்கின்றது என்று எண்ணி பல தடைகளைக் கடந்து, தத்தெடுத்து வளர்க்க தோழர் அழகர்சாமி போன்று முன்வந்தால் இன்னும் இந்தச் சமுதாயம் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் சிந்தனையாகும். 

சங்கீதா குடும்பமாகிய தோழர் அழகர்சாமி அவர்களின் குடும்பத்தினர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து அவர்களது வாழ்க்கை மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

– எல்.சி. லட்சுமணன், காரைக்குடி.  

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...