திருச்சி சின்னக் குற்றாலம் மற்றும் தொட்டிப் பாலம் சுற்றுலா ஸ்பாட்

 திருச்சி சின்னக் குற்றாலம் மற்றும் தொட்டிப் பாலம் சுற்றுலா ஸ்பாட்

திருச்சிக்கு நடுவில் இருக்கிறது நேமிசிஸ் அருவி,  இதனை குளுமாயி அம்மன் அருவி என்றும் சின்னக் குற்றாலம் அருவி என்றும் அழைக்கின்றனர். குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ ஏற்ற சுற்றுலா தலம்.  இந்த அருவியை சின்ன குற்றலாம் என்றும் அழைக்கப்படுகிறது. பள்ளிக் கோடை விடுமுறையில் கண்டுகளிக்க ஏற்ற இடம். அதைப் பற்றிப் பார்ப்போம்

குற்றாலத்தில் தண்ணீர் கொட்டுவதைப் போல் இங்கும் கொட்டுகிறது. இந்த இடம் குடும்பத்துடன் வந்து குளித்து கொண்டாட ஏற்ற இடம் என்று இங்கு வருபவர்கள் சொல்கின்றனர். இங்கே அருவியிலும் குளிக்கலாம். ஆற்றிலும் குளிக்கலாம். இந்த அருவிக்கு அருகில் ஸ்ரீ குளுமாயி அம்மன் கோவில் இருக்கிறது.  திருச்சியில் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது நேமிசிஸ் அருவி. இந்த அருவிக்கு நேரடியாக பஸ்ஸில் செல்ல முடியாது. பைக் மற்றும் கார்களில் செல்லலாம்.

பேருந்தில் செல்ல வேண்டும் என்றால், திருச்சி அரசு மருத்துவமனை ஸ்டாபில் இறங்கி 2. கி.மீ நடந்து செல்லலாம். இந்த இடத்தில் ஓர் தடுப்பணை இருக்கிறது. அதிலிருந்து ஓடி வரும் நதியை உய்யக்கொண்டான் ஆறு என்றும் அழைக்கின்றனர். இந்த ஆறு காவிரியின் கிளை ஆறாக ஓடி வருகிறது. இந்த தடுப்பணை விவசாய நிலங்களின் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரானது, அருகில் இருக்கும் பாறைகளில் அருவியாகக் கொண்டுகிறது. அருவிக்கு அருகில் கடைகள் எதுவும் இல்லை என்பதால் உணவுடன் வருவதே நல்லது.

அதேபோல் ‘தொட்டி பாலம்’ என்று அழைக்கப்படும் ‘ஆறுகண் பாலத்தை திருச்சியில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மனச்சோர்வு மற்றும் விடுமுறை நாட்களில் சிறந்த பொழுது போக்கு இடமாக இது இருக்கிறது. திருச்சியின் மையப்பகுதியில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் அருகில் உள்ள ‘ஆறுகண் பாலம்’ என்று அழைக்கப்படும் இடம்தான் தற்போது ‘தொட்டி பாலம்’ என்று அழைக்கப்படுகிறது.

போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்ப்பதற்கு குளுமையாகவும் அமைதியாகவும் இருக்கும் இந்த பாலம் உண்மையிலேயே சிட்டிக்குள் தான் இருக்கின்றோமா என்று யோசிக்க வைக்கும் வகையில் இயற்கை அழகுடன் அமைந்திருக்கிறது.

காவிரியில் இருந்து பிரிந்து வரும் உய்யக்கொண்டான் கால்வாய் நீரும், புதுக்கோட்டையில் இருந்து உருவாகி ஓடி வரும் கோரை ஆற்று நீரும் ஒன்றாகச் சேரும் இடத்தில் மதகுகள் அமைக்கப்பட்டன. ஆறு மதகுகள் இருந்த காரணத்தினால் ஆறுகண் பாலம் என்று அழைக்கப்பட்டதாக கூறினாலும், இதற்கான சான்றுகள் பெரிதாக இல்லை.

மதகுகள் வழியே உய்யக்கொண்டான் வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட நீர், மற்றொரு பக்கத்தில் உபரியாக வெளியேறும் நீர், குழுமாயி அம்மன் கோவில் அருகில் இயற்கையுடன் இணைந்து நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பை ஏற்படுத்தி, குடமுருட்டி ஆறாக ஓடுகின்றது.

ராஜராஜ சோழனால் உருவாக்கப்பட்டது உய்யக்கொண்டான் கால்வாய், பல பெருமைகளை உள்ளடக்கியது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்தப பாலத்தை அடையலாம்.

குழுமாயி அம்மன் கோவிலின் பின்புறம் இயற்கையாய் அமையப்பெற்ற அருவியும் அது வழிந்தோடும் குடமுருட்டி ஆறும் உள்ளது.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பொழுதுபோக்கிற்காக இங்கு பூங்காக்களும் வர இருப்பதால் மிக அழகான ஒரு இடமாக இது மாற இருக்கிறது. வார இறுதி நாட்கள் மட்டும் அல்லாமல், வார நாட்களிலும் உள்ளூரில் உள்ளவர்கள் இங்கு வந்து மகிழ்ச்சியாகத் தங்களது நேரத்தைக் கழிக்கலாம். அருகிலுள்ள அனுமன் கோவில் மற்றும் குழுமாயி அம்மன் கோயில்களுக்கு மட்டுமல்லாமல் இங்கிருக்கும் மற்ற கோயில்களில் தரிசனத்திற்காக வருபவர்களுக்கும் இந்த இடம் மனதை இதமாக்கும் இடமாக இருக்கிறது. இங்கு வழிந்து வரும் நீரின் அருவியில் குளித்துவிட்டு, அருகில் உள்ள மரங்களின் நிழலில் ஓய்வு எடுக்கும் போது கிடைக்கும் இன்பம் அலாதியானது.

மரங்கள் நிறைந்த இந்தச் சிறிய அருவி நீரின் சத்தம் வசீகரிக்கச் செய்கிறது. கூடவே நீரின் குளுமை இதமானதாக இருக்கிறது. ஆலமரமும், அரச மரங்களும் நிறைந்த இந்த இடத்தில் பலரும் வீட்டிலிருந்து உணவுகளைக் கொண்டுவந்து இங்கு சாப்பிடுகின்றனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...