தனித்தமிழ் பெருங்கவிஞர் பெருஞ்சித்திரனார் புகழ் போற்றுதும்

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெரும் பாவலர்களுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர் பாவலர் பெருஞ்சித்திரனார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர்.
பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள். சேலம் மாவட்டம், சமுத்திரம் சொந்த ஊர். பெருஞ்சித்திரனார் 10-03-1933 இல் பிறந்தார். பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் இராசமாணிக்கம்.

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் ஆத்தூரிலும் படித்தார். உயர்நிலைப் பள்ளியில் சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கித் தமிழறிவும் தமிழ் உணர்வும் புகட்டினர்.
பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழ் ஈடுபாட்டுடன் கற்றவர். ‘குழந்தை’ என்னும் பெயரில் கையெழுத்து ஏடு நடத்தினார். பின்பு அருணமணி என்னும் புனைபெயரில் ‘மலர்க்காடு’ என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.
பெருஞ்சித்திரனார் 1950இல் பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பின்னர் சேலம் நகராட்சிக் கல்லூரியில் பயின்றார். பாவாணர் அங்கு பணிபுரிந்தபொழுது அவர் தம் மாணவராக விளங்கித் தமிழறிவு பெற்றார்.
கல்லூரியில் பெருஞ்சித்திரனார் பயிலும் காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார்.

பெருஞ்சித்திரனார் கல்லூரியில் பயிலும் போது கமலம் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப் பெண்ணே தாமரை அம்மையாராக இன்று மதிக்கப்படுகிறார்.

தாமரை அம்மாள்

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. 1959இல் பெருஞ்சித்திரனாருக்குப் பணிமாற்றல் கிடைத்து கடலூருக்கு மாற்றப்பட்டார். இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றார். பாவாணர் விருப்பப்படி தென்மொழி என்னும் பெயரில் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்துப் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் எழுதினார்.

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருள் முட்டுப்பாட்டால் இதழ் இடையில் நின்றது. பின்பு கருத்துச் செறிவுடனும் புதுப்பொலிவுடனும் மீண்டும் வந்து கல்லூரி மாணவர்கள் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.
அக்காலத்தில் சுடர் விட்டு எழுந்த இந்தி எதிர்ப்புப் போரில் தம் உரையாலும் பாட்டாலும் பெரும் பங்காற்றினார். இந்தி எதிர்ப்புப் போரில் இவர்தம் தென்மொழி இதழிற்குப் பெரும் பங்குண்டு. தம் இயக்கப் பணிகளுக்கு அரசுப் பணி தடையாக இருப்பதாலும் முழுநேரம் மொழிப் பணியாற்றவும் நினைத்து அரசுப் பணியை உதறினார்.

இவர் எழுதிய பாடல்கள் இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டுவதாக அரசால் குற்றம் சாற்றப் பெற்றது. இவருக்கு இதனால் சிறைத் தண்டனை கிடைத்தது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப்பவி பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.
பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச்சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.
பாவாணரின் உலகத் தமிழ்க்கழகம் தோற்றம் பெற்றபொழுது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்கு பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.
1972இல் திருச்சியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு நடத்தினார். 1973இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்கால கட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள் ‘பாவலரேறு’ என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழ் மக்களின் அழைப்பினை ஏற்று 1974இல் சிங்கை மலையகச் செந்தமிழ்ச் செலவை மேற்கொண்டார். இச்சுற்றுச்செலவிற்குப் பின் கடலூரில் இருந்து தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.
இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபோது பெருஞ்சித்திரனார் சிறைப்பட்டார். அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பெருஞ்சித்திரனார் பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.
1981இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

பெருஞ்சித்திரனார் 1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ் நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார்.
மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து தமிழுக்காக வாழ்ந்த பெருஞ்சித்திரனார் 11.06.1995இல் இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!