நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது-8

 நடிகர் பி.ஆர்.துரை எழுதும் காலச்சக்கரம் சுழல்கிறது-8

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் சினிமாவின் பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

“திண்ணலூர் சடகோபன் கமலம்மாள் தம்பதியின் வம்ச விருட்சமாக பழையனூர் எனும் ஊரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் டி.எஸ்.ஆர் எனும்  மாமனிதர். இவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆணிவேர் என்று சொன்னால் அது மிகையாகாது!

டி.எஸ்.ஆர்.

எழுத்தாளராக வேண்டும் என எண்ணியதால் எண்ணற்ற நூல்களைப் படிக்கும் முயற்சியை மேற்கொண்டார். அதில் கல்கி, தேவன் ஆகிய படைப்பாளிகளின் நூல்கள் இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. 26 வயதிற்குள் எண்ணற்ற சிறுகதைகளை எழுதி ஒரு மிகப்பெரிய எழுத்தாளராக வலம் வந்த இவரது சிறுகதைகளைப் படித்த பிற எழுத்தாளர்களுக்கு டி.எஸ்.ஆரின் சிறுகதை ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுவே படைப்பாளிகளின் அங்கீகாரம் ஆகியது.

சென்னை கிருத்துவ கல்லூரியில் கணிதத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற டி.எஸ்.ஆர். தான் விரும்பிய இன்ஜினியர் படிப்பு கிடைக்காதது குறித்து அவரது மனதிற்குள் ஒரு சின்ன ஏக்கம் ஏற்பட்டது என்பது உண்மை. ஆனாலும் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு டி.எஸ்.ஆர். சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து பி.எல். பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பரிணாமம் பெற்றார்.

‘அட்வகேட் டி.எஸ்.ராமசாமி’ எனும் பெயர்ப் பலகை அனைவர் பார்வையிலும் பட்டு புகழ்பெறும் பாக்கியத்தைப் பெற, மதிப்பிற்குரிய கோபால்சாமி ஐயங்கார், நாராயணசாமி முதலியார் ஆகியோரிடம் சட்டப் பயிற்சி பெற உதவியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார் டி.எஸ்.ஆர். பயிற்சி முடிந்ததும் வழக்கறிஞராக வலம் வரத் தொடங்கி இன்று மூத்த வழக்கறிஞராகப் புகழ்பெற்றுள்ளார்.

அமரர் முத்துராமலிங்கத் தேவர், மூப்பனார், எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களுக்குப் பல வழக்குகளை நடத்தி வெற்றி கண்டார். அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இயல் துறையில் இவர் படைத்த ஒரு அற்புதமான ஆன்மீக நூல் JUDICIAL SOLUTIONS FOR TEMPLE DISPUTES எழுதியுள்ளார். இதில் வடகலை, தென்கலை பற்றிய தன் கருத்தை மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார். இந்த நூலுக்காக இவரது 72வது வயதில் சென்னைப் பல்கலைக்கழகத்தால் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது..

அந்த நூலை நன்கு படித்து டி.எஸ்.ஆர். அவர்களை மிகவும் பாராட்டியுள்ளார் மாண்புமிகு நீதியரசர் ராமசுப்பிரமணியம் அவர்கள். அதன் பிறகு இவர் ‘YOUR GOD MY GOD’ எனும் தலைப்பில் ஒரு நூலை எழுதியுள்ளார். அது எழுத்தாளர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் ஆகிய அனைவராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. இந்த நூல் முதலில் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டது.

டி.எஸ்.ஆர். அவர்களின் வாழ்க்கைத் துணையாக லஷ்மி அவர்கள் வந்தது முதல், சரஸ்வதி கடாட்சத்துடன் லட்சுமி கடாட்சமும் சேர்ந்து இவர் புகழ் பெற்றார்.

இவர் இளம் வயதிலேயே ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டியில், ‘தீர்ப்பு’ என்ற சிறுகதைக்குப் பரிசு பெற்றார். பின்னர் அது திரு.சுகி.சுப்பிரமணியம் அவர்களால் அகில இந்திய வானொலியில் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது.

டி.எஸ்.ஆர். ஒரு பெரிய நாடக எழுத்தாளர், ரசிகர்! அதனால் ‘அவசரமோ அவசரம்’ என்ற நாடகத்தை எழுதி, அவர் தலைவராக இருக்கும் புரோபஸ் கிளப்பில் அதன் அங்கத்தினர்களை நடிக்க வைத்து அரங்கேற்றியுள்ளார். இந்த நாடகம் சென்னைத் தொலைக்காட்சியிலும் திரு. யு.எம்.கண்ணன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டது. முன்னரே, இந்த நாடகம் 100 சபாக்களில் வெற்றிகரமாக நடந்தேறியது.

இதையும் தாண்டி மதிப்பிற்குரிய ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற படைப்பான ‘ஜூலியஸ் சீசர்’ நாடகத்தையும் ப்ரோபஸ் கிளப் அங்கத்தினர்களாக இருக்கும் எண்பது வயது முதிர்ந்தவர்களை நடிக்க வைத்து அரங்கேற்றியது இவரது சாதனையே! அதில் இவர், மார்க் ஆண்டனியாக நடித்து, அனைவரையும் வியக்க வைத்தார். டி.எஸ்.ஆர். அவர்களுக்கு அப்போது வயது 90.

நீதிமன்றத்தில் வாதாடும்போது நின்று ஜெயித்தவர். அதுபோல் எழுத்துலகிலும் இவர்  நின்று ஜெயித்தார்.

சிறந்த எழுத்தாளராக நான் போற்றிப் புகழ்பவர், வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், சிறந்த சமுதாயத் தொண்டுகள் பல செய்பவராகவும் இன்று வரை உலாவந்து கொண்டிருக்கும் முனைவர் டி.எஸ்.ராமசாமி அவர்களைத்தான்!”

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...