நாமக்கல் புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளருக்கு விருது


நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா வி. சிங் தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி (வடக்கு) நல்லிபாளையத்தில் 28-2-2023 அன்று புத்தகத் திருவிழா தொடக்கவிழா சிறப்பாக நடைபெற்றது.
80 புத்தக அரங்குகள், 20 பேச்சாளர்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டு, உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ணமீன் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி எனக் களைகட்டியது புத்தகத் திருவிழா.

நாமக்கல்லில் முதன்முறையாக நடைபெறும் அரசு புத்தகத் திருவிழாவில் திரைப்படப் பாடலாசிரியர் அறிவுமதி, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றி விழாவைச் சிறப்பித்தனர்.
இந்தப் புத்தகத் திருவிழா 28ஆம் தொடங்கி 10-3-2023 வரை நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை வரவேற்புரை நிகழ்த்த, மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா வி.சிங் தலைமை உரையாற்றினார். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ் புத்தக விழா அரங்கைத் திறந்து வைத்தார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் நன்றியுரை ஆற்றினார்.

பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக நாடகம், பேச்சு, நடனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் நாள் நிகழ்வில் (1-3-2023) திரைப்படப் பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி சிறப்பாக உரையற்றினார். அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் வ.சத்யமூர்த்தி, எழுத்தாளர் யூ. பைஸ் அஹமத் ஆகியோர் உரையாற்றினார்கள். நிகழ்வில் உள்ளூர் எழுத்தாளர் யூ.பைஸ் அஹமத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி மு.மணிமேகலை விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
