ஒற்றனின் காதலி | 11 | சுபா

 ஒற்றனின் காதலி | 11 | சுபா

“ஏய்.”

“……”

“இதோடு பத்துமுறை கூப்பிட்டு விட்டேன். இந்த முறை நீ பதில் பேசாவிட்டால், நான் எழுந்து போய்விடுவேன்.”

“ம்” என்றாள் உமா.

நான், அவள் மடியில் தலைவைத்திருந்தேன். அவள், தன் இருகால்களையும் சோஃபாவில் இருந்து, கீழே தொங்க விட்டிருந்தாள்.

நான் கண்களை உயர்த்தி, அவளைப் பார்த்தேன்.

அவள் கண்கள் கலங்கி இருந்தன.

“அழுகிறாயா என்ன?” என்று பதற்றப்பட்டுக் கொண்டு எழுந்து விட்டேன்.

“ம்.”

“ஏன் உமா?”

“என்னால் தாங்க முடியவில்லை சிவா.”

“எது?”

“இந்த ஒரு மாதமாக நீங்கள் என்னை வந்து பார்க்கவே இல்லை.”

“எப்படி முடியும் உமா? நானும், விஜி வேலை செய்யும் அதே நேரத்தில் சுரங்கத்தில் விஜியோடுதான் இருந்தாக வேண்டும். எப்படி வந்து பார்ப்பேன்?”

“நீங்கள் என்னைக் காதலிப்பது உண்மைதானே?”

“யெஸ், யெஸ், யெஸ். ஹண்ட்ரட் பர்சன்ட் யெஸ்.”

“அப்படியானால், லீவ் போட்டு விட்டு வந்து பார்க்க வேண்டியது தானே?”

“ஸாரி டியர், நான் ஒவ்வொரு நாளும் திட்டம் போடுவதிலேயே இருந்து விட்டேன். நான் உன்னைக் காதலிக்கிறேன் உமா. நான் கையில் பச்சை குத்தியிருப்பதை உன் கணவனிடமிருந்து மறைக்க எவ்வளவு பாடுபட்டிருப்பேன் என்று யோசித்துப் பார். அரைக்கை சட்டை போடும் நாளெல்லாம் நான், கையில் கட்டுப் போட்டுக் கொண்டு சமாளித்தேன். பிளேடு கீறிவிட்டது. ஆணி குத்திவிட்டது. என்றெல்லாம் பொய் சொல்லிச் சமாளிக்க வேண்டியதாகப் போய் விட்டது“

“திட்டம் போட்டு விட்டீர்களா?”

“அவசரமா?”

“எதற்கு?”

“நானும், நீயும் இணைவதற்கு?”

“இருக்காதா?” என்று ஏக்கத்துடன் கேட்டாள்.

அவளை, கால் முதல், தலைவரை பார்த்தேன். சொர்க்கமாக, பொக்கிஷமாக, தேன்குடமாக, பலாச்சுளையாக இன்னும் உலகின் அத்ததனை இன்பமான விஷயங்களையும் நினைவுபடுத்துபவளாகத் தெரிந்தாள்.

இந்த உடல் எனக்குச் சொந்தமாகி சக்கையாகப் போகிறது.

சக்கையாகிய பின், அவள் பொம்மையாகப் போகிறாள்.

அது அப்புறம். முதலில் இந்தப் பிடிவாதப் பெண் எனக்குச் சொந்தமாகப் போகும் நாளை நிர்ணயிக்க வேண்டும்.

“என்ன பதிலே இல்லை? திட்டம் போட்டு விட்டீர்களா?”

“ம்.”

“என்ன திட்டம்?”

“உனக்குச் சொல்ல வேண்டுமா உமா?”

“ம்.”

“வேண்டாம்.”

“ஏனாம்?”

“நான் கொலை செய்யப் போகிறேன் உமா. கொலையாகப் போவது உன் கணவன்.”

“இருக்கட்டுமே. எனக்கு, என்றைக்கு விடுதலை என்று நான், ஆவலோடு காத்திருக்கிறேன். நான்தானே விஜியை முடித்து விடுவதாகச் சொன்னேன். எனக்குப் பதிலாக நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஒருவரே திட்டம் போட்டு, செயல்படுத்தி மாட்டிக் கொள்ளலாம். என்னிடம் சொன்னால், நானும் யோசிப்பேன். ஏதாவது சிக்கல் இருக்கிறதா என்று பார்ப்பேன். இருந்தால், சொல்லுவேன். நீங்கள் திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் இல்லையா?”

நீதான் உண்மையான பத்தினிப்பெண்ணடி என் கண்ணே என்று நினைத்துக் கொண்டேன்.

யோசித்துப் பார்த்தால், அவள் சொன்னதிலும் அர்த்தம் இருந்தது. நானே திட்டம் போட்டு, நானே செயலாக்கும் போது எங்கேயாவது இடறி விழ வாய்ப்பு இருக்கிறது.

“சொல்கிறேன்.”

“ம்” என்று அவள் ஆவலுடன் என் முகம் பார்த்தாள்.

“சுரங்கத்தில் அசுத்தக்காற்று வெளியேற என்று ஒரு குழாய் வைத்திருக்கிறார்கள். கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு எல்லாம் கலந்த காற்று.”

“ம்.”

“அந்தக் குழாயில் ஒரு ஓட்டை போடுவேன். அசுத்தக்காற்று ஒரு இடத்தில் கசிய ஆரம்பிக்கும். அந்த குறிப்பிட்ட இடத்தில் போய் யார் சிக்கினாலும், வெப்பமாக இருக்கும். மூச்சுத்திணறும். சுயநினைவோடு இருக்கும் யாரும் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்குப் போனால், மூச்சுத்திணறலை வைத்து, லீக்கேஜ் இருப்பதைக் கண்டு பிடித்து விடுவார்கள். குழாயின் ஓட்டையை அடைத்து விடுவார்கள். குழாயில் இந்த மாதிரி ஓட்டை விழுவது சகஜம். அதனால், ஓட்டையை ஒருவர் வேண்டுமென்றே பண்ணியிருக்கிறார்கள் என்ற சந்தேகம் யாருக்கும் வராது. மேலும், அந்தக் காற்றை சுவாசித்தால், யாரும் உடனே செத்துப் போய்விட மாட்டார்கள்.”

“பின்னே எதற்கு அந்த ஓட்டை?”

“சொல்கிறேன். விஜியை அந்த அசுத்தக்காற்றுப் பிரதேசத்திற்கு அழைத்துப் போவேன். எனக்கு ஒரு நரம்புப்பிடி வித்தை தெரியும். அதைப்பிரயோகித்தால், ஆசாமி மயங்கி விடுவான். சினிமா தியேட்டர் ஆள் அன்றைக்கு மயங்கினானே, அதேபோல். விஜியை மயக்கமடையச் செய்து அந்தப் பிரதேசத்தில் விட்டால், அசுத்தக்காற்று அவனைச் சூழ்ந்து, அவனை மயக்கத்தில் இருந்து மீள முடியாமல் செய்யும்.”

“அப்படியே மயக்கத்திலேயே விஜி செத்துப் போய்விடுமா?” என்று குழந்தை மாதிரி கண்களை அகல விரித்துக் கேட்டாள் உமா.

“ச்சீ. எவ்வளவு நேரம் அப்படி விடமுடியும்.? ஷிஃப்டிற்கு உள்ளே போன ஆள், வெளியே வரவில்லை என்றால், மேனேஜ்மென்ட் ஆளைத் தேட ஆரம்பித்து விடுமே.”

“அதுதானே?”

“விஜி மயக்கமாகி விழுந்ததும், நான் விலகி வந்து விடுவேன். நான் ஏற்கனவே ஒரு டைம் பாம் செட் பண்ணி வைத்திருப்பேன். அது வெடிக்கும். பாறை வெடிக்கும். விஜி பிழைப்பதற்கு சான்ஸே இல்லை. அப்படியே பிழைத்தாலும், இன்னொரு சான்ஸ் எனக்குக் கிடைக்காமல் போகாது” என்றேன்.

“விஜி பிழைத்துவிட்டால்…?”

“பிழைத்துவிட்டால்?”

“நீங்கள்தான் அவரை மயக்கமடையச் செய்தீர்கள் என்பதைச் சொல்லிவிட மாட்டாரா?”

“மாட்டான்.”

“எப்படி சிவா?”

“நான் அவனைத் தாக்குவதே, அவனுக்குத் தெரியாது உமா. அட்டை நம் உடம்பில் இருந்து ரத்தம் குடிக்கிறதே. தெரிகிறதா? அது மாதிரித்தான் என் முறையும். நான் அவனைத் தட்டினேன் என்பதே அவனுக்குத் தெரியாது. ஸ்பைனல் கார்டுக்கு மேலே இருக்கும் ஒரு நரம்பு அது. அதைத் தொடுவதற்குப் பயிற்சி வேண்டும். அந்த நரம்பு இருப்பதே வெளியில் தெரியாது. அதைத் தெரிந்து, நான் ஒரு தட்டு தட்டினால் போதும். நான் வேண்டுமென்று செய்தேன் என்று அவனால் பிழைத்து எழுந்தால்கூட சொல்ல முடியாது.”

“சரி” என்றாள்.

“என்றைக்கு?” என்று கேட்டாள்.

“விஜி ஊருக்குத் திரும்பியவுடன்” என்றேன். “ஏய், உமா, விஜி இறந்து போய் ஒரு பத்து நாட்களுக்கு மட்டும்தான் நீ இங்கே இருக்க வேண்டும். அப்புறம் விஜிக்கு கொடுக்கும் பணத்தையெல்லாம் வாங்கிக் கொண்டு, நீ உன் சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லி, நீ கிளம்பி விட வேண்டும்.”

“எங்கே?”

“சென்னைக்கு. மீனம்பாக்கத்தில் இருக்கும் விஸ்வஜோதி ஹோட்டலுக்குப் போய்விடு. ரூம் 802. நான் உனக்கு முன்பாகவே அங்கே காத்திருப்பேன். இல்லாவிட்டால் உனக்கு ஒருநாள் பின்னால் வந்து, உன்னோடு சேர்ந்து கொள்வேன்.”

“நடுவில் என்னைப் பார்க்க வரமாட்டீர்களா?”

“ம்ஹும். யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது.”

அன்றைக்கு அவள் சமைத்துக் கொடுத்த மோர்க் குழம்பைச் சாப்பிட்டேன். மோர்க் குழம்பில் ஊறவைத்த வடையை சாப்பிட்டேன். அமிர்தம்.

அவளிடம் விடை பெறும்போது, என்னை என்னவோ நிரந்தரமாகப் பிரியப் போகிறவள் போல, கண்ணீர் விட்டாள். கட்டிப் பிடித்து, போனஸாக ஒரு முத்தம் தந்தாள்.

சென்டிமென்டே ஆகாத எனக்கே, ஒரு மாதிரி ஆகிவிட்டது.

சரேலென்று வந்து விட்டேன்.

“ஞாபகம் இருக்கட்டும், விஸ்வஜோதி, ரூம் 802. யாரையும் விசாரிக்காதே. நேராக என்னை வந்து பார். நான் 99 சதவீதம் உனக்காகக் காத்திருப்பேன்.”

நான் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள், விஜய்குமார் திருக்காட்டுப் பள்ளிக்குப் போய் வந்த மூன்றாவது நாளே என்று உணர்ந்தபோது, எனக்கு உற்சாகமாக இருந்தது.

உற்சாக மிகுதியில் நான் ‘ஹுர்ரே ஹுப், ‘ஹுர்ரே ஹுப்’ என்று கத்தியிருப்பேன். என் உற்சாகத்திற்கு சக தொழிலாளர்கள் காரணம் கேட்பார்கள் என்பதால், நான் உற்சாகத்தை வெளிக்காட்டாமல் இருந்து விட்டேன்.

விஜய்குமாருக்கு மிகவும் நெருக்கமான தங்கபாண்டி, அன்றைக்கு விடுமுறை. பீட்டர், குமார் இருவருக்கும் நேரு சுரங்கத்தில் டூட்டி மாற்றிப் போட்டு விட்டார்கள். மதுவிற்கு, விஜய்குமாரின் சிரிப்புப் பிடிக்காது. சிரித்து, சிரித்தே கழுத்தறுப்பவன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறான்.

அதனால், விஜய்குமார் என்னைச் சுரங்கத்தில் முதலில் இறங்கச் சொன்னான். என் குழுவிற்கு என்னைத் தலைமையேற்கச் சொன்னான்.

நாங்கள் கீழே போன பின்னர், பின்னாலேயே அவன் வருவதாகச் சொன்னான்.

எப்போதும் என்னுடனேயே கோந்தும், பிசினும் போட்டு ஒட்ட வைத்த மாதிரி இருக்கும் விஜய்குமார் என்னைச் சுரங்கத்தில் முன்னால் போகச் சொன்னதே இன்றைக்கு எனக்குக் கிடைத்திருக்கும் வரம்.

“நான் இன்றைக்கு முப்பத்தாறாவது லெவலுக்கு இறங்குகிறேன், சார்” என்றேன், விஜய்குமாரிடம் அனுமதி.

“யெஸ், யெஸ். அந்த லெவலில் புதிதாகத் தங்க ரேகைப் பாதை போகிறதென்று பார்த்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாய் இல்லை. ஓ.கே. நீ போ. எனக்கு ஆஃபீஸில் ஒரு லோன் அப்ளிகேஷனில் கையெழுத்துப் போட வேண்டியிருக்கிறது. நான் பின்னாலேயே வந்துவிடுகிறேன்” என்றான்.

நான் சந்தோஷமாகக் கூண்டிற்குள் நுழைந்தேன். என்னுடன் நான்கு சக தொழிலாளர்கள். இன்றைக்கு அனேகமாக விஜய்குமாரின் இறுதிநாள். இன்னும் பத்தே நாட்களில் உமா என் வசம்.

இரும்புக் கூண்டு என்னைச் சுமந்து ‘விர்’ரென்று கீழிறங்கியது. கூண்டு கீழிறங்கும் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க என் உடலின் அத்தனை ரத்தமும் ஜிவ்வென்று தலை நோக்கிப் பாய்ந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் மறுபடி கொல்லப் போகிறேன். மறுபடியும் சிக்காமல். இதற்கு முன் எத்தனை உயிர்களைத் துளி தடயமில்லாமல், சிக்காமல் பறித்திருக்கிறேன்..! யோசிக்கத் துவங்கினேன்.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...