ஒற்றனின் காதலி | 10 | சுபா

 ஒற்றனின் காதலி | 10 | சுபா

து ஒரு குகைப்பாதை. ஏழடி அகலம். ஏழடி உயரம். ஜெலட்டின் வெடிகளை வைத்துத் தகர்க்கப்பட்ட குகைப்பாதை. நீளமாக முடிவின்றிப் போய்க் கொண்டே இருந்தது. பாதையில் காலுக்குக் கீழே தண்டவாளம் ஒன்று ஓடியது. நாரே கேஜ் தண்டவாளம். தலைக்கு மேல் இரண்டு இரும்புக் குழாய்கள். நடக்க, நடக்க இரும்புக் குழாய்களும் நீண்டன. ஒரு குழாயில் காற்று. அழுத்தப்பட்ட காற்று. அந்தக் காற்று பாறைகளை ஓட்டை போடும் ட்ரில்லர் இயந்திரத்தை இயக்குவதற்குப் பயன்படுத்தலாம்.

மற்றபடி சுவாசிப்பதற்குப் பூமி மட்டத்திலிருந்து குளிரூட்டப்பட்ட காற்று, வேறு ஒரு வழியில் செலுத்தப்பட்டு, அந்தக் காற்று பதினான்காயிரம் அடி வரை கீழே பரவுகிறது. தொழிலாளர்கள் இந்தக் காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள். சுரங்கத்தில் இறங்குபவர்கள் கூடவே, பிராணவாயு பெட்டியும் கொண்டு போக வேண்டும் என்று நினைத்திருந்தேன் நான்.

அது இல்லை. யாரும் உள்ளே மூச்சுத் திணற முடியாது. என் திட்டப்படி ஆக்ஸிஜன் பெட்டியுடன் இணைப்புக் குழாய் இருந்தால், விஜியின் மூக்கிற்கு வரும் இணைப்புக் குழாயை அறுத்து விடுவது என்று நினைத்திருந்தேன்.

சுரங்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விஜி, தனியாக இருக்கும் போது, அவனை ஒரே அடியில் மயக்கப்படுத்த, ஒரு பாறையை அவன் தலைமேல் பட்டுத் தெறித்த மாதிரி ஒரு செட்டப் பண்ணினால், பாறை விழுந்து மயக்கம். அவன் விழுந்ததில் ஆக்ஸிஜன் குழாய் அறுந்து போய், அதனால், அவன் இறந்தான். எதிர்பாராத விபத்து. த்சொ. த்சொ. பாவம். இரங்கல் கூட்டம். மலரஞ்சலி.

இத்தனை தூரம் என் கற்பனையை வளர்த்திருந்த நான், ஏமாந்து போய்விட்டேன். நான் சுரங்கத்தின் உள்ளே வெகு எளிதாக சுவாசிக்க முடிந்தது. நான் விடும் கார்பன் – டை – ஆக்ஸைடு, அங்கே மின்சாரத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்கள் விடும் புகை, பாறைகள் வெடித்தால் உருவாகும் கார்பன் மோனாக்ஸைடு எல்லாம் அசுத்தக் காற்றோடு கலந்து, இன்னொரு குழாய் வழியே வெளியேறுகிறது. தங்க பாண்டிதான், அந்த இன்னொரு குழாயையும் காட்டி விவரித்தான்.

முதல் நாள், இருட்டில் குகைப் பாதையில் நடக்கும் போது, திக், திக். என் தலையில் இருந்த விளக்கின் ஒளிக்கற்றை பக்கத்தில் இருந்த பாறைகளைக் காட்டிக் கொண்டு வந்தது. எங்கேயோ தண்ணீரின் சலசலப்பு. மூவாயிரத்து, இருநூறு அடிக்குக் கீழே ஓரிடத்தில் இடைவிடாமல் சுவர்க்கோழியின் ரீங்காரம். காலுக்கு கீழே சேறும், தண்ணீரும் கலந்த ஒரு கலவை.

“எவ்வளவு தூரம் இந்தப் பாதை போகும்?”

“இந்தப் பாதை உள்ளே இரண்டு, மூன்று கிலோ மீட்டர் வரை போகும். அங்கே இன்னொரு பாதையுடன் இணையும். அந்த இன்னொரு பாதையில் நீ போனால், இன்னொரு கேஜ் வழியாக வேறொரு சுரங்கத்தின் வாசலுக்குப் போகலாம்.” நேருவோ, சாஸ்திரியோ, காமராஜோ!

தங்கபாண்டி நின்றான். விஜி நின்றான்.

“என்ன?”

“நம்முடைய ஒர்க்கிங் ஸ்பார்ட்” என்றான், சுவரில் விளக்கு வெளிச்சம் அடித்துக் காட்டினான்.

“தங்கம் தெரிகிறது பார்.”

பார்த்தேன்.

விளக்கொளியில், பாறையில், அங்கங்கே மஞ்சளாய், மினுமினுப்பு. தேசத்திற்கு, தேசம், மனிதனுக்கு மனிதன், மாநிலத்திற்கு மாநிலம் அடித்துக் கொள்ளும், எல்லோரும் விரும்பும் தங்கம் பாறையோடு, பாறையாக கலந்து இருந்தது.

இயற்கை அளித்த வரம்.

“நேற்று இதுவரை தோண்டி விட்டுப் போனோம். இன்றைக்கு இதற்கு மேல் தோண்டப் போகிறோம்” என்றான்.

தங்கபாண்டி சுற்றிக் காட்டிய குகைப்பாதை மேல் நோக்கிச் சென்றது.

“பாதை மேலே போகிறதே.”

“ஆமாம். தங்கரேகை எப்படிப் போகிறதோ, அப்படித்தானே நாமும் போக முடியும். இப்படியே பாறையை வெட்டிக் கொண்டு மேலே போனால், அடுத்த லெவலுக்குப் போய் விடலாம்.”

“மேலே ஏறும் போது பாறை எங்கேயாவது சரிந்தால்!”

“சாக வேண்டியதுதான். கார்டில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறாய். உன் உயிர் சுரங்கத்தில் நுழைந்த பின்னால், உனக்குச் சொந்தமில்லை. தோண்டிக் கொண்டு மேலே போகும் பாது, பாறை சரிந்து உன்னை மூடிவிட்டால், உன் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விடுவார்கள். இங்கே பார்” என்று தங்கபாண்டி குகை ஓரத்தில் மூடப்பட்டிருந்த ஒரு பெட்டியைத் திறந்து காட்டினான்.

சில ஜெலட்டின் குண்டுகள். திரிகள்.

“அவசரத்திற்கு இதை வைத்து வெடித்து இடிபாடுகளை அகற்றி, உடலை மீட்டு விடுவோம்.”

எனக்கு உடல் சிலிர்த்தது. விஜய்குமாரைச் சுரங்கத்தில் வைத்து கொல்லுகிற வரைக்கும், உயிர் முதலில் என்னிடம் இருக்க வேண்டும்.

இருட்டுச் சுரங்கத்தில் பாறைகளில் துளை போட்டும், வெடிகுண்டு வைத்து வெடித்தும், பாறையைத் துண்டாடி பூமியின் மேல் மட்டத்திற்கு கொண்டு வர அசாத்திய மனோதிடம் வேண்டும். அசாதாரண ஆற்றல் வேண்டும். அதையெல்லாம் தொழிலாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

நான்?

இந்தச் சுரங்கத்தில், விஜய்குமாரைக் கொல்வது எப்படி என்றுதான் யோசிக்க வேண்டும்.

நான் வேலை செய்யும் குழுவிலிருந்து தனியாகப் போய், ஆராய்ச்சி செய்ய வேண்டும். விஜியை மற்றவர் அறியாமல், கொல்வதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்று யோசிக்க வேண்டும். அப்படித் தனியாக போய் ஆராய்ச்சி செய்யும் போது, வழி மாறாமல் வேறு இருக்க வேண்டும்.

நான் தங்கபாண்டி என்ன செய்கிறான் என்று பார்த்தேன். அங்கே பாறையோடு வந்த இரும்புக் குழாயில், வேக்குவம் கிளீனரின் ட்யூப் போல இருக்கும் ஒரு ட்யூபைப் பொருத்தினான்.

ட்யூபின் முனையில் பாறையைத் துளை போடும் ட்ரில்லர் பிட் இருந்தது. பாறையில் விஜய்குமார் ஓர் இடத்தை ‘மார்க்’ பண்ணிக் கொடுக்க, தங்கபாண்டி, ட்ரில்லர் பிட்டை, விஜி மார்க் பண்ணிய இடத்தில் வைத்து, சுவிட்சைப் போட்டான்.

ட்ரில்லர் பிட், ‘கிர்’ரென்று சத்தத்துடன் சுற்ற ஆரம்பித்தது. ஒரு ஆறு இன்ஞ்சிற்கு ஓட்டை விழுந்தவுடன், ட்ரில்லர் பிட் ஓய்ந்தது.

பெட்டியில் இருந்த ஜெலட்டின் குண்டு உருட்டையாக, நீளமான இருந்தது. அந்த குண்டில் ஒயர் கனெக்ஷன் கொடுத்து விட்டு, அந்தப் பிரதேசத்திலிருந்து விலகி வந்தார்கள். நானும் வந்தேன். தங்கபாண்டி, கையில் இருக்கும் டைமரின் ஸ்விட்சை அழுத்த, பாறை வெடிக்கும் சத்தம் கேட்டது.

பத்து நிமிடம் கழித்து பாறை வெடித்த இடத்தில், இருந்த புகையெல்லாம் வெளியேறிய பிறகு, நான் அந்த இடத்தை நோக்கிப் போகலாம் என்று அடியெடுத்து வைத்த நேரத்தில், எனக்குப் பின்னால் ‘ஜிர்ர்ர்’ என்று ஒரு என்ஜினின் ஒலி மெலிதாக கேட்டது.

“சிவா, ஓரம்… ஓரம். போ… ஓரம்போ… பாறையோடு ஒட்டு” என்று விஜி கத்தினான்.

நான் பாறையோடு பாறையாக ஒட்டிக்கொண்டேன்.

ஒரு சின்ன என்ஜின் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது. என்ஜின் மீது ஒருவன், அதன் மட்கார்டில் நின்று வந்தான். என்னவோ தேவதூதனின் வருகை போல் இருந்தது. என்ஜினுக்குப் பின்னால் நான்கைந்து திறந்த பெட்டிகள். பெட்டிகள் அதிகபட்சம் போனால், நான்கடி அகலம் இருக்கலாம். நான்கடி உயரம் இருக்கலாம். ஐந்தடி நீளம். வெடித்த தங்கப் பாறைகளை ஏற்றிச் செல்லப் பயன்படும் மினிரயில்.

என்ஜின் வந்து எங்கள் அருகே நின்றது. வெடித்த பாறைகளை அதில் தூக்கிப் போட்டார்கள்.

அந்தப் பாறைகளை மேலே கொண்டு சென்று மில்லில் அரைத்துப் பொடியாக்கி, அதிலிருந்து தங்கத்தைப் பிரிப்பார்களாம்.

முதல் நாள் வேலை முடிந்து தங்கபாண்டி, விஜய்குமாருடனேயே ஒட்டிக் கொண்டிருந்து, வெளியே வந்து வெளிச்சத்தைப் பார்த்தபின்தான் என்னால், நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

மேலே வந்தவுடன் செக்யூரிட்டி ஆசாமிகள் என்னைத் தனியறை ஒன்றுக்குக் கூட்டிச் சென்றார்கள். என்னைப் பிறந்த மேனியாக்கினார்கள்.

என்னிடம் எந்த வகையிலும் தங்கப் பாறையோ, தங்கத் துணுக்கோ ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்று தெரிந்த பின்தான் என்னை மறுபடி ஆடையணியவே அனுமதித்தார்கள்.

வெளியே வந்த போது, உடலெல்லாம் புழுதி.

“எப்படி இருந்தது?” என்று கேட்டான் தங்கபாண்டி.

“அபாரம்” என்றேன்.

“வா, டீ குடிக்கலாம்”

தங்கபாண்டியுடன் டீ குடிக்கப் போனேன். இப்போதுதான் தங்கபாண்டியை நான் ஒழுங்காகவே பார்க்கிறேன். அகலமான மூக்கு, அகலமான நெற்றி. பின்னோக்கிப் பாய்ந்த சுருள், சுருளான முடி. தடித்த உதடுகள். வேட்டியும், ஜிப்பாவையும் அணியவிட்டு, ஒரு துண்டைத் தோளில் போட்டுவிட்டால், இன்றைய அரசியல்வாதி ஒருவனை நினைவுபடுத்தும் முகம். இப்போது காக்கிச் சட்டை, பேன்ட்டில் இருந்தது.

“பயமாக இருந்ததா?”

“கொஞ்சம்” என்றேன்.

“பயப்படாதே. போகப்போகப் பழகிவிடும். சுரங்கத்தில் எப்போதாவது தனியாகப் போய் விட்டாய் என்று வைத்துக் கொள். அப்போது கூட நீ பயப்படாதே. உன் தலைக்கு மேல் இருக்கும் அசுத்தக்குழாய் காற்று மட்டும், லீக்காகி உன் முகத்தில் நேராகக் காற்றடிக்காமல் பார்த்துக் கொள்.”

“பார்த்துக் கொண்டால்?”

“குறைந்தபட்சம் நீ மயக்கமில்லாமல் இருக்கலாம். சுற்றிச் சுற்றி வந்தால், எங்கேயாவது ஒரு திறப்பு தெரிந்துவிடும்” என்றான்.

வெளியே வந்தோம். அந்தத் தகவல் எனக்கு வரம் கிடைத்த மாதிரி இருந்தது. விஜய்குமாரைத் தீர்த்துக் கட்ட இதைவிட சுலபமான வழி எதுவும் இருக்காது.

நான் யோசித்துக் கொண்டே வந்தேன்.

“பார்த்து, சயனைட் குப்பை பக்கம் போகாதே. மழை ஈரம் இருக்கிறது பார். பள்ளமாயிருந்தால், உன்னை உள்ளே இழுத்துவிடும்! சுரங்கத்திற்கு உள்ளே சாவு என்பது போய், சுரங்கத்திற்கு வெளியே சாவு என்ற நிலை வந்துவிடும்” என்றான் தங்கபாண்டி.

“சயனைட் குப்பையா?” என்று கேட்டேன்.

தங்கபாண்டி என் கையைப் பற்றி இழுத்து, சாலை நடுவே விட்டான். சாலை ஓரத்தில் அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று, சிமெண்ட் இருந்தது. அந்த சிமெண்ட் தண்ணீரில் நனைந்தும் கெட்டித்து போகாமல் புதை மணல் போலக் காட்சி அளித்தது.

“என்ன இது?” என்று கேட்டேன்.

“தங்கப் பாறையின் பொடி. தங்கத்தை எடுத்த பின்னால், இந்த மாதிரி கொட்டி விடுவார்கள்.”

“இதற்கு ஏன் சயனைட் குப்பை என்று பெயர்?”

“வெயில் காலத்தில் காற்றடிக்கும் போது, இந்த குப்பையின் தூசி காற்றில் கலக்கும். சுவாசக் காற்றில் சேரும். நாம் இதைத்தான் இங்கு சுவாசிக்கிறோம். நுரையீரல் கோளாறெல்லாம் வரும். அதனால் இதற்கு சயனைட் குப்பை என்று பெயர். சயனைட் சாப்பிட்டால், உடனே சாவு. இது கொஞ்சம், கொஞ்சமாக.”

“மழை நாளில்?”

“புதை மணல். வேகமாக ஓடியாடும் குழந்தை இதில் வந்து மோதினால், குப்பை, அப்படியே சரிந்து குழந்தையை மூடிவிடும். குழந்தை எங்கே போயிற்று என்றே தெரியாது. அதற்குள் உள்ளே சிக்கிய குழந்தை மூச்சுத் திணறி செத்துப் போகும். ஏன் பெரியவர்கள் எல்லாம்கூட, இதில் சிக்கிச் செத்துப் போயிருக்கிறார்கள்.”

எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இந்த ஊரை விட்டுக் காலி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

ங்கபாண்டி சொன்னது போல், எனக்குச் சுரங்கம் முப்பது நாட்களில் பழக்கமாகி விட்டது. சுரங்கத்தில் இறங்கி, அவ்வப்போது என் சகதொழிலாளர்களைப் பிரிந்து, தனியாகப் போய் ஒரு பத்து நிமிடம் சுற்றி வருவேன். ஸ்பாட் பார்க்கிறேன் என்றேன். தொழிலில் எனக்கிருக்கும் பக்தி என்று நம்பினார்கள். நான்தான் என்னுடன் வேலை செய்பவர்களை கிட்டத்தட்ட வசியம் பண்ணி வைத்திருந்தேனே…

முப்பது நாட்களில் நான் இறங்கிய பாரதி சுரங்கத்தில் ஒரு ட்ரில்லர் பிட்டை ரகசியமாக ஒதுக்கி, ஒரு ஓரத்தில் கொண்டு போய்ப் பதுக்கி வைத்தேன். ஒரு சுத்தியலை அந்த ட்ரில்லர் பிட்டுடன் ஒதுக்கி வைத்தேன். ஜெலட்டின் வெடிகுண்டுகளை, நான் எந்த நேரமும் கையாள வாய்ப்பிருந்தது. இரண்டு ஜெலட்டின் குண்டுகளைக் கைப்பற்றி, ஃப்யூஸ் வயர் எல்லாம் இணைத்து, சுரங்கத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒளித்து வைத்தேன். அதை டைம் பாமாக மாற்ற எனக்கு ஐந்து நிமிடங்கள் போதும். சுரங்கத்தில் உள்ளே நுழையும் போது, எந்தவித செக்யூரிட்டி செக்கும் இருப்பதில்லை. அதனால் என்னால் மேலேயிருந்து எந்தப் பொருளையும் கீழே சுரங்கத்தில் எடுத்துச் செல்வது சுலபமாக இருந்தது.

எல்லாம் ரெடி. என் திட்டம் ரெடி. ஒரே ஒரு நாள் தேடிக் கொண்டிருந்தேன்.

விஜய்குமாரும், நானும் தனியாக இருக்கும் சில நிமிடங்கள் கிடைக்கும், ஒரே ஒரு நாள்.

முப்பதாவது நாளின் முடிவில், விஜய்குமார் திருக்காட்டுப்பள்ளிக்குப் போனான். மூன்று நாட்கள் விடுமுறையில்.

நான் என் தங்க வயல் தேவதையை அவள் வீட்டில் சந்தித்தேன்.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...