சர்வதேச கல்வி தினம் || தாலிபன் பெண் கல்விக்கு அர்ப்பணிப்பு

கல்வி என்பது மக்களின் வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்று. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் 26வது பிரிவு கல்விக்கான உரிமையை உள்ளடக்கியது. இந்த பிரகடனம் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை வலியுறுத்துகிறது.

சர்வதேச கல்வி தினம் என்பது ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இன்றைய அளவில் 244 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்கு வெளியே இருப்பதாகவும், 771 மில்லியன் பெரியவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாக உள்ளனர் என்றும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. கல்வி குழந்தைகளுக்கு ஏழ்மையிலிருந்து ஒரு ஏணியையும், நம்பிக்கைக்குரிய எதிர்காலத்திற்கான பாதையையும் வழங்குகிறது.

2023ஆம் ஆண்டு சர்வதேச கல்வி தினம் “மக்களில் முதலீடு செய்து கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள்” என்ற தொனிப்பொருளில் ஐ.நா. சபை யுனெஸ்கோ கொண்டாடப்படவுள்ளது.

இந்த ஆண்டு சர்வதேச கல்வி தினத்தை ஆப்கனில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கற்கவும் படிக்கவும் கற்பிக்கவும் உரிமை மறுக்கப்படுகிறார்கள். தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் தற்போது பெண்களின் உரிமையை அதிகளவில் பறித்து வருகிறார்கள். அதில் முக்கியமானது கல்வி பெண்களிடமிருந்து முற்றிலுமாகப் பறிக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் நடந்த பல்கலை நுழைவுத் தேர்வின் முடிவுகள் வெளியான நிலையில் பொருளாதாரம், பொறியியல், இதழியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் படிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வினை எழுதிய பெண்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போராட்டங்கள் தலிபான்களால் ஒடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் உலக அளவில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐந்தாவது சர்வதேச கல்வி தினத்தை ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. யுனெஸ்கோ தலைமையகத்தில் ஜனவரி
25ஆம் தேதி இந்த நிகழ்வு கொண்டாடப்படும்.

கருத்தரங்கில் ஐ.நா. பொது அவையின் தலைவரான ஆன்டனியோ குட்டரெஸ், யுனெஸ்கோ தலைவர் ஆட்ரே அசோலே உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆப்கன் பெண்களுக்கு மீண்டும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அளித்த அறிக்கையில் “சர்வதேச கல்வி தினம் 2023, அரசியல் அணி திரட்டலை நிலைநிறுத்துவதற்கும், தேசிய அர்ப்பணிப்புகள் மற்றும் உலகளாவிய முன்முயற்சிகளை முன்னெடுப்பதற்கும், அமைதி, நிலையான வளர்ச்சி மற்றும் தனிநபர் மற்றும் கூட்டு நல்வாழ்வுக்கான பாதையாக கல்விக்கு ஆதரவாக பொது ஈடுபாட்டை அதிகரிப்பதற்கும் ஒரு உலகளாவிய தளமாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!