கோலாகலமாக நடந்தது ‘காலச்சிற்பம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா
கவிஞர், முனைவர் தமிழ் மணவாளன் எழுதிய, ‘காலச் சிற்பம்’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை அரும்பாக்கம் லீ கிளப்பில் அட்சயா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் வழக்கறிஞர் ஹேமாவதி இயக்கத்தில் ‘மழலையர் வெளி’ வழங்கிய ‘கொற்றவை நாடகம்’ எனும் நடைபெற்றது. சிறார்கள் மிகச் சிறப்பாக நடித்திருந்தார்கள். இது ஒரு மைமி நாடகம் என்பதால் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கவேண்டியதாக இருந்தது. கதாபாத்திரம் முழுவதையும் சிறார்களே ஏற்று நடித்திருந்தனர். தாய்வழிச் சமுதாயம் எப்படி காலமாற்றத்தால் தந்தை வழி சமூகமாக மாறிப்போய் வேட்டைக்கலையையும் போர்க்கலையையும் கற்றுத் தந்த பெண் பின்னாளில் ஆண்களின் சேவகியாக மாறிப்போனால் என்பதை மிக அழகாக வெளிப்படுத்தியது நாடகம்.
இது புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல, அருமையான தமிழ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை சௌமா அறக்கட்டளையின் அறங்காவலர் சௌமா இராஜரத்தினம் வரவேற்புரையை நிகழ்த்த, சுவடு பதிப்பகம் வெளியீட்டாளர் நல்லு இரா.லிங்கம் வரவேற்புரையை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கவிஞர் சுசித்ரா மாரன், கவிஞர் அமிர்தம் சூர்யா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் வே.எழிலரசு ஆகியோர் சிறப்பாக கவிதை குறித்தும் கவிஞர் தமிழ் மணவாளன் குறித்தும் பேசினார்கள். கவிஞர் கபிலன் நேரில் வராவிட்டாலும் அவருடைய வாழ்த்து அருமையாக இருந்தது. நிறைவாக தமிழ் மணவாளன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியை நடிகை ரேகா சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை பகிர்வு நவீன கலை இலக்கியப் பரிமாற்றம் ஏற்பாடு செய்திருந்தது.
மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. தமிழுக்கு முக்கியத்துவம் தந்த இந்த நிகழ்ச்சியில் செவி விருந்துக்குப்பின் வயிற்றுக்கும் ஈயப்பட்டது. நண்பர்களின் அளவளாவல் நிறைவடையாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. அரங்கை விட்டு வெளியேற இரவு 10 மணியானது.