ஆசையின் விலை ஆராதனா | 8 | தனுஜா ஜெயராமன்
ஆராதனாவின் கேஸ் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லாக போய்க் கொண்டிருப்பதாகவே தோன்றியது அனமிகாவிற்கு.. அந்த அம்ரீஷிடம் இன்று பேசியாக வேண்டும் என்று நினைத்தவள்.
அவன் லண்டனுக்கு போயிருப்பானா? அல்லது இந்தியாவில் தான் இருக்கிறானா? அடுத்த வாரம் தான் கிளம்புவதாக சொல்லியிருந்தான். எதற்கும் இருக்கட்டுமென.. வாட்சாப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினாள்.. “வேர் ஆ யூ? ஐ நீட் டூ டாக் வித் யூ? வென் யூ ஆர் ப்ரீ கால் மீ திஸ் நம்பர்” – அனமிகா – என்ற மெசேஜ் போய் சேர்ந்ததற்கு அடையாளமாய் டபுள் டிக்கை காட்டியது. ஆனால் ப்ளு டிக் இன்னமும் வரவில்லை.
அம்ரீஷிடமிருந்து பதில் வந்ததும் அவனிடம் கேட்க வைத்திருந்த கேள்விகளை மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.
“மேடம்!…பரணிதரன் வத்திருக்கார்”..என அலெக்ஸ் வந்து சொல்ல…
“வரச்சொல்லுங்க”…என மொபைலை ஓரமாக வைத்தாள்.
பரணிதரன் உள்ளே வந்தார்…நாற்பது வயது தோற்றம் …போட்டிருந்த வெள்ளை சட்டை அவரை மரியாதையாக காட்டியது. எண்ணெய் வைத்து படிய வாரி தலை நெற்றியில் குங்கும கீற்று பளீரென தெரிந்தது… பரணிதரனை மனதிற்குள் ஏனோ இளைஞனாக கற்பனை செய்து வைத்திருந்தாள் அனாமிகா… பரணிதரனின் தற்போதைய தோற்றம் அவளுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இவரிடம் என்ன கேட்பது என சலிப்பாக இருந்தது…இருந்தாலும் கேள்வி கேட்பது அவளது கடமை என நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“நீங்க தான் அம்ரீஷ் ப்ளாட்டிற்கு இன்டீரியர் ஒர்க் பண்ணுறீங்களா?”
“யெஸ் மேம்”…
“அம்ரீஷ் உங்க ப்ரண்டா?”
” அவ்ளோ ப்ரண்ட் எல்லாம் இல்லீங்க. அம்ரீஷோட கசின் ப்ரதர் ஒருத்தரோட வீட்டுக்கு இன்டீரியர் பண்ணி கொடுத்தேன். அவருக்கு அது ரொம்ப பிடிச்சதால அவர்தான் என்னை அம்ரீஷிற்கு அறிமுகபடுத்தினார்..அப்படி தான் அம்ரீஷை தெரியும்ங்க”.. ஏன் அவங்க மாமனார் வெங்கடாசலத்திற்கு கூட ஒருமுறை இன்டீரியர் ஓர்க் செய்து கொடுத்திருக்கேன்ங்க..
“ஆராதனாவை தெரியுமா?”
“போன வருஷம் ப்ளாட் புக் பண்ண இந்தியா வந்த போதே சந்திச்சிருக்கேன்..அப்புறம் இன்டீரியர் விஷயமா நிறைய தடவை பார்த்து பேசியிருககேன்.. ரொம்ப நல்ல மாதிரியான மரியாதை தெரிந்த பொண்ணு..அதுக்கு இப்படி ஆகியிருக்ககூடாதுங்க…ரொம்ப கஷ்டமா போச்சி”..
“இந்த ஒர்க் எப்ப உங்கிட்ட வந்தது?”
“போன வருஷம் ப்ளாட் புக் பண்ண உடனே ஒர்க் நம்மகிட்ட தான் வந்ததுங்க..அதுக்கப்புறம் ஒரு இரண்டு மாசத்தில் முடிச்சிட்டேன். ஆனா அம்ரிஷ் ஒரு ஆறு மாசத்திற்கு முன்ன வந்தபோது சில கரெக்ஷன் சொல்லியிருந்தாரு… அதனால் மறுபடியும் சில மாறுதல்களை செய்தோம்”…
“இப்ப முழுசா முடிச்சாச்சா?”
“ஆல்மோஸ்ட் முடிச்சாச்சு…சில குட்டிகுட்டி வேலைகள் மட்டும் தான் பாக்கி..இந்த முறை ஆராதனா வந்து பாத்து ஒர்க் திருப்தியாச்சுன்னா…அந்த பாக்கி இருக்குற சின்ன ஒர்க்கையும் முடிச்சிடலாம்னு பேசியிருந்தோம்”..
“இந்த முறை ஆராதனா வந்ததும் உங்ககிட்ட பேசினாங்களா?”
“பேசினாங்க…ஆக்சுவலா அன்னைக்கு ப்ளாட்டிற்கு வரமுடியுமான்னு கேட்டிருந்தாங்க… அந்த நேரத்தில் எங்களுக்கு பாண்டியில் ஒரு பெரிய ப்ராஜக்ட் போயிட்டிருந்ததால…நான் இரண்டு நாள் கழிச்சி வரேன்னு சொல்லியிருந்தேன்.. அதுக்குள்ள இப்படி ஆயிருச்சி”..
“அந்த ப்ளாட்டோட சாவி ஒன்னு உங்ககிட்ட இருக்காமே?”
“இருந்தது இப்ப இல்லை…சில மாசம் முன்ன அம்ரிஷ் அவர் ப்ரண்ட் ஒருத்தர் கிட்ட கொடுக்க சொல்லியிருந்தார்… அவருகிட்ட குடுத்துட்டேன்”..
“யார் அந்த ப்ரண்ட்?”
“அது தெரியலைங்க?”
“யாரோ வந்து வாங்கிட்டு போனாதா ஆபிஸ்ல சொன்னாங்க…அது என் பசங்களுக்கு தான் தெரியும். அவங்க வேலை செய்யும் போது தான் ஆள் யாரோ வந்து வாங்கிட்டு போயிருக்காங்க…ஏன் நீங்க அம்ரீஷையே கேட்கலாமே…யார்கிட்ட சாவி இருக்குன்னு”..
“இட்ஸ் ஓக்கே…நோ ப்ராப்ளம்”..
“அம்ரிஷ் எதுக்கு ஆறு மாசம் முன்னாடி இந்தியா வந்திருந்தார்? உங்களுக்கு தெரியுமா?”
“ஏன் வந்தாருன்னு எனக்கெப்படிங்க தெரியும்..அது அவரை தான் கேக்கணும்”.
“சரி!… நீங்க கிளம்புங்க தேவைபட்டா உங்களை கூப்பிடுறோம்..நன்றி” என கைகூப்பினாள்..
“தாராளமா கூப்பிடுங்க”..என பதிலுக்கு கைகளை குவித்து விட்டு கிளம்பினார் பரணிதரன்
“ச்சே!…ஒரு க்ளுவும் கெடைக்க மாட்டேங்குதே”…என கடுப்பானாள் அனாமிகா..
தலைவலி மண்டையை பிளந்தது..மேற்கொண்டு யோசிக்க வேண்டுமானால்..சூடாக ஒரு காபி குடித்தால் தான் ஆச்சு என்று தோன்றியது..
பெல் அடித்து ஒரு காபியை சொல்லிவிட்டு சேரில் சாய்ந்து கண்ணை மூடினாள்.
பத்து நிமிடம் அப்படியே அமர…”மேடம் காபி”..என்ற சிறுவனின் குரலில் கலைந்தாள். ப்ரூ காபி வாசனை நாசியை துளைக்க…காபி டம்ளரை மூக்கருகே கொண்டு சென்று அதன் வாசத்தை ஆழ்ந்து உள்ளே இழுத்தாள். காபி மணம் ரம்மியமாக உள்ளே நுழைந்தது. காபியை சுவைத்தபடியே அமைதியாக யோசிக்கத் தொடங்கினாள். இப்போது தலைவலி சற்று குறைந்தது போல தோன்றியது..
மேஜையில் இருந்த ஆராதனாவின் போனை ஆன் செய்தாள். திரையை உயிர்பித்து விரல்களால் நகர்த்தி கொண்டே வர…ஆராதனாவின் பேஸ்புக் அகவுண்ட் லாக் செய்யப்படாமல் திறந்திருந்தது.. முகப்பு படத்தில் இளைமையாக அழகாக இருந்தாள் ஆராதனா..”சாதிக்க பிறந்தவள்” என்கிற வாசகத்துடன்.
அப்படியே விரல்களால் தள்ளிக்கொண்டே வந்தாள்..
வாழ்வின் பெரு மாற்றங்கள்…என ஏதோ ஒரு தத்துவங்கள், அறிவுரைகள் என வழக்கமான பார்வேர்ட் மெசேஜ்கள்..
அப்படியே ஸ்ரோல் செய்ய…படுத்திருக்கும், ஒடும், விளையாடும் குழந்தை ஆத்யாவின் புகைபடங்கள்…அம்ரீஷ், ஆராதனா பல்வேறு இடங்களில் ஜோடியாக எடுத்த புகைப்படங்கள்…என வந்துகொண்டேயிருந்தது….
அது யார் அது ஆராதனா அம்ரீஷிற்கு நடுவில்…அழகாக இருந்தாள்….ஷெர்லி…என டேக் செய்திருந்தது…லண்டனில் எடுத்த புகைப்படம் போல தெரிந்தது…அம்ரீஷிடம் கேட்க வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டாள்..
இன்னமும் சற்று கீழே தள்ள ஆராதனாவின் குடும்பத்துடன் இது யார் எங்கேயே பார்த்த மாதிரி இருக்கே என மண்டையை தட்டி யோசித்தாள் அனாமிகா…யெஸ்…நினைவு வந்துவிட்டது . இவன் ரித்தேஷ்…ஆராதனா இறப்பதற்கு முன்பு போன் கூட செய்திருந்தான்…இவனையும் விசாரணை வளையத்திற்குள் வைத்திருந்தது ஞாபகம் வந்தது.. இவனையும் விசாரிக்க வேண்டும்..என்று நினைத்துக் கொண்டாள்.
மொபைல் ஒளிர…அம்ரீஷ் தான் அழைத்திருந்தான்..
“சொல்லுங்க அனாமிகா மேம்!…மேசேஜ் இப்ப தான் பார்ததேன்”..
நீங்க ஊருக்கு போயாச்சா?
இன்னும் இல்லீங்க…
“ஆராதனா விஷயமா சில தகவல்கள் தேவைப்படுது..ஐஸ்ட் கொஞ்சம் க்ளாரிபை பண்ணலாமேன்னு…தான்.”
“ஓ யெஸ்… தாராளமா… எதுவாயிருந்தாலும் கேளுங்க.. தெரிஞ்சதை சொல்றேன்”…
“இங்க கொஞ்சம் வரமுடியுமா?” என அனாமிகா அம்ரீஷை அழைத்தாள்.
அவன் வந்தால் சில கேள்விகள் கேட்டு விடைபெற சில குழப்பங்கள் விலகும் என நினைத்தவாறு அம்ரீஷை கேள்விகளால் துளைக்க மனதிற்குள் தயாரானாள்.