ஒற்றனின் காதலி | 9 | சுபா

 ஒற்றனின் காதலி | 9 | சுபா

விஜி, தன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களில் என்னை, வெகு சுலபமாகச் சேர்த்து விட்டான். என்னுடைய இயல்பான, கவர்ச்சியான, பெண்மை கலந்த சிரிப்பினால், சக தொழிலாளர்களைக் கவர்ந்து விட்டேன்.

தங்கபாண்டி, பீட்டர், மது, குமார், அபூபக்கர் எல்லோருமே என்னுடன் சகஜமாகப் பழகினார்கள். டீ சாப்பிட்டார்கள். சிகரெட் புகைத்தார்கள். சாராயம் குடித்தார்கள். என் சக தொழிலாளர்களிடம் எனக்குக் கொஞ்சம் செல்வாக்கு அதிகம் வேண்டும். நான் சுரங்கத்தில் விஜியை எப்படிக் கொல்வது என்று தீர்மானித்த பின், என் சக தொழிலாளர்கள் எனக்குச் சதுரங்கத்தின் காய்களாக உபயோகப்படலாம். நான் ஆணையிடும்போது, அவர்கள் எனக்குக் கட்டுப்பட வேண்டும்.

நான், அவர்களை வசியப்படுத்தினேன். சாராயத்திற்குக் காசு கொடுத்து. அவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சின்ன, சின்ன அன்பளிப்புகளாக வாங்கிக் கொடுத்து. மற்ற தோழர்கள் எல்லாம், எனக்கு சாதகமாக எதையும் செய்யத் தயாராய் இருந்தார்கள்.

தினம், தினம் சுரங்கத்தில் இறங்கி, ஏறிப் போய் வந்து கொண்டிருந்தேன்.

முப்பது நாட்கள்.

முப்பது நாட்களில், சுரங்கத்தின் உள்ளே அமைப்பு எப்படி? அங்கே யாரும், யாரையும் சந்தேகப்படாமல் கொலை செய்ய முடியுமா என்றெல்லாம் ஆராய்ந்தேன்.

சுரங்கத்தின் முன் வாசலில் இருந்தே உங்களுக்கு விளக்கி விடுகிறேன். என்னோடு சேர்ந்து உங்களாலும், தங்கச் சுரங்கத்தில் இறங்க முடிகிறதா என்று பாருங்கள்.

பாரத சுரங்கத்தின் முகப்பிற்கு பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட, மூடப்பட்ட கதவுகள். பக்கத்தில் திட்டிவாசல் போல இன்னொரு சின்னக் கதவு. தொழிலாளர் கார்டு வைத்திருப்பவர்கள், இந்த வழியாகத்தான் நுழைய வேண்டும். பெரிய கதவு தங்கப் பாறைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்காக.

கதவுகளுக்கு இருபுறமும், கிண்ணென்று இழுத்துக் கட்டப்பட்ட இரும்பு முள்வேலி. முள்வேலியினூடே காம்பவுண்டிற்குள் அமைந்திருக்கும் சுரங்கக் கட்டிடம் தெரியும். ஆனால், முள்வேலி வழியாகச் சின்ன எலிகூட நுழைய முடியாது. அவ்வளவு நெருக்கமான முட்கள் கொண்ட முள்வேலி.

சுரங்கக் கட்டிடம், ஒரு திறந்த வீடு போலக் காட்சி அளிக்கும். கட்டிடத்தின் உச்சியில் இரண்டு ராட்சச உருளைகள் பொருத்தப்பட்டு இருந்தன. அந்த உருளைகளில் தேர்வடம் அளவிற்கு இரும்புக் கயிறு சுற்றப்பட்டிருந்தது. சுமார் 20,000 அடி நீளமுள்ள இரும்புக் கயிறு. இந்த இரும்புக் கயிற்றின் இரு நுனிகளில், இரு கூண்டுகள் இணைக்கப்பட்டிருந்தன. சுரங்கத்தில் தொழிலாளர்கள் இறங்க, ஏற, உதவும் லிஃப்ட்கள்.

இரும்புக் கயிறு சுற்றப்பட்ட, இரண்டு ராட்சச இரும்பு உருளைகளைச் சுழற்றினால், லிஃப்ட் கீழிறங்கும். மேலேறும். இரும்பு உருளைகளைச் சுழற்ற, அவற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த, ஒரு ராட்சச மிஷின். அதுவும் பிரிட்டிஷ் தயாரிப்பு. அவர்களுடைய மிஷின். அதனை இயக்க ஒரு ஆசாமி.

சுரங்க வேலையில் ஈடுபடுபவர்கள், சுரங்கத்தில் இறங்குபவர்கள், எல்லாம், சுரங்க நிர்வாகத்திற்கு ஒரு உறுதிமொழியைக் கையெழுத்திட்டுத் தரவேண்டும் என்பதைச் சுரங்கத்தில் நான், முதல் நாள் இறங்கும் போதே தெரிந்து கொண்டேன். அந்த உறுதிமொழி, ஒரு கார்டில் அச்சடிக்கப்பட்டிருந்தது. நான் சுரங்கத்தின் கீழ் செய்யப் போகும் கொலைக்கு என்னைக் காரணமாக்காமல், எனக்குக் கவசமாக இருக்கப் போகிற அந்த உறுதிமொழி என்னவென்றால்…

நான் என் சுயவிருப்பத்தின் பேரில் சுரங்கத்திற்குள் இறங்குகிறேன். அப்படிப் போகும் போதோ, சுரங்கத்திற்குள்ளோ விபத்து ஏற்பட்டு, அங்கஹீனம் அடைந்தாலோ, உயிரிழக்க நேரிட்டாலோ, அதற்கு முற்றிலும் நானே பொறுப்பு.

முதல் முறை அந்த உறுதிமொழியைப் படித்து விட்டுக் கையெழுத்திடும்போது, எனக்கே உள்ளூர நடுக்கமாகத்தானிருந்தது. கையெழுத்துப் போட்டு விட்டேன். என்னுடன் இருந்த விஜய்குமார், என் தோளில் தட்டிக் கொடுத்து, “பயப்படாதே, இதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டி” என்றான்.

‘எனக்கு ஃபார்மாலிட்டி. உனக்கு எமன்’ என்று நினைத்துக் கொண்டேன். நாங்கள் காத்திருந்தோம்.

கீழே, போயிருந்தது கேஜ். அந்தக் கூண்டு மேலே வருவதற்காகக் காத்திருந்தோம். அந்தச் சுரங்கத்தில் இறங்கிய முதல் நாளை என்னால் ஆயுளுக்கும் மறக்க முடியாது.

நாங்கள் காத்திருந்த இடம் ஒரு வரவேற்பறை போல. சில மரபெஞ்ச்கள். புறாக் கூண்டுகள் போல நெருக்கமாகக் கூண்டுகள் கொண்ட ஒரு மர ஷெல்ப். அந்தக் கூண்டுகளில் ஃபைபர் ஹெல்மெட்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கூண்டு மேலே வந்தவுடன் வெளியேறி வரும் ஆட்களிடம் ஏதாவது தங்கக் கற்கள் ஒளிந்திருக்கிறதா? என்று, சோதனை செய்து பார்க்கும் செக்யூரிட்டி ஆசாமி நின்றிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கூண்டில் ஏறி, சுரங்கத்தின் உள்ளே இறங்குபவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளும் ஆஃபீஸர் இருந்தார். அவர் மார்பில் இருந்த பிளாஸ்டிக் தகடில் அப்பச்சன் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. சுரங்க வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒரு மலையாளியை முதல், முதலாக அப்போதுதான் பார்த்தேன்.

சுரங்க வேலையில் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்ற காரணத்தால்தான், மலையாளிகள் அந்த வேலையில் சேருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்று தமிழர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள்.

வேறு வழியற்ற, வாழ்க்கையில் பசியோடு வாடுவதை விட, உயிர் போனால் பரவாயில்லை என்று தீர்மானித்த, ஏழைத் தமிழர்கள்தான் சுரங்க வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றும் தங்கபாண்டி கூறியிருந்தான்.

இப்போது முதல், முறையாக அப்பச்சன் என்னும் மலையாளியைப் பார்த்தபோது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

கூண்டு மேலே வந்தது. கூடவே ஒரு பரபரப்பு. கூண்டில் ஒரு தொழிலாளி மயங்கிய நிலையில் இருந்தான். அவனை இருவர் சுமந்து வந்து ஒரு பெஞ்சில் படுக்க வைத்தார்கள்.

மயங்கி இருந்தவன் கண்களைத் திறந்து வைத்திருந்தான். பார்வை சூன்யத்தை வெறித்துக் கொண்டிருந்தது. இரண்டு பேர் அவனை அழைத்துப் பார்த்தார்கள். மௌனம். யாரோ சுள்ளென்று முகத்தில் தண்ணீர் அடித்தார்கள். அப்போதும் அவன் எழவில்லை. கைகள் அவ்வப்போது இழுத்துக் கொண்டன.

‘சுரங்கத்தில் ஏணியில் ஏறும்போது, தவறி விழுந்து விட்டான்’ என்றார்கள். கூடவே ‘அவனுக்கு வலிப்பு நோயும் இருக்கிறது’ என்றார்கள்.

தொடர்ந்து எங்களைப் பார்த்து, கூண்டில் ஏறச் சொன்னார்கள்.

சுரங்கத்தில் வைத்து, விஜியைக் கொலை செய்வது என்று தீர்மானித்து, அந்த சுரங்கத்திலேயே தொழிலாளியாக வேலை செய்வதற்கு லஞ்சம் எல்லாம் கொடுத்து, வேலையில் சேர்ந்து விட்டேனே ஒழிய, முதல் நாளில், அந்த முதல் அனுபவம் என் வயிற்றில் புளியை, அமிலத்தை, எலுமிச்சை ரசத்தைக் கரைத்தது.

*

கூண்டில் ஏறி, கீழே இறங்குவதற்கு முன் தலையில் அணிந்து கொள்ள ஃபைபர் ஹெல்மெட்டைக் கொடுத்தார்கள். கூடவே ஒரு பாட்டரி பெட்டி. அந்தப் பெட்டியுடன் இணைந்த ஒயர். ஒயர் நுனியில் ஒரு விளக்கு. ஹெல்மெட்டில் பொருத்திக் கொள்கிற மாதிரி, ஒரு பிளாஸ்டிக் பட்டை விளக்குடன் இணைந்திருந்தது.

விளக்கை ஹெல்மெட்டில் பொருத்தினேன். நெற்றிக்கு நேர் மேலே விளக்கின் பொஸிஷன் இருக்கிற மாதிரி, ஹெல்மெட்டை அணிந்தேன். பாட்டரி பெல்ட்டை என் தோளில் இருபுறமும் மாட்டினேன். மலையேறுபவர்கள் பின்னால் லக்கேஜை வைத்து பெல்ட்டை மாட்டிக் கெள்கிற மாதிரி. பாட்டரியின் பாரம் என் முதுகில்.

ஸ்விட்சைப் போட்டேன். ஒரு தடியான பம்ப்செட்டின் நீர்க் கயிறு அளவிற்கு ஒளிக்கற்றை வெளிப்பட்டது. அது என் தலையில் இருந்து நேரே, கீழே பாய்ந்தது. ஒரு நடமாடும் ஜெனரேட்டர் போல, நானே விளக்குடன் நடப்பது என்பது, எனக்கு ஒரு தனி அனுபவமாகத்தான் இருந்தது.

கூண்டில் நுழைந்தேன். விஜியும்.

“பயப்படாதே” என்றான் விஜி. நானா, அவனா? யார் பயப்படக் கூடாது?

கூண்டு ஒரு முறை குலுங்கியது. இறங்கத் தொடங்கியது. அவ்வளவுதான் தெரியும். அப்புறம் ஏற்பட்ட அனுபவங்களை இப்போது நினைத்தாலும் கனவு போலத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அந்தக் கூண்டே, அறுந்து விட்டாற்போன்ற ஒரு வேகத்துடன் கீழே இறங்கியது.

‘சர்’ரென்று. ஒரு வேகம். உடம்பில் இருக்கும் அத்தனை ரத்தமும், தலைக்கு ஏற, காது திடீரென்று அடைத்துக் கெண்டது. நிற்க முடியாமல் கால்கள் தொய்ந்துவிட்ட உணர்வு. தொண்டை வறண்டது. கூண்டில் இறங்குவதற்கு முன், ஒவ்வொரு தொழிலாளியும் ஒரு புளிப்பு மிட்டாயை வாயில் போட்டுக் கொண்டான். சின்னப்பிள்ளை விவகாரமாக இருககிறதே என்று நான் வாங்கிப் பையில் போட்டுக் கொண்டேன். தொண்டை வறட்சிக்குத்தான் அந்த மிட்டாய் என்பது, எனக்குத் தெரியாமல் போய்விட்டது. லேசாக மயக்கம் வந்தது. கூண்டுக்குள் ஒரு சங்கிலி தொங்கியது. பிடித்துக் கொள்வதற்கு வசதியாக. பிடித்துக் கொண்டேன்.

மற்றவர்கள் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

“முதல் நாள், அப்படித்தான் இருக்கும்” என்றார்கள். கூண்டு முழுக்க, முழுக்க மூடாத கூண்டு. வெறும் இரும்புப் பட்டைகளால் ஆனது. மேலே ஒரு தகடு கூரையாக. கீழே ஒரு தகடு பூமியாக. சுற்றிலும் இருட்டு. தலையில் இருக்கும் விளக்கு. என்னைச் சுற்றிக் கீழே, இறங்கிய இரும்புக் குழாய்களைக் காட்டியது. குழாய்களுக்கு அப்பால் வெறும் கரும் பாறைகள் தெரிந்தன.

‘இந்தப் பயணத்திற்கு ஒரு முடிவே இல்லையா என்ன?’ என்று பயணம் தொடங்கிய சில வினாடிகளுக்குள் தோன்றியது. கூண்டின் வேகம் குறையத் தொடங்கியது. ஒரு குலுங்கு, குலுங்கிக் கூண்டு நின்றது.

கூண்டின் கதவு திறக்கப்பட்டு, நானும், விஜியும் மற்றவர்களும் வெளியேறினோம். நாங்கள் கூண்டை விட்டு வெளியேறியது, டெலிஃபோன் மூலம் மேலே இருக்கும் ஆப்பரேட்டரிடம் சொல்லப்பட்டது. விஜிதான் டெலிஃபோனில் சொன்னது. கூண்டு, மறுபடியும் கீழே இறங்கத் தொடங்கியது.

இந்தக் கூண்டு, கீழே இறங்கும்போது, இன்னொரு பக்கம், இன்னொரு கூண்டு மேலே ஏறிக் கொண்டிருக்குமோ என்னவோ!

நான் இறக்கி விடப்பட்ட இடம் ஒரு குகைப்பாதை. ஒரு ட்யூப் லைட் அங்கே ரீங்காரத்துடன் எரிந்து கொண்டிருந்தது. குகைப்பாதையின் முகப்பில் 32 என்று ஆஸ்பத்திரி வார்டு நம்பர் போல் ஒரு போர்டு தொங்கியது.

“அது என்ன சார், முப்பத்திரண்டு?”

“ஒரு லெவலுக்கும் இன்னொரு லெவலுக்கும் இடைவெளி உள்ள தூரம் நூறு அடி. நீங்கள் பூமி மட்டத்தில் இருந்து மூவாயிரத்து இருநூறு அடி கீழே இருக்கிறீர்கள்” என்றான் தங்கபாண்டி.

தலையை அண்ணாந்து பார்த்தேன். என் தலைக்கு ஒரு அடி மேலேயே, பாறை தெரிந்தது. பாறையைத் தட்டிப் பார்த்தேன். ஸ்ட்ராங்காக இருந்தது. கீழே இடிந்து விழுந்து என்னை மூடாது என்று தோன்றியது.

“போகலாமா?” என்று விஜய்குமார் கேட்டான். அவன் அந்த குகைப் பாதையில் தெரிந்த ஒரு கதவை நோக்கி நடந்தான். கதவு இரும்பால் ஆனது. அதை ஒரு தொழிலாளி திறந்து விட்டான். கதவின் மறுபக்கம் வெளிப்பட்டவுடன் இரும்புக் கதவு மூடிக்கொண்டது.

இருட்டு, இருட்டு, இருட்டு, கூண்டிலிருந்து முப்பத்திரண்டாவது லெவலுக்கு இறங்கியவுடன் தெரிந்த ட்யூப்லைட் வெளிச்சத்தைப் பார்த்துதான் தலைக்கு மேல் இருந்த ஸ்விட்சை அணைத்துவிட்டேன். அதனால், திடீரென்று இருட்டு என்னை தாக்கியவுடன் நான் அதிர்ந்து போனேன்.

விளக்கைப் போட்டேன். மற்றவர்களும்.

–காதலி வருவாள்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...