பெண்களே பாட்டியின் உடலைப் பாடையில் சுமந்து சென்றனர்

 பெண்களே பாட்டியின் உடலைப் பாடையில் சுமந்து சென்றனர்

இந்த நாட்டில் பெண்கள்தான் எல்லாம். அவளைப் பாராட்டும் அதே சமுதாயம் அதே பெண்ணைச் சம்பிரதாயம் என்கிற போர்வைக்குள் தள்ளி செய்கிற கொடுமைகள் அதிகம். நல்ல விசேஷங்கள் என்றாலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் அதிகம். அதே வீட்டில் யாராவது இறந்தால் பெண்களைப் படுத்துகிற பாடு சொல்லி மாளாது.

அவரின் தாலி அறுத்து, குங்குமத்தை அழித்து, தலையில் அனைவர் முன்னிலையிலும் குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி அலங்கோலப்படுத்திவிடுவர். அதையும் ஒரு பெண்ணையே வைத்து செய்துவைப்பவர்.

அதே மனைவி (பெண்) இறந்தால் அந்த கணவனுக்கு (ஆண்) இப்படிப்பட்ட எந்தச் சடங்கும் செய்வதில்லை. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது. பெண்கள் பிணம் சென்ற பிறகு தரையில் விழுந்து புரண்டு அழவேண்டும் என்கிற கொடூரமான சடங்கு சம்பிராதாய முறையோடு நின்று விடுவதில்லை. அவர்கள் மூன்று மாதங்கள் வெளியில் தலைகாட்டக்கூடாது, நல்ல விசேஷங்களில் கலந்துகொள்ளக்கூடாது, நெற்றியில் குங்குமம் வைக்கக் கூடாது. ஆண்கள் வெளியில் போகும்போது எதிரே வரக்கூடாது என்கிற முட்டாள்தனமான சம்பிரதாயங்களை இன்றும் மறைமுகமாக உலவுவதைப் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் அடித்து நொருக்கியவர் தந்தை பெரியார். அவர் வழி தொண்டர்கள் இன்று அதே கொள்கைவழி வாழ்கிறார்கள்.  

ஆனைமலையை அடுத்த காளியப்பன் கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 75). இவருடைய மனைவி காவேரியம்மாள் (82). இவர் களது குடும்பத்தினர் தந்தை பெரியார் மீது அதீத பற்று கொண்டவர்கள். இந்த நிலையில் காவேரியம்மாள் நேற்று வயது மூப்பு காரணமாக மரணம் அடைந் தார். வழக்கமாக இறந்தவர்களின் உடலை ஆண்கள் சுமந்து சென்று அடக்கம் செய்வது வழக்கம். ஆனால் மரணம் அடைந்த காவேரியம்மாளின் உடலை பெண்கள் சுமந்துகொண்டு ஊரைச் சுற்றி வந்தனர். பின்னர் உடலை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கினர். காவேரியம்மாளின் கணவர் சுப்பிரமணியன் கடந்த 2015-ம் ஆண்டு இறந்தார். அவரது உடலும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவேரி அம்மாள்

பொள்ளாச்சி அருகேயுள்ள காளியப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கா.சு.நாகராசன். இவர் தமிழ்நாடு திராவிட இயக்க தமிழர் பேரவையின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார். இவரின் தாயார்தான் காவேரியம்மாள் (82). இது குறித்து தகவல் அறிந்து அனைத்து கட்சியினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து காளியப்ப கவுண்டன் புதூரில் உள்ள அவரது இல்லத் தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைமை நிலைய நிர்வாகி பொள்ளாச்சி உமாபதி அரசு வழக்கறிஞர் விஜயராகவன், ஆதித் தமிழர் பேரவை கோபால், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் மாரி முத்து, தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி யாழ் வெள்ளியங்கிரி, திராவிடர் கழக நிர்வாகி சிற்றரசு உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைப்படி சடங்கு கள் மறுத்து அஞ்சலி செலுத்தி இறந்த மூதாட்டியின் உடலை குடும்பப்பெண் கள் மட்டும் சுமந்து ஊர்வலமாகச் சென்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். 

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...