‘மின்மினி’ மாத மின்னிதழ் அறிமுக விழாவுக்கு அமோகம் வரவேற்பு
‘மின்மினி’ மின் மாத இதழ் அறிமுகக் கூட்டம் இன்று (16-10-2022) சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் மாலை 6 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. மின்மினி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருப்பவர் பல்கலை வித்தகர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள். இதன் வெளியீட்டாளர் எழுத்தாளர் லதா சரவணன் அவர்கள்.
இந்த அறிமுக விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த 12 பேரும் பத்திரிகை உலகில் அனுபவம் பெற்ற பெண் ஆளுமைகள்.
அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் தொடங்கிய கூட்டத்தில் எல்லாமே திட்டமிட்டபடி நடந்தேறியது. சிறப்பு விருந்தினர்களை பேச அழைத்ததுமே அவர்களைப் பற்றி தகவல்கள் திரையில் காண்பிக்கப்பட்டதும் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பிறகு அவர்களின் உரை என்கிறபடி ஒவ்வொரு ஆளுமைக்கும் வகுக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
அரங்கு நிறைந்த கூட்டத்தில் பார்வையாளர்கள் குறைவாகவும் எழுத்தாளர்களும் ஆளுமைகளுமே நிறைந்திருந்தது இந்த விழா தனிச்சிறப்பான விழா என்பதைக் கட்டியங்கூறியது.
மேடைக்குக் கீழே தன்னடக்கத்துடன் எழுத்தாளர்கள் மாலன், சுபா, தேவிபாலா, மணிபாரதி ஆகியோர் அமர்ந்திருந்து நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டிருந்தனர்.
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் மகள்தான் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். பேச்சாளர்களின் பேச்சைக் குறைக்காமல் குறுக்கிடாமல் அழகாக அழைத்து நன்றி கூறி தொகுத்தது சிறப்பு.
மின்மினி மின்னிதழ் அரங்கிலேயே அச்சிட்டு வழங்கியது பார்வையாளர்களை உடனே அதன் சுவையை ருசிக்க முடிந்தது.
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பை சிறப்பாக அமைத்திருந்தார். அதேபோல் பரிசு வழங்குவது பார்வையாளர்களுக்கு நூல் வழங்குவது சாக்லெட் வழங்குவது வரை அனைத்தும் எழுத்தாளர் லதா சரவணன் அவர்கள் திட்டமிட்டு சிறப்பாக செய்திருந்தது நூலின் அமைப்பைப்போலவே சிறப்பாக இருந்தது.
வரவேற்புரையை லதா சரவணன் சிறப்பாக ஆற்றினார். இந்த இதழ் உருவாக துணை நின்ற அத்துணை பேர்களுக்கும் நன்றி கூறியதோடு ஆசிரியர் பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பட்டுக்கோட்டை பிரபாகரின் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி பரிசு வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து பேருக்குப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
முன்னாதாகப் பேசி பத்திரிகையாளர் லோகநாயகி, பத்திரிகையின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்யவேண்டும் என்கிற ஆலோசனைகளை சிறப்பாக வழங்கி அமர்ந்தார்.
அடுத்துப் பேசிய கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி மின்மினி ஆயிரம் சூரியனின் ஒளியுடன் பிரகாசிக்கவேண்டும் என வாயார வாழ்த்தி அமர்ந்தார். அடுத்து பேசிய கவிஞர் அமுதா தமிழ்நாடன், லதா சரவணன் எப்படி தொழிலையும் கவனித்துக்கொண்டு சொந்த பந்தங்களையும் நேரடியாக இருந்து அரவணைத்துச் செல்கிறார் என்பதையும் லதாவின் மகள்கள் அவருக்கு கடலில் மிதக்கும் டைட்டானிக் கப்பல் பரிசை வழங்கி அவரை போராட்ட குணத்தை விளக்கினார்கள் என்று பேசியது அரங்கை உரைய வைத்தது.
நங்கை ஸ்வேதா பேசும்போது லதா சரவணன் தன் அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்து தனக்கும் தன் இனத்துக்கும் உறுதுணையாக இருப்பதையும், மூன்றாம் பாலினத்தைப் பற்றி லதா சரவணன் எழுதி நுலைப் பற்றியும் மிகவும் சிறப்பித்துக் கூறினார்.
பாவை மலர் வான்மதி பேசியபோது நான் வடசென்னைக்காரி, கொஞ்சம் திமிர் இருக்கும். என் தோழியாக லதாசரவணன் இருக்கிறார். தொடர்ந்து பேசாமல் இருப்போம் திடீரென்று பேசிக்கொள்வோம் எங்கள் தொழில் அப்படி என்றார்.
பத்திரிகையாளர் ரேவதி பேசும்போது பத்திரிகை உலகில் தான் கடந்து வந்த பாதையைச் சொல்லி மின்மினி இதழ் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் இது நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
ராணி இதழ் ஆசிரியர் ஜி.மீனாட்சி பேசும்போது, பத்திரிகை வாழ்க்கை இரண்டாகப் பிரித்துக்கொண்டு பேசினார். கொரோனாவுக்கு முன் பத்திரிகைகளின் சர்குலேஷனும் கொரோனாவுக்குப் பின் பத்திரிகைகளின் சர்குலேஷனும் மாறுபட்டது. இன்றைய படிக்கும் பழக்கம் குறைந்த காலத்தில் அச்சுப் பத்திரிகைகளோடு சேர்த்து ஆன்லைன் இதழ்களும் தொடங்கிவரும் வேளையில் மின்மினி தொடங்கியிருப்பது நல்ல விஷயம். அதேநேரம் இந்தப் பத்திரிகையை அக்டோபர் மாதம் தொடங்கியதற்கான காரணத்தை ஆசிரியரிடம் கேட்போது அவர் சொல்லவில்லை. நான் தெரிந்துகொண்டேன். அக்டோபர் மாதத்தில்தான் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் திருமணம் நடந்தது. அவரது இரண்டு மகள்கள் பிறந்ததும் அக்டோபர் மாதத்தில் என்பதால் இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தார் ஆசிரியர். அதனால் மின்மினியையும் அவரது ஒரு பெண்ணாகவே கருதியிருக்கிறார் என்று பேசியதும் அரங்கு நிறைந்த கரஒலி கேட்டது.
கவிஞர் அமுதா பொற்கொடி பேசும்போது தானும் வடசென்னையில் ஒரு பள்ளியை நிர்வகிப்பதாகவும், அதேபோல்தான் லதா சரவணனும் ஒரு நிறுவனத்தை நிர்வகித்துக்கொண்டே எழுத்துப் பணியிலும் சிறந்த விளங்குகிறார் என்று வாழ்த்திப் பேசினார்.
உரத்த சிந்தனையின் தலைவர் பத்மினி பட்டாபிராமன் பேசும்போது ஆசிரியர் குழுவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். இன்றைய இளைஞர்கள் படிக்கவில்லை என்கிறீர்கள். அவர்களை உங்கள் மின்னிதழில் எழுத வையுங்கள் என்று கோரிக்கை வைத்தார்.
இறுதியாக சிறப்புரையாற்றி எழுத்தாளர் இந்துமதி அவர்கள் தன் நீண்ட எழுத்துப் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் தான் தயாரித்த படத்தால் தனக்கேற்பட்ட நஷ்டத்தையும் தெரிவித்தார். அந்த மனக்கஷ்டத்தில் முடங்கியிருந்தபோது பட்டுக்கோட்டை பிரபாகர்தான் எனக்கு ஆறுதல் சொன்னார் என்று கூறியவர், பத்திரிகையில் நவீன இலக்கியத்துக்கும் இடம் கொடுக்கவேண்டும் என்று ஆசிரியரிடம் கேட்டுக்கொண்டார்.
நன்றியுரையாற்றிய பட்டுக்கோட்டை பிரபாகர் பெண்களையே வைத்து ஏன் மின்மினி இதழ் அறிமுக விழாவை நடத்தினேன் என்பதை விளக்கி விரிவாகப் பேசினார். பெண்கள் முன்னேறிவிட்டதாகப் பேசிக்கொள்கிறோம். அது இல்லை. பெண்கள் 30 சதவிகிதம்தான் முன்னேறியிருக்கிறார்கள். அது போதாது. அவர்கள் நூறு சதவிகிதம் எல்லா துறையிலும் முன்னேறி வரவேண்டும் என்று பேசினார். அரங்கு நிறைந்த கூட்டம் கலையாமல் அறிமுகக் கூட்டம் நிறைவு பெற்றது.
‘மின்மினி’யை எப்படிப் படிக்கவேண்டும்?
மின்மினி மின்னிதழ் இன்று மட்டுமே அனைவருக்கும் அச்சிட்டு வழங்கப்பட்டது. மற்றபடி இணைய வழியில் சந்தா கட்டி மாதந்தோறும் www.minmini.co.in என்ற முகவரியில் படிக்கலாம். ஆண்டு சந்தா ரூ. 500
இந்த இதழில் என்ன இருக்கிறது?
முதல் பக்கத்திலேயே அருமையான விநாயகர் காட்சி அளிக்கிறார். திரு. ரவீந்தர் தீட்டிய கோட்டோவியம் அருமை. அதோடு இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, ஜைன மதங்களின் கடவுளர்களின் ஆசியுடன் என்று தொடங்கியிருப்பது வித்தியாசமானது.
ஆசிரியர் உரையில் இதென்ன சாதாரண இதழா? இல்லை… சிறப்பிதழா? இனி ஒவ்வொரு இதழுமே சிறப்பிதழ்தான் அதிரடிதான். ஆச்சரியம்தான் என்று பகீர் கிளப்பியிருக்கிறார் பட்டுக்கோட்டை பிரபாகர்.
அடுத்து சிவசங்கரியின் ஷார்ட் கட் நாவல் கருணைக் கொலை, ரவி சுப்பிரமணியன் கவிதை, சுபா VS சுபா பேட்டி, இயக்குநர் மணிபாரதி கவிதை, ஓவியர் ஷியாமின் இதுதான்டா கார்ட்டூன், பிரியங்களுடன் பிரபாகர் கேள்வி பதில் பகுதி, ஷான் கருப்பசாமி எழுதிய நாவல் டிரைலர், இந்திரா சௌந்தரராஜன் எழுதும் சிறுகதை எழுதுவது எப்படி? வழக்கறிஞர் எஸ். செல்வகுமாரி எழுதும் அய்யே.. இதுகெல்லாமா டைவர்ஸ்? நந்து சுந்து படக்கதை, கார்த்திக் ராஜ்குமார் எழுதிய கவிதையல்ல நிஜம், சுஜாதாவுக்கு உயரிய விருதுகள் ஏன் வழங்கப்படவில்லை? என்று கருத்துச்சொல்லும் பிரபலங்களின் பேட்டிகள், அகிலா ஸ்ரீதர் எழுதிய எக்ஸ்ட்ரா LOVE லக்கேஜ், கல்பனா ரத்தன் எழுதிய டோண்ட் மிஸ் வாசகாஸ் எனும் சிறுவர் இலக்கியம், பாமா மற்றும் வேதா கோபாலன் எழுதிய மச்சி ஓப்பன் பாட்டில் காமெடிக் கதை, ஸ்வர்ண ரம்யா எழுதிய ஜிகிடி தோஸ்த், பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய பொன்னியின் செல்வன் திரை விமர்சனம், அடுத்து ராஜேஸ்குமார் எழுதவிருக்கும் பகுதி மற்றும் புதிய அறிவிப்பு, பரிசுப்போட்டிகள் என பக்கத்துக்குப் பக்கம் பல அறிவூட்டும் பகுதிகள் பளிச்சிடுகின்றன. உடனே சந்தாதாரராகும் ஆவலைத் தூண்டுகின்றது.