நாகேஷ் எனும் நகைச்சுவை நாயகன்
தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் நாகேஷ் பிறந்த நாள் (1933. செப்டம்பர் 27) இன்று. பெற்றோர் கிருஷ்ணராவ் – ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் – குண்டப்பா! பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த இடம்.
இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்.
பள்ளி நாடகத்தில் நாகேஷுக்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. அது பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து.
கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகள் ஏற்பட்டது, இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் நடிக்கத் தொடங்கினார்.
சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைதல் எனத் தொடர்ந்த முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் வேதனையும் கொஞ்ச நஞ்சமல்ல.
‘கம்பராமாயணம்’ நாடகம் பார்த்து நடிக்கும் ஆர்வத்தில் சிறுவயதிலேயே திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலிருந்து சென்னை வந்தவர் நாகேஷ். கவிஞர் வாலியுடன் தங்கியிருந்த அவர், வயிற்று வலிக்காரனாக ஒரு நாடகத்தில் நடிப்பதைப் பார்த்து எம்.ஜி.ஆர். அவருக்கு ஒரு கோப்பையைப் பரிசாக அளித்தார். பிறகு எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 45 படங்களில் நடித்தார். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா? அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்.ஜி.ஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள், வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.
பின்னர் 1958ம் ஆண்டு ‘மானமுள்ள மறுதாரம்’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் திரைத்துறையில் கால்பதித்தார் நாகேஷ். அந்தப் படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்யாவிட்டாலும் 1961ம் ஆண்டு ‘தாயில்லா பிள்ளை’ படத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
நாகேஷ் நகைச்சுவையில் மட்டும் ஜெயிக்கவில்லை, ‘நீர்க்குமிழி’ படத்தில் குணச்சித்திர வேடத்திலும், ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் ஹீரோவாகவும், ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கொடூர வில்லன் கதாபாத்திரத்திலும், ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாகவும், அவ்வை சண்முகி திரைப்படத்தில் மேக்கப் மேனாக என்று வெளுத்துக்கட்டினார்.
நாகேஷ் டைரக்சன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்!
‘திருவிளையாடல்’ படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, ‘நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க’ என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டார். அதன்படியே இன்று வரை அந்த நகைச்சுவை காட்சிகள் காலத்தால் அழியாத சாட்சியாகவே இருக்கிறது.
‘அபூர்வ ராகங்கள்’ ஷூட்டிங். பாலசந்தர் ஆக்சன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, ‘சியர்ஸ்’ என்று சொல்ல… படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸுக்கு இது ஒரு சாம்பிள்!
படத்தில் மட்டுமல்ல, நேரடியாகப் பேசும்போதுகூட டைமிங் சென்ஸ் உள்ளவர் நாகேஷ்.
வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும்போது உங்களுக்கு எப்படி இருக்கும்?
நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும்போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்துகொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டடத் துக்கு வர்ணம் அடிச்சு, கீழே இறங்கும்போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக்கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து, கிரஹப் பிரவேசத் தன்று கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹப்பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.
அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய்விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடு, மாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.
பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக்கொண்டே யிருக்கும்! நான் வாழை அல்ல… சவுக்குமரம்.” என்றார் நாகேஷ்.
‘பஞ்சதந்திரம்’ ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட் டார், ‘கோழி இன்னும் சாகலையாப்பா?’
இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர் நாகேஷ்.
நாகேஷின் திரையுலக வாழ்க்கையில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைப்படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர் நாகேஷ் என்பது அவரது அடக்கத்தைக் காட்டுகிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, தனுஷ் என பல தலைமுறை நடிகர்களோடு 1000 திரைப்படங்களைத் தொட்ட இக்கலைஞ னுக்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனுக்கு ‘நம்மவர்’ படத்துக்காக மட்டும் தேசிய விருது கிடைத்தது என்பது ஒரு ஆறுதல்.
கமலைப் போலவே நாகேஷின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்த ரஜினி, நாகேஷ் இறந்த பிறகு தன்னுடைய ‘கோச்சடையான்’ திரைப்படத்தில் நாகேஷை உயிர்த்தெழ வைத்து திரையில் காண்பித்தார்.
கடுமையான சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாகேஷ் என்னும் மகா கலைஞர் 2009ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி மறைந்தார். அவர் மறைந் தாலும் அவரது விரசமில்லாத நடிப்பும் உடல் மொழி பாணியும் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
என்றும் வாழும் நகைச்சுவை மன்னன் நாகேஷ் பிறந்த நாள் நாம் என்றும் மறவாத நாள்.