பாரதியின் இறுதி நாட்கள்

 பாரதியின் இறுதி நாட்கள்

கூடிய விரைவில் தன் மரணம் நிகழப் போகிறது, என்று பாரதியின் உள்ளுணர்வு ஏதும், அவரிடம் சொல்லியதோ, என்னவோ, தெரியவில்லை.

பெரிய கவிஞராக இருந்தும், தன் பிள்ளைகளின் நலனுக்குக்கூட எதுவும் சேர்த்து வைக்க இயலவில்லையே என்று புலம்பினார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். வறுமை அவர் குடும்பத்தை வாட்டியது.

ஒரு நாள், தன் பெண் பிள்ளைகளை அழைத்தார். தான் எழுதி வைத்திருந்த கவிதைகள் அடங்கிய தகரப் பெட்டியைக் காட்டினார்.

பிள்ளைகளே, உங்களுக்காக, நான் எதுவும் சேர்த்துவிட்டுப் போக வில்லையே, என்று கலங்காதீர்கள். இதோ, இந்த தகரப் பெட்டியில் இருக் கும், என் கையெழுத்துப் பிரதிகள் 2 லட்ச ரூபாய்க்குப் போகும். அந்தப் பணம், உங்கள் எதிர்கால வாழ்க்கைக்குத் தாராளமானது” என்றார்.

அதைக் கேட்ட அவரது மகள் சகுந்தலா, “அப்பா, உங்களுக்கு ஆண் பிள்ளை கள் கிடையாது. அப்படியானால், அந்த 2 லட்ச ரூபாயும், சித்தப்பா பிள்ளை களுக்குத் தானே போய்ச் சேரும்” என்றார்.

அப்போது, பெண்களுக்குச் சொத்தில் உரிமை கிடையாது. ஆண் வாரிசு களுக்குத்தான் சொத்து போய்ச் சேரும். அந்த அர்த்தத்தில், அவர் பெண் கூறினார்.

அதைக் கேட்டு சிரித்த பாரதி, “பலே சகுந்தலா, நம் நாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை, என்பதை உணர்ந்து நீ சொல்கிறாய். ஆனால், கவலைப்படாதே, எதிர்காலத்தில் இந்த நிலை மாறும். பெண்கள் எல்லாம் மிக உயர்ந்த நிலைக்கு வருவார்கள். ஆனால், அதைக் காண நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

அவர் மனதில் நினைத்தபடி, சென்னையில் அவர் இருந்தபோது, 1921-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், யானைக்குப் பழம் கொடுக்க முயன்றபோது, அந்த யானை அவரைத் துாக்கி எறிந்தது.

அந்த பாதிப்பினால், அவர் நோய்வாய்ப்பட்டார். அந்த வேதனையுடன், 1921- ஜூலை 21-ஆம் தேதி, ஈரோட்டை அடுத்திருந்த, கருங்கல் பாளையத்தின் வாசக சாலையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

நோயின் கடுமையினால், 1921-ஆம் தேதி, செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி, நள்ளிரவு மணி 12-ஐ தாண்டி ஒரு மணிக்கு இறந்தார். நேரத்தின் கணக் குப்படி பார்த்தால், அவரது உண்மையான நினைவு தினம், செப்டம்பர் 12 தான்.

மழை விட்டாலும், தூறல் விடவில்லை என்ற பழமொழியாக, பாரதியார் இறந்த சமயம், இடுகாடு வரை சென்றவர்கள் மொத்தம் 17 பேர் தான். ஆங்கிலேயர்களின் கிடுக்கிப்படி இறுகி இருந்த நேரம் அது. அதனால், அவரது, மரணத்திற்குச் செல்ல நினைத்தவர்களால்கூட அது இயல வில்லை. நாடெங் கும் நண்பர்களைக் கொண்டிருந்த பாரதியின் மறைவு, அவரை நன்கு அறிந்த வர்களுக்கும், அவரது கவிதையைப் போற்றிய வர்களுக்கும் பேரிடியாக இருந்தது.

அவர் மறைந்த பிறகு, பாரதியின் மனைவி செல்லம்மாள் குடும்பத்துடன், சென்னை திருவல்லிக்கேணியில், “பாரதி ஆசிரமம்” என்ற அமைப்பை நிறுவி, அவரது நூல்களைச் சொந்தமாக வெளியிட்டார்.

தேசிய கீதங்கள், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தி ஆறு ஆகிய தொகுப்புகள் அடங்கிய நூல்கள், ஒரே தொகுப்பாக வெளியிடப் பட்டன. ஆனால், விற்பனை ஒன்றும் அவ்வளவு பிரமாதமாக இல்லை.

பாரதிக்குப் பொருளுதவி செய்தவர்கள் பலர். அவர்களில் கானாடுகாத் தானைச் சேர்ந்த வை.க.சண்முகம் மிக முக்கியமானவர். அவர், பாரதி குடும்பத்தின் வறுமையைப் போக்கும் பொருட்டு, அவரது நுால்களில் உரிமையைப் பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்து, அதனை முறையாக வெளியிட முன்வந்தார்.

செல்லம்மாள், இதற்குச் சம்மதித்தாலும், அவரது சகோதரர், “நாமே வெளி யிட்டு நல்ல லாபம் பார்க்கலாம்” என்று சொல்லியதால், வேறு வழியின்றி, வலிய வந்த சீதேவியை எட்டி உதைத்த கதையாயிற்று.

ஆனால், இரண்டு வருடங்களாகியும், அவர்கள் எதிர்பார்த்தது போல, அதிகத் தொகை கொடுத்து உரிமை வாங்க யாரும் முன் வரவில்லை.

இதற்கிடையே பாரதியாரின் இளைய மகள் சகுந்தலாவிற்குத் திருமணம் நடத்த தருணம் வந்தது. ஆனால், திருமணச் செலவிற்குக் கூடப் பணம் இல்லை. அதனால், அவரது குடும்பத்தார், பாரதி நுால்களை அடமானம் வைத்து, இரண்டாயிரம் ரூபாய் கடனாகப் பெற்றார்கள்.

பாரதியின் நண்பர், பூ. சுப்புராஜா என்பவர், 1924-ல் 2000 ரூபாய் கொடுத்தார். சகுந்தலாவின் திருமணம் நடைபெற்றது.

ஒரு தேசிய கவிஞனுக்கு, அன்று நேர்ந்த கதியைக் கேட்க நேரிடும்போது, மனித உள்ளம் கொண்ட யாரும்  கண் கலங்காமல் இருக்க மாட்டார்கள்.

பாரதி இறந்த பிறகு, நாடு சுதந்திரம் அடைந்தவுடன், சென்னை வானொலி நிலையம், செல்லம்மாளைப் பேச அழைத்தது.

செல்லம்மாளை வானொலியில் அறிமுகப்படுத்தும்போது, “மகாகவி பாரதி யாரின் மனைவி செல்லம்மாள் அவர்கள் பேசுவார்” என்று அறிவித்தனர்.

இந்த அறிவிப்பைக் கேட்டதும், செல்லம்மா தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அதைக் கண்டு, ரேடியோ நிகழ்ச்சியின் ஒலிபரப்பாளர் திகைத்துப் போனார். இப்போது உள்ளது போல, விஞ்ஞான நவீனத்துவங்கள் இல்லாத காலம் அது. செல்லம்மாளின் பேட்டி நேரடியாக, ரேடியோவில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

அதனால், செல்லம்மாளின் அழுகையை ரேடியோவில் கேட்ட அனைவரும் திகைத்தனர். பலர், அந்த அழுகைக் குரலில் புதைந்திருந்த சோகத்தை எண்ணி, துக்கம் தாளாமல், தாங்களும் அழுதனர். வெகு நேரமாயிற்று, செல்லம்மாள் தன் அழுகையை நிறுத்த. சில நிமிடங்கள் கழிந்த பிறகே, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, பேசத் தொடங்கினார் செல்லம்மாள்.

“இன்று என்னை மகாகவியின் மனைவி என்று புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால், நான் என் கணவருடன் வசித்தபோது, எங்களது தெருவில் வசித்த வர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் என்னைப் “பைத்தியக்காரனின் மனைவி, அந்தக் கிறுக்கனின் மனைவி” என்று, என் காதுபடவே, நாக் கூசாமல் பேசுவார்கள். அப்போதெல்லாம், நான் வீட்டிற்குப் பின் உள்ள கிணற் றடிக்குச் சென்று குமுறி அழுவேன்.” இதைச் சொல்லும்போதே, செல்லம் மாளின் குரல் உடைந்து, வெடித்து அழுதார்.

அவரது, கதறலை வானொலியில் கேட்ட லட்சக்கணக்கானோர், கண்ணீர் சிந்தினார்கள்.

தொடர்ந்து பேசிய செல்லம்மாள், தன் பேச்சு முடியும்வரை, அழுது கொண்டே, உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவர் எத்தகைய துன்பங்களை, மற்றவர்களால் அனுபவி்த்திருப்பார் என்பதை, அவர் பட்ட துன்பத்தின் ஒரு சதவிகிதத்தைத்தான், தன் பேச்சால் வெளிப்படுத்தினார் என்று அவரைப் பற்றி அறிந்தவர்கள் கூறினார்கள்.

(பாரதி செல்லம்மா – பாரதியின் மறுபக்கம் நூலிலிருந்து)

இன்று மகாகவியின் நினைவு நாளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ‘மகாகவி நாள்’ என கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தார். சென்னை கடற்கரையில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...