தபால்தலை வெளியிடப்பட்ட ஓண்டி வீரன் யார்?

 தபால்தலை வெளியிடப்பட்ட       ஓண்டி வீரன் யார்?

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட நெற்கட்டான் செவலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரரான பூலித்தேவன் படையில் படைவீரராகவும், படைத் தளபதியாகவும் இருந்தவர்  ஒண்டி வீரன். அவரது நினைவுநாளான இன்று மத்திய அரசு ஒண்டி விரன் தபால்தலையை வெளியிட்டு சிறப்புச் செய்திருக்கிறது.

பூலித்தேவனுக்கு நிறைய படைத் தளபதிகள் இருந்தனர். அவர்களில் ஒண்டி வீரன் பூலித்தேவனை போர்வாள் என்று வீரமாக அழைத்தார்கள் படை வீரர்கள். பூலித்தேவனை எப்படி வீழ்த்துவது என்ற நோக்கத்துடன் ஆங்கிலப் படை தென்மலை என்ற பகுதியில் முகாமிட்டிருந்தது. அதற்குச் சவாலாக ஒரு வீரவாலை வைத்திருந்தது. அதை எடுத்துச்செல்பவன் வீரன். முடிந்தால் பூலித்தேவன் எடுத்துச்செல்லட்டும் என்பது சவால்.

இந்த விஷயம் ஒண்டி வீரன் காதுகளுக்கு எட்டியது. அவன் அந்த ஆங்கிலேயர்களை ஏமாற்ற தன்னை ஒரு யாருமற்றவர் என்று கூறிக்கொண்டு ஆகிலேயர்களிடமே வேலைக்குச் சேர்ந்தான். அங்கிருக்கும் நிலைமையைச் சரியாகப் புரிந்துகொண்டு சில நாட்களிலேயே அவர்கள் வைத்திருந்த பட்டாகத்தி உள்ள இடம் தெரிந்து அதைக் கைப்பற்றிக்கொண்டு வரும்போது ஒண்டிவீரன் கையில் அடிபட்டுவிடுகிறது. அப்படியும் ஆங்கிலேயர்களைத் தாக்கிவிட்டு பூலித்தேவனை வந்தடைந்தான்.

இவர் ஒண்டியாக (தனியாக) சென்று ஆங்கிலேயர்களைக் கொன்றதால் ஒண்டி வீரன் என அழைக்கப்பட்டார். இவர் பல போர்களில் வெற்றி கண்டுள்ளார். 1767ஆம் ஆண்டு ஆங்கிலேயருடனான போரில் ஆங்கிலேய தளபதி கர்னல் எராலின் படையினை இரண்டாயிரம் வீரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.

2000ஆம் ஆண்டு தமிழக அரசிடம் ஒண்டிவீரனின் இனத்தவர்கள் (அருந்தியர்) தாங்கள் சார்ந்த வீரனுக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டவேன்டும் என்று மனுத்தாக்கல் செய்தார்கள். இதன் காரணமாக 2011ஆம் ஆண்டு அப்போதைய தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த பரிதி இளம்வழுதியின் மூலம் 49 லட்சம் ஒதுக்கப்பட்டது.

அதன் பிறகு 1-6-2016ஆம் ஆண்டு ஒண்டிவீரன் நினைவைப் போற்றும் வகையில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒண்டிவீரனின் முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் என மொத்தம் 29 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் மற்றும்  ஒண்டிவீரன் மணிமண்டபம் ஆகியவற்றை அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை  (20-8-2022 இன்று) மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். மத்திய தகவல் ஒலிப்பரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரனின் நினைவு தபால்தலையை வெளியிட ஒப்புதல் அளித்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் திருநெல்வேலியில் ஒண்டி வீரனின் நினைவு தினமான வரும் 20-ம் தேதி அவரது நினைவு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையனை எதிர்த்த போரில் தன் கையையே இழந்த பின்னும் வெற்றியை நிலைநாட்டிய ஒண்டி வீரனை மதித்துப் போற்றினார், பூலித்தேவன். அதன் நன்றிக் கடனாக, பூலித்தேவன் மறைந்த பின், அவரின் வாரிசுகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஒண்டிவீரனே ஏற்றார். ஒண்டிவீரன் தன் 61ஆவது வயதில், 1771 ஆகஸ்ட் 20ல் மறைந்தார். அவரின் 251வது நினைவு நாள் இன்று.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...