ஆவணி மாத ஞாயிறு : சூரிய பகவான் வழிபாடும் பலன்களும்

 ஆவணி மாத ஞாயிறு : சூரிய பகவான் வழிபாடும் பலன்களும்

நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரிய பகவான். எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார்.

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.  அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 முதல் 7.00 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் தமிழர்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானுக்குப் பொங்கல் வைத்து வழிபட்டுள்ளனர். தை மாதம் வைக்கப்படும் பொங்கல்  போன்றே இந்தப் பொங்கலும் நடத்தப்படும்.  வீட்டின் முன்பு வெட்டவெளியில் புதுப்பானையில் பொங்கல் வைப்பார்கள். எனவே இந்தப் பொங்கலை ‘ஆவணி ஞாயிறு பொங்கல்’ என்று அழைத்தனர். ஆவணி ஞாயிறு அன்று விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகமாகும்.

ஆவணி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிறு விரதம் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஜாதகத்தில் சூரிய னஉச்சத்தில் இருந்தால் தைரியம் வரும். ஆவணி ஞாயிறன்று சூரியனை வணங்குவோருக்கு சூரிய தசை, சூரிய புக்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும். நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தியாகும்.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு சூரிய உதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். ‘ஆதித்ய ஹ்ருதயம்’ பாடல் சொல்லி சூரியனை வழிபட வேண்டும். எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி ஞாயிறை வணங்கினால் போதும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிறு கிராமம், கொளப்பாக்கம், திருக்கழுக்குன்றம், காஞ்சி கச்சயேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றில் சூரியனுக்கு சிறப்பான ஆலயமும், சன்னதிகளும் உள்ளன.

தமிழ்நாட்டில் பல இடங்களில் சூரிய பகவானுக்குச் சிறப்பு ஆலயங்கள் இருக்கின்றன. இந்த ஆலயங்களில் எல்லாம் ஆவணி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளன.

சிவன் கோயில்களில் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள சூரியனை வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...