சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.
சீரடி சாய்பாபா கொடுத்த அபூர்வ நாணயம்

சாய்நாதரை ஒரு தடவை தரிசனம் செய்தாலே நம் பாவங்கள் தொலைந்து விடும். இந்த பிறவியில் மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் உரிய பலன்களை பாபா தருவார்.

தரிசன வழிபாட்டுக்கே இத்தகைய மகத்துவம் இருக்கும் போது, ஏழேழு உலகங்களையும் ஆட்சி செய்யும் பாபாவிடம் நேரில் பேசி, பழகி, பணிவிடைகள் செய்து, அருள் பெற்றவர்கள் எந்த அளவுக்கு பாக்கியம் செய்தவர்களாக இருந்திருப்பார்கள்? துவாரகமாயி மசூதியில் இருந்து பாபா, இந்த உலகை ஆட்சி செய்த போது, ஏழைகள் பணக்காரர்கள் வித்தியாசமின்றி பலரும் பாபாவிடம் சரண் அடைந்து தங்களை ஒப்படைத்திருந்தனர். பாபாவிடம் உண்மையான பக்தியுடன் இருந்தனர்.

அவர்களில் லட்சுமிபாயும் ஒருவர். இவர் நல்ல வசதி படைத்தவர். பாபாவிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் இரவில் மசூதியில் தூங்குவதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். மசூதியில் பாபாவுக்கு தேவையானவைகளை செய்து கொடுக்கும் சேவையை லட்சுமிபாய் செய்து வந்தார். ஒரு தடவை லட்சுமிபாய் சமைத்து எடுத்து வந்திருந்த உணவை, ஒரு நாய்க்கு எடுத்து பாபா போட்டார்.

அதைக் கண்டு வேதனை அடைந்த லட்சுமிபாய், ‘‘என்ன பாபா இப்படி செய்து விட்டீர்கள்?’’ என்றார். அதற்கு பாபா, ‘‘என் பசியைப் போன்றதுதான் நாயின் பசியும். எந்த ஒரு உயிரினத்தின் பசியைத் தீர்த்து வைத்தாலும், அது என் பசியைத் தீர்த்து வைத்த மாதிரியாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

பாபா மகாசமாதி அடைவதற்கு சில தினங்களுக்கு முன்பு லட்சுமி பாயை அழைத்தார். தன் கப்னி உடைக்குள் கையை விட்டு 2 தடவை நாணயங்களை எடுத்துக் கொடுத்தார். ஒரு தடவை ஐந்து நாணயங்கள் வந்தது. அடுத்த முறை 4 நாணயங்கள் வந்தது. அந்த 9 நாணயங்களையும் அவர் லட்சுமிபாயிடம் கொடுத்தார்.

பாபாவின் இந்த செய்கை ஒன்பதின் மகத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இதனால் அந்த 9 நாணயங்களையும் அவர் பொக்கி‌ஷமாகக் கருதினார். சீரடியில் உள்ள லட்சுமிபாயின் வீட்டில் அந்த 9 நாணயங்களை அவரது வாரிசுகள் பாதுகாத்து வருகிறார்கள். சீரடி செல்லும் பக்தர்களில் பலரும் லட்சுமிபாய் வீட்டுக்கு சென்று அந்த நாணயங்களை பார்த்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

லட்சுமிபாய் போல இன்னொரு பக்தரான ஷாமாவுக்கும் ஒரு தடவை சாய்பாபா, மிகவும் அபூர்வமான செப்பு நாணயம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அது சாதாரண நாணயமல்ல. நாணயத்தின் ஒரு பக்கம் ராமர், சீதை, லட்சுமணர் உருவங்கள் உள்ளது. மற்றொரு பக்கத்தில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டிருப்பது போன்ற உருவம் உள்ளது.

தான் உடுத்திருந்த கப்னி உடை மட்டுமே தனக்குரியதாகக் கொண்டு வாழ்ந்த பாபா, தினமும் தனக்கு கிடைக்கும் நாணயங்கள், பொருட்களை அன்றே பக்தர்களுக்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஆனால் அந்த அபூர்வ செப்பு நாணயத்தை மட்டும் அவர் யாருக்கும் கொடுக்காமல் நீண்ட நாட்களாக தம்முடனே வைத்திருந்தார்.

அதை பெறும் பாக்கியம் ஷாமாவுக்கு கிடைத்தது. அவரது உண்மையான பெயர் மாதவராவ் தேஷ்பாண்டே. சீரடியில் பாபா வாழ்ந்த மசூதிக்கு எதிரில் உள்ள பள்ளியில் அவர் ஆசிரியராக இருந்தார். முதலில் சாய்பாபா மீது அவருக்கு எந்தவித ஈர்ப்பும் ஏற்படவில்லை. நள்ளிரவில் பாபா பல மொழிகளில் பேசுவதை கேட்ட பிறகு அவர் மீது ஷாமாவுக்கு மரியாதை ஏற்பட்டது.

ஒரு தடவை வி‌ஷப்பாம்பு ஒன்று ஷாமாவை கடித்து விட்டது. அந்த வி‌ஷத்தை இறக்கி ஷாமாவை பாபா காப்பாற்றினார். அதன் பிறகு பாபாவே கதி என்று ஷாமா மாறினார். ஷாமாவின் பிரதிபலன் பாராத குணத்தை அறிந்த பாபா அவரை விஷ்ணு சகஸ்ரநாமத்தை நன்றாக கற்க செய்து, அதன் பொருளை விளக்க வைக்கக் கூடிய ஆற்றலை பெறச் செய்தார். இதனால் பாபாவுக்கும் ஷாமாவுக்கும் இடையிலான ஆத்மார்த்தமான நட்பு பலம் பெற்றது.

இதனால்தான் சாய்சத் சரிதத்தை எழுத தபோல்கர் எனும் ஹேமந்த் பந்த் ஆசைப்பட்ட போது, அதற்கான அனுமதியை ஷாமாவால் மிக எளிதாக பெற்றுக் கொடுக்க முடிந்தது. ஆனால் தனக்காக பாபாவிடம் இருந்து ஷாமாவால் எதுவும் பெற இயலவில்லை. ஒருநாள் பாபாவிடம் அவர் இது பற்றி நேரடியாக கேட்டு விட்டார். ‘‘பாபா, உங்களைத் தேடி வரும் எல்லோருக்கும் பணம், பொருள் எல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் நீங்கள் எதுவுமே தருவதில்லையே… ஏன்?’’ என்று கேட்டார்.

அதற்கு பாபா, ‘‘அவையெல்லாம் உனக்கு தேவை இல்லை. உனக்கு ஒரு அபூர்வ பொருள் காத்திருக்கிறது. அதுவரை நான் சொல்லும் கடமைகளை செய்து வா’’ என்றார். அதோடு ஷாமாவுக்கு நிறைய புத்தகங்களை வரவழைத்து படிக்கக் கொடுத்தார். அதில் உள்ள நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்துக் கூறும்படி உத்தரவிட்டார்.

ஷாமாவின் சிறப்பை அறிந்து சில பக்தர்கள் அவருக்கு பணம் கொடுக்க முயன்றதுண்டு. ஆனால் அதை பாபா தடுத்து விட்டார். இதற்காக ஷாமா ஒருபோதும் வருத்தப்பட வில்லை. ஒவ்வொரு பிறவியிலும் பாபாவுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்ததை உணர்ந்தார். எனவே பொறுமை காத்தார்.

சாய்பாபா மகாசமாதி அடைவதற்கு முன்பு மசூதி அருகில் சாகேப் பூட்டி என்ற பணக்காரர் மூலம் ஒரு கட்டிடத்தை கட்ட வைத்தார். இதற்கான உத்தரவை ஷாமாவின் கனவில் தோன்றி பாபா பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. பூட்டி தனக்காக கட்டிய அந்த அரங்கில் பாபா வின் மகாசமாதி அமைந்தது.

இவையெல்லாம் ஷாமா மீது பாபா கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தியது. இதுபற்றி சாய்பாபா கூறுகையில், ‘‘நானும் ஷாமாவும் இன்னும் பலரும் முற்பிறவிகளில் ஒரே குருவின் கீழ் சீடர்களாக இருந்தோம். இந்த பிறவியில் நான் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து அந்தத் தொடர்பை புதுப்பித்து இருக்கிறேன்’’ என்றார்.

ஒரு நாள் பாபா மிகவும் பாசத்தோடு ஷாமா வை அழைத்தார். பொக்கி‌ஷமாக கருதி தான் வைத்திருந்த செப்பு நாணயத்தை எடுத்து ஷாமா விடம் கொடுத்தார். ஷாமாவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அந்த அபூர்வ நாணயம் பற்றிய சிறப்பு ஷாமாவுக்கு நன்கு தெரியும்

அந்த செப்பு நாணயம் பற்றிய பின்னணி வருமாறு:-

பாபாவின் மீது அளவற்ற பக்தி கொண்ட வாமன் ராவ் நார்வேகர் என்ற பக்தர், பாபாவுக்கு பக்தியுடன் அர்ப்பணம் செய்வதற்காக, அழகான செப்பு நாணயம் ஒன்றை கொண்டு வந்தார். அந்த நாணயத்தில்தான் ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணர், ஸ்ரீசீதை, ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோ ரின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டிருந்தன.

பாபாவின் திருக்கரத்தால் தொடப்பட்டு, உதிபிரசாதத்துடன் அதைத் திரும்பப் பெற வேண்டும் என்கிற நோக்கத்திலேயே அந்த பக்தர் அந்த நாணயத்தை பாபாவுக்கு அர்ப்பணம் செய்தார். ஆனால் நாணயம் கையில் விழுந்ததுமே அதைத் தன் அங்கி (கப்னி) பாக்கெட்டில் போட்டுக் கொண்டார் பாபா.

ஸ்ரீசாயிநாதனின் அன்புத் தொண்டரான ஷாமா என்ற மாதவராவ் தேஷ்பாண்டே, வாமன்ராவின் விருப்பத்தை பாபாவிடம் தெரிவித்து, நாணயத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி வேண்டினார். ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்? இதை நாமே வைத்துக் கொள்வோம் என்று தீர்மானமாக மறுத்துச் சொல்லிவிட்டார் பாபா. பாபாவின் கைபட்ட அந்த நாணயத்தை மீண்டும் பெறுவதில் முனைப்பாக இருந்தார் வாமன்ராவ்.

‘‘சரி அவர் இதற்கு விலையாக ரூ.25 கொடுப்பாரானால், நான் இந்த நாணயத்தை திரும்பத் தருகிறேன்’’ என்றார் பாபா (அந்தக் காலத்தில் ரூ.25 என்பது, இப்போதைய சுமார் 25 பவுனுக்குச் சமம்) உடனே வாமன்ராவ் விரைந்து சென்று பல இடங்களிலிருந்தும் பணத்தை எப்படியோ சேகரித்துக் கொண்டு வந்து ரூ.25ஐ பாபாவிடம் கொடுத்தார்.

ஆனாலும் பாபா சமரசமாகவில்லை. மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தாலும் இந்த ஒரு நாணயத்துக்கு ஈடாகாது. அவற்றின் மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிட மிக மிகக் குறைவே என்று சொல்லி, வாமன்ராவிடமிருந்து வாங்கிய ரூ.25-யும் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். பிறகு ஷாமாவிடம் அந்த அபூர்வ நாணயத்தைக் கொடுத்து, ‘‘இது இனி உன் சேகரிப்பில் இருக்கட்டும். இதைப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடு’’ என்றார்.

எதற்கும் ஆசைப்படாத பகவானே மிகவும் விரும்பி தருவதால் அதை தாமே வைத்துக் கொள்ள ஷாமா தீர்மானித்தார். எனவே அதை பூஜை அறையில் வைத்து தினமும் வழிபட்டு வந்தார். அந்த நாணயம், ஷாமாவின் பாதுகாப்பில் பல காலம் இருந்தது. ஷாமாவின் மறைவுக்குப் பின்னர் அவரின் ஒரே மகன் உத்தவ்ராவ், அந்த நாணயத்துக்கு தினசரி பூஜை செய்து வந்தார்.

அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். இரண்டாவது மனைவி குஸும் தற்போது சீரடியில் வசித்து வருகிறார். இவர்தான் அந்த நாணயத்தை பெட்டகத்தில் வைத்துப் பாதுகாத்து வருகிறார்.

அது தவிர, பாபா ஷாமாவுக்கு அளித்த பிள்ளையார் விக்ரகம் ஒன்றும் இவருடைய பாதுகாப்பில் இருக்கிறது. ஷோலாப்பூரில் இருந்து வந்த பக்தர் ஒருவர் பாபாவுக்கு வழங்கிய விக்கிரகம் அது. பாபா மறைந்து 98 ஆண்டுகளில் ஷாமா குடும்பத்தாரைத் தவிர, வெளியுலகில் யாருமே அந்த நாணயத்தைப் பார்த்ததில்லை.

பாபாவின் கை பட்ட பெருமைக்குரிய அந்த நாணயமும், பாபா பூஜை செய்த அந்தப் பிள்ளையார் விக்கிரகமும், சென்னை தியாகராயநகர் சரோஜினி தெருவில் இயங்கி வரும் ஸ்ரீசீரடி சாயிபாபா பிரார்த்தனை மையத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

சாய்பாபா ஆசீர்வதித்த அந்த செப்பு நாணயத்தை நேரில் பார்த்து தரிசனம் செய்வது மாபெரும் புண்ணியமாகும். அந்த மாபெரும் புண்ணியத்தை வாழ்வில் தேடிக் கொள்வது என்பது சாதாரண வி‌ஷயமல்ல. அதற்கு நீங்கள் சிரத்தை எடுத்துக் சீரடிக்கு செல்ல வேண்டும்.

அப்படியே நீங்கள் சீரடிக்கு சென்றாலும் பாபா ஆசீர்வதித்த செப்பு நாணயம் மற்றும் உடமைகளை மிக எளிதாக தரிசனம் செய்ய முடியுமா என்று உறுதியாக சொல்ல இயலாது. ஆனால் அப்படியெல்லாம் கஷ்டப்படாமல், பாபாவின் அருளை மிக எளிதாக பெறும் வகையில், அவர் தொட்டு ஆசீர்வதித்த செப்பு நாணயம் மற்றும் பாபாவின் உடமைகள் சீரடியில் இருந்து சென்னைக்கு ஆண்டுதோறும் கொண்டு வரப்படுகிறது. தி.நகர் சாய்பாபா பிரார்த்தனை மையத்தின் நிர்வாக அறங்காவலரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான திருவள்ளூவன் இந்த அரும்பணியை செய்து வருகிறார்.

இத்தகைய நிகழ்வுகள் மூலம் சாய்பாபா அன்பை பெற்றிருந்தவர்கள் பற்றி நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த பக்தர்களில் ரேகே என்பவர் ‘‘சாய்பாபாவின் செல்லக் குழந்தை’’ என்ற சிறப்பைப் பெற்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!