இன்று சென்னை சங்கமம் திருவிழா தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

பொங்கல் பண்டிகையின் போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த ஆண்டின் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா மாபெரும் கலைவிழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

15-ந்தேதி (நாளை) முதல் 18-ந்தேதி வரையில் (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் இந்த விழா நடைபெறுகிறது. சென்னை சங்கமத்தில் முதன்முறையாக ‘கோ- ஆப்டெக்ஸ்’ மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி காணும் பொங்கலான 17-ந்தேதி (சனிக்கிழமை) சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.

சென்னையில் கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக்கல்லூரி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர்கோட்டம், மெரினா கடற்கரை, தியாகராயநகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கிண்டி கத்திபாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நிகழ்ச்சிகள் 15.1.2026 முதல் 18.1.2026 வரை நான்கு நாட்கள் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெற உள்ளன.

‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில்’ தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம். தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!