திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் எனவும் அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாகவும். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 வது நாளாக விசாரித்தது.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது” என்று தெரிவித்தனர்.

வழக்கின் பின்னணி;

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1-ந்தேதி உத்தரவிட்டார். ஆனால், சட்டம். ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்து தீபம் ஏற்றப்படவில்லை. தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட கலெக்டர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சார்பில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு வாரமாக நாள்தோறும் விரிவாக விசாரித்தனர்.இதில் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளின் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!