தலம்தோறும் தலைவன் | 5 | ஜி.ஏ.பிரபா
5.செவ்வந்தி நாதர் (ஸ்ரீ தாயுமானவர்)
நிலம், நீர், நெருப்பு, உயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன்
புலன் ஆய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றானை
உலகு ஏழ் எனத் திசை பத்து எனத் தான் ஒருவனுமே
பலஆகி நின்றவா தோள் நோக்கம் ஆடாமோ.
–திருவாசகம்
உலக உயிர்கள் அனைத்திற்கும் அம்மையும், அப்பனுமாக இருப்பவன் ஈசன். எனவேதான் அவனை அம்மையப்பன் என்று அழைக்கிறோம். வேதம் பரமாத்மாவையே உலக தத்துவம் என்கிறது. அந்த பரம தத்துவமே ஈசனாக உருவெடுத்து தன் குழந்தைகளைக் காக்க வருகிறது.
அப்பா, என்றாலும், அம்மா என்றாலும் அதனுள் நிறைந்திருக்கும் ஜீவன் ஈசனே. சக்தியும், சிவனும் இணைந்த சிவசக்தி ரூபமே அம்மையப்பன். அவனை நினைத்தாலே போதும். அங்கு உயிர்க் காற்றாக ஈசனின் தரிசனம் கிடைத்து விடும். அய்யனாகிய ஈசன் அம்மையுமாகி அருள் புரிந்த தலம் திரிசிரபுரம் எனும் திருச்சிராப்பள்ளி.
திருச்சி மலைக்கோட்டையில் அருள் புரியும் ஸ்ரீ தாயுமானவர் எனும் ஈசன் பெண்ணாக வந்து தன் பக்தைக்குப் பிரசவம் பார்த்த தலமே திருச்சி. நானூற்றிப் பதினேழு படிகளுடன் இருநூற்றி எழுபத்தி மூன்று அடி உயரத்தில் உலகக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
மூவாயிரத்து ஐநூறு பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று புவியியல் ஆய்வு கூறுகிறது. சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர், மராட்டியர் கால கட்டிடப் பாணிகளைக் கொண்டு திருச்சியில் கம்பீரமாக நிற்கிறது மலைக்கோட்டை.
மலைமேல் உள்ள சிவலிங்கம் தானாக வளர்ந்தது என்பது ஐதீகம். திரிசிரன் என்ற அசுரன் இங்கு இருந்து ஆட்சி புரிந்து ஈசனை வழிபாட்டு வந்ததால் திரிசிரபுரம் என்று பெயர் பெற்று திருச்சிராப்பள்ளி என்று மருவி அழைக்கப்படுகிறது. தாயுமானவர் கருவறை திருப்பணி திரிசிரன் செய்தது. சோழர் ஆட்சியில் சாரமா முனிவர் செவ்வந்தி மலர்களைக் கொண்டு பூஜித்து வந்ததால் இறைவன் செவ்வந்தி நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இறைவனுக்காக உருவாக்கப்பட்ட நந்தவனத்தில் உள்ள செவ்வந்தி மலர்களைக் களவாடிய கள்வனைப் பற்றி பராந்தக சோழனிடம் முறையிடுகிறார் முனிவர். அரசன் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்க, முனிவர் இறைவனிடமே முறையிடுகிறார். கிழக்கு முகமாக இருந்த ஈசன் மேற்கு முகமாகத் திரும்பி அமர, உறையூரில் மண்மாரி பொழிகிறது.
இரப்பவருக்கு முக்தி அளிக்கும் தலம் காசி. பிறப்பவருக்கு முக்தி தரும் திருவாரூரை விடவும் பெருமை வாய்ந்த தலம் திரிசிரபுரம். இதனை பூலோக கைலாயம் என்று சைவ சமயம் போற்றித் துதிக்கிறது.
கைலாயத்தில் சிவனும், சக்தியும் வீற்றிருக்கும் அதே கோலத்தில் இங்கு ஸ்ரீ தாய்மான்வரும், மட்டுவார் குழலம்மையும் காட்சி தருகிறார்கள்.
திருச்சியில் தன குப்தன் என்னும் வணிகன் தன் மனைவி ரத்னாவதியுடன் வசித்து வந்தான். இரத்தினாவதி செவ்வந்தி நாதரை தினமும் தரிசித்து, வணங்கி தாயாகும் பேறு பெற்றாள். பேறுகாலம் நெருங்கும் சமயம் தன் தாயைப் பிரசவம் பார்க்க வரவழைத்தாள். மகளின் பிரசவத்திற்குத் தேவையான பொருட்களுடன் பூம்புகாரிலிருந்து கிளம்பி வரும்போது, வழியில் காவிரியில் வெள்ளம் ஏற்பட தாயின் வருகை தடைபட்டது.
பிரசவ வலியில் துடித்த இரத்தினாவதி தாய் வராததால் வருந்தி செவ்வந்தி நாதரிடம் வேண்டினாள். ஈசன் தன் பக்தைக்காக அவளின் தாயார் போல் வந்து பிரசவம் பார்த்து அவளையும், பிறந்த ஆண் குழந்தையையும், ஏழு நாட்கள் கவனித்துக் கொண்டார்.
பிறகு உண்மையான தாய் வந்து விட, யார் தன் தாய் என்று இரத்தினாவதி திகைக்க, ஈசன் வானில் ஒளி ரூபமாக மட்டுவார் குழலியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். அன்று முதன் செவ்வந்தி நாதர் ஸ்ரீ தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார். இன்றும் சித்திரைத் திருவிழாவில் செட்டிப்பெண் மருத்துவம் என்று கொண்டாடப்படுகிறது.
தாயுமானவரை நினைத்து சுகப்பிரசவம் ஆன பெண்கள் இங்கு வந்து பால், வாழைத்தார் ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபாடு செய்கின்றனர்.
இங்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர் நால்வருடன் ஐந்தாவது முனிவராகக் காட்சி தருகிறார். ஸ்ரீதட்சிணாமூர்த்தி இங்கு தவமியற்றும் போது ஒருநாள் திரிசிர மன்னன் அவரைத் தரிசிக்க வருகிறான். மாமுனிவர் தன் வலக்கரத்தால் ஒரு பாறையைக் குறுக்காகப் பிளக்கும்படிச் சொல்ல, அரசன் தன் பலம் கொண்ட மட்டும் அப்பாறையைத் தன் கரத்தால் பிளந்தான்.
உள்ளே சுயம்புவாய் ஜோதிப் பிரகாசமாய்க் காட்சி அளித்த ஈசனுக்கு மலையின் ஆழமான உள் பகுதியில் எப்படிக் கோவில் கட்டுவது? முனிவரே தன் தவ பலத்தால் அந்த லிங்கத்தை மேலே எழுப்புகிறார். திரிசிரனுக்கு மலையுச்சியில் ஈசனை பிரதிஷ்டை செய்ய ஆசை. ஆனால் முனிவரோ உச்சந்தலை கஜமுகனுக்குரியது என்று அறிவித்து விட்டார். அதன்படி உச்சிப் பிள்ளையாராய் ஸ்ரீகணபதி அங்கு வீற்றிருக்கிறார். ஒருமுறை முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பிரம்மா, விஷ்ணு, பார்வதிக்கும் சிவாகம பூஜை விதிகளைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் ஈசன். மிகவும், கவனமும், சிரத்தையுடன் செய்ய வேண்டிய அப்பூஜை முறைகளை விளக்கும்போது அம்பிகை சிறிது கவனக் குறைவாக இருந்து விட்டார்.
எனவே சினம் கொண்ட ஈசன் அம்பிகையைச் சபித்து விட்டார். தாயைச் சபித்ததைப் பொறுக்க முடியாத முருகன் பரிந்து பேசி, தந்தையுடன் வாதிட்டார். எனவே அவரின் பேச்சுத் திறனை இழக்கும்படி சாபம் அளித்தார் சிவபெருமான். எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் கவனச் சிதறல் இருக்கக் கூடாது என்பதையே இக்கதை நமக்கு உணர்த்துகிறது. சிரத்தை என்பது எல்லா விஷயங்களிலும் தேவை.
பின்னர் ஈசன் மனமிரங்கி “சிவபூஜையின் போது தியானம் கலையாது, அற்புத நிலையில் இருந்த ஸ்ரீ கணபதி மூலமே சாப விமோசனம் கிட்டும்” என்கிறார். அதன்படி ஸ்ரீ விநாயகர் விஸ்வரூபம் எடுத்தார். ஈசன் ஜோதி ரூபமாக இருந்த இடத்தில் ஓம்கார பீடமிட்டு அமர்ந்தார். தன் துதிக்கையை ஆதிசிவனின் தலை மேல் குடையாகக் கவிழ்த்துப் பிடித்தார்.
ஈசனின் ஜடாமுடியில் உள்ள கங்கை பிரவாகம் எடுத்துப் பொங்க அது துதிக்கை வழியே ஈசனை அபிஷேகித்தது. அந்த நீர் வழிந்தோடி திருச்சியில் அமுதக் குளமாய் மலர்ந்தது. ஈசனின் அபிஷேக நீரும், அரங்கனைச் சுற்றி வரும் காவிரியும் சேர்ந்து முத்தாழக் குளமாக அமைந்தது. அதில் மூழ்கி எழுந்து சக்தியும், முருகனும் தங்கள் சாபம் நீங்கப் பெற்றார்கள்.
எமக்கு மேல் நின்று தும்பிக்கையால் அபிஷேகம் செய்ததால் அங்கு உச்சிப் பிள்ளையாராக கணபதி விளங்குவான் என்று அருள்கிறார் ஈசன். அம்பிகையும், முருகனும் அமைத்த முத்தாழக் குலத்திற்கு படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்தார் கணபதி. திருச்சியின் அடையாளமாக விளங்குகிறது இத்தெப்பக்குளம். அரங்கன் சங்கு தீர்த்தம், முருகன் பேச்சளந்தான் தீர்த்தம், தொப்பையப்பன் படி தீர்த்தம், அழகம்மை ஆகம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
பல அற்புதமான ஆன்மீக ரகசியங்கள் நிறைந்த இம்மலைக்கோட்டை கிரிவலம் எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்க்க வல்லது.
பக்தர்கள் முதலில் இங்குள்ள துவார பாலகர்களை வணங்கி கிரிவலம் வருகிறார்கள். இங்கு பல்லவர் கால குடைவரைக் கோயில் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டது. இங்கிருந்து பார்க்கும்போது மிக அழகாக காவிரியின் தோற்றம் தெரிகிறது. திருவரங்கம், திருவானைக்கா கோயில் கோபுரம் என்று திருச்சியின் முழு அழகையும் இங்கிருந்து ரசிக்க முடிகிறது.
தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்ப் பேயனேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனார் என நம் வினை நாசமே”
என்கிறார் திருநாவுக்கரசர். சுகப்பிரசவம் நடைபெற…
“ ஹே, சங்கர, ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத சாம்ப சசி சூடஹர திரிசூலின சம்போ
சுகப்ரசவக்ருத பவ மே தயாளோ ஸ்ரீ மாத்ருபூத
சிவா பாலய மாம் நமஸ்தே.”
என்ற ஸ்லோகத்தை ஸ்ரீ தாயுமானவ சுவாமியை வணங்கிச் சொல்லிவர, பிரசவம் சுகமாக நடைபெறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவி வருகிறது.
‘சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி’ என்று மாணிக்கவாசகர் துதிக்கிறார்.
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை
உமையொருபாகம் உடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக்
கூறு என்னுள்ளங் குளிரும்மே”
-என்கிறார் சம்பந்தர்.
ஸ்ரீ தாயுமானவரை நம்பி ஆரம்பிக்கும் எல்லாக் காரியங்களும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் நிலவுகிறது. நறுமணம் பரப்பும் ஊதுவத்தியைக் கையில் ஏந்தி மனமுருக இறைநாமம் ஜெபித்தபடி கிரிவலம் வரும் பக்தர்களைக் காண முடிகிறது.
அம்மையப்பனை சுற்றி வந்து மாம்பழம் பெற்ற விநாயகருக்கு வயிற்றில் வலி ஏற்பட, பிரும்மா திருச்சியில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கினார். அதற்கு சிவன், “திரிசிரபுர கிரிவலத்தின் சிறப்பை உணர்த்தத்தானே நீ இந்த மாம்பழத்தைச் சிருஷ்டித்து நாரதர் மூலம் அனுப்பினாய்? மாம்பழத்தின் காரணம் நிறைவேற நீ, கணபதி, முருகன் மூவரும் இம்மலையை வலம் வாருங்கள். யாவும் நலமாகும்.” என்றார். அதன் படி மூவரும் திருச்சி மலைக்கோட்டையை கிரிவலம் வந்த நாள் ஆவணி மூலம் என்பதால் அன்று இங்கு கிரிவலம் வருவது மிகச் சிறப்பு எனப்படுகிறது.
நன்றுடையானை, தீவினை நீக்கும் தேவனை திருச்சிராப்பள்ளி சென்று வணங்குவதன் மூலம் நம் வாழ்வு வளம் பெறும்.
1 Comment
திருச்சி தாயுமானவர் கோயில் பற்றிய தல புராணத் தகவல்கள் அறிந்து கொண்டேன்! மிக அருமையான தொடர்! வாழ்த்துகள்!