இந்தியாப் போர் விமானத்தின் முதல் பெண் விமானி அபிலாஷா பராக்

 இந்தியாப் போர் விமானத்தின் முதல் பெண் விமானி அபிலாஷா பராக்

இந்தியாப் போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை 26 வயதான அபிலாஷா பாரக் பெற்றுள்ளார்.  இதன்மூலம் இந்திய ராணுவத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெயரை கேப்டன் அபிலாஷா பராக் பெற்றுள்ளார்.

மராட்டிய மாநிலம் நாசிக்கில் போர் விமானிகள் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று (25.5.2022) நாசிக் போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் 36 பேர் பயிற்சி முடித்தனர். இவர்களுக்கு பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான் பாதுகாப்பு படைத் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சூரி வழங்கினார். பயிற்சி முடித்து பதக்கம் பெற்ற நபர்களில் ஒரே பெண் அதிகாரி கேப்டன் அபிலாஷா பராக்.

சிறு வயது முதலே ராணுவப் பணியில் விருப்பம்கொண்ட நிலையில் அபிலாஷா  தனது கனவை நனவாக்கி உள்ளார்.

அபிலாஷா பராக் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவைச் சேர்ந்தவர். சனாவரில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். 2016ல் டெல்லியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக். பட்டப்படிப்பை முடித்தார். செப்டம்பர் 8, 2018 அன்று ராணுவ வான் பாதுகாப்புப் படையில் பணியமர்த்தப்பட்டார். சென்னையிலுள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்திலிருந்து இந்திய ராணுவத்தில் இணைந்தார். கார்ப்ஸ் ஆப் ஆர்மி ஏர் டிபென்ஸில் கன்டிஜென்ட் கமாண்டராகத் தேர்வானார். ராணுவ வான் விமானப்படை இளம் அதிகாரிக்கான ஏர் டிராபிக் மேனேஜ்மென்ட் மற்றும் ஏர் லாஸ் படிப்பில் 75.70 சதவிகிதத்துடன் ‘ஏ’ கிரேட் பெற்று முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தந்தை பெயர் ஓம்சிங். இவர் இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாகப் பதவி வகித்து ஓய்வு பெற்றுள்ளார். தந்தை ராணுவத்தில் சேவை செய்த நிலையில் ராணுவப் பணி மீதான ஆசை அபிலாஷா பராக்கிற்கு ஏற்பட்டது. இந்த ஆசை தற்போது நிறைவேறி தந்தை வழியில் மகளான அபிலாஷா பராக்கும் ராணுவத்தில் இணைந்துள்ளார்.

இதுபற்றி அபிலாஷா பராக் கூறுகையில், “ராணுவக் குடும்பத்தில் வளர்ந்ததால் அந்தச் சீருடை மீது எனக்கு நாட்டம் இருந்தது. ராணுவத்தில் இருந்து 2011ல் என் தந்தை ஓய்வு பெற்றார். இதை வித்தியாசமாக உணர்ந்தேன். 2013ல் ராணுவ பயிற்சி மையத்தில் எனது அண்ணன் பயிற்சி முடித்தார். அந்த அணிவகுப்பை பார்த்தபோது ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற உணர்வு இன்னும் அதிகரித்தது. 2018 ல் சென்னை பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பிறகு ராணுவ விமானப்படையைத் தேர்வு செய்தேன். ராணுவ விமானப்படையில் பெண்களால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. மேலும் இந்திய ராணுவம் பெண்களை போர் விமானிகளாகச் சேர்க்கத் தொடங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்தே நான் இதைச் செய்தேன். தற்போது அதில் வெற்றி பெற்றுள்ளேன்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...