திருச்சி அகதிகள் முகாமில் 10அகதிகள் உண்ணாவிரதம்
வெளிநாட்டிலிருந்து முறையாக பாஸ்போர்ட் விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என இலங்கைத் தமிழர்கள் சுமார் 103 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேர் தங்களை மன்னித்து விடுவிக்கக் கோரி கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகத் தகவல் வந்தது.
அந்த திருச்சி முகாமிலிருந்து கபிலன் என்பவர் சமூக ஊடகத்தின் மூலம் அனுப்பிய கடிதம் இங்கே.
26.05.2022
மதிப்புக்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களே… எங்கள் இரத்த உறவுகள் ஆன எங்கள் தமிழ் மக்கள்…
தொடர்ந்து 7வது நாளாக எங்கள் சகோதரர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்கான விடுதலையை நோக்கிக் காத்திருக்கிறார்கள். சுட்டெரிக்கும் இந்தக் கொடூரமான வெயிலிலே இந்தக் கொட்டகையின் கீழ் தங்கள் விடுதலைக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். இவர்கள் பத்துப் பேரில் அறுவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நாங்கள் எமது சகோதரர்கள் என்று எத்தனை முறை இவர்களை வைத்தியசாலைக்குச் செல்ல அறிவுறுத்தினாலும் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை நாங்கள் போகமாட்டோம் என்று எங்களுடைய வார்த்தைகளை உதாசீனம் செய்துகொண்டு தொடர்ந்து ஏழு நாட்களாக உண்ணாமல் காத்திருக்கிறார்கள். எம் தமிழ் உறவுகளே, நாங்கள் உங்களிடம் கேட்பது உங்கள் ஒவ்வொருவரை போல் எங்களுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் உள்ளது. இந்தச் சாதாரண வழக்குகளுக்காக இப்படிப் பல வருடங்களாக எங்களை அடைத்து வைப்பதன் மூலம் எங்களது குடும்பங்களில் குழந்தைகளை நாங்கள் இழக்கும் நிலைக்கும் வறுமைக்கும் தள்ளப்படுகிறோம்.
ஐயா, முதல்வர் ஐயா அவர்களே, எத்தனையோ தீவிரவாதக் குற்றங்கள் செய்பவர்களுக்கும், கொலைக் குற்றங்கள் செய்பவர்களுக்கும் பொது மன்னிப்பு, கருணை அடிப்படையில் விடுதலை கொடுக்கப்படுகிறார்கள். நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இந்தச் சிறு சிறு விசா வழக்குகளிலும் கடவுச்சீட்டு வழக்குகளிலும் இங்கே பல வருடங்களாக இருக்கிறோம். எங்களுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு, கருணை என்னும் அடிப்படையில் எங்களது வழக்குகளைத் தள்ளுபடி செய்து எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள் ஐயா. எம் இரத்த உறவுகளே, எம் தமிழ் உறவுகளே, எங்களுக்காக ஒரு முறையை குரல் கொடுங்கள். நாங்களும் உங்களைப் போல் எங்கள் குடும்பங்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்கு.
இப்படிக்கு
கபிலன்
திருச்சி அகதிகள் முகாம் சிறையிலிருந்து…