கார்த்தி சிதம்பரம் கைது நடவடிக்கை… என்ன விவரம்?
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடந்த 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை மந்திரியாக இருந்தபோது, அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனர்களுக்கு விசா பெற்றுக் கொடுத்ததாக சி.பி.ஐ. குற்றம் சுமத்தி உள்ளது.
இதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது சி.பி.ஐ. சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது.
பஞ்சாபில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான டி.எஸ்.பி.எல். எனும் நிறுவனத்தின் சார்பில் மின் நிலையப் பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத்தர, டி.எஸ்.பி.எல். நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சென்னை, டெல்லி, மும்பை, ஒடிசாவில் உள்ள 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையின்போது ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்தது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறினார்.
இதற்கிடையே சென்னை கோடம்பாக்கத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் 10 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடந்தது. அன்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் மறுத்தார். விசா நடைமுறையில் சீனாவைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நான் உதவவில்லை. சி.பி.ஐ. தன் மீது கூறும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்றும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த நிலையில், விசா முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் மீதும் பாஸ்கர ராமன் மீதும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளும் நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் டெல்லி யில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அதிகாரத்தைப் பயன் படுத்தி சட்டவிரோதமாக உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இதனால் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கார்த்தி சிதம்பரம் இங்கிலாந்து சென்றார். அந்தச் சமயத்தில்தான் விசா முறைகேடு தொடர்பான சோதனை நடத்தப் பட்டது.
நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் இன்று (26.5.2022) வியாழக்கிழமை ஆஜராக வேண்டும் என்று அவருக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
சி.பி.ஐ. சம்மனை ஏற்று கார்த்தி சிதம்பரம் நேற்று (25.5.2022) இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார். விமானத்தில் டெல்லி வந்த அவர் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் சி.பி.ஐ. குற்றச்சாட்டை எதிர்கொள்வது தொடர்பாகவும் அவர் ஆலோசித்தார்.
இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆஜராகச் சென்றார். அப்போது அவர் நிருபர் களிடம் கூறுகையில், ‘சீனர்களுக்கு நான் முறைகேடாக விசா பெற்றுக் கொடுக்கவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை’ என்று கூறினார்.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏராளமான கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள். குறிப்பாக பஞ்சாப் மின்நிலைய கட்டுமானப் பணிக்கு சீனர்களை அழைத்து வர விசா வழங்கியதற்கான ஆதாரங்களைக் காட்டியும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் ரூ.50 லட்சம் பணம் கைமாறியது தொடர்பான இ-மெயில் ஆதாரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் காண்பித்து கேள்விகள் கேட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணை தொடர்ந்து நீடிக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக ஏற் கெனவே 2 வழக்குகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். தற்போது விசா முறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது 3-வது வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் அடுத்தடுத்து ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
சரி, 11 ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்சினையை தூசு தட்டி வெளியே கொண்டுவந்து கைது நடவடிக்கை எடுப்பதன் காரணமென்ன மத்திய அரசுக்கு? இதுதான் தற்போதைய பெரிய கேள்வி.