புக்கர் விருது பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

 புக்கர் விருது பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ

உலகின் தலைசிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான சர்வதேச புக்கர் விருது, Tomb of Sand என்ற புத்தகத்தை எழுதிய இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் விருது வழங்கும் விழா 27.5.2022 அன்று  நடந்தது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் அதன் பிராந்திய மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் இந்தப் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது. அந்த நாவல் இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில் வெளியாகி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் இருந்து 135 நாவல்கள் விருதுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 13 நாவல்கள் பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகின. இதில், இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய நாவலுக்கு இந்த ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டது.  2005ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ ‘ரெட் சமாதி’ என்ற பெயரில் இந்தியில் எழுதிய இந்த நாவல், எழுத்தாளர் டெய்சி ராக்வெல் என்பவரால், ‘டாம்ப் ஆப் சாண்ட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் மூலம், புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய மொழி நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ, ‘புக்கர்’ பரிசை பெற்றுக்கொண்டார். அதோடு 50 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் 41.69 லட்சம் ரூபாய்) பரிசு தொகை அவருக்கு வழங்கப்பட்டது. இதை மொழிபெயர்ப்பாளர் டெய்சி ராக்வெல்லுடன், கீதாஞ்சலி ஸ்ரீ பகிர்ந்து கொண்டார்.

புக்கர் பரிசு என்பது 1969ஆம் ஆண்டு தொடங்கி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வெளியிடப்படும் ஆங்கில புத்தகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் விருதாகும். மேலும், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கில மொழியில் எழுதப்படும் அனைத்து நாவல்களுக்கும் இந்த புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், பிற மொழிகளில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களுக்கு 2005ஆம் ஆண்டு தொடங்கி சர்வதேச புக்கர் பரிசானது வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் கீதாஞ்சலி ஸ்ரீ சர்வதேச புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியர் ஆவார்.

80 வயதான மூதாட்டி ஒருவர், தனது வளரிளம் பருவத்தில் இந்தியா – பாகிஸ் தான் பிரிவினையின்போது  எதிர்கொண்ட அனுபவங்களை பகிர்வது போல் இந்த நாவல் அமைந்துள்ளது.

நாவலின் கதையைப் பார்ப்போம்:

80 வயது பெண்மணியின் (மா) கணவர் இறந்துவிடுகிறார். கணவர் இறந்த திலிருந்து பெரும் அமைதி நிலைக்குச் சென்றுவிடுகிறார் அந்தப் பெண்மணி. கிட்டத்தட்ட சமாதி நிலை. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், அதனைக் கலைத்து அவரைச் சாதாரண நிலைக்குக் கொண்டுவர முயல்கின்றனர். ஆனால், அதில் பலனேதும் கிடைக்கவில்லை. கணவனை இழந்ததால் மிகப் பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறாரா என்று யோசிக்கிறார்கள். இதற்கிடையில் அவரது மகன் படே, காசோலைகளில் தாயின் கையெழுத்தை வாங்கிவைத்துவிடலாமா என்று யோசிக்கிறார்.

படேவின் மனைவி பஹு. பஹுவைப் பொறுத்தவரை தான் எவ்வளவோ தியாகங்களை இந்தக் குடும்பத்திற்காகச் செய்தும் அதை யாரும் மதிப்பதில்லை என்று கருதுகிறார். இரண்டு பேரக் குழந்தைகள் வேறு இருக்கிறார்கள்.

இதற்கிடையில், அந்தப் பெண்மணிக்கு ரோஸி என்ற ஒரு திருநங்கையுடன் நட்பு ஏற்படுகிறது. மாவின் மகளான பேடி, எந்தக் கட்டுகளுமற்ற ஒரு சுதந்திரமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறாள். தன் தாயை தன்னுடன் வைத்துப் பார்த் துக்கொள்ளவும் தயாராக இருக்கிறாள். ஆனால், தாயிடம் ஏற்படும் மாற்றங்கள், தன்னைப் புதுமையானவளாகவும் தாயைப் பழமையானவளாகவும் கருதிக் கொண்டிருந்த பேடிக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்புகிறார் மா. மாவின் குடும்பத்தினர் இந்த ஆசையை நிறைவேற்ற விரும்பினாலும், இதெல்லாம் சரியா, பாதுகாப்பானதா என்ற கேள்வியும் அவர்களுக்கு எழுகிறது. பிறகு, விசா ஏதுமின்றி, மகளும் தாயும் எல்லையைக் கடந்து பாகிஸ்தான் செல்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் வந்த வழி அதுதான். அதாவது, தேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானிலிருந்து வந்த வழி!

696 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் உள்ளடக்கம் பெரும் தீவிரத் தன்மையைக் கொண்டதாகத் தோன்றினாலும், கீதாஞ்சலி ஸ்ரீயின் நடை விறுவிறுப்பூட்டும் வகையிலும் அசலான மொழியுடனும் அமைந்திருக்கிறது. அரசுகளாலும் மதங்களாலும் உருவாக்கப்படும் எல்லைகளை உடைப்பதுதான் இந்த நாவலின் அடிநாதம்.

இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசுக்கு, உலகம் முழுவதிலும் 12 நாடுகளின் 11 பிராந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட 13 நாவல்கள், பரிந்துரை பட்டியலுக்கு தேர்வாகின. இதில், டில்லியைச் சேர்ந்த எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயால், ‘ரெத் சமாதி’ என்ற பெயரில் ஹிந்தியில் எழுதப்பட்டு, எழுத்தாளர் டெய்சி ராக்வெல் என்பவரால், ‘டாம்ப் ஆப் சாண்ட்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலுக்கு 2022ம் ஆண்டுக் கான புக்கர் விருது அறிவிக்கப்பட்டது. இதன் வாயிலாக, புக்கர் விருதுக்கு தேர்வான முதல் ஹிந்தி மொழிபெயர்ப்பு நாவல் என்ற பெருமையை இந்த நாவல் பெற்றது.

இந்த ஆண்டு புக்கர் விருதை வழங்குவதற்காக 135 புத்தகங்கள் பரிசீலிக்கப் பட்டன. இந்த புத்தகங்கள் அனைத்திற்கும் தலா 2,500 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படும்.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புக்கர் விருதை வென்ற கீதாஞ்சலி ஸ்ரீ, “புக்கர் பரிசு பற்றி கனவிலும் நினைக்கவில்லை. இது பெரிய அங்கீகாரம். இந்த விருதினால் தான் மிகுந்த பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார். “இந்தப் புத்தகத்திற்குப் பிறகு இந்தி மற்றும் பிற தெற்காசிய மொழிகளுக்கு வளமான மற்றும் செழிப்பான பாரம்பரியம் உள்ளது, இந்த மொழிகளில் உள்ள சில சிறந்த எழுத்தாளர்களை அறிந்து கொள்வதன் மூலம் உலக இலக்கியம் வளமடையும்” எனவும் கீதாஞ்சலி ஸ்ரீ கூறினார்.

64 வயதான கீதாஞ்சலி ஸ்ரீ மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் ரெட் சமதி, மை உட்பட 5 நாவல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், செர்பியா மற்றும் கொரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. புக்கர் விருது வென்ற தைத் தொடர்ந்து, கீதாஞ்சலி ஸ்ரீக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கவிஞர் வைரமுத்து “இலக்கியத்தின் சர்வதேச விருதான புக்கர் விருது இந்திய மொழிகளுள் ஒன்றான இந்திக்குக் கிட்டியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. Tomb of Sand படித்துவிட்டுக் கருத்துரைப்பேன் என்று படைப்பாளி கீதாஞ்சலி ஸ்ரீக்கு என் இலக்கிய வாழ்த்தைத் தெரிவிக்கிறேன்” என்று டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...