முதல் பெண் ஆதீன கர்த்தர் சிவ பிருந்தாதேவியின் சாதனைகள்

 முதல் பெண் ஆதீன கர்த்தர் சிவ பிருந்தாதேவியின் சாதனைகள்

வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்கிற வள்ளலாரின் வாக்கிற்கிணங்க அந்த சைவ சமயத்துக்கும் தமிழகுக்கும் தொண்டாற்றி வந்தவர் திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீன கர்த்தர் அன்னை சாயிமாதா சிவ.பிருந்தாதேவி.

மன்னராட்சி நடைபெற்ற புதக்கோட்டை சமஸ்தான பரதக் கலைஞராக விளங்கிய திருக்கோகர்ணம் சிவராம நட்டுவனார் –நல்லம்மாள் தம்பதி யின் ஏழு குழந்தைகளில் கடைசிப் பெண்ணாக 1927ல் பிறந்தவர் சிவ.பிருந்தா தேவி.

முதலில் திருக்கோகர்கணம் பள்ளியிலும் பின்னர் ராணியார் பள்ளியிலும் படித்தார். இளம் மங்கைப் பருவத்தில் இயல்பாக சமுதாயப் பார்வை அவருக்கு இருந்து வந்தது. ஆன்மிக நாட்டமும் அவருக்கு இருந்தது. பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி பலவற்றில் சிவபிருந்தாதேவி பல கலந்துகொண்டு முதற்பரிசுகளைப் பெற்றார்.

1947ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு முடிந்ததும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஓ.எல். (Philosophy of Oriental Lliterature) என்கிற படிப்பை இசையறிஞர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை இல்லத்தில் தங்கி படித்து முடித்தார். சுவாமி சிவானந்தர் திருக்கரங்களால் பட்டம் பெற்றார். இவரது பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் கண்ட பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சச்சிதானந்தம் பிள்ளை சிவபிருந்தா தேவியை சைவசித்தாந்தம் பயிலக் கேட்டுக்கொண்டார்.

தருமபுரம் ஆதீனத்தில் சைவ சித்தாந்தம் பயிற்சி பெற தம்பிரான்களுடன் ஒரே பெண்மணியாகப் பயின்று அதிலும் சிறப்புப் பெற்றார்.

சிவ.பிருந்தாதேவி இசைக் குடும்பத்தினைச் சார்ந்தவர் என்பதால் வீணை யினை இனிமையாக இசைப்பார். பேச்சாற்றலிலும் வல்லவர், எழுத்தி லும் சிறப்பான இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் நலம் மேம்பட ஆணுக்குப் பெண் சரிநிகர் சமமாக வாழ்ந்திடல் வேண்டும் என்ற எண்ணத்தை உள்வாங்கி 1957ம் ஆண்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பெயரால் மகளிர் இல்லம் படிப்பகம் அமைத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை, ஆதரவற்ற குழந்தை களுக்கு உணவு, உடை, இடம் தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார் சிவ.பிருந்தாதேவி.

45 ஆண்டுகளுக்கு மேலாக இத்திருப்பணியைச் செம்மையுடன் செய்து வந்தார். இத்திருப்பணியைச் சமுதாயத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

1971ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள் சிவபிருந்தா தேவி துறவறம் பூண் டார். துறவு மேற்கொண்ட அடுத்த ஆண்டே 1972ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள் தவத்திரு சாயிமாதா சிவ.பிருந்ததேவிக்குச் சிறப்பு சேர்ப்பன வாக அமைந்தன.

தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு வந்த தந்தை பெரியார் ஈ.வெ.ரா. முத்துலட்சுமி ரெட்டி மகளிர் இல்லத்தைக் காணவும் சிவ.பிருந்தாதேவி யைக் காணவும் வருகிறார் என்கிற செய்தி அம்மையாருக்கு வியப்பை யும் மகிழ்ச்சியையும் அளித்தது.

வழக்கம் போலவே பெரியாரை இல்லத்தின் வாசலிலேயே பூர்ணகும்ப மரியாதையுடன் ஆரத்தி எடுத்து வரவேற்ற சிவ.பிருந்தாதேவி பெரியா ரின் நெற்றியில் துணிந்து திருநீறு இட்டார். வரவேற்பை ஏற்றுக்கொண்டு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பொரியார் தமது உரையில்

“இங்கு வருகை புரிய காரணம் உண்டு. சாயிமாதா பெண்களுக்குச் செய்து வருகிற சேவைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியின் வழிவந்தவர் இவர். சாமியார்களுக்கு அளிப்பதைப் போலவே எனக்கும் பூர்ணகும்ப மரியாதை கொடுத்து விபூதியைப் பூசிவிட்டாங்க. அது அவங்களோட நம்பிக்கை. என் நம்பிக்கை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது அனைவருக்கும் தெரிஞ்சதுதான். அதைப் பற்றிப் பேசுவதற்கு இது இடமில்லை. டாக்டர் முத்துலட்சுமி பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி பெண்களுக்கு நல்ல சேவை செய்து வருகிற அம்மாவைப் பார்த்து வாழ்த்திவிட்டுப் போகலாம் என்றுதான் காசு வாங்காமே இங்கே வந்தேன். நான் இங்கே வந்து போறதுனாலே அம்மா இன்னும் கொஞ்சம் தைரியமா, துணிவா  காரியங்களைச் செய் வார். செய்யவேணும், செய்வாங்கன்னு நம்பறேன்” என்றார் பெரியார்.

1972ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் நாள் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி புதுக்கோட்டைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மகளிர் இல்லத்தைப் பார்வையிட வந்தார். சிவ.பிருந்தாதேவியின் அரசி யல் பயணம், சமூகத் தொண்டு, சமயப் பணி ஆகியவற்றை நன்கு தெரிந் தவர் கலைஞர். மாலை நிகழ்ச்சிக்கு கலைஞர் வந்தபோது வழக்கமான வரவேற்பு சிறப்பாக வழங்கப்பட்டது. கலைஞர் பேசும்போது,

“அம்மையாரின் பணிகளைப் பற்றி அறிந்திருக்கிறேன். நற்பணிகளை ஆற்றி வருகிறார். அதுமட்டுமல்ல, நன்றாகப் பேசக்கூடிய ஆற்றலும் உடையவர். கலைவாணியாகவும், இசைவாணியாகவும் விளங்கிவரு கிறார்” என்று பாராட்டிப் பேசினார்.

1975ஆம் ஆண்டு பெண்கள் ஆண்டாக ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டது. அதனையொட்டி சென்னையில் சீனிவாச காந்தி நிலையத்தில் அதன் தலைவி பத்மஸ்ரீ அம்புஜம்மாள் தலைமையில் சிவ பிருந்தாதேவிக்குப் பாராட்டு மற்றும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

1976ஆம் ஆண்டு வடஇந்தியப் பயணம் மேற்கொண்டார். வட இந்தியக் கோயில்கள் பற்றி இவர் எழுதிய ‘சேத்ராடனம்’ என்ற நூலை காஞ்சி பெரியவர் வெளியிட்டார். 1977ஆம் ஆண்டு காஞ்சிப் பெரியவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க  ‘இந்து மதம்’ என்ற நூலை சாயிமாதா சிவபிருந்தா தேவி எழுதினார். இந்நூலை மதுரையில் காஞ்சிப் பெரியவரே வெளியிட் டார்.

கடந்த 31 ஆண்டுகளாகத் தமிழர் பண்பாடு, தமிழர் சைவம் ஆகியவற் றைப் பற்றித் தொடர் சொற்பொழிவு ஆற்றிவந்த பிருந்தாதேவி 1976ஆம் ஆண்டு சென்னை தமிழிசை மன்றப் பண் ஆராய்ச்சி 26ஆவது மாநாட் டைத் தொடங்கிவைத்தார்.

சைவ அன்பர்கள் பலரும் கேட்டுக் கொண்டற்கிணங்க சாயிமாதா சி.பிருந்தாதேவி திருத்தணியில் திருமுருக கிருபானந்த வாரியாரைச் சந்தித்து ஆதீனம் ஒன்றை ஏற்படுத்தும் எண்ணத்தைக் கூறினார். வாரி யாரும் “அத்தகைய தகுதி தங்களைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது அவ்வாறு தாங்கள் ஆதீனகர்த்தாவாகும் அந்த நல்ல நாளை விரைவில் எனக்குத் தெரிவியுங்கள். அந்தப் புனித நாளில் பங்கேற்று தங்களைப் போற்றி உரைக்கிறேன்.” என்றார்.

அதன்படியே 1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆன்மிகப் பணி களைச் சிறப்புற ஆற்றி வந்த சாயிமாதா சிவ.பிருந்தாதேவி, ‘திலகவதி யார் திருவருள் ஆதீனத்’தைத் தொடங்கி அதன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சமய வரலாற்றில் இந்நாள் ஒரு பொன்நாள். முதல்முறை யாக ஒரு பெண்மணி ஆதீனத் திருமடத்தின் தலைவியாகப் பொறுப் பேற்ற நான்நாள்.

ஒரு இசைவாணியாக, மேடைப் பேச்சாளராக, சைவத் தொண்டராக, கவிஞராக, எழுத்தாளராக, ஆன்மிகச் சொற்பொழிவாளராக, பெண் துறவி யாக, தமிழகத்தின் முதல் பெண் ஆதீனகர்த்தராக இவர் ஆற்றிய பணி களை உலகம் மறவாது.

72 ஆண்டுகள் இப்புவியில் வாழ்ந்த பெண்ணினத்தின் அடையாளங்களில் ஒன்றாக அருளாட்சி செய்துவந்த அன்னை சிவ பிருந்தாதேவி 1998 நவம்பர் 27ஆம் நாள் இறைவனின் திருவடிச் சேர்ந்தார்.

திலகவதியார் திருவருள் ஆதீனம், 1120, தஞ்சாவூர் சாலை, மச்சுவாடி, புதுக்கோட்டை-622001. செல் 9789182825, 6380928173 www.sivabrindadevi.org

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...