விவேகானந்தரை தத்துவ வாதத்தில் வென்ற சோமசுந்தர நாயகர்

 விவேகானந்தரை தத்துவ வாதத்தில் வென்ற சோமசுந்தர நாயகர்

விவேகானந்தருக்கும் சண்டமாருத்தம் சோமசுந்தர நாயகர் இடையே நடந்த வாதமென்ன? அதன்பின் விவேகானந்தர் சித்தாந்தம் முன்பே அறிந்திருந்தால் சிகாகோவில் சித்தாந்தமே பேசியிருப்பேன் என்றாராமே உண்மையா?

ஆம் உண்மைதான். தன் வாழ்நாளில் தமிழ் படிக்கவில்லையே என்று சுவாமி விவேகானந்தர் கலங்கி நின்ற தருணமும் தமிழ் சைவ மரபிடம் அவரது வேதாந்தம் தோற்றுப்போன அந்தத் தருணம்தான் அது.

தனது வேதாந்தம் தமிழ் சைவ மரபின் முன் தோல்வியடைந்ததைக் கண்ட பிறகுதான் “நூறு மதராசிகளை (தமிழர்கள்) என்னிடம் தாருங்கள். மொத்த இந்தியாவையும் மாற்றிக் காட்டுகிறேன்” என்று சொன்னார் சுவாமி. விவேகானந்தர். இதே கருத்தை மீண்டும் சென்னையிலும் (அப்போதைய மதராசபட்டினம்)பேசினார்.

யார் இந்த சோமசுந்தர நாயகம் அவர்கள்?

ஒரு சுருக்கமான வரலாறு

தமிழ் மற்றும் சமஸ்கிருதம் இரண்டிலும் முழு தேர்ச்சி பெற்ற சோமசுந்தர நாயகர் மாயாவாதம், வேதாந்தம் ஆகியவற்றைவிட ‘வீரசைவ மரபு’ உயர்ந்தது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். சிவனியத்தை உயிராக மதித்தவர். சமஸ்கிருத புராணக் கதைகளைக் கட்டுடைத்து (decode) நிராகரித்தார். சோமசுந்தர நாயகரின் மாணவர் தமிழ் உலகில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தமிழ்க்கடல் மறைமலை அடிகள்.

மறைமலை அடிகள் தமது முழு முதல் குருவான அவரின் வரலாற்றை சோமசுந்தர நாயக்கர் வரலாறு என்ற பெயரில் எழுதினார். 1957இல் சைவசித்தாந்த தென்னிந்திய நூற்பதிப்புக் கழகத்தால் அது வெளியிடப்பட்டது.

சைவத்தின் பெருமையை சோமசுந்தர நாயகர் எழுதிய நூல்கள்:

சித்தாந்த ஞானபோதம், சித்தாந்த உந்தியார், சித்தாந்த சேகரம், சிவகிரி பதிற்றுப் பத்தந்தாதி, சிவநாமாவளி, சைவ சூளாமணி, பரம பத பிங்க வினா விடை, சிவதத்துவ சிந்தாமணி, சமரச ஞானதீபம், சன்மார்க்க போத வெண்பா, ஞானபோத விளக்கம், ஞானபோதத் துணிவு, சிவவாக்கியத் தெளிவுரை ஆகிய மேற்கண்ட நூல்களில் உள்ள கருத்துக்களை மறுத்து சமஸ்கிருத பண்டிதர்கள் எவ்வளவோ எதிர்வாதம் புரிந்தபோதும் இவருடைய மாணவர்களே அவற்றை தோல்வியுறச் செய்து விட்டனர்.

சமஸ்கிருத புராணங்கள் புனைவுகளை சோமசுந்தர நாயகர் இறுதிவரை மறுத்து வந்தார். அந்தப் புராணங்களில் உள்ள அறிவுக்கு ஒவ்வாத கட்டுக்கதைகளை அகற்றிவிட்டால் வேதாந்தம் முழுமை பெறும் என்றார். அப்போது அதை கடுமையாக எதிர்த்த பிராமணர்கள் அதே கருத்தை அப்படியே மகாகவி பாரதியார் வழி மொழிந்தபோது அமைதியாகினர்.

சமய மாநாட்டில் விவேகானந்தர் என்ன பேசினார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அனைத்துலக அளவிலான சமய மாநாடு நடந்தபொழுது அப்படி ஒரு நிகழ்வு நிகழப்போவதை விவேகானந்தருக்கு அறிவித்தவர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தான். அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து விவேகானந்தர்தான் அதில் கலந்துகொள்ள தகுதியானவர் என்று முடிவு செய்த சேதுபதி மன்னர் தனது சொந்த செலவில் (அரசின்) விவேகானந்தரையும் விவேகானந்தர் விரும்பிய உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரையும் கப்பலில் வழியனுப்பி வைத்தார்.

சேதுபதி மன்னரின் எதிர்பார்ப்பைத் தெளிவாக நிறைவேற்றியபடி பெரும் புகழுடன் வந்திறங்கினார் சுவாமி விவேகானந்தர்.

கோட்பாடுகளுக்கு இடையிலான நாகரிகமான கருத்து மோதல்கள்தான் செழுமையான சமுதாயத்தை உருவாக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட மன்னர் பாஸ்கர சேதுபதி தமது அரச குருவாக விளங்கும் வீரசைவ மரபின் வழி நிற்கும் மதிப்பிற்குரிய சூளை சோமசுந்தர நாயகர் அவர்களும் வேதாந்த மரபின் வழி நிற்கும் விவேகானந்தருக்கும் இடையில் சமயக் கருத்தாடல் நிகழ வேண்டுமென்று எண்ணினார். எண்ணியபடி இருவரின் இசைவைப் பெற்றார். ஏற்பாடும் செய்து விட்டார் அரசவையிலேயே வாதம் நடக்கிறது.

கருத்தியல் மோதல் தொடங்குகிறது :

விவேகானந்தருக்குத் தமிழ் தெரியாது சோமசுந்தர நாயக்கருக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே ஆங்கிலம் அறிந்த பாஸ்கர சேதுபதி மன்னர் மொழி பெயர்ப்பாளராகச் செயல்படுகிறார்.

தமது குலகுரு என்று சோமசுந்தர நாயகரை விவேகானந்தரிடம் அறிமுகம் செய்கிறார். அதேபோல் விவேகானந்தரின் பின்னணியையும் சோமசுந்தர நாயகரிடம் அறிமுகம் செய்கிறார் மன்னர்.

விவேகானந்தர் : நீங்கள் என்ன கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள்?

சோமசுந்தர நாயகர் : நான் சைவ சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறேன்.

விவேகானந்தர் : நான் வேதாந்த மரபைப் பின்பற்றுகிறேன்.

சோமசுந்தர நாயகர் : நல்லது.

விவேகானந்தர் : உங்களுடைய சைவ சித்தாந்த மரபில் இறுதியாகச் சொல்லக்கூடிய மையக் கருத்து என்ன?

சோமசுந்தர நாயகர் : முப்பொருள் உண்மை.

விவேகானந்தர் : அப்படி என்றால் என்ன?

சோமசுந்தர நாயகர் : பதி, பசு, பாசம், – உலகு, உயிர், இறைவன் என்று சொல்லக்கூடிய மூன்றும் நித்தியப் பொருள்கள் என்பது இந்தக் கொள்கை.

விவேகானந்தர் : ஒரு காலமும் அப்படி இருக்காது.

சோமசுந்தர நாயகர் : அப்படியானால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

விவேகானந்தர் : இறைவன் ஒருவன்தான் உண்மைப் பொருள். மற்றவையெல்லாம் உண்மை அல்ல என்பது எங்கள் வேதாந்தத்தின் முடிவான கருத்து.

சோமசுந்தர நாயகர் : புரியவில்லையே?

விவேகானந்தர் : பிரம்மம் ஒன்றுதான் என்றைக்கும் இருக்கக்கூடியது. இந்த உலகமானது இருப்பதைப்போல ஒரு தோற்றமளிக்கக்கூடிய பொருளேயன்றி உண்மையில் அப்படி இல்லை.

பிரஹ்ம சத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ பிரஹ்மைவ நபர (பிரஹ்மத்தைக் காட்டிலும் தனித்து ஆத்மா என்று கிடையாது.)

இந்த ஜீவன் என்று சொல்லக்கூடிய உயிர்கள் இறைவனுடைய பகுதிகளாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவையே தவிர இறைவனைவிட்டு வேறொன்றாக இருக்கக்கூடியவை இல்லை. அதனால் இருப்பது பிரம்மம் ஒன்றே.

சோமசுந்தர நாயகர் : இதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இந்த உலகமானது பிரம்மம் தவிர அனைத்தும் மாயத்தோற்றம் என்று சொன்னால் இருக்கும் இருப்பைத்தான் நீங்களும் நானும் அனுபவிக்கிறோமே?

விவேகானந்தர் : அப்படியானால் நீங்கள் சொன்ன மூன்று பொருள்களை நிரூபித்தால் நான் சைவமரபை ஏற்கிறேன்.

சோமசுந்தர நாயகர் : உறுதியாக நிரூபிக்கிறேன்.

விவேகானந்தர் : ஆனால் நீங்கள் உங்கள் சைவசித்தாந்த மரபில் உள்ள நூல்களைக் கொண்டு நிரூபித்தால் ஏற்கமாட்டேன்.

சோமசுந்தர நாயகர் : அப்படியானால் நீங்களே சொல்லுங்களேன். நீங்கள் சொல்வதிலிருந்தே அவற்றை நிரூபிக்கிறேன்.

விவேகானந்தர் : நான் படித்ததையும் நினைத்ததை எல்லாம் சொன்னால் நேரம் போதாது.

சோமசுந்தர நாயகர் : இப்பொழுது நீங்கள் சொன்னீர்களே,பிரஹ்ம சத்யம்; ஜகன் மித்யா; ஜீவோ பிரஹ்மைவ நபர. இதை வைத்துக்கொண்டே நான் என்னுடைய கொள்கையைச் சாதிக்கமுடியும்.

விவேகானந்தர் : இல்லை அதை நான் இன்னும் விரித்துரைக்க வேண்டும்.

சோமசுந்தர நாயகர் : அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.

விவேகானந்தர் : தாங்கள் அவ்வளவு தேர்ச்சி பெற்றுள்ளீர்களோ? முடிந்தால் நிரூபியுங்கள். எனது வேதாந்த மரபு தோல்வியடைந்தது என்று நான் சரணடைகிறேன்.

சோமசுந்தர நாயகர் : அந்த முதல் வார்த்தை இருக்கிறதே பிரம்மம் அதற்கு நேரடியான பொருள் என்ன?

விவேகானந்தர் : பிரம்மம் என்றால் பெரியது.

சோமசுந்தர நாயகர் : அப்படியானால் நீங்கள் எனது கருத்துக்களை முப்பொருள் உண்மைகளை ஒப்புக்கொண்டு விட்டீர்கள்.

விவேகானந்தர் : பிரம்மம் பெரிது என்று சொன்னால் பதி, பசு, பாசம் என்று மூன்று பொருள்கள் இருப்பதாக ஒத்துக்கொண்டேன் என்று எப்படி வரும்?.

சோமசுந்தர நாயகர் : பிரம்மம் என்ற சொல்லுக்கு நீங்கள் சொன்ன பொருள் பெரியது. பெரியது என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றால் நீங்கள் ஒரு ஒப்பீட்டு ஆய்வு செய்ய வேண்டும் (you have to make a comparative study) சிறியது என்ற ஒன்று இருந்தால்தான் பெரியது என்று ஒன்று இருக்கமுடியும்.

சிறியது பெரியது என்று இரண்டு பொருள்கள் இருக்குமேயானால் அவை இருப்பதற்கான ஒரு நிலைக்களம் வேண்டும். அப்பொழுது பெரியது என்பது பிரம்மம், சிறியது என்பது உயிர்கள் இவை இரண்டுக்குமான நிலைக்களம் உலகம் (பிரபஞ்சம்). அப்படியானால் உலகு, உயிர், இறைவன் என்ற மூன்றையும் பறைசாற்றுகின்றது பிரம்மம் என்ற சொல்.

விவேகானந்தர் : அற்புதமான ஞான விளக்கம். எனது கருத்துக்களிருந்தே உங்களது கருத்தை நிறுவுகிறீர்கள்.இந்தப் பொருளை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்?

சோமசுந்தர நாயகர் : சைவ சித்தாந்தத்தில் சிவஞான போதம் என்னும் ஒரு நூல் இருக்கிறது. அது தமிழ் நூல்.

விவேகானந்தர் : இத்தகைய ஞானக் கருத்துக்கள் நிறைந்த தமிழைப் படிக்காமல் இருந்துவிட்டேனே. பேரறிஞர் சோமசுந்தர நாயகர் அவர்களிடம் எனது தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்! ஒப்புக் கொள்கிறேன்! ஒப்புக் கொள்கிறேன்! (மூன்று முறை சொல்கிறார்)

(பின் எழுந்து நின்றபடி சுவாமி விவேகானந்தர் உண்மையிலேயே கண் கலங்குகிறார். அவரது உள்ளங்கையைப் பற்றி மன்னர் ஆறுதல் சொல்கிறார். சோமசுந்தர நாயகரின் கருத்துக்கள் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் அனைத்து சமய மாநாட்டில் இன்னமும் இந்தியாவின் தொன்மையான பெருமையை பெருமிதத்துடன் பேசியிருப்பேன் என்றார் விவேகானந்தர்)

விவேகானந்தர் : (சோம சுந்தர நாயகரை நோக்கி உணர்ச்சிகரமாக) உங்களைப் போன்று ஞானத் தெளிவு பெற்ற நூறு மதராசிகள் (அதாவது தமிழர்கள்) எனக்குக் கிடைப்பார்களேயானால் நான் இந்த உலகத்தையே மாற்றிக்காட்டுவேன்.

(இதுதான் பின்னாளில் திரிக்கப்பட்டு 100 இளைஞர்கள் என்று மாற்றப்பட்டது. உண்மையில் விவேகானந்தர் சொன்னது சைவ சித்தாந்த மரபில் தேர்ச்சி பெற்ற 100 தமிழர்களைத்தான். இந்த இடத்தில்தான் அந்த வார்த்தைகளை முதல்முறையாகக் கூறினார் விவேகானந்தர்.)

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தில் இந்த வாதம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளதாம்.

சமஸ்கிருத வைதிக வேதாந்தத்தை தமிழ் சைவ சித்தாந்தம் கருத்தியல் ரீதியாக அதிகாரபூர்வமாக வீழ்த்திய தருணம் இது.

இந்த வெற்றிக்குப் பின்னர் ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் சோமசுந்தரருக்கு ‘வைதிக சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர்’ என்று பட்டம் சூட்டினார்.

இதைக்கண்ட திருவாடுதுறை மடம் ‘பரசமயக் கோளரி’ என்று பட்டம் சூட்டியது.

வடக்கிலுள்ள விவேகானந்தருக்கு தெற்கில் உள்ள தொன்மையான மெய்யியல் கருத்துக்கள் கொண்ட தமிழ் மரபை அறிய சோமசுந்தர நாயகர் உடன் வாதம் தேவைப்பட்டது.

வடக்கிலுள்ள காந்தியடிகளுக்கு தெற்கிலுள்ள திருக்குறள் பெருமைகளை ரஷ்யாவிலிருந்து டால்ஸ்டாய் என்ற அறிஞர் கடிதம் எழுதிச் சொல்ல வேண்டியதாய் உள்ளது.

இப்படித்தான் வடக்கும் தெற்கும் எப்பொழுதும் இரு துருவங்களாகவே உள்ளன. வடக்கு எப்போதும் தெற்கிலிருந்து தனித்திருக்கவே விரும்புகிறதா?

சற்குரு. முத்துக்குமரகுரு சாமிகள் இந்த வாதத்தை பற்றி ஒரு நீண்ட நெடிய உரையாற்றியுள்ளார்.

வாய்ப்பும் விருப்பமும் இருந்தால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திடமிருந்து Audio CD வாங்கலாம்.

விவேகானந்தருடைய தோல்வி கருத்தியல் தோல்வி தான். சூளை சோமசுந்தர நாயகர் பால் அதன்பின் பேரன்பு கொண்டார் விவேகானந்தர். ஆனால் சமஸ்கிருத பண்டிதர்கள் வேத பிராமணர்கள் பலரும் கொல்கத்தாவிலும் வங்காளத்திலுமிருந்து போர்க்கொடி தூக்கினார். ராமநாதபுரம் மன்னர் ஒரு சார்புடன் மொழிபெயர்ப்பு செய்து விவேகானந்தரை வீழ்த்தி விட்டதாகக் கூறினர்.

இந்தச் சில்லறைத்தனமான இன வெறுப்புகளைத் தாங்கிய எதிர்வாதங்கள் வரும் என்பதை எதிர்பார்த்த மன்னர், அனைத்து சமய மாநாட்டில் விவேகானந்தருக்குத் துணையாக அனுப்பிய விவேகானந்தர் விரும்பிய உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் வாதத்தின்போது அரசவையில் வைத்திருந்தார். ஆங்கிலப் புலமை மிக்க பிராமணர்களைக் கொண்டிருந்த அந்தக் குழுவினர் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விட்டனர்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...