மருத்துவ சேவை தேவதைகள்
செவிலியர் பணி என்பது ஊதியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு தொண்டு. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது மகத்தான ஒன்று. அவர்களது சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு!
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் வரை தங்களது உயிரைப் பணயம் வைத்து, இரவு, பகலாகப் பணியாற்றி வருகின்றனர்.
நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர்களுக்குச் செய்யும் பணியைத் தங்களது கடமையாகக் கருதி, எந்தக் காலத்திலும், நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு இருந்தாலும் செவிலியர்களைப் பொறுத்தவரை நோயாளிகள் அவர்களுக்கு நோயாளிகள் தான் என்று கூறுகின்றனர். அது சாதாரண நேரமாக இருந்தாலும், இதுபோன்ற கொரோனா நோய்த் தொற்று பரவக் கூடிய நெருக்கடியான காலங்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகக் கருதுகின்றனர்.
கொரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்தில் முன்களப் பணியாளர்களாக முன்நிற்கும் செவிலியர்களின் சேவையைப் போற்றும் தினமாக இன்று சர்வதேச செலவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலம் கருதாமல் களத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் (Nurse) இருக்கின்றனர். சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இத்தொழிலில் அதிகமாக பெண்களே ஈடுபட்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சில நேரங்களில் மருத்துவர்களை விட செவிலியர்களின் பணி மிக முக்கியமானது. அவர்கள் மருத்துவமனைகளிலும், மருத்துவர் அலுவலகங்களிலும், சமுதாய நலக் கூடங்களிலும் பணிபுரிகிறார்கள். நோயாளிகள் வெளியே வர முடியாவிட்டால் வீட்டிற்கே சென்று வேலை பார்க்கிறார்கள். அவர்களுடன் அன்பாக பேசுவதன் மூலமும், தேவையான உதவிகளை செய்வதன் மூலமும், எதுவும் தவறாக நடக்காது என்பதை கவனமாக கூறுவதன் மூலமாகவும் மருத்துவர்களை விட தான் செவிலியர்கள் தான் மக்களோடு மிக நெருக்கமானவர்கள். அறுவை சிகிச்சையின் போது அவர்களின் பணி இன்றியமையாதது. குழந்தை பிறப்பின்போது அவர்களின் கவனிப்பு, தாயைப் போன்று அன்பு காட்டுபவர்கள். குழந்தை பிறந்த பின்பு அவர்களுக்கு எப்படி தாய்ப்பால் கொடுப்பது,குளிப்பாட்டுவது மற்றும் தாய் சேய் நலத்தில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். கொள்ளை நோய்கள் வரும்போது வீட்டிற்கே செல்லமுடியாமல் மிகத் துரிதமாக செயல்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி உதவி செய்வார்கள்
ஒவ்வொரு ஆண்டும் மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில், சர்வதேச செவிலியர் கவுன்சில் அமைப்பு, 1965-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச செவிலியர் தினத்தை கொண்டாடியது.
மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினம் மே 12 என்பது குறிப்பிடத்தக்கது. நைட்டிங்கேல் புகழ்பெற்ற செவிலியராக விளங்கியதோடு, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியாகவும், புள்ளியியல் அறிஞராகவும் விளங்கினார்
கை விளக்கேந்திய காரிகை (பிளாரன்ஸ் நைட்டிங்கேல்) – அதன் முத்தாய்ப்பாக அமைந்தது ஒரு சம்பவம். 1854-ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்ட படைவீரர்கள் குத்துயிரும் குலையுயிருமாக வீழ்ந்து கிடந்தனர். அவர்களுக்கு யாருமே உதவ முன்வரவில்லை. இறக்கும் தருவாயில் பலர் முனகலுடன் இருந்தனர். அந்த ராணுவ மருத்துவமனைக்கு 38 செவிலியருடன் சென்றார் பிளாரன்ஸ். வசதிக்குறைவுகள் அங்கு காணப்பட்டாலும் தன்னால் முடிந்தவரை ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை வழங்கினார். உயிருக்குப் போராடிய முழு படையையும் தன்னிடமிருந்த குறைந்த மருத்துவ வசதி மற்றும் நிறைந்த அன்பிலும் குணப்படுத்தினார். அந்த இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார்.
தங்களைக் காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் நைட்டிங்கேலைக் கவுரவித்தனர். அதனால்தான் அவர் “கைவிளக்கு ஏந்திய காரிகை” என்றும் அழைக்கப்பட்டார். அவர் பிறந்த மே 12 ஆம் நாளே உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. செவிலியர்களுக்கென்றே தனி மரியாதையும், கண்ணியத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். அவர் இல்லாவிட்டால் செவிலியர் துறை இந்த அளவுக்கு இவ்வளவு காலம் நீண்டு வளர்ந்திருக்காது.
இந்த ஆண்டு ‘செவிலியப் பணி மூலம், உலக ஆரோக்கியம்’ என்ற மையக்கருத்தை, உலக செவிலியர் அமைப்பு முன்வைத்துள்ளது.
செவிலியர்கள் நமக்கு மற்றொரு தாய் மற்றும் சகோதரி. அவர்களது பணி என்றும் போற்றத்தக்கது!