உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஆத்தங்குடி டைல்ஸ்

 உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஆத்தங்குடி டைல்ஸ்

ஆத்தங்குடி டைல்ஸ் நூறு வருடப் பழைமைக்குப் பேர் போனது.  வீடு களில் ஆத்தங்குடி டைல்ஸ் பொருத்தினால் பெரும்பாலும் கால் வலி, உடல் வலி வராது. காரணம், ஆத்துல இருந்து வர்ற குளிர்ச்சியான ஆத்து மணல்ல சிமென்ட் கலந்து இயற்கையான முறையில தயாரிக் கிறோம்” என்கிறார் ஆத்தங்குடியில் மூன்றாவது தலைமுறையாக ‘கணபதி டைல்ஸ்’ நிறுவனத்தை நடத்தி வரும் நடராஜன்.
காரைக்குடியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் உள்ளது ஆத்தங்குடி. இந்தப் பகுதியில் 30 பேர் டைல்ஸ் நிறுவனம் வைத்திருக்கிறார்கள். அதில் மிகவும் பிரபலமான ‘கணபதி டைல்ஸ்’ நிறுவன உரிமையாளர் நடராஜனிடம் பேசினோம்.


இந்த டைல்ஸ் பதிச்சா கால் வலி வராதுன்னு எப்படிச் சொல்றீங்க?

“செட்டிநாட்டு ஆச்சிங்க கால் வலி, கை வலின்னு முடங்கினது இல்ல. காலங் காலமா நல்லா வாழறாங்க.  அதுக்கு இந்த டைல்ஸ்தான் காரணம்.”
ஆத்தங்குடி டைல்ஸை எப்படித் தயாரிக்கிறீங்க?

“எட்டுக்கு எட்டு (Plain Glass) கண்ணாடிய கீழ வச்சு அதன்மேல பித்தளை யால செஞ்ச டிஸைனை வைப்போம். அதுல ஆத்து மணலும் சிமென்ட்டும் கலந்த கலவையைப் போட்டு பேக் பண்ணி, டிஸைனுக்கு ஏத்த மாதிரி ஆக்ஸைடு கலர் பவுடர் போட்டு மூடிவிடுவோம். அப்படியே வச்சிருந்து ஒருநாள் கழிச்சி ஃப்ரேம்ல இருந்து பிரிச்சி எடுத்த டைல்ஸ தண்ணித் தொட்டிக்குள்ள போட்டு ரெண்டு நாள் ஊறவைப்போம். அப்புறம் அதை ஏழு நாட்கள் வெயில் படாம நிழலிலேயே காயவைப்போம். ஆனா, ஒன்பது நாட்கள் டைல்ஸ்ல கண்ணாடி ஒட்டிக்கிட்டே இருக்கும். அப்புறம் கண் ணாடிய எடுத்திட்டு மேல பேப்பர் ஒட்டி கஸ்டமருக்கு அனுப்பிடுவோம். ஒரு வீட்டுக்கு ஆயிரம் ஸ்கொயர் ஃபிட் டைல்ஸ் வேணும்னா ரெண்டு மாசம் டைம் வாங்கித்தான் செய்வோம்.”

உள்ளூர் ஆர்டர் அதிகமா? வெளிநாடு ஆர்டர் அதிகமா?

“செட்டிநாடு நகரத்தார்கள்தான் அதிகமா ஆர்டர் கொடுக்கிறாங்க. அவங் களால தான் ஆத்தங்குடி டைல்ஸ் பாப்புலர் ஆச்சு. இப்ப மலையாளிங்க நிறைய வாங்க றாங்க. மலேசியா, துபாய்க்கெல்லாம் கூட சப்ளை செய்ய றோம்.”

அப்ப பிஸினஸ் நல்லா போய்க் கிட்டிருக்கு…

“அப்படி இல்லைங்க. பணியாட்கள் பற்றாக்குறை, தயாரிப்புப் பொருட்கள் விலை யும் வரியும் அதிகமா இருக்கு. அதனால மற்ற டைல்ஸோட ஒப்பிட் டுப் பார்க்கிறப்ப நாங்க விலை உயர்த்தி விக்க முடியல. இந்த டைல்ஸ் மிஷின்ல செய்யாம எல்லாமே ஆட்களை வச்சே செய்ய வேண்டியிருக்கு. அதனால அதிகமா செய்யமுடியாது. செய்து வைத்து ஸ்டாக்கும் பண்ண முடியாது. இதுதான் மிகப்பெரிய சவால்.”

இந்த டைல்ஸை எப்படிப் பராமரிக்கணும்?

“மழைத்தண்ணி, வெயில் படுற இடத்தில் பதிக்கக்கூடாது. இது கனம் கூடி யது என்பதால சுவத்துல பதிக்க முடியாது. டைல்ஸ்ல தண்ணி பட்டாலோ எண்ணெய் அல்லது வேறு பொருட்கள் கொட்டினாலோ தப்பில்ல. ஆனா உடனே துடைச்சிடணும். இல்லைனா, வெள்ளை வெள்ளையா உப்பு பூத் திடும்.”

சென்னையில் ஆத்தங்குடி டைல்ஸ் பதிக்கணும்னா என்ன செய்ய ணும்?

“நாங்களே லாரி புக் பண்ணி, கொண்டாந்து பதிச்சுக் கொடுத்திடுவோம். மத்தவங்களுக்கு இதை எப்படிப் பதிக்கணும்ற மெத்தெட் தெரியாது.”

உங்கக்கிட்ட எவ்வளவு டிஸைன்ஸ் இருக்கு? எவ்வளவு பேர் வேலை செய்யிறாங்க? ஒரு டைல்ஸ் விலை எவ்வளவு ஆகும்?

“என்கிட்ட 500 டிஸைன்ஸ் இருக்கு. 8X8‘ ஒரு கல் விலை 20 ரூபாய். நான் பத்து வருஷமா வேலை செஞ்சி பல தொழில்நுட்பங்களைக்  கத்துக்கிட் டேன். இப்ப ஷார்ட்டா மூணு மாசத்தில் கத்துக் கொடுத்திடறோம். நுணுக் கங்கள் தெரிய லைன்னாலும் அதை வச்சுத் தொழில் செய்யலாம். இப்ப எங்கிட்ட 30 வருஷம் அனுபவமுள்ளவங்க வேலை செய்யறாங்க” என்றார்.

ஆத்தங்குடியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அச்சு (டைல்ஸ் டை) செய்யும் முனுசாமியைச் சந்தித்தோம். “எங்கப்பா காலத்தி லிருந்தே டைல்ஸ் டிஸைன் செஞ்சி வர்றேன். ஒரு டிஸைன் செய்து முடிக்க பத்து நாள் ஆகும். அதற்கு 9 ஆயிரம் ரூபா செலவாகும்.  எனக் கப்புறம் என் குடும்பத்தில் இந்த வேலையைச் செய்ய யாரும் இல்லையே என்ற வருத்தம் இருக்கு.  இது நம்ம ஊர் பாரம்பரியக் கலை. இதை அழியாம பாதுகாக்கணும்” என்றார்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...