ரத்தநாள புடைப்பு நோய் (வெரிகோஸ் வெய்ன்) ஏன் ஏற்படுகிறது?
கால்களில் நரம்புகள் சுற்றிக்கொள்கிற ‘வெரிகோஸ் வெய்ன்’ நோய் எதனால் ஏற்படுகிறது? இதனைக் குணப்படுத்த வழி என்ன? என்று சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவமனையின் ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் சண்முகவேலாயுதம் அவர்களிடம் பேசி னேன். அதற்கு அவர் அளித்த பதில் இதோ…
“நீண்டநேரம் ஒரே இடத்தில் நின்றோ, அமர்ந்தோ வேலை பார்ப்பதனால் காலில் இருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தக்குழாய் களில் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, ரத்தம் தேங்கி, அந்த ரத்தநாளங்கள் புடைத்து வெளியே தெரிவதைத்தான் நாம் வெரிகோஸ் வெய்ன் என்று கூறுகிறோம்.
புடைத்துக்கொண்டு வெளிவருபவை நரம்புகள் அல்ல, இவை அசுத்த ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தநாளங்கள். இந்த நோய் வருவதற்குக் காரணம், காலத்தின் கட்டாயமாக அதிக நேரம் நின்று அல்லது அமர்ந்து வேலை பார்க்கும் எக்ஸ்போர்ட் கம்பெனி, சேல்ஸ் ரெப்ரஸன்டேடிவ்ஸ், டெக்னீசியன்ஸ், புரடக் ஷன் ஒர்க், டீக்கடை, கார்மென்ட, டெக்ஸ்டைல்ஸ், அதிக நேரம் நின்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஆசிரியர்கள், கண்டக்டர் போன்ற தொழில் செய்பவர் களுக்கு வெரிகோஸ் வெய்ன் நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக் கிறது.
இதைத் தடுப்பதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சி என்றால், அதிக நேரம் நின்று வேலை செய்யும் இடங்களில் சற்று அமர்ந்து அல்லது நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட நேரமானால் நடுநடுவில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். ஓய்வு எடுக்கும்போது காலை நீட்டி வைத்திருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை (மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள்) சிறிய நடை நடந்துசெல்ல வேண்டும். இது மாதிரி அவ்வப்போது செய்யும்போது தசை நார்கள் சுருங்கி விரிந்து ரத்த நாளங்கள் கீழிருந்து மேலாக இதயத்தை நோக்கிச் செயல்படும். இதனால் வீக்கம், வலி எல்லாம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு.
இதையும் தாண்டி வலி, வீக்கம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகலாம். வெரிகோஸ் வெய்ன் நோய் அதிக நேரம் நிற்பதாலும் உட்கார்ந்திருப்ப தாலும்தான் வருகின்றன என்றாலும் பிறப்பு காரணமாக ஐந்து சதவிதிம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்கு இயற்கையாகவே ரத்தநாளத் திசுக்கள் கொஞ்சம் பலவீனமாகவே இருந்திருக்கும். இதனால் குடும்பத்தில் அம்மா, தங்கை, சித்தி பெண்கள் தரப்பிலும் வர வாய்ப்பிருக்கிறது. அதனால் தொடர்ந்து பல மணிநேரம் நிற்பதையும் உட்கார்ந்திருப்பதையும் தவிர்க்கவும்.