தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 18 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 18 | தனுஜா ஜெயராமன்

போலீஸ் ஸ்டேஷனில் கோகுல், அம்ரிதாவின் கேஸ் ஹிஸ்டரியை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஒரு வரி விடாமல் கவனத்துடன் படித்தார்.

“ஏன்யா ஏகாம்பரம்! …அந்த பொண்ணு அம்ரிதா ப்ளாட்ல அக்கம் பக்கம் இருக்குறவங்களை விசாரிச்சீங்களே.. ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா?

“குறிப்பிட்டு சொல்லணும்னா சார்!.. உசரமா அழகா ஒரு ஆளு அடிக்கடி வந்து போயிருக்கான். நேற்றே உங்ககிட்ட சொன்னேனே.. அதைத் தவிர நிறைய ஆம்பிளைக வந்து போவாங்களாம்…சின்ன குழந்தைகளையும் அடிக்கடி கூட்டி வருவாங்களாம். அந்த ப்ளாட் கூட ஆறுமுகங்குற வேற ஏதோ பேர்ல இருக்குதாம்”…

“யாருய்யா அந்த ஆறுமுகம்?”

“தெரியலைங்க சார்”..

“அட்ரஸ் வைச்சி சீக்கிரம் விசாரிங்க.. ஆமா அடிக்கடி வந்து போற அந்த ஆளு யாருன்னு தெரிஞ்சிதா?

” விசாரிச்சிட்டிருக்கோம்…இன்னும் ஏதும் தெரியலைங்க சார்!”

“சிசிடிவி இருக்கில்ல அந்த ப்ளாட்ல?”

“இருக்கு சார். ஆனா ஏதோ ரிப்பேராமாம்?”

“அது எப்படியா கரெக்டா குற்றம் நடக்குற இடத்துல மட்டும் எல்லா இடங்களிலும் சிசிடிவி ரிப்பேராகிடுது? “

“இல்லை சார்… இங்க நிஜமாகவே ரிப்பேர் ஆகி இரண்டு மாசமாகுதாம்… ப்ளாட்காரங்க ஏதும் கண்டுக்கலை… அதான்”

“சரி.. பரவாயில்லை.. எதிர்த்த வீடு பக்கத்து வீடுன்னு… தெரு முனை வரை எங்கெல்லாம் சிசிடிவி இருக்கோ கலெக்ட் பண்ணுய்யா… அந்த புட்டேஜ் சாயங்காலத்துக்குள்ள எனக்கு வேணும்… சீக்கிரம் கலெக்ட் செய்துட்டு வந்திருங்க”…

“சரிங்க சார்”… என கிளம்பினார் ஏகாம்பரம்..

அம்ரிதாவின் கேஸ் லெட்ஜரை வாங்கி… முகேஷின் போன் நம்பரை எடுத்து போன் செய்தார் கோகுல்.

“ஹலோ… மிஸ்டர் முகேஷ்.. நான் கோகுல் பேசறேன்.… ஒரு தகவல் வேணும்… உங்ககிட்ட”

“சொல்லுங்க சார்!… என்ன தகவல் வேணும்.? எனக்கு தெரிஞ்சதைச் சொல்றேன்”…

“நீங்க திருச்சியிலிருந்து வந்த பிறகு சென்னையில் அம்ரிதாவை மீட் பண்ணீங்களா?”

“இல்லியே சார்”…

“அப்புறம் எப்படி அந்த பொண்ணு பல வருஷத்திற்கு பிறகு உங்களை கண்டுபிடிச்சி கரெக்டா வந்தாங்க”….

“அதான் சார் நானும் யோசிச்சேன்… ஆனால் எனக்கு தெரியலை சார்…அவ என்னை எப்படி சென்னையில் கண்டுபிடிச்சான்னு”..

“முகேஷ்… நீங்க சொல்றது உண்மையா?”

“சார்.. சத்தியமா சொல்றேன் இது தான் நூறு சதவீத உண்மை” …என்றான் பதட்டத்துடன்.

“சரி.… அன்னைக்கு ஏதோ பார்ட்டியின் நடுவே அம்ரிதா ஒருத்தனோடு போறதை பார்த்தேன்னீங்களே… அவனை திரும்பப் பார்த்தா அடையாளம் கண்டுபிடிப்பீங்களா?”

“நிச்சயமாக சார்!… நான் அவனை நல்லா பார்த்தேன்.. அன்னைக்கு என் கூட ஹரிஷூம் இருந்தான். நாங்க பின்னாடியே போனோம், அவர்களை பாலோ செய்ய.. பட், ஜஸ்ட்ல மிஸ் பண்ணிட்டோம்”…

“இட்ஸ் ஓக்கே!.. தேவைப்பட்டா கூப்பிடுவோம்… நேரா ஸ்டேஷனுக்கு வந்திடுங்க அடையாளம் காட்ட.”

“சரி சார்” ..என போனை வைத்தான் முகேஷ். அதற்குள் முகமெல்லாம் வியர்த்து ஆறாக ஓடியது.

“ஏங்க!.. உடம்பு ஏதாவது சரியில்லையா? ஏன் இப்படி வியர்த்திருக்கு?” என்று அவன் வியர்வையை தனது புடவைத் தலைப்பால் ஒற்றினாள்.

.”அதெல்லாம் ஒண்ணுமில்லை சுதா.. கொஞ்சம் வேர்க்குது” என்றான்.

“என்னது… இந்த மார்கழி மாசக் குளிரில் வியர்க்குதா?” என அதிசயமாகப் பார்த்துக்கொண்டே எழுந்து போனாள்.

இன்ஸ்பெக்டர் போனில் பேசியதை ஹரிஷிடம் சொல்லலாமா? என்று மனதுக்குள் தோன்றியதை அடக்கி… சும்மா அவனை வேறு ஏன் தொந்தரவு செய்யவேண்டும்.. என்று அமைதியாகி விட்டான்.

முகேஷிடம் பேசி விட்டு போனை வைத்த கோகுல் யோசனையில் ஆழ்ந்தார். இன்னமும் குழப்பமாகவே இருந்தது.

யோசித்தவறாக… உடனே அசோக்கிற்கு டயல் செய்தார்.

எதிர்முனையில் “சொல்லு கோகுல்” ….என்ற அசோக்கிடம்..

“ஏம்பா!… அந்த அம்ரிதா கொலை கேஸில் நீ முகேஷ்ன்னு ஒருத்தரை அனுப்புனியே .? அவரை உனக்கு எப்படி தெரியும்..? ரொம்ப தெரிஞ்சவரா?”

“இல்லைய்யா…அவரு கூட வந்த ஹரிஷ் தான் இவரை எனக்கு அறிமுகபடுத்தினார். எனக்கு முகேஷை நேரிடையா தெரியாது?”

“ஓஹோ!” …என நெற்றியை சுருக்கியவர் “ஹரிஷை உனக்கு எப்படி தெரியும்?”

“அவரையுமே பர்ஸனலா தெரியாது.. ஒரு கேஸ் விஷயமா சில வருஷ பழக்கம் அவ்ளோ தான்.. ஏன் என்ன விஷயம்? ஏதாவது ப்ரச்சனையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை… சும்மா தான் கேட்டேன்” …என சிரித்தார் கோகுல்.

போலீஸ் எதைக் கேட்டாலுமே விஷயம் இருக்குமே!.. சோழியனும் குடுமியும் சும்மா ஆடாதே!” …என்ற அசோக்கிடம், “ஒரு சின்ன சந்தேகம்.… அவ்ளோ தான்”.

“க்கும்… நீங்க சந்தேகப்படாத ஆள்ன்னு யாராவது இருக்காங்களா என்ன? ஆனா என் அனுபவத்தில் சொல்றேன்.. அந்த முகேஷை பார்த்தா நல்லவனா தெரியுறான்.. பொய் சொல்லுறமாதிரி தெரியலை”..

“நான் முகேஷ் பொய் சொன்னார்னு சொல்லலையே.… ஆனா..?”

“என்ன ஆனா..?”

“உண்மையை மறைக்கலாம் இல்லையா?” எனக் கேட்டு கபகபவென சிரித்தார் கோகுல்..

“யப்பா! …உங்களது போலீஸ் மூளை… உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?” என அசோக்கும் கூட சேர்ந்து சிரித்தார்.

வேறு ஒரு வேலை விஷயமாக கோகுல் வெகுதூரம் சென்றிருக்க….இரவு ஏட்டு ஏகாம்பரம் போன் செய்தார். “சார்! சிசிடிவி புட்டேஜ் கலெக்ட் பண்ணது வந்திருச்சி”.

“ஸ்டேஷன்லையே வைய்யா.. காலையில் வந்து பாக்குறேன். இப்ப மினிஸ்டர் கேஸ் விஷயமா ரொம்ப தூரம் வந்துட்டேன்”..

“சரிங்க சார்!” …என போனை வைக்கப் போனவரை…

“மறந்திட்டேன்ய்யா.. அந்த முகேஷுக்கு போன் செய்து நாளைக்கு ஸ்டேஷனுக்கு வரச்சொல்லு.. அடையாளம் காட்டணும் அவன்” ..என போனை வைத்தார்.

முகேஷ் போனை எடுக்க..”.சார்! நான் ஸ்டேஷன்லயிருந்து பேசுறேன்.. நாளைக்கு ஸ்டேஷனுக்கு வந்துருங்க.. கோகுல் சார் சொல்ல சொன்னார்”..

“வரேன் சார்!..என்ற முகேஷ் தயங்கியபடி, “சார்!… எதுக்கு வர சொன்னார்னு தெரியுமா?”

“அதெல்லாம் தெரியாது… தெரிஞ்சாலும் சொல்லமுடியாது… வான்னா வரவேண்டியது தானே” என அலட்சியமாக போனை வைத்தார் ஏட்டு ஏகாம்பரம்.

முகேஷிற்கு பயமாக இருந்தது. எதற்காக கூப்பிடுகிறார்கள்? என்னவாக இருக்கும்? ஒருவேளை அந்த ஆளை அடையாளம் காட்டவேண்டும் என்று கோகுல் சொன்னாரே… அதுவாக இருக்குமோ ? என யோசித்தவன் அதுவாக தான் இருக்கவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு நிம்மதியடைந்தான்.

ஆனால் அவன் நிம்மதி நெடுநாள் நிலைக்கப்போவதில்லை என்பது  அவனுக்கு அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாளை தனது தலையில் விழப்போகும் இடியை பற்றி அறியாமல் இருந்தான் முகேஷ்.

மறுபடியும் முகேஷின் போன் அலற… எதிர்முனையில் அப்பா வேதமூர்த்தி “எங்கடா இருக்க” என்றார் கோபத்துடன்..

“இங்க தான்ப்பா பக்கத்துல வந்திருக்கேன்.. என்ன விஷயம்ப்பா?” என்றான் முகேஷ்..

“என்னடா பண்ணி வைச்சிருக்க?… வீட்டுக்கு வாடா? உன்கிட்ட பேசணும்..” என்றார் கோபத்துடன்..

“இதோ வரேன்ப்பா” …..என்றான் பதட்டத்துடன்…

வேகமாக காரை செலுத்தினான் முகேஷ்… “அப்பா எதற்கு இவ்வளவு கோபமாக கத்துகிறார்.. ஏதேனும் விஷயம் வெளியே கசிந்திருக்குமோ?  அப்படியிருந்தால் அப்பாவை என்ன சொல்லி சமாதானபடுத்துவது” …என்ற கேள்வி மனதுக்குள் குடைய, கார் வீட்டை நோக்கிப் பறந்தது.

வாசலிலேயே குட்டி போட்ட பூனையாய் உலவிகொண்டிருந்தார் வேதமூர்த்தி…

ஹரிஷ் கேட்டினுள் காரை நுழைக்க முயல… “அங்கேயே இரு..வெளிய போகணும்” ….என்றார்.

“இந்த நேரத்தில் எங்கப்பா போகணும்” …என்றான் கவலையுடன்.

வேகமாக வந்து கார் கதவை திறந்து உள்ளே நுழைந்து படாரென காரின் டோரை சாத்தினார்..

“எங்கப்பா போகணும்” …தாழ்ந்த குரலில் முகேஷ் கேட்க…

“எங்கியாவது போ”…என்றார் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு..

“எனக்கு அப்பவே தெரியும் டா? கொஞ்ச நாளாகவே நீ சரியில்லைன்னு” …என்று உறுமினார்..

“ப்பா”….

“பேசாதடா!… உனக்கும் அந்த அம்ரிதாவுக்கும் அப்படி என்னடா சம்பந்தம்?” ..என வேதமூர்த்தி நேரிடையாகவே கேட்க… முகேஷூக்கு திக்கென்றிருந்தது…

–தொடரும்...

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...