சிவகங்கையின் வீரமங்கை | 6 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை | 6 | ஜெயஸ்ரீ அனந்த்

குவிரனை தேடிக் கொண்டு சென்ற வீரர்கள் சிவக்கொழுந்து காட்டிய கருவேல மரக் காட்டினை அடைந்தனர்.

“வீரர்களே, இவ்விடத்தைச் சோதனை செய்யுங்கள் ” என்ற சிவக்கொழுந்தின் சொல்லிற்கு வீரர்கள் ஒருவருக்குள் ஒருவர் தங்களுக்குள் பார்த்து பரிகசித்து கொண்டனர்.

‘ஏது.. இந்த அடர்ந்த கருவேலங்காட்டிலா தேடசொல்கிறீர்கள்.? தப்பாக நினைக்க வேண்டாம். துப்பு துலக்குவதில் உங்களுக்கு அனுபவமின்மை நன்கு தெரிகிறது. இதில் அவன் எப்படி ஒளிந்திருக்க முடியும்..? அடர்ந்த முட்கள் அவன் உடம்பை பதம் பார்த்து இருக்காதா..? ” என்ற கேலிச் சிரிப்பிற்கு… சற்று அவமானப்பட்ட சிவகொழுந்து , “வீரர்களே , என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து துரோகியைக் கோட்டை விட்டு விடாதீர்கள். தேடுங்கள்”

வேண்டா வெறுப்பாக கையிலிருந்த கத்தியால் மரங்களைக் கழித்துக் கொண்டு முன்னேறுகையில் எதிர்பாராத ஒரு இறக்கத்தில் சிறிய பாறை ஒன்று சற்று வித்தியாசமாய் தெரிந்தது. அதைச் சற்று நகர்த்தவும் அதில் பாதை ஒன்று கீழ்நோக்கி சென்றது. வீரர்களுக்குள் பரபரப்பு சூழ்ந்தது

” நீங்கள் சொன்னது உண்மை தான். இங்கு ஏதோ சுரங்கப் பாதை போலக் காணப்படுகிறது. இதை பாருங்கள்.” என்றதும், வீரர்களுடன் சேர்ந்து சிவக்கொழுந்தும் அந்த பெரிய துவாரத்தை எட்டிப் பார்த்து, “பார்த்தீர்களா?… நான் சொல்வது உண்மை என்று இப்பொழுதாவது புரிந்ததா…. இறங்குங்கள்… அங்கு யாராவது இருக்கிறார்களா என்று கண்டறியுங்கள்” என்று உற்சாகத்துடன் கைகளையும் தலையையும் ஒருசேர ஆட்டினான்.

இரு வீரர்கள் அச்சிறுபாதையில் தங்களது உடலை நுழைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். மண்ணைக் குடைந்து சென்ற அவ்வழியானது சறுக்கலை உண்டாக்கியது. வீரர்கள் தங்களைச் சுதாரித்துக் கொள்ளும் முன்னதாக இருவரையும் அப்பாதை சறுக்கிக் கொண்டு ஒரு அகலமான இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது. “தொம்…. ” என்ற சத்தத்துடன் வீரர்கள் ஒருவர் மேல் ஒருவராக விழுந்தனர். சுற்றிலும் மை இருட்டு. வந்த பாதையின் மேலே நிலவு போல அரை வெளிச்சம் உள்ளே வழிந்து கொண்டிந்தது. வீரர்களில் ஒருவன் கையிலிருந்த தீப்பந்தத்தை ஏற்றவும் அவ்விடம் ஒளியினால் பிரகாசித்தது. சுற்றும்முற்றும் பார்த்தனர். மண் கலவையாய் பூசப்பட்ட அந்த அறையினில் விதவிதமான ஆடை அலங்கார ஆபரணங்கள் சில வகை ஆயுதங்கள் என்று அவ்விடம் சிலர் தங்கியதற்கு அடையாளமாக காட்சியளித்தது. ஒரு மூலையில் மண் குப்பியிலிருந்து வெண்புகை வழிந்து கொண்டிந்தது. அநேகமாக அது அப்பொழுதுதான் ஏற்றப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்புகையின் நறுமணமானது இவர்களின் நாசிக்கு வர இரண்டு நிமிடங்கள் எடுத்துக் கொண்டது.

“ஆஹா…. ஏதோ ஒரு நல்ல நறுமணம்…” என்று மூச்சை இழுத்து விட்ட அந்த விநாடி இருவரும் தன்னிலை மறந்து மயங்கி சரிந்தனர்.

* * *

ன்று பிரதோஷம் ஆதலால் உத்திரகோசமங்கை மங்களநாதருக்கு பிரதோஷ கால வைபவம் மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இருபத்தி நான்கு வித அபிஷேகங்கள், அலங்காரஹாரத்திகள் என்று மங்களநாதர், மங்களாம்பிகாவிற்கு ஒரு விழாவாகவே அவ்வூர் மக்கள் கொண்டாடி வருவது வழக்கம்.

வேத பாடசாலை மாணவர்களால் ருத்திரங்கள் சமக்கங்கள் பாராயணம் செய்யபட்டு நமச்சிவாயா கோஷங்களுக்கு மத்தியில் சிவாசாரியாரின் கைங்கர்யத்தில் அபிஷேக அலங்காரங்கள் முடிந்ததும் சிவாச்சாரியார்கள் மங்களநாதர், மங்களேஸ்வரியை பல்லக்கில் வைத்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து பூஜையை நிறைவு செய்தனர்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

என்று திருவாசகத்தை மங்களநாதருக்கு முன் அமர்ந்தபடி ஓதுவார் நீலகண்டன் பாடிக் கொண்டிருக்க அவருடன் சேர்ந்து குயிலியும் மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தாள்.

“அடடா என்ன ஒரு தெய்வீகமான குரல். குயிலினை ஒத்த குரலால் தான் தங்களுக்கு குயிலி என்ற பெயர் வந்ததோ?”

குயிலி கண் திறந்து பார்த்தாள். எதிரே சுமன் கையில் இருந்த தாமரை இலையில் பிரசாதத்துடன் நின்று கொண்டிருந்தான். எழுந்தவள்,

“நீ எங்கே இவ்வளவு தூரம் ? தரிசனத்திற்காக உன்னை யாராவது கடத்தி வந்து விட்டார்களா?”

“இந்த முறை கடத்தி வரவில்லை இழுக்கப்பட்டு வந்தேன்.”

“புரியவில்லையே”

” பொங்கலின் நெய்மணம் என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டது.”

“நன்றாகச் சாப்பிடவும் செய்வாய் போலிருக்கிறதே, “

” மிகவும் நன்றாக” .. என்றவன் ” அதுசரி… இத்தலத்தின் சிறப்பம்சம் என்ன? ” என்றான்.

“ஒன்றா… இரண்டா சொல்வதற்கு என்னற்ற அற்புதங்களை கொண்டது இத்திருத்தலம். லங்கேஷ்வரனுக்கு மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததாம்.” என்றாள்.

“அப்படியா?” என்றான் ஆச்சர்யத்துடன்

” அது மட்டுமா? ருத்திரர் அன்னைக்கு முதன்முதலில் நடனமாடி காட்டிய இடமும் இது. மாணிக்கவாசகர் வந்து பாடிய பெருமை கொண்டது இத்தலம். இன்னொரு விசேஷம் என்னவெனில் இங்கு உள்ள மங்களநாதருக்கு தாழம்பூ ரொம்ப விசேஷம். இங்கு மரகத நடராஜர், மரகதலிங்கம், ஸ்படிக லிங்கமும் உண்டு. மரகத நடராஜருக்கு ஆருத்ரா அன்று மட்டும் தான் அபிஷேகம் நடைபெறும் மற்ற நாட்களில் சந்தனக் காப்பு மட்டுமே சாற்றப்பட்டிருக்கும் . ஆனால் தினமும் மரகதலிங்கத்திற்கும் ஸ்படிக லிங்கத்திற்கும் அபிஷேக ஆராதனை உண்டு. இங்கு வேண்டுபவர்களின் ப்ராத்தனைகள் நிறைவேறாமல் போனது இல்லை என்றே சொல்லலாம்” கண்களை அகல விரித்து, பெருமையுடன் சொல்லி கொண்டிருக்கும் குயிலியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சுமன். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் அழகான நிறம், வண்டை முழுங்கிய கெளுத்தி மீன்கள் இரண்டும் கண்களாய், குழலைப் போலக் கேசம், வெண்சிவப்புப் பெட்டியில் இருந்த முத்தை போன்ற பல் வரிசை. இவளுடன் தொடர்ந்து பேசுவதற்காக ப்ரயதனப்பட்டான்.

“அடேங்கப்பா…. இத்தனை பெருமையா இத்தலத்திற்கு…. வெளிப் பிரகாரம் உள்பிரகாரம் நாலு கால் மண்டபம் என்று இதைப் பார்ப்பதற்கே ஒரு நாள் வேண்டுமே ” என்று வேண்டுமென்றே பேச்சை வளர்த்தான்.

“இதற்கே அதிசயித்தால் எப்படி ? இதன் சிற்ப வேலைபாடுகளைப் பார்த்தீர்களா? இது எல்லாம் எங்கள் பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் செப்பனிடப்பட்டது. ” என்று அவனை கூட்டிக் கொண்டு ஒவ்வொரு சிற்பமாகக் காட்டி அதன் பெருமைகளை கூறி கொண்டு வந்தாள்.

இதென்ன இங்கு நவக்கிரங்களில் சூரியன் சந்திரன் செவ்வாய் மட்டுமே உள்ளது. இதற்கும் வரலாறு உண்டா?

” நன்றாக கேட்டீர்கள்… இங்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாறு உண்டு. நவக்கிரஹங்கள் தோன்றும் முன்னதாக இத்தலத்தில் ஈசன் அவதரித்ததால் மற்றவை அங்கீகரிக்கப்படவில்லை. அது மட்டுமா.. மரகத நடராஜருக்கும் ஒரு வரலாறு உண்டு.” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுது, சிவாச்சாரியார் குயிலியிடம் வந்தார்.

“அம்மா… இன்று இளவரசி வராதது சற்றே ஏமாற்றம் தான் .இருப்பினும் அவர்களின் பேருதவியால் இத்திருதலத்தில் நடராஜருக்கு ஆறு கால பூஜையும் எந்த குறையுமில்லமல் சிறப்பாக நடந்து வருவது மிகவும் சந்தோஷம். இந்த ப்ரசாதத்தை அரண்மனையில் சேர்த்து விடும்மா. அப்புறம் இந்த வார உழவாரப் பணி இருக்கிறது. அதையும் இளவரசியிடம் நினைவுபடுத்து”

“ஆகட்டும் ஐயா … பூஜைக்கு ஏதேனும் பொருட்கள் தேவைப்பட்டால் சொல்லி அனுப்புங்கள். ” என்றபடி ப்ரசாதத் தட்டை வாங்கி கொண்டு சுமனுடன் சேர்ந்து நடந்தாள்.

“ஆஹா… உண்மையிலேயே நீங்கள் பாக்கியசாலிகள் தான். சோழ நாட்டு அரசர்களை காட்டிலும் பாளையக்காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் அடடா….” என்று இருவரும் பேசிக் கொண்டு அங்கிருந்த தடாகப் படிக்கட்டில் வந்து அமர்ந்தார்கள்.

• • •

காலில் கத்திகுத்தப்பட்ட காயத்துடன் குதிரையில் ஏறித் தப்பித்த குவிரன் நேராகத் தனது இருப்பிடமான பாதாளக் குகைக்கு வந்தான். அங்கு மூலையில் ஓர் உருவம் முனங்கியபடி படுத்திருந்தது ஏற்றி வைத்திருந்த தீப ஒளியில் நன்கு தெரிந்தது. குவிரனை பார்த்ததும் திறந்த அவ்வுருவத்தின் கண்கள் நீண்ட நாள் கொலைவெறி ஆசையை அடக்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. வெளுத்து அடர்ந்த மீசை அவரின் ஆக்ரோஷத்தை காட்டியது. உடலில் இருந்த பல புதிய, பழைய வடுக்கள் அவர் பல போர்களில் பங்கு பெற்றதை காட்டியது.

ஆம்… நீங்கள் நினைத்தது சரிதான். நோய்வாய்பட்டு எழுந்து நடக்க முடியாமல் கிடந்த அந்த உருவம் வேறு யாரும் அல்ல…. சாட்சாத் பவானி சங்கரதேவர் தான். குவிரனை பார்த்த அவர் பேராசையுடன் “என்ன..? போன காரியம் வெற்றியா? ” என்று கேட்டார் .

“இல்லை. சற்றுப் பிசகி விட்டது. என் குறி தப்பவில்லை. ஆனால் எப்பொழுதும் நல்ல நேரம் அவர்களை காப்பாற்றாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மேலே குதிரைகளின் காலடி ஓசையும் வீரர்கள் சலசலப்பும் கேட்டதும், “அரசரே ஆபத்து நம்மை சூழ்ந்துள்ளது. உடனடியாக நாம் இங்கிருந்து தப்பித்து செல்ல வேண்டும். என்னுடன் வாருங்கள்” என்று சிறிதும் தாமதிக்காமல் குவிரன் பவானியைத் தூக்கி மேலே கிடத்திக் கொண்டான்.

ஏற்கனவே தயாராக மண் குடுவையில் சேர்த்து வைத்திருந்த மூலிகையைப் பற்ற வைத்து விட்டு, “சாகட்டும்” என்று கூறிக் கிளம்பினான்.

–தொடரும்…

5ஆம் அத்தியாயம்…

ganesh

1 Comment

  • நம்மவர்களின் பங்காளிச்சண்டை அந்நியர்களுக்கு வசதியாகப் போய்விட்டது போலும்! விறுவிறுப்பாகச்செல்கிறது! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...