தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 14 | தனுஜா ஜெயராமன்

 தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 14 | தனுஜா ஜெயராமன்

காரை நிதானமாக உள்ளே செலுத்தி கிளவுட் 9 ஆஸ்பிடலுக்குள் நுழைந்தான் முகேஷ்.

ரிசப்ஷனில் சென்று விசாரிக்க, பையனின் பெயரைக் கேட்டார்கள். அப்போது தான் நினைவிற்கு வந்தது அவசரத்தில் அந்த பையனின் பெயரை கூட இதுவரை கேட்டு கொள்ளவில்லையே என உறைத்தது. அம்ரிதாவை தொடர்பு கொண்டு கேட்டான். “ரித்திஷ்” என சொல்லிவிட்டு அறை எண் 152 ல் நுழைந்தான்.

“பரவாயில்லையே வரமாட்டேன்னு நினைச்சேன்… வந்துட்டியே!…” என்றாள் அம்ரிதா நக்கலாக…

பதிலேதும் சொல்லாமல்….”என்ன ஆச்சி …எதுக்கு என்னை கூப்ட்டே” என கடுகடுத்தான்..

சிரித்துக்கொண்டே “தானாடா விட்டாலும் தன் சதை ஆடும்பாங்க…அது இது தான் போல” என்றாள் அலட்சியமாக . “படிக்கட்டில் இருந்து தவறி விழுந்திட்டான்… மயக்கமானதால இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்.. பயப்பட ஒண்ணுமில்லைன்னு டாக்டர் சொல்லிவிட்டார்” என்றாள் அதே அலட்சியத்துடன்…

கடுப்பினை அடக்கி கொண்டு அமைதியாக நின்றான். அசோக் இங்கே வரச் சொல்லாவிட்டால் தான் இதை எல்லாம் கேட்டிருக்க வேண்டிய தலையெழுத்தே இல்லையே என தோன்றியது. எப்படியாவது டி.என்.ஏ விற்கு சாம்பிளை கலெக்ட் செய்து விட வேண்டும் என்று மனது எச்சரிக்கை செய்தது.

“கேஷ் கட்டணும்…… என்கிட்ட காசில்லை” என்றாள்…

“அதானே பார்த்தேன்… எதுனாலும் காரியத்துல கண்ணாக இருப்பியே” என மனதுக்குள் தோன்றிய எரிச்சலை அடக்கி கொண்டு… “எவ்வளவு வேணும்?…என்றான்.

“பத்தாயிரம் மொதல்ல கட்டணுமாம்…மீதியை அப்புறம் பாத்துக்கலாம்னாங்க”

நல்லவேளை கிளம்பும்போதே எடிஎம்மில் கேஷ் எடுத்து வந்தான். அப்போது தான் இவளை பணத்தை கொடுத்து வெளியே அனுப்ப வசதியாக இருக்கும். கார்ட் எனில் ஸ்வைப் செய்ய தானே போக வேண்டி வரும் என முன்ஜாக்ரதையாய் யோசனை செய்து வந்தது நல்லதாக போய்விட்டது. முகேஷ் பணத்தை பாக்கெட்டிலிருந்து எடுத்து நீட்ட…

அலட்சியமாக, “நீயே கவுண்டரில் கட்டிடேன்” என்றாள் அம்ரிதா..

அவளை மறுத்து… “ஏதாவது டீடெயில்ஸ் கேப்பாங்க… எனக்கு ஒண்ணும் தெரியாது… நீயே போ” என்றான் கடுமையாக முகத்தை வைத்துக்கொண்டு….

“சரி… நீ இங்கேயே இருந்து குழந்தை தூங்குறான், பாத்துக்க. வந்துடுறேன்”… என அம்ரிதா கிளம்ப அப்பாடா மனது சற்று நிம்மதியானது.

அம்ரிதா பணத்துடன் வெளியேற…

அசோக் சொல்லியது நினைவுக்கு வந்தது. டி.என்.ஏ சோதனைக்கு இரத்தமாதிரி , தலைமுடி அல்லது கன்னத்தின் உட்புற செல்கள் என ஏதாவது வேண்டும் என்று சொல்லியிருந்தார். இப்போதைக்கு ஈஸியாக கலெக்ட் செய்ய முடிவது தலைமுடியே என்று தோன்றியது.

தூங்கிய குழந்தையை பார்த்தான். கால்களை மடக்கி தலையின் மேல் கைவைத்து கொண்டு அசந்து தூங்கி கொண்டிருந்தான். தான் கூட இப்படி தூங்குவதாக அம்மா கிண்டல் செய்தது தேவையற்று நினைவில் வந்து போனது…”ச்சே” என தனது தலையில் தானே அடித்துக்கொண்டு மெதுவாக குழந்தையின் ஒற்றைத் தலைமுடியைப் பிடித்து இழுத்தான்…

சிறிய முடியாக இருந்ததால் சட்டென வர மறுத்தது .குழந்தை சிணுங்கியவாறு திரும்பி படுக்க…

வெளியே ஏதோ சத்தம் கேட்க… அம்ரிதாவோ என திரும்ப… சத்தம் வேறு எங்கிருந்தோ வந்திருக்கிறது.. நிச்சயமாக நேரமில்லை. எந்த நேரமும் அம்ரிதா பணத்தை கட்டிவிட்டு திரும்பி வரக்கூடும்.. வேறுவழியின்றி வேகமாக ஒற்றை தலைமுடியைப் பிடித்து இழுத்தான்.. கையோடு வந்தது. வலி தாங்காமல் சிணுங்கி அழுதபடி கண்களை திறந்தவன் விழித்தான் சிறுவன்..

முகேஷ் அவசரமாகத் தலைமுடிகளை தான் கொண்டு வந்திருந்த ப்ளாஸ்டிக் கவரில் பத்திரபடுத்தினான்.. சட்டென சட்டை பாக்கெட்டில் சொருகி வைத்தான்.

இவன் வந்த வேலையை முடிக்கவும், அம்ரிதா பணத்தை கட்டிவிட்டு வரவும் சரியாக இருந்தது.

” என்னடா செல்லம் எழுந்திட்டயா?” என அம்ரிதா உள்ளே நுழைய…

அப்பாடா!.. என இருந்தது முகேஷிற்கு…வந்த வேலை முடிந்தது..

“சரி நான் கிளம்பறேன்” என்றான் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு…

“ஏன்…இப்ப தானே வந்தே…என்ன அவசரம்?” என அம்ரிதா கைகளை பிடித்தாள்…

வெடுக்கென்று கைகளை உதறிவிட்டு.. “வரேன்…” என பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக நடந்து வெளியே வந்தான்.

கோபத்துடன் காரை கிளப்பி ஆஸ்பிடலை விட்டு வெளியேறியவன்… பாக்கெட்டை தொட்டுப் பார்த்து உறுதி செய்து கொண்டான். சற்று நிம்மதியாக இருந்தது. தன் தலையெழுத்து அதில் இருப்பதாக எண்ணியவன், இதை நாளைக்குள் அசோக்கிடம் தந்துவிடவேண்டும். ரிப்போர்ட் வரட்டும் அவளுக்கு அப்புறம் இருக்கு சேதி … என மனதுக்குள் கருவினான். ரிப்போர்ட் வந்ததும் கடுமையாக எச்சரித்து விட்டுஅம்ரிதா இருக்கும் திசைக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஒடவேண்டும் என்று நினத்தான்.

ஏற்கனவே நேரமாகி விட்டது.. சுதா காத்திருப்பாள் என நினைவுக்கு வர வேகமாக காரை செலுத்தினான்.

“ஏங்க!… இவ்ளோ நேரம்.. முகம் கைகால் கழுவிட்டு வாங்க, சாப்பிடலாம்”

சட்டையை கழற்றி கட்டிலில் எறிந்து விட்டு… பாத்ரூமில் நுழைந்து ப்ரஷ்அப் ஆகி வெளியேவர… சுதா சட்டையை அழுக்கு துணியோடு சேர்த்து லாண்டரி பேஸ்கட்டில் போட..

பதறியவனாக ஒடிவந்தவன்.. “சுதா அந்த சட்டையை குடேன்” என்றான் பதட்டத்துடன்..

“ஏங்க… ரொம்ப அழுக்கா இருக்கு.. துவைக்க போடுறேன்”..

“இ..ல்..ல சுதா… காலையில தான் போட்டேன்.. நாளைக்கு துவையேன்”…என பிடுங்காத குறையாக வாங்கி கொண்டான்…

‘இது என்ன புதுபழக்கம்… தோய்க்காத சட்டையை மறுநாள் போட மாட்டானே’ என மனதுக்குள் தோன்ற.… “ரொம்ப மாறிட்டீங்க” என ஒரு மாதிரியாக பார்த்து விட்டு போனாள்…

மறுபடியும் ஸ்…அப்பாடா!… என்றிருந்தது. சுதா போனதும் அவசர அவரசமாக பாக்கெட்டில் தேடி அதனை எடுத்து வேறு இடத்தில் பத்திரப்படுத்தினான். நாளை முதல்வேலையாக அசோக்கிடம் கொடுத்துவிட வேண்டும்..

றுநாள் அசோக்கை சந்தித்து தலைமுடி சாம்பிளை அளித்தான்.

“நல்லதா போச்சி.. நான் லேபுக்கு அனுப்பிடுறேன்.. ரிப்போர்ட் வந்ததும் உங்களுக்கு தரேன்… இதை எப்படி கலெக்ட் பண்றதுன்னு ஒரே யோசனையா இருந்தது. நேத்து நீங்க விஷயத்தை சொன்னதும்… டக்குன்னு தோணிச்சி… அதான் உங்களை உடனே போக சொன்னேன்.. இப்ப விஷயம் ரொம்ப சுலபமாகிடுச்சே”…என்று சிரித்தார் அசோக்.

“சார்!.. ரிப்போர்ட் எப்ப கிடைக்கும்?”

“ஒரு வாரத்துல வந்திரும்…”

“அவ்ளோ நாளாகுமா?” என்றான் கவலையுடன்…

“உங்க அவசரம் புரியது.. இருந்தாலும் அவங்களுக்கும் நேரம் வேண்டாமா..?” என சிரித்த அசோக், “கவலைபடாதீங்க… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ பண்ணி தர சொல்றேன்”..

“நான் இந்த ரிப்போர்டை நம்பி தான் சார் இருக்கேன்… சீக்கிரம் வந்தா நிம்மதியா இருக்கலாம்னு ஒரு ஆர்வந்தான், வேற ஒண்ணுமில்லை” என நம்பிக்கையாக சொல்லிவிட்டு கிளம்பினான்.

ங்கிருந்து கிளம்பி நேராக விட்டு வந்ததும் ஹரிஷின் போன்…

“என்னடா… எதாவது முன்னேற்றம் இருக்கா?” என விசாரித்தான்

டிஎன்ஏ சாம்பிளை எடுத்து அசோக்கிடம் கொடுத்ததை சொன்னான்..

“ செம்மை.. நல்லவேலை பண்ண.. இனி என்ன… சுலபமா விஷயம் முடிஞ்சிரும்…”

“அதாண்டா எனக்கும் வேணும்…”

“நீ வேணா பாரு ரிப்போர்ட் உனக்கு சாதகமாக தான் இருக்கும்…”

“நானும் அதை தான் வேண்டிகிட்டிருக்கேன்… இந்த ப்ரச்சனை சுமுகமாக முடிஞ்சா குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோட போய் மொட்டை போடுறதா வேண்டியிருக்கேன்..” என்றான் முகேஷ்.

“எல்லாம் நல்லபடியா முடியும்டா…” என போனை வைத்தான்.

போனை வைப்பதற்குள் அம்ரிதாவின் மிஸ்டுகால்…வெளியே எட்டி பார்த்தான்.. சுதாவும் அம்மாவும் சமையலறையில் பிஸியாக இருக்க… அப்பா குழந்தையுடன் ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்தது கேட்டது..

நைஸாக போனை எடுத்துக்கொண்டு மாடியேற… அப்பா, “எங்க போறடா..?” என கேட்டார்..

“சிக்னல் வரலைப்பா… அதான் மாடிக்கு…” என இளித்து வைத்தான்..

“டேய்… மாடிக் கதவு பூட்டியிருக்கு.. சாவியை எடுத்துட்டு போடா..” என்றார் கண்களை எடுக்காமல் டிவியை பார்த்துக்கொண்டே…

“சரிப்பா!…” என்றவன் மாடி சாவியை எடுத்துக்கொண்டு ஓடினான்…

அம்ரிதாவின் போனை அட்டெண்ட் செய்து… “என்ன வேணும் உனக்கு இப்ப? எதுக்கு போன் செய்த?” என்றான் கோபத்துடன்…

“சும்மா ஏன் கத்துற முகேஷ்? கத்தாதே! எனக்குப் பிடிக்காது..நான் கத்துனா என்ன ஆகும் தெரியுமா?” என்றாள்.

முகேஷ் சற்று அமைதியாக இருக்க… அவளே தொடர்ந்தாள்.

“குழந்தைக்கு எதுவும் ப்ரச்சனையில்லை.. நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணுறேன்னு சொல்லிட்டார் டாக்டர்.. ”

“ஆமா… இப்ப அதை ஏன் என்கிட்ட சொல்லுற நீ?” என்றான் தாழ்ந்த குரலில்…

“உன்கிட்ட சொல்லாம? குழந்தைக்கு அப்பா நீ தானே!…பின்ன உங்கிட்ட சொல்லாம உங்கப்பாகிட்டயா சொல்லமுடியும்”… என்றாள் எகத்தாளமாக..

கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டு… “அம்ரிதா… என்னை இரிடேட் பண்ணாத.. நானே செம்ம கடுப்புல இருக்கேன்..”இப்ப உனக்கென்ன வேணும்.. அதைச்சொல்லிட்டு போனை வைச்சிடு”…

“நான் உங்கிட்ட வேற என்ன கேக்கப்போறேன்..? பணம் தான்…நாளைக்கு வந்து ஆஸ்பிட்டல் பில்லை செட்டில் பண்ணு”…

“ஓக்கே…”

“அப்ப காலையில் ஆஸ்பிட்டலுக்கு வந்துரு”..

“இங்க பாரு அம்ரிதா.. என்னால அங்கெல்லாம் வரமுடியாது.. எனக்கு நிறைய வேலையிருக்கு”.

“அப்ப பணம்”…

“நீ நாளைக்கு எவ்வளவு கட்டணும்னு மெசேஜ் அனுப்பு… நான் பணம் அனுப்பறேன்… இப்ப போனை வைக்கறியா? “

“ஓக்கே!… ஆனா நீ இன்னும் நான் கேட்ட பணத்தை தரலை..அது ஞாபகம் இருக்கா..?”

“அம்ரிதா! .. ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் டைம் குடு… எப்படியாவது பணத்தை பொரட்டி தரேன்”…

“இது தான் நான் உனக்கு கடைசியா சொல்லுறது முகேஷ் … இன்னும் ஒரு வாரத்துல நீ எனக்கு பணம் தரலைன்னா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.. சொல்லிட்டேன்.. அப்புறம் வருத்தப்படாத.. ஆமாம்”

போன் வைத்தும் ஆத்திரம் தீரவில்லை… பணம்! பணம்! பணம்! அம்ரிதாவை அப்படியே கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும் என்று தோன்றியது…

கீழேயிருந்து சுதா குரல் கொடுக்க… ஆத்திரத்தை தற்காலிகமாக அடக்கிக்கொண்டு இறங்கி வந்தான்.

எல்லோரோடும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு… அம்ரிதா பற்றிய கவலைகளை சற்று ஒதுக்கி தூங்க நினைத்தான்.. ஆனால்

அசோக்கிடம் தந்த சாம்பிள் ரிப்போர்ட் எப்போது வரும்? அது தனக்கு சாதகமாக இருக்குமா? ஒரு வாரத்திற்குள் பணம் தராவிட்டால் மோசமான விளைவு என அம்ரிதா மிரட்டுகிறாள்! பணத்தை அவளுக்கு தந்தே ஆகவேண்டுமா? அதற்குள் பிரச்சனைகள் தீருமா? என யோசித்தவாறு விழித்துக் கிடந்தான்.

முகேஷ் நம்பிக்கையுடன் காத்துக்கிடக்க… விதி வேறு வேறு ரூபங்களில் அடுத்தடுத்து அதிர்ச்சி தர காத்து நிற்கிறதே! என்ன செய்வது!!

–தொடரும்…

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...