அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

 அவ(ள்)தாரம் | 17 | தேவிபாலா

வாசுகி அங்கிருந்தே க்ருஷ்ணாவுக்கு ஃபோன் செய்து, அழுது கொண்டே விவரம் சொல்ல, க்ருஷ்ணா துடித்துப் போனான்!

“நீ உடனே வீட்டுக்கு வா! என்ன செய்யலாம்னு உடனே நடவடிக்கை எடுக்கணும்! சீக்கிரம் வா!”

அரை மணி நேரத்தில் இருவரும் வீட்டுக்கு வர, வாசுகி கதறி அழுது, “ குழந்தைக்கு ஏதாவது ஆபத்துனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்!”

“ இதப்பாரு இப்ப டயலாக்ஸ் முக்கியமில்லை! உடனடியா போலீஸ்ல புகார் தரணும்! குழந்தையை யாரோ கடத்தியிருக்காங்கனு தோணுது எனக்கு!”

“என்ன சொல்றீங்க? நம்ம குழந்தையை கடத்தி யாருக்கு என்ன லாபம்? நாம ஒண்ணும் கோடீஸ்வர குடும்பம் இல்லையே? யாரு நமக்கு பகை? நீங்க வேலை பாக்கற இடத்துல யாராவது எதிரிகள் இருக்காங்களா?”

“ அந்த மாதிரி எதிரிகள் யாரும் இல்லை வாசுகி! என் மனசுல பட்டதை நான் சொல்றேன்! பூதம், பெண் கேட்டு வந்தும், அவருக்கு மருமகளா வாழ முடியாதுன்னு பாரதி சொல்லிட்டா! அருள் அவனோட அப்பா பக்கம் எப்பவுமே இல்லை! அவன் பாரதிக்கு ஆதரவு! அதனால நம்ம குழந்தை கடத்தல்ல பூதத்துக்கு பெரும் பங்கு இருக்கும்னு எனக்கு தோணுது!”

“ இந்த பாரதி அவரைத் தொடர்ந்து எதிர்க்கும் போதே எனக்கு கலவரம் தான்! இவளோட வீராவேசத்துக்கு நம்ம குழந்தையா பலியாகணும்?”

“ அவசரப்படாதே! இது என் அனுமானம் தான்! நாம இப்ப எடுக்க வேண்டிய நடவடிக்கை முக்கியம்!”

“ உங்களுக்கு போலீஸ்ல யாரை தெரியும்?”

“ ஐ.ஜியை எங்க எம். டிக்கு நல்லா பழக்கம் உண்டு! இப்பவே நான் பேசறேன்!”

க்ருஷ்ணா, ஃபோனை எடுத்து டயல் செய்ய, வாசுகி பூஜை அறையில் போய் உட்கார்ந்து விட்டாள்.

அதே நேரம், அருள் பைக், பாரதி வீட்டு வாசலில் நின்றது! சிதம்பரத்துடன் அருள் இறங்கி உள்ளே வர, பாரதிக்கு அவன் தகவல் தந்திருந்த படியால் அவளும் வந்து சேர்ந்தாள்! சின்னவள் மேகலாவும் இருக்க, சிதம்பரம், தான் வாலன்டரி ரிடையர்மெண்ட் வாங்கியதைச் சொல்ல,

“ எதுக்குங்க இந்த ஓய்வு? முதலாளி சம்மதிக்க மாட்டாரே?”

“ அம்மா! நான் தான் சாரை இந்த முடிவுக்கு தூண்டினேன்! சாரோட முழு செட்டில்மென்டும் வந்தாச்சு! செக்கை அம்மா கையில குடுங்க சார்!”

சிதம்பரம் தர, கௌசல்யா அதை பார்த்தாள்.

“பதினஞ்சு லட்சமா? நீங்க இத்தனை வருஷம் உழைச்சதுக்கு இவ்ளோதானா?

“நல்லா பாரும்மா! ஒரு பூஜ்யத்தை விட்டுட்டியே! ஒண்ணரை கோடி! எழுத்தை படி!”

அம்மா வாய் பிளந்தாள்!

“தங்கமான முதலாளி! எத்தனை பெரிய தொகை? நம்ம ரெண்டு பொண்ணுகளையும் கரையேத்திடலாம்!”

பாரதி எதுவும் பேசாமல் நின்றாள்!

“உடனே நான் வாசுகிக்கு ஃபோன் போட்டு இப்பவே விவரம் சொல்றேன்! அவ சந்தோஷப்படுவா!”

பாரதி வாசலுக்கு வர, அருள் பின் பற்றி வந்தான்!

“என்னால நம்ப முடியலை அருள்! இதுல என்ன உள் குத்து இருக்கு?”

“அதை அப்புறமா நான் உனக்கு சொல்றேன்! பூதத்துக்கு எதிரா ஒரு பெரிய துருப்பு சீட்டை உங்கப்பா எடுத்து போட்டார்! அதை சாருக்கு தந்தது நான்! அது பெரிய அணு குண்டா பூதத்துக்கு மேல விழ, வேற வழியில்லாம பூதம் உங்கப்பாவை ஒழுங்கா விடுவிக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கு!”

“அவருக்கு இந்த மிரட்டல் பெரிய தோல்வி இல்லையா? அவர் ஒரு க்ரிமினல்! எங்களை சும்மா விடுவாரா?”

“ஒண்ணும் செய்ய முடியாது! அப்பேர்ப்பட்ட பாம் அது! நீ ரெடியாகு! அந்த செக்கை பேங்க்ல போட்டுட்டு, நாம வெளில போகலாம்! நான் உனக்கு எல்லாம் சொல்றேன்!”

இருவரும் உள்ளே வந்தார்கள்!

“இந்த வாசுகி ஃபோனை எடுக்கவே மாட்டேங்கறாளே! ஏன்?”

“விடும்மா! அக்காவுக்கு ஒரு நாள் தள்ளி சொன்னா போதாதா?”

“சார்! செக்கை குடுங்க! நானும் பாரதியும் அதை உங்க கணக்குல சேர்த்துட்டு, கொஞ்சம் வெளி வேலைளை முடிச்சிட்டு வர்றோம்!”

“அருள் தம்பி, கொஞ்சம் இருங்க! கௌசல்யா! அடுத்த நல்ல முகூர்த்தம் பாரு!”

“எதுக்குங்க?”

“பாரதிக்கும், அருளுக்கும் அம்மன் கோயில்ல வச்சு கல்யாணம்!”

“என்ன பேசறீங்க? முதலாளி இதுக்கு சம்மதிப்பாரா? உங்களை நல்ல படியா பெரிய தொகை தந்து வீட்டுக்கு கௌரவமா அனுப்பியிருக்கார்! அவர் மருமகளா, அவரோட பங்களாவுக்கு பாரதி வந்து வாக்கப்படணும்னு விரும்பித்தான் நம்ம வீடு தேடி வந்து பெண் கேட்டார்! அதையும் எதிர்த்து, கோயில்ல கல்யாணம் நடத்தி, அடுத்த அவமானத்தை அவருக்கு தேடி தரப்போறீங்களா? உங்களுக்கு ஏன் இப்படி புத்தி கெட்டு போயிருக்கு?”

“கௌசல்யா! நான் தப்பான முடிவை ஒரு நாளும் எடுக்க மாட்டேன்! இந்த ஓய்வு கூட என் பொண்ணுங்க நல்வாழ்க்கையை மனசுல வச்சு எடுத்த முடிவு தான்! இந்த குடும்பம் வாழத்தான் நான் எல்லாம் செய்யறேன்!”

இதை திரும்பி நின்று சொல்லும் போது அவர் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது! அதை அவசரமாக அவர் துடைக்க, முன் பக்கம் தற்செயலாக வந்த பாரதி, அதை பார்த்து விட்டாள்! அப்பா கண் கலங்கி பாரதி பார்த்ததில்லை!

இந்த பணி ஓய்வும், அவசரமாக முகூர்த்தம் பார்த்தலும் நல்ல சிந்தனையாக இருந்தாலும் பின்னணியில் அப்பாவால் சொல்ல முடியாத ஏதோ ஒன்று இருப்பது மட்டும் பாரதிக்கு சுருக்கென குத்தியது!

“அம்மா! நீ அப்பாவை எதிர்த்து நோகடிக்காதே! அப்பா என்ன செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்! அதை நீ புரிஞ்சுக்கோ!”

“ கொஞ்ச நாளா நீ ஆடற ஆட்டம் தாங்கலை! அதுக்கு உங்கப்பா பக்கபலமா இருக்கார்! இது எங்கே கொண்டு போய் விடும்னு எனக்கு புரியலை! முகூர்த்தம் பாக்கறதுக்கு வாசுகி வேணும்! அவ நம்ம மூத்த பொண்ணு! அவளை கலக்காம நான் எதுவும் செய்ய மாட்டேன்!”

அம்மா மறுபடியும் முயற்சி செய்ய, க்ருஷ்ணா எடுத்தான்!

“மாப்ளே! வாசுகி வெளில போயிருக்காளா?”

சின்ன இடைவெளியில் ஃபோனை வாங்கிய வாசுகி கதறி அழ,

“ஏண்டீ வாசுகி அழற? என்னாச்சு?”

“அம்மா! நம்ம நிஷாவை கூட்டிட்டு வர பள்ளிக்கூடம் போனேன்மா!” என ஆரம்பித்து வாசுகி அழுது கொண்டே சகலமும் சொல்ல, “கடவுளே! குழந்தையை கடத்திட்டாங்களா? யாரது?”

அம்மா கேட்ட நொடியில் வாசல் வரை போன அருள் விசுக்கென திரும்பினான்.

“அம்மா! க்ருஷ்ணா கிட்ட ஃபோனை தரச்சொல்லுங்க!”

ஃபோன் கை மாற, க்ருஷ்ணா சகல விவரங்களையும் அருளிடம் சொல்லி, தான் அதிகாரி மூலம் போலீஸ் உயர் அதிகாரியிடம் புகார் தந்ததாக சொல்ல,

“நீங்க ரெண்டு பேரும் உடனே புறப்பட்டு சிதம்பரம் மாமா வீட்டுக்கு வாங்க! இதோட வேர் என்னானு நான் சொல்றேன்!”

அரை மணியில் க்ருஷ்ணா, வாசுகி இருவரும் சிதம்பரம் வீட்டில் இருக்க, வாசுகி அம்மாவை கட்டிக்கொண்டு கதற,

“அழறதை நிறுத்துங்க வாசுகி! நாம பல விஷயங்களை இப்ப உடைச்சு பேசியாகணும்! உங்க குழந்தையை ஆள் வச்சு கடத்தினது நிச்சயமா எங்கப்பா வேலை தான்!”

“ஏன் தம்பி முதலாளி மேல அபாண்டமா பழி சுமத்தறீங்க?”

“அம்மா! நீ கொஞ்சம் பேசாம இரு!”

பாரதி அதட்ட, சிதம்பரம் தன் ரிடையர்மென்ட் விவரம் சொல்லி, க்ருஷ்ணாவிடம் காசோலையை காட்ட,

“ஒரு பெரிய மனுஷன் எத்தனை தான் அவமானம் தாங்குவார்? இவ அவருக்கு மருமகளா பங்களா வாசம் வேண்டாம்னு முகத்துல அடிக்கறா! நீங்க பலவந்தமா ரிடையர்மென்ட் வாங்கிட்டு வந்து நிக்கறீங்க! என்னப்பா இது?”

“அது மட்டுமில்லை வாசுகி! அடுத்த முகூர்த்தத்துல கோயில்ல வச்சு அருளுக்கும் பாரதிக்கும் கல்யாணம் நடத்த உங்கப்பா முடிவு செஞ்சிருக்கார்! பாரதி இவர் மகளா இருக்கலாம்! ஆனா அருள் அவர் மகன்! தாங்குவாரா?”

“அதனால குழந்தையை கடத்திட்டாரா?” க்ருஷ்ணா கேட்க,

“ யாரும் எங்கப்பாவை சப்போர்ட் பண்ண வேண்டாம்! பாரதியை தன் கம்பெனிக்கு கொண்டு வர, அவ மேல திருட்டு பழி சுமத்தினவர்! அவளைக் கொல்ல அடியாட்களை வச்சவர்! மேகலாவைக் கடத்தி யாருக்கோ விக்கப் பார்த்தவரும் அவர் தான்! இப்ப குழந்தைக் கடத்தல்! இத்தனை க்ரிமினல் வேலைகளை செஞ்சவர் நல்லவரா? ஏன் கோடிக்கணக்கான சொத்துக்கள் வேண்டாம், பதவி வேண்டாம், பூதத்தோட மகன்னு ஒரு விலாசம் எனக்கு வேண்டாம்னு நான் ஒதுங்கியிருக்கேன்? பாரதி என்னை புரிஞ்சுகிட்ட அளவுக்கு நீங்க யாரும் புரிஞ்சுகக்லையே?”

அருள் ஆவேசமாக பேச, குடும்பமே ஸ்தம்பித்தது!

“ அப்படி அவருக்கு எங்க மேல என்ன கோபம்? இந்த குடும்பத்துக்கு இப்ப வரைக்கும் அவர் நல்லதைத்தானே செய்யறார்?”

“ இல்லை வாசுகி! அவருக்குப் பல முகங்கள் உண்டு! அது சிதம்பரம் சாருக்கு தெரியும்! எனக்கும் தெரியும்! இப்ப பாரதிக்கும் தெரியுது!”

“எனக்கும் தெரியும் அருள்!” க்ருஷ்ணா சொல்ல,

“அப்பா! நீங்க திரும்ப வேலைக்கு போனாத்தான் என் குழந்தை கைக்கு கிடைக்கும்னா, நீங்க போயிடுங்கப்பா!”

“இல்லை வாசுகி! எந்த வழில போனா குழந்தை நம்ம கைக்கு வரும்னு எனக்கு தெரியும்! ஒரு சின்ன கீறல் கூட குழந்தை ஒடம்புல விழாம அதை நான் உங்க கிட்ட ஒப்படைக்கறேன்! நீ என்னோட வா பாரதி!”

இரண்டு பேரும் வேகமாக புறப்பட்டார்கள்.

அந்த பிரபலமான ஆஸ்பத்திரி வாசலில் பூதத்தின் கார் வந்து நின்றது! அவர் இறங்கி வர, அவரது அல்லக்கைகள் இரண்டு கூடவே வந்தது! பூதம் வருவது தெரிந்து, தலைமை டாக்டர் ஓடி வந்து வரவேற்றார்! தன் அறைக்கு அழைத்து போய் உட்கார வைத்தார்!

“அந்த குழந்தை எப்படி இருக்கு இப்ப?”

“உங்க ஆட்கள் குடுத்த மயக்க மருந்து ஓவர் டோஸ்! அது ஆறு வயசு குழந்தை! தாங்கலை!”

“இப்ப அது உயிரோட இருக்கா? இல்லையா?”

“கொஞ்சம் க்ரிட்டிகல் கண்டிஷன் தான்! அவசர சிகிச்சை பிரிவுல வச்சிருக்கோம்! மீட்ரலாம்!”

“எத்தனை செலவானாலும் பரவால்லை! அது சாகக்கூடாது! மடையனுங்க! லேசா மயங்க வச்சா போதும்னு சொன்னேன்! அதிகமா குடுத்துட்டாங்க!”

அந்த டாக்டர் முகத்தில் கலவரம் தெரிந்தது!

“சார்! எண்பது சதவீதமும் இது நியாயமா நடக்கற மருத்துவமனை தான்! உங்க தயவால தொடங்கப்பட்ட காரணமா, சில க்ரிமினல் வேலைகளுக்கு நான் உடன்படறேன்! என்னை மாட்டி விட்ராதீங்க சார்!”

“டாக்டரே! போலீஸ் கூட நம்ம கையில தான்! உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது! தைரியமா இருங்க!”

அதற்குள் சக டாக்டர் ஒருவர் வந்து, “அந்த குழந்தைக்கு உயிருக்கு ஆபத்து இல்லை! சீக்கிரம் நினைவு திரும்பிடும்!”

பூதம் வெளியே வர, அந்தப் பெண், வயதான ஒரு பெண்மணியை கை பிடித்து அழைத்தபடி நடந்து வர, அந்தப் பெண் அழகாக இருந்தாள். பூதம் நாசூக்காக அவளை அளவெடுத்தார்! அவர் எதிர் பார்த்த சகல அம்சங்களும் அவளிடம் இருக்க, தன் வலது கையை அருகில் வரச்சொன்னார்!

“ அந்தப் பொண்ணைக் கவனி! அவளைப்பற்றின சகல தகவல்களும் இன்னிக்கு ராத்திரி எட்டு மணிக்குள்ள என் டேபிளுக்கு வரணும்! ஒரு விவரம் கூட மிஸ் பண்ணக்கூடாது! புரியுதா? விநாயக்ராம் கேக்கற அம்சங்கள் எல்லாம் இவ கிட்ட இருக்கு! இவளை வச்சு பெரிய கான்ட்ராக்டை நான் மடக்கணும்! கவனமா தகவல்களை சேகரி! அவளை இப்பவே ஃபோட்டோ எடுத்து என் வாட்ஸ் அப்புக்கு அனுப்பு!”

அம்மாவை ஷுகர் டெஸ்ட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் அந்த பெண்! அம்மாவை நர்ஸ் உள்ளே அழைத்து போக, இவள் வெளியே காத்திருக்க, பூதத்தின் அடியாள், அழகான கோணங்களில் அவளே அறியாமல் அவளை மொபைலில் சிறை பிடிக்க, பூதம் புறப்பட்டு போக,

உள்ளேயிருந்த குழந்தை நிஷாவுக்கு நினைவு திரும்பி விட்டது! அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் என அவளை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து போக, நிஷா ஆயிரம் கேள்விகள் கேட்க, அவள் மூக்கில் கைக்குட்டை வைத்து அழுத்தும் வரை அவள் நினைவில் இருந்தது! இப்போது முழுமையாக நினைவுக்கு வர, தான் ஆபத்தில் இருக்கிறோம் என புரிந்து விட்டது! கூட இருந்த நர்ஸ் சுவாரசியமாக செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்க, நிஷா மெல்ல வந்து வெளியே எட்டி பார்த்தது! சற்று தூரத்தில் அம்மாவை சர்க்கரை பரிசோதனைக்கு அனுப்பி விட்டு அந்த அழகான பெண் காத்திருக்க,

“ அய்! வர்ஷா ஆன்ட்டி! அப்பா கூட வேலை பாக்கறவங்க! இவங்களை வச்சு அப்பாவுக்கு நான் இங்கே இருக்கறதை தகவல் குடுக்கணும்!”

வர்ஷா க்ருஷ்ணாவின் செயலாளர்! தன் தாயுடன் வசிக்கிறாள்! வாசுகி சந்தேகப்பட்டு அவளை அசிங்கப்படுத்தியதை ஏற்கனவே படித்திருப்பீர்கள்! அப்பா ஆஃபீஸுக்கு நிஷா போன சமயம், வர்ஷா பார்த்து, நிஷாவுக்கு சாக்லெட் தந்தது உண்டு! அந்தப் பழக்கம்!

“ஆன்ட்டி! வர்ஷா ஆன்ட்டி!”

நிஷா அழைக்க, வர்ஷா திரும்பி,

“ஏய் நிஷாக்குட்டி! நீ என்ன இங்கே?”

“என்னை யாரோ கடத்தி இங்கே கொண்டு வந்து வச்சிருக்காங்க! இப்பத்தான் மயக்கம் தெளிஞ்சிருக்கு! அப்பாவுக்கு தகவல் குடுங்க!”

வர்ஷா அதிர்ந்து போனாள்..!

–தொடரும்...

16 வது அத்தியாயம் | 18 வது அத்தியாயம் >

ganesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...