சிவகங்கையின் வீரமங்கை – 1 | ஜெயஸ்ரீ அனந்த்

 சிவகங்கையின் வீரமங்கை – 1 | ஜெயஸ்ரீ அனந்த்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் . யாரிந்த செல்ல முத்து விஜயன் ?

அரசன் கிழவன் ரகுநாத சேதுபதியின் தங்கை உத்திரகோசமங்கை . இவளின் இளைய மகன் முத்து விஜயன். இவரின் இயற்பெயர் திருவுடையார் தேவர் மனைவி அகிலாண்டேஸ்வரி தம்பதியருக்கு வாரிசு இல்லாததால் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து செல்லமுத்து என்று பெயரிட்டு வளர்த்தனர். அப்படி என்றால் சேதுபதி என்பது? சேது என்றால் கடல். பதி என்றால் காப்பது. கடலையும் கடலை ஒட்டிய நிலப்பரப்பை ஆண்ட அரசர்கள் தங்களது அடையாளமாக சேதுபதி எனும் அடைமொழியை தன் இயற்பெயருடன் சேர்த்துக் கொண்டிருந்தனர்.

கிழவன் இரகுநாத சேதுபதிக்கு ரணசிங்க தேவர், பவானி சங்கர தேவர் என்று இரு மகன்கள். ரணசிங்க தேவர் பட்டத்திற்கு வந்த சிறிது நாட்களிலேயே இராணி மங்கம்மாவாள் கொல்லபட்டார். பவானி சங்கர தேவருக்கு அரசாட்சி மறுக்கபட்டது. அதனால் தனது தங்கை உத்திரகோசமங்கையின் வாரிசுகள் அரியணை ஏறினர்.

கிழவன் ரகுநாத சேதுபதி விர, தீர பராக்ரமசாலி. இவர்களின் ஆட்சி காலத்தில் சிவகங்கை மற்றும் ராமநாதபுர மாவட்டங்கள் செழித்து வளமாயிருந்தது.

…………………………………………………

மணலில் கால் புதைய புதைய தலையில் அடுக்கிய பதநீர் பானையுடன், கையில் பனை ஓலையால் செய்யப்பட்ட தும்பா குடுவையுடன் சிகப்பி நடந்து கொண்டிருந்தாள் வலிய வீசிய காற்று அவள் வேகத்தை குறைக்க எத்தனித்தது. ஆனாலும் காற்றுக்கும் மணலுக்கும் பழக்கப்பட்ட அவளின் கால்கள் அதனை பொருட்படுத்தாது வேகமாக ஊருக்குள் முன்னேறி கொண்டிருந்தது.

புன்செய் பூமியின் தன்மைகேற்ப கம்பு சோளம் பயிரிடப்பட்டு அறுவடைக்கு காத்து இருந்தது. முள் வேலியை தாண்டி சோளத்துக்காக ஏங்கிய மாடுகள் வாயில் உமிழ்நீரை சுரந்து பூமியை நனைத்துக் கொண்டு நின்றது. ஓங்கி வளர்ந்திருந்த பனையும் தென்னையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டு கொப்பும் குளையுமாய் காய்த்து குலுங்கியது. குளக்கரையில் இருந்த புளிய மரத்தில் சிறுவர்கள் சிலர் ஊஞ்சல் கட்டி ஆடிக்கொண்டிருந்தனர்.

சோளக் காட்டில் வேலை செய்யும் ஆடவருக்காக பெண்கள் கொண்டு சென்ற மண் பாத்திரத்தில் இருந்த கம்பு களியும் ஊறுகாயின் மணமும் பானைகளின் இடுக்கின் வழியே வழிந்தோடி காற்றில் கலந்திருந்தது. வேலையின் அலுப்பை போக்க யாரோ ஒருத்தி அழகாக பாடியது, குயிலின் குரலையும் மிஞ்சுவதாக இருந்தது. தரை கிணற்றில் ஏற்றம் கட்டி வயலுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். இதையெல்லாம் கண்ணால் பார்த்தபடி சிகப்பி ஊருக்குள் நடந்து கொண்டிருந்தாள்.

“ஏய் செகப்பி….” மெதுவாக குரல் வந்த திக்கை நோக்கினாள். மண் சுவற்றில் பனை ஓலையால் வேயபட்டிருந்த வீட்டின் வெளியே தலையை நீட்டி எட்டி பார்த்தபடி நின்றிருந்தாள் செங்கமலம்.

“அரண்மனை பக்கமாக போகிறாயா?”

“ஆமாம் அக்கா. உங்கள் தமயனுக்கு உடல் சுகமில்லை. இறக்கிய பதநீரை விற்று வரலாம் என்று கிளம்பினேன்” என்றாள்.

“நல்லதுதான். எனக்கு உன்னால் ஒரு காரியம் நடக்க வேண்டும்.”

“என்ன காரியம் அக்கா” என்றபடி பதநீர் பானையை இறக்கியபடி தலையில் சட்டுவம் போல சுருட்டி வைக்கபட்டிருந்த புடவை தலைப்பை உதறி இடுப்பில் சொருகி கொண்டு நின்றாள் சிகப்பி. வீட்டினுளிருந்து வெளியே வந்த செங்கமலம் தங்களை யாரும் கவனிக்கிறார்களா என்றபடி பார்வையை சுழற்றினாள்.

ஆள் அரவமற்ற அந்த இடத்தில் தூரத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த குழந்தைகளை தவிர மற்றவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை. ஊஞ்சல் ஆட்டத்திற்கு மரமானது தனது கிளையை தாழ்த்தி, உயர்த்தி குழைந்தைகளுடன் குதுகளித்து கொண்டிருந்தது.

“சொல்லுங்கள் அக்கா. என்ன காரியம் ” செங்கமலத்தின் பதிலுக்காக காத்திருந்தாள்.

“அருகில் வா.. உன் காதை காட்டு”

“ஏதேது விஷயம் பெரிதாக இருக்கும் போலேயே … ” என்றபடி கன்னத்தில் கருங்குழலாக சுருண்டு தொங்கியிருந்த கூந்தலை விரல்களால் காதின் பின் பகுதிக்கு ஒதுக்கிக் கொண்டாள்.

பெண்கள் இருவரும் கிசுகிசுத்துக் கொண்டதை மர கிளையினில் அமர்ந்திருந்த பறவை ஒன்று தன் கண்களை அலக விரித்தபடி பார்த்தது கொண்டிருந்தது.

செங்கமலம் கூறிய சேதியை கேட்ட சிகப்பியின் முகம் சந்தோஷத்தில் பிரகாசமடைந்தது.

“நீங்க சொன்னது உண்மையா அக்கா?”

“சரபேஸ்வரனின் மீது ஆணை” என்றாள்.

“ஏதோ நல்லது நடந்தா சரி. நானும் என்ன ஏது என்று தெரிந்து வருகிறேன்” என்று கூறி தலையில் பதநீர் பானையுடன் கோட்டையை நோக்கி நடக்கலானாள்.

திறந்திருந்த கோட்டை வாசலில் கையில் வாள் ஏந்தியபடி அரண்மனை காப்பாளர்கள் வாயிற் முகப்பில் நின்று கொண்டிருந்தனர். அன்று சந்தை தினமானதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. கோட்டையின் மதில் மேல் நின்று காவல் புரிந்தவர்கள் வேலை ஏதும் இல்லாததால் மேல் தளவாடத்தில் அமர்ந்தபடி சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் புழுதியை பறக்கடித்துக் கொண்டு குதிரை ஒன்று நாலுகால் பாய்ச்சலில் கோட்டையின் வாயிலை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த காவளாளிகளில் ஒருவன் ஆட்டத்தை பாதியில் விட்டு விட்டு அருகில் இருந்த கொம்பால் ஒரு முறை ஊதி வாயிற் காப்பான்களை உஷார் செய்தான். அதற்குள் குதிரை கோட்டை வாசலை அடைந்திருந்தது. வேள் தாங்கிய வீரர்கள் வாயிலை தங்களது வேளால் அடைத்து குதிரைக்கு கடிவாளமிட்டனர்.

“என்னப்பா தம்பி …. எதற்கு இத்தனை அவசரம்? குதிரையின் வேகத்தை விட உன் வேகம் அதிகமாக உள்ளதே?” என்றான் வாயில் காப்பார்களில் ஒருவன்.

“அவசரமான விஷயம். அவசரம் மிக அவசரம் வழியை விடுங்கள்” என்றபடி கையில் வைத்திருந்த இளஞ்சினையை காட்டியபடி கால் கட்டை விரலால் குதிரையின் விளாவினை ஒரு உந்து உந்தினான்.

“ஏய்…. ஏய்… ” குதிரையை தடுக்க நினைத்தவனிடம் குதிரை போக்கு காட்டி எகிரி குதித்து அரண்மனை நோக்கி ஓடியது.

“யாரப்பா இவன்? எதற்கு இத்தனை அவசரம்?” என்றான் சொக்கட்டான் காவளாளி.

“தெரியவில்லை முத்திரையை காட்டினான் பறந்தான்”.

“நல்ல காவளாளியாடா நீ விளை யாட்டை பாதியிலேயே விட்டு விட்டு உன்னை ஜாக்கிரதை படுத்திய என்னை சொல்லனும். இப்படி அவனை கோட்டை விட்டு விட்டாயே”

“கோட்டை விடவில்லை. கோட்டையின் உள் விட்டேன்”

“தளபதியிடம் சொல்லி அரண்மனையில் கவி பாடும் பணிக்கு உன்னை மாற்ற வேண்டியதுதான். என்ன ஞானம் என்ன ஞானம்”

“ஹ… ஹ… ஹா… என்று வாய் விட்டு சிரித்தவனை எதிர்புறம் இடிந்து சிதலமடைந்து இருந்த சுவற்றிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த கோடங்கி ஒருவன் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

(தொடரும்)

2வது அத்தியாயம் >

கமலகண்ணன்

2 Comments

  • சுவாரஸ்யமான ஆரம்பம்! வாழ்த்துகள்!

  • Very good write up

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...