தாய் மொழி தமிழைக் காப்போம்

 தாய் மொழி தமிழைக் காப்போம்

உலகத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1952இல் அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த நான்கு மாண வர்களின் நினைவாக இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவ துடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்நாளை யுனெஸ்கோ அறிவித்தது. 2013ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய் மொழி நாளை ஒட்டி யுனெஸ்கோ பாரிசில் “தாய்மொழிகளும் நூல்களும் – டிஜிட்டல் நூல்களும் பாடநூல்களும்” (“Mother tongues and books – including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

1947ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்காளதேசம்), மேற்கு பாஸ்கிதான் (தற்போது பாஸ்கிதான்) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக் கப்பட்டு பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு இடையில் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் கலாசாரம், மொழி போன்றவற்றில் ஒன்றுக் கொன்று மிகவும் வித்தியாசப்பட்டன. கிழக்கு பாகிஸ்தானில் (வங்களாதேசம்) பெரும்பான்மை மக்களால் வங்காள மொழி பேசப்பட்டாலும் 1948ஆம் ஆண் டின் அப்போதைய பாகிஸ்தான் அரசு உருது மொழியை பாகிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்கு கிழக்கு பாகிஸ்தான் மக்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட் டது. கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழி யைக் குறைந்தபட்சம் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள். டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதர வுடன், பெரிய பேரணிகளையும் கூட்டங் களையும் ஏற்பாடு செய்தனர். போராட் டத்தை முடக்குவதற்காக பாகிஸ்தான் அரசாங்கம் பொதுக் கூட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தது.
1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டினால் சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காய மடைந்தனர்.  தாய்மொழிக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்தச் சம்பவம் வரலாற்றில் பதியப்பட்ட அரிய சம்பவங்களில் ஒன்றாகும்.

அன்றிலிருந்து வங்காள தேசத்தினர் பன்னாட்டு தாய்மொழி தினத்தை துக்க நாளாகக் கடைப்பிடிக்கின்றனர். உயிர்நீத்த தியாகிகளை கௌரவிப்பதற்காக ஷாஹித் மினார் நினைவுச் சின்னத்திற்குச் சென்று தியாகிகளுக்குத் தங்களின் ஆழ்ந்த துக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர்.

வங்காளதேசத்தில் உலக தாய்மொழி நாள் தேசிய விடுமுறை நாள். 1998 ஆம் ஆண்டு சனவரி 9 அன்று கனடாவில் வசிக்கும் வங்காள தேசத்தினரான ரபீகுல் இஸ்லாம் என்பவர் அன்றைய ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான் உலக மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்ற பன்னாட்டு தாய்மொழி தினத்தை அறிவிக்குமாறு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். டாக்கா படுகொலை களை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவிக்க வேண்டுமென முன்மொழிந் தார்.

கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் தாய்மொழியின் நிலை

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 49 உள்ளன. இவற்றில் 6 முதல்
8-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாகக்கூட இல்லை. இவற்றில் தமிழாசியர்களே கிடையாது. இந்தி மற்றும் சமற்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு பெற்று மேல் வகுப்புகளுக்குப் போகமுடியும்.

இப் பள்ளிகளில் பயிற்றுமொழி இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே. இப்பள்ளி களில் படித்தால்தான் உயர் அரசுப் பணிகளில் வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலை யும் நிலவுகிறது. இப்பள்ளிகள் மாநில அரசுகளைக் கேலி செய்யும் சின்னங் களாகவே விளங்குகின்றன.

தமிழ்நாட்டில் ஏழு வகைக் கல்வி முறைகள் உள்ளன. அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள், ஆங்கிலோ-தமிழகப் பள்ளிகள், நவோதயா பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளிகள் என்று ஏழு வகையான கல்வி முறை கள் பின்பற்றப்படுகின்றன. இது கல்வி முறையில் ஒரு வகையான ஏற்றத்தாழ்வு நிலையையும், மாணவர்களுக்கு மாறுபட்ட கல்வி வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

சென்னை மாகாணத்தை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தமிழில் படிக்க வாய்ப்பு இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, சென்னை மாகாணத்தைக் காங்கிரஸ் கட்சி ஆண்டபோதும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியே இருந்தது.

ஆனால், அதன் பிறகு ஆண்ட அரசுகள் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழ்மொழி வழி வகுப்புகளை மூடிவருகின்றன. ஆங்கில வழிப் பிரிவுகள் என்பவை 2010 முதல் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளிலேயே தொடங் கப்பட்டுவிட்டன. 2013-14 ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் 172 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புத் தமிழ்ப் பிரிவே இல்லை. மேலும், 21 நடுநிலைப் பள்ளிகளில் தமிழ்ப் பிரிவே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இதே நிலை தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் நிலவுகிறது. தமிழ் மக்கள் விரும்பினாலும் கூடத் தமிழ்வழி வகுப்புகளில் சேரமுடியாத நிலை, குறிப் பாக சென்னையில் நிலவுகிறது.

தமிழ் வழியில் கல்வி கற்றோருக்குத் தமிழ்நாட்டில் வேலை அளிக்காவிட்டால் வேறு எங்கு வேலை கிடைக்கும்? இது குறித்து ஓர் ஒழுங்கற்ற முயற்சியைத் தமிழக அரசு கடந்த காலத்தில் செய்தது.

மொழி அழிந்தால் மக்களின் பண்பாட்டு அடையாளம் அழியும். பண்பாட்டு அடை யாளம் இல்லாத மக்கள், வரலாறு அற்றவர்களாகப் போவார்கள்.

தன்மானத்துடன் வாழ, நாம் நம் தாய்மொழி காப்போம்.

தாய் மொழியே பயிற்று மொழி. தாய் மொழியே ஆட்சி மொழி. தாய் மொழியே நீதிமன்ற மொழி, தாய்மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம். தமிழ் மொழிக்காக இன்னுயிர் தந்த தியாகிகள் உள்ளிட்ட மொழிப் போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...