அம்மாவும், மாலினியும்… | இயக்குநர் மணிபாரதி

 அம்மாவும், மாலினியும்… | இயக்குநர் மணிபாரதி

இரண்டு நாட்களாக அப்பாவிடமிருந்து எந்த தகவலும் இல்லை. போன் பண்ணினாலும் எடுப்பதில்லை. அம்மாவும், ராகவியும் பயப்பட ஆரம்பித்தார்கள். நான், அப்பாவின் நண்பர் ரமேஷிற்கு போன் பண்ணினேன். “சொல்லுடா ரகு…“ என்றார்.

“அங்கிள் எங்க இருக்கிங்க..“

“ஆஃபிஸ்லதான்..“

“அப்பா இருக்காரா..“

“இருக்கானே..“

“அவர்கிட்ட பேசனுமே.. கொஞ்சம் போனை தறீங்களா..“

“ஒன் மினிட்..“

ஒரு நிமிடம் கழித்து அப்பா பேசினார்.

“என்ன ரகு..“

“என்னப்பா ஆச்சு உங்களுக்கு.. ரெண்டு நாளா வீட்டுக்கு வரல.. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேன்றீங்க.. வழக்கமா இப்படி இருக்க மாட்டிங்களே..“

அவரிடமிருந்து பதில் இல்லை.

“ஏன்ப்பா ஒண்ணும் பேச மாட்டேன்றீங்க..“

“ஒண்ணுமில்ல.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.. தனியா பேசனும்.. அம்மாகிட்டயும் ராகவிகிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம்.. ஆபிஸ் வேலையா பிஸியா இருக்கேன்னு மட்டும் சொல்லு.. சாய்ந்தரம் ஏழு மணிக்கு, கிரீன் பார்க் காபி ஷாப்புக்கு வா.. மத்ததையெல்லாம் அங்க வந்து சொல்றேன்..“

“சரிப்பா..“

போனை கட் பண்ணினேன்.

அவர் சொன்ன நேரத்திற்கு பத்து நிமிடம் முன்பாகவே வந்து காத்திருந்தேன்.

அப்பா எப்போதும் இப்படி இருந்ததில்லை. ஆபிஸிலிருந்து திரும்ப ஒரு மணி நேரம் தாமதமானாலும், அம்மாவிற்கு போன் பண்ணி சொல்லி விடுவார். இந்த முறைதான், இரண்டு நாட்களாகியும் மௌனம் சாதிக்கிறார். எதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டாரா என்று தெரியவில்லை..

பொதுவாக, அவர் அடுத்தவர் வம்புக்கு போக மாட்டார். தான் உண்டு தனது வேலை உண்டு என இருப்பார். உயர் பதவி வகுத்தாலும், தனக்கு கீழே வேலை பார்ப்பவர்களை மதிப்புடன் நடத்துவார். எல்லோரிடமும் அன்பாக பழகுவார். தோற்றத்தில், சின்னப் பையன் மாதிரி காணப்படுவார். அம்மா கூட “உங்கள கல்யாணம் பண்ணிகிட்டப்ப எப்படி இருந்திங்களோ, அப்படியேதான் இப்பவும் இருக்கிங்க.. நான்தான் கொஞ்சம் வயசானவளா தெரியுறேன்..“ என சொல்வாள். நானும், அவரும் சேர்ந்து வெளியில் போனால், பார்க்கிற நண்பர்கள் “யாருடா அது, உன் அண்ணனா..“ எனக்கேட்பார்கள். பெருமை அவரது முகத்தில் தாண்டவமாடும்.

போர்ட்டிக்கோவில், அப்பாவின் கார் வந்து நின்றது. அவர், அதிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். தலை கலைந்து முகம் வாட்டமாக காணப்பட்டது. தளர்வாக நடந்து, என் அருகில் வந்தார்.

“முன்னாடியே வந்துட்டியா..“

“பத்து நிமிஷம் ஆகுதுப்பா..“

எதிரில் உட்கார்ந்தவர் “எதாவது ஆர்டர் பண்ணேன்..“ என்றார்.

நான் பேரரை அழைத்து இரண்டு காபி சொன்னேன். பின் அவரிடம் “சொல்லுங்கப்பா.. ஏன் ஒருமாதிரி இருக்கிங்க..“ எனக்கேட்டேன்.

அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். எப்படி ஆரம்பிப்பது என்கிற தயக்கம் அவர் முகத்தில் தெரிந்தது.

“எதா இருந்தாலும் பரவாயில்லை, சொல்லுங்கப்பா..“

“எந்த ஒரு தந்தைக்கும் ஏற்படக்கூடாத நிலமை எனக்கு ஏற்பட்டுருச்சு.. உனக்கு மாலினிய தெரியும்தானே..“

“நல்லா தெரியும்ப்பா.. ஆபிஸ்ல, உங்க பி ஏ..“

“அவளை, நா செகேன்ட் மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்..“

நான் அதிர்ந்து போனேன். ஒரு பிடி நெருப்பை அள்ளி, என் நெஞ்சில் கொட்டியது போலிருந்தது.

“என்னப்பா சொல்றீங்க..“

“இது திடீர்ன்னு எடுத்த முடிவு இல்ல.. ஒரு மாசமாவே உள்ளுக்குள்ள புகைஞ்சுகிட்டு இருக்குற விஷயம்தான்.. எப்படி உங்கம்மாகிட்ட சொல்றதுன்னுதான் தயங்கிட்டு இருக்கேன்….“

நான் எரிச்சலுடன் அவரைப்பார்த்தேன்.

“நீ என்ன வேணும்ன்னாலும் நினைச்சுக்க.. எனக்கே உங்க எல்லோரையும் ஏமாத்துறனோன்னு தோன ஆரம்பிச்சுடுச்சு.. அதான், இதுக்கு மேல மறைக்கக் கூடாது, உண்மைய சொல்லிடலாம்ன்னு முடிவெடுத்து உன்னை வர சொன்னேன்..“

“இது உங்களுக்கு தப்பா தோனலையாப்பா….“

“தப்பு, தப்பில்லங்குற வரையரையெல்லாம் தாண்டியாச்சு.. மாலினியும் நல்ல பொண்ணுதான்.. வெரி இன்னோசென்ட்.. அவளுக்கு என்கிட்ட என்ன புடிச்சுதுன்னு தெரியல.. திடீர்ன்னு ஒரு நாள், சார் உங்கள எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.. என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களான்னு கேக்குறா.. ஏய், என்ன விளையாடுறியா.. நா ஏற்கனவே கல்யாணம் ஆனவன், எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்கன்னு சொன்னேன்.. அதுக்கு அவ, எல்லாம் எனக்கு தெரியும் சார்.. தெரிஞ்சுதான் கேக்குறேன்.. உங்கள என்னிக்கு முதன்முதலா பாத்தேனோ, அப்பவே, உங்க மேல எனக்கு ஒரு மரியாதை வந்துடுச்சு.. கல்யாணம் பண்ணிகிட்டா உங்கள மாதிரி ஹானஸ்ட்டான ஒரு பர்சனதான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு ஆசைப்பட்டேன்.. ஆனா, அப்படி ஒருத்தன இது வரைக்கும் சந்திக்கவே இல்ல.. ஒண்ணு சரியா இருந்தா, ஒண்ணு கோளாறா இருக்கு.. அப்பதான், பேசாம உங்களையளே கல்யாணம் பண்ணிகிட்டா என்னன்னு தோணிச்சு.. உங்க ஒய்ஃப்கிட்ட நா பேசி பர்மிஷன் வாங்குறேன் அப்படின்னு சொன்னா.. நா, எதோ உளறுறான்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன்.. ஆனா, அவ அதுல ஸ்ட்ராங்கா இருந்தா.. அவளுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல.. சரின்னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார்.. உங்க வீட்டுல ஒ
ரு ஓரமா இருந்துக்குறேன்.. உங்க நிழல் மட்டும் என் மேல பட்டா போதும் அப்படிங்குறா.. முதல்ல நானும் அழுத்தமாதான் இருந்தேன்.. ஆனா, அவளோட அன்பும், பிடிவாதமும், என் மேல அவ வச்சுருக்குற நம்பிக்கையும் என்னை இளக வச்சுடுச்சு.. அவளை கல்யாணம் பண்ணிக்குறதுனால உங்களையெல்லாம் வெறுத்துடுவேன்னு நினைச்சுடாதிங்க.. அதுல எந்த ஒரு மாற்றமும் இருக்காது.. இது, கருணையோட அடிப்படையில எடுக்கப்பட்ட ஒரு முடிவு.. அவ்வளவுதான்.. இப்ப, ரோட்டுல ஒரு நாய் பசியோட நின்னா, அது மேல இரக்கப்பட்டு பிஸ்கட் வாங்கிப்போடுறதில்ல.. அந்த மாதிரின்னு நினைச்சுக்கயேன்..“

காபி வந்தது. என் கவனம் அதன் மேல் போக வில்லை.

“ரோட்டுல நிக்கிற நாயும், மாலினியும் ஒண்ணாப்பா.. நீங்க புரிஞ்சுதான் பேசுறீங்களா..“

அவர் அமைதியாக இருந்தார்.

“என்ன இருந்தாலும், இது நீங்க அம்மாவுக்கு செய்ற துரோகம்..“

“நீ இப்படிதான் யோசிப்பன்னு எனக்கு தெரியும்.. இது துரோகமாகாது.. அதை எப்படி உனக்கு புரிய வக்கிறதுன்னுதான் எனக்கு தெரியல… நிச்சயமா பார்வதியையும், மாலினியையும் சமமா வச்சு பார்க்க மாட்டேன்.. அதே சமயம், ரெண்டு பேருக்கும் அவங்கவங்களோட உரிமையா அழகா பிரிச்சு குடுத்துடுவேன்.. இது காதல்ன்னாலயோ, காமத்துனாலயோ வந்த உறவு இல்ல.. பாவப்பட்டு, இரக்கப்பட்டு வந்த உறவு.. மாலினி, உங்க சொத்துல ஒரு நையாப்பைசா கூட எனக்கு வேண்டாம்ன்னு இப்பவே எழுதி குடுத்துட்டா….“

“சரி.. இப்ப நா என்ன பண்ணனும்ன்னு நினைக்கிறீங்க..“

“இதெல்லாம் பார்வதிகிட்ட நா நேரடியா பேச முடியாது.. உன்கிட்டயே பேச யோசனையாதான் இருந்துச்சு.. வேற வழியில்ல.. மாலினிக்கு நா பதில் சொல்லியாகனும்.. அதான் தைரியத்த வரவழைச்சுகிட்டு உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்..“

“ஒருவேளை அம்மா இதுக்கு ஒத்துக்கலன்னா..“

“ஒத்துகிட்டுதான் ஆகனும்.. மாலினி, எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவ.. எதாவது தப்பான முடிவ நோக்கி போய்ட்டான்னா, அந்த பாவம் நம்பல சும்மா விடாது.. அப்புறம் காலத்துக்கும் அது துரத்திகிட்டே இருக்கும்….“

“ஸோ, ஒரு இன்ஃபர்மேட்டிவாதான் இதை சொல்றீங்க..“

“அதான் சொல்றனே, இந்த ரிலேஷன்ஷிப்ப உன்னால புரிஞ்சுக்க முடியாதுன்னு.. யாரா இருந்தாலும் அவங்கவங்களுக்குன்னு வரும்போதுதான் அதோட கஷ்டம் புரியும்..“

“சரி, அம்மாகிட்ட நா பேசிப் பாக்குறேன்..“

அதற்கு மேல், அவரிடம் பேச விருப்பமில்லாமல் எழுந்து வெளியில் வந்தேன்.

வீட்டிற்கு வந்ததும், முதல் காரியமாக அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அழுது புரண்டாள். முடியாது என அடம் பிடித்தாள்.

“உங்கப்பாவ நானும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.. யாரையும் முழு மனுஷன்னு சொல்ல முடியாது.. சின்ன சின்ன குறைகள் இருக்கதான் செய்யும்.. உங்கப்பாகிட்டயும் குறைகள் இருந்துது.. அதுக்காக அவரை நா வெறுத்துடல.. இந்த நிமிஷம் வரைக்கும் லவ் பண்ணிகிட்டுதான் இருக்கேன்.. அவர் மேல நா வச்சுருந்த அன்புல, ஒரு துளி கூட குறையாம பாத்துகிட்டு வரேன்.. அப்படியிருக்கும் போது, அவருக்கு மட்டும் எப்படி இப்படி புத்தி போச்சுன்னுதான் தெரியல..“

அம்மாவின் கண்களில், கண்ணீர் கரை புரண்டோடியது.

“மாலினி, எப்படியோ அவர அவளோட பிடிமானத்துல கொண்டு வந்துட்டாம்மா.. நாம எதாவது அடம் புடிச்சோம்ன்னா, அவரு நமக்கு இல்லாம போயிடுவாரு..“

அம்மா யோசித்தாள். பின், ஒரு வழியாக தன்னை தேற்றிக் கொண்டு, “சரி ஒப்புக்குறேன்டா….“ என்று கூறினாள்.

ஒரு வெள்ளிக்கிழமை, அப்பா, ரெஜிஸ்டர் ஆபிஸில் வைத்து மாலினியை கல்யாணம் செய்து கொண்டார். அவளுடன், மாலையும் கழுத்துமாக காரில் வந்து இறங்கினார். அதை கவனித்த நான், அம்மாவிடம் ஓடி வந்து விஷயத்தை சொன்னேன். அவள் “அவங்க ரெண்டு பேரையும் வாசல்லயே நிக்க சொல்லு.. ஆரத்தி கரைச்சுட்டு வந்துடுறேன்..“ என்று கூறி சமையலறைக்கு சென்றாள். நான் வாசலுக்கு வந்து அப்பாவிடம் விஷயத்தை சொன்னேன்.

ராகவி, எட்டிப்பார்த்து பிடிக்காமல் அவளது அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள்.

ஆரத்தி கரைத்துக் கொண்டு வருவதாக சொன்ன அம்மா, இன்னும் வரவில்லை. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அப்பா “என்னடா இவ்வளவு நேரமா..“ என்றார். நான் “இருங்கப்பா, பாத்துட்டு வரேன்..“ என்று கூறி, சமையலறைக்கு வந்தேன். அங்கு, அம்மா ஆரத்தி கரைத்த நிலையில், தரையில் விழுந்து கிடந்தாள். அதைக்கண்டு அதிர்ந்து போன நான், அவளது அருகில் ஓடி வந்து, அவளை எழுப்ப முயன்றேன். அவளிடம் எந்த அசைவும் இல்லை. மூக்கில் கை வைத்துப் பார்த்தேன். மூச்சும் வரவில்லை. “அம்மா..“ என அலறினேன்.

கமலகண்ணன்

1 Comment

  • வித்யாசமான கதை. ஒரு மனைவி தனது கணவன் இன்னொருத்தியை கல்யாணம் செய்து கொள்ள எப்படி சம்மதிக்க முடியும்.மனசு எப்படி ஒத்துக்கொள்ளும் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே…கிச்சனில் இப்படி ஆகிவிட்டாள்.நல்ல முடிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...