பொற்கயல் – 1 | வில்லரசன்
எழுத்தாளர் வில்லரசன் – தினேஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட 21 வயதுடைய இந்த வாலிபர், மிக இளம் வயதில் கதை எழுதுகிறார், அதுவும் தொடர்கதை எழுதுகிறார், அதுவும் வரலாற்று பின்னணி கொண்ட நாவல் எழுதுகிறார்.
மிகச்சிறிய வயதில் கதை எழுதுவது பெரிய விஷயம். அதிலும் நாவல் எழுதுவது இன்னும் பெரிய விஷயம். வரலாற்று கதைகள் எழுதுவது இன்னும் இன்னும் பெரிய விஷயமாக தோன்றுகிறது. அவர் வேங்கை மார்பன் என்ற நாவலை 636 பக்கங்கள் எழுதி கௌரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, தன் முத்திரையைப் பதித்து கோலாகலமாக துவங்கி இருக்கிறார்.
அந்த துவக்கத்திற்கு இன்னுமொரு படி வைக்கும் பொருட்டு நமது மின் கைத்தடியில் அவருடைய பொற்கயல் என்கின்ற இந்த வரலாற்று நாவலை தொடங்கி வைப்பதில் அவருக்கு இன்னும் பெருமை சேர்க்கும் ஒரு பகுதியாக இந்த தொடர் தொடங்குவதில் மின் கைத்தடி பெருமைப்படுகிறது.
உங்களது அனைவரின் ஏகோபித்த ஆதரவை அந்த இளம் வாலிபருக்கு தந்து, இன்னும் மென்மேலும் பல சரித்திர நாவல்கள் எழுதி சரித்திரம் படைத்திட உங்கள் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்குகின்றோம்.
– ஆசிரியர் குழு, மின்கைத்தடி.காம்
——————————————————
1. வளரி வீரன்
பகல் பொழுதெல்லாம் தன்னிடம் இருந்த ஒளிச் சுடரைக் கொட்டித் தீர்த்தமையால் வெய்யோன் சோர்வுற்று பொலிவிழந்து மங்கிப் போயிருந்தான்.
அவனது ஒளிக் கதிர்களானது தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் உறவாடும் அம் மாலைப் பொழுதானது முன்னமே செழிப்புடன் எழில் மிகுந்து விளங்கும் பாண்டிய நாட்டின் அழகை மேலும் மெருகேற்றி சிறப்பித்துக் கொண்டிருந்தது.
பாண்டியர்களின் இயற்கை தாயான வைகையாறு தாய்பால் சுரப்பதைப் போல நீரைச் சுரந்து பாண்டியப் பிள்ளைகளின் தலைநகரைத் தழுவி பசியாற்றிவிட்டுச் செல்வதும் அந்த மாலை வேளையில் காண்பதற்கு அழகாக இருந்தது.
ஒளி மங்கும் அந்நேரத்தில் மதுரை நகரம் விளக்கொளி நகரமாக மாறத் தொடங்கியிருந்தது. அதைப் பார்த்த வான் வாழ் வின்மீன் கூட்டங்கள் எல்லாம் நீர் மீன் சின்னத்தைக் கொண்ட பாண்டியர்கள் மீது பொறாமைக் கொண்டு அவ்வப்போது மின்னவும் செய்தன.
மதுரை நகரைச் சுற்றிலும் எப்பொழுதும் உள்ள அந்த தீராத பரபரப்புச் சத்தம் அதற்கு சற்று புறம்பாக வைகை ஆற்றின் கரையில் அமைந்திருந்த இந்த கானகத்தில் துளியளவும் இல்லை! மாறாக இங்கு பறவைகளே ஆட்சி செலுத்தி வருகின்றன! அவற்றின் கீச்சுகளும் கொஞ்சல்களும் தான் இப்பகுதியில் அதிகம்.
அந்த பறவைகளுக்கு ஈடாக வைகையும் தனது “சோ”வென்ற பாடலை எத்திசையும் எழுப்பியவண்ணம் ஓடிக்கொண்டிருந்தாள்.
வைகையின் பாடலையும் அதனுடன் கூட்டுச் சேர்ந்து இசைக்கும் பறவைகளின் கீச்சுகளையும் இரசித்த படியே அந்த வைகைக் கரை காட்டிற்குள் தனது புரவியுடன் நடந்து கொண்டிருந்தான் வீரன் ஒருவன்.
அவன் அணிந்துள்ள ஆடைகளும் வெளித் தோற்றமும் அவனிடத்தில் ஏதோவொர் சிறப்பை வெளிபடுத்தின. சீனப் பட்டும் காஞ்சிப் பட்டும் கலந்து நெய்யப்பட்டுள்ள அவனது கச்சையும், உரையில் காணப்படும் கயல் சின்ன வடி கைப்பிடியைக் கொண்ட நீண்ட வாள் ஒன்றும், அதே கயல் வடிவ கைப் பிடி கொண்ட குறுவாட்கள் என அவனது இடைக் கச்சையில் பாண்டிய நாட்டின் இரும்புக் கயல்கள் துள்ளிக்குதிக்க,
இந்த இருவகை வா(ட்)ள்களே பலப் பேரை சாய்த்து விடும் வல்லமைக் கொண்டவையாக இருந்தாலும், இவை போதாதென்று மேலும் தனது முதுகில் குருதிக் கறை படிந்திருந்த நான்கு வளரிகளை தாங்கிக்கொண்டிருந்தான் அந்த வீரன்.
நான்கிலும் அதே கயல் வடிவக் கைப்பிடிகள் அவற்றுக்கென தனி உறைகள். மேலிருந்து இரண்டு கீழ்நோக்க, கீழிருந்து இரண்டு மேல் நோக்கும் படி கிடந்தன. மேலிருக்கும் இரண்டும் இரும்பு வளரிகள் கீழிருக்கும் இரண்டும் மர வளரிகள்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எடுத்து வீசக்கூடிய வசதிக்கேற்ப அவற்றை முதுகில் கட்டியிருந்தான் அவன்.
மாந்தளிர் மேனியில் ஆங்காங்கே கருநிற தழும்புகள் பல அவனது வீரத்தை பறை சாற்ற நினைத்தாலும் அதைவிட பெரும் தழும்பொன்றை பாம்பு போல் தனது படர்ந்த மார்பில் தாங்கியிருந்ததால் அதுவே அவன் வீரத்தை பெரிதும் வெளிக்காட்டி சிறப்பூட்டியது.
அந்த வீரன் உடம்பில் ஆபரணங்கள் எதையும் பெரிதும் அணியவில்லை என்றாலும் கழுத்தில்
சிவனுக்குரிய ருத்ராட்சம் ஒன்றை மட்டும் தங்கச் சங்கிலியில் அணிந்திருந்தான்.
கருகருவென வளர்ந்திருக்கும் அவனது தலைமயிரை முன் பக்கம் எடுத்து வாரி பின் பக்கம் விரித்து விட்டிருந்தான்.
முத்துப் பல்வரிசை, பொருத்தமான நாசி, ஆளுமையும் கூர்மையும் கொண்ட விழிகள் நெற்றியை மறைக்கும் அளவிற்கு திருநீறு என அந்த வீரனின் வடிவம் மிக சிறப்புடன் விளங்க, அவன் உடன் நடந்துவரும் அவனது புரவியும் அவனை ஒத்த கம்பீரத்தையும் தோற்றத்தையும் கொண்டிருந்தது.
அந்த புரவியின் மேல் வேட்டையாடப்பட்ட மான் ஒன்றின் இறைச்சி குருதிச் சொட்ட சொட்ட கட்டப்பட்டு கிடந்தது.
இவற்றை கோர்த்துப் பார்த்தால் இவன் சற்று முன்புதான் தன் வேட்டையை முடித்து விட்டு திரும்பியுள்ளான் போலும்.
வைகைக் கரையில் நடை போட்டுக் கொண்டிருக்கும் அவனும் அவனது புரவியும் சிறிது நேரத்திற்குப் பிறகு அதே ஆற்றோரம் அமைந்திருக்கும் ஒரு மூங்கில் குடிலைக் கண்டதும் நின்று விட்டார்கள்.
சற்று தொலைவில் அமைந்திருக்கும் அக்குடிலை தன் கூறிய பார்வையால் ஆராய்ந்துவிட்டு அதன் எதிரே ஆற்றங் கரையில் தூண்டிலுடன் நின்றிருக்கும் முதியவர் ஒருவரை பார்த்தான் அந்த வளரி வீரன்.
மேலாடையின்றி தலையில் தலைப்பாகை ஒன்றுடன் காட்சியளிக்கும் அக்கிழவர் பெரும் மூங்கில் தூண்டில் ஒன்றினை கை பக்கவாட்டில் முட்டு கொடுத்தார்போல் வைகையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்துவிட்டு தனது புரவியைக் கண்டு குறுநகை காட்டியவன், அமைதி காக்குமாறு அதற்கு சைகை செய்து காட்டினான்.
புரவி தலையை மேலும் கீழும் ஆட்டி பணிந்தது. பிறகு அவன் புரவியை அங்கேயே விட்டுவிட்டு முதியவரின் பின்னே வந்து நின்று எட்கி எட்கி அவரை ஆராய்ந்தான்.
அந்த இளைஞன் சத்தமின்றி பூனை போல் தன் பின் வந்து நிற்பதைக் கூட அறிந்திராத அம்முதியவர் மீன் ஏதும் அகப்படுகிறதா என வெறித்து வெறித்து ஆற்றையே பார்த்த வண்ணம் நின்றிருக்க,
அவரது பின்னே நீண்டு கொண்டிருக்கும் மூங்கில் தூண்டிலின் முனையை மெல்ல அசைத்தான் அவன். தூண்டில் அசைந்ததும்
“அச்சடா! அச்சடா! சிக்கிவிட்டதுயா
மீன் சிக்கிவிட்டது!” என அம்முதியவர் தூண்டிலை வேக வேகமாக வெளியே எடுத்தார். முகத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தூண்டிலை ஆற்றிலிருந்து எடுத்தவர் அதில் வைத்த இறைச்சி அப்படியே இருப்பதை கண்டு குழம்பிப் போனார்
“என்ன இது? மீன் சிக்கியது போலிருந்ததே?” என யோசித்தவர் “அச்சடா! ஏதோ புத்திக் கூர்மையுடைய மீன் போல! எப்படியோ தப்பி விட்டது இம்முறை பார்!” என மீண்டும் தூண்டிலை வீசினார்
அனைத்தையும் கவனித்த வண்ணம் அவர் பின் நின்றிருக்கும் அந்த வளரி வீரன் சத்தமின்றி வாயைப் பொத்தியபடி சிரித்தான். மீண்டும் அவன் தூண்டிலை ஆட்டி விட மீன் சிக்கியதாக எண்ணி மீண்டும் அவர் ஏமாந்தார். இது போலவே இரண்டு மூன்று முறை அந்த கிழவருடன் விளையாடி முடித்ததும்
“என்ன அச்சடா கிழவரே! மீன்கள் எதுவும் சிக்கவில்லை போல் தெரிகிறதே?” எனத் தன் கம்பீரக் குரலில் வினவினான் அவன்.
அவனது கம்பீரக் குரலைக் கேட்டு பின் திரும்பிப் பார்த்த அச்சடா கிழவர் பாண்டிய நாட்டின் படைத் தலைவன் மின்னவன் அவர் முன் நின்றுகொண்டிருப்பதை கண்டதும் கையில் பிடித்திருந்த தூண்டிலை ஆற்றோடு விட்டுவிட்டு தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக்கொண்டு
“அச்சடா! மின்னவரே! நீங்களா? அச்சடா! வருக வருக!” எனக் கரம் கூப்பி வணங்கினார்
கூப்பிய கரங்களை பிடித்த பாண்டிய நாட்டின் படைத் தலைவன் மின்னவன் அவர் இடுப்பில் இருந்து துண்டை அவிழ்த்து தலையில் கட்டிவிட்டுவிட்டு
“இது எப்போதும் உங்கள் தலையிலேயே இருக்க வேண்டும் கிழவரே! இங்கு யாரும் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை! நான் பலமுறை கூறி விட்டேன் எனக்கு இத்தனை மடங்கு மரியாதை அவசியமற்றது என்று!”
“அச்சடா! மின்னவரே தாங்கள் பாண்டிய நாட்டின் படைத்தலைவர் அரசரின் நண்பர்! தங்களை வணங்காமல்…”
“போர் என்று வந்துவிட்டால் தன் நாட்டை காக்க அனைத்து மக்களும் ஆயுதம் ஏந்தும் இத்தமிழ் நாட்டில் யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர்? அனைவருமே ஒன்று தான் விளங்கியதா கிழவரே!”
“அச்சடா … மெய் மெய் மின்னவரே”
“ம்ம்ம் இனி உங்கள் தலைப்பாகை மன்னருக்கு முன்போ இறைவனுக்கு முன்போ இறங்கினாள் போதும்!”
“அச்சடா மின்னவரின் மனதே மனது!” என கிழவரது கண்கள் மகிழ்ச்சியில் மேலும் கீழும் சிதறின. அவருக்கு கைகளும் கால்களும் ஓடவில்லை.
அதை அவரே வார்த்தைகளால் வெளிப்படுத்தவும் செய்தார் “மின்னவரே திடீரென்று வந்துள்ளீர்கள் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை! என்ன செய்வது?”
“முன்னமே தூது அனுப்பி விட்டுத்தான் இங்கு வரவேண்டுமோ?” கேலியாக வினவினான் மின்னவன்
“அச்சடா! மன்னிக்கவும்! மன்னிக்கவும்! தாங்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் பாண்டிய நாடே ஏன் இத்தமிழகமே அரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியருக்கு சொந்தம்! மாமன்னரது நெருங்கிய நண்பர் தாங்கள். தங்களுக்கு இல்லா உரிமையா?” என்றார் அவர்.
“நான் இங்கு பாண்டிய நாட்டின் படைத்தலைவனாக வரவில்லை” என்றவன் இளநகையுடன் “நான் ருசியாற வந்திருக்கிறேன்! இன்று இரவு உணவை உங்களுடன் தான் உண்ணப் போகிறேன் கிழவரே!” என்று தெரிவித்தவன் கைதட்டி செய்கை காட்ட, அவனது புரவி அவர்கள் அருகே வந்து நின்றது.
அதன்மேல் கட்டப் பட்டிருக்கும் வேட்டையாடிக் கொண்டு வந்த மான் இறைச்சியை அவிழ்த்து அச்சடா கிழவரிடம் கொடுத்தான் மின்னவன்.
“வேட்டையாடிவிட்டேன் இனி இதை ருசி மிகும் உணவாக சமைத்து தருவது உம் பணி”
“அச்சடா இத்தனை பெரிய மானா!” வியந்தார் அச்சடா கிழவர்.
“கிழவரே! இரவு நான் மட்டுமல்ல ராவுத்தனும் பசியாற வருவான்” என முறுவலித்தான் மின்னவன்.
“மின்னவரே! அவனா? அச்சடா இந்த மொத்த மானையும் ஒரே மூச்சில் விழுங்கி விடுவானே” என்றார்.
அவர் கூறியதற்கு சிரித்துவிட்டு “சரி சரி கிழவியை காணவேண்டும் உறங்கி விட்டாரோ?” எனக் கேட்டான்.
“அச்சடா! அவளாவது உறங்குவதாவது வாயெல்லாம் ஊறுகிறதாம் மீன் சாப்பிட வேண்டும் போல் இருக்கிறதாம்! மீன் பிடித்து சுட்டு தர வேண்டுமாம் ஒரே நச்சரிப்பு” சலிப்புடன் பேசினார் அச்சடா கிழவர்.
“பார்த்தால் அப்படி தெரியவில்லையே? உங்கள் ஆர்வத்தை காணுகயில் ஏதோ காதலிக்கு ஆசை பரிசாக மீன் பிடித்துத் தர முனைவதுப் போலல்லவா இருந்தது” என மின்னவன் குறும்புப் பார்வையுடன் கேட்டதும்
“அது… வந்து…. இல்லை…” என தடுமாறிய அச்சடா கிழவர் “மின்னவரே! நீங்கள் வேறு போய்ச் சேர வேண்டிய வயதில் காதலாவது கத்திரிக்காயாவது அச்சடா!” எனச் சலித்துக் கொண்டார்.
“நடிக்காதீர்கள் கிழவரே” என்றான் அவன். அதன் பிறகு கிழவருடன் அவரது மூங்கில் குடிலிடம் வந்து நின்றவன் புரவியை ஓர் இடத்தில் கட்டிவிட்டு அருகே இருந்த நீர் தொட்டியில் தனது கை கால்களையும் குருதிக் கறை படிந்த ஆயுதங்களையும் கழுவிவிட்டு மூங்கில் குடிலுக்குள் நுழைந்தான் பாண்டிய நாட்டின் படைத் தலைவன் மின்னவன்.
இதுவரையும் மின்னவனை பின் தொடர்ந்து வந்த அழகிய பெண் ஒருத்தி அங்கு நடந்த அனைத்தையும் கவனித்துவிட்டு குடிலுக்குள் சென்று மறையும் மின்னவனை நோக்கி “நீ என்றாவது ஒரு நாள் என்னிடம் அகப்படுவாய். அன்று உன்னை வேட்டையாடுகிறேன்” என கையில் வைத்திருந்த கனியை மோகத்துடன் தீண்டினாள்.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
தமிழகமே போற்றும் பாண்டியப் பேரரசன் மாறவர்மன் குலசேகர பாண்டியரின் நண்பனும் பாண்டியத்தின் படைத்தலைவனுமான மின்னவனின் திடீர் வருகை அச்சடா கிழவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருந்தது.
மின்னவனுக்கும் அச்சடா கிழவருக்கும் உள்ள உறவு அப்பேர்ப்பட்ட உறவு. சில நேரங்களில் இருவரும் வயது வித்தியாசங்களைக் கூட மறந்துவிட்டு கேலியும் சிரிப்புமாக நேரம் கழிப்பது வழக்கம். ஆனால் எத்தனை நடந்தாலும் ஏனோ அச்சடா கிழவருக்கு மின்னவனை காணும் போதெல்லாம் பாண்டியப் பேரரசன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் நினைவு வருவதனால் மரியாதையை அள்ளி வீசி விட தவற மாட்டார். அதை காணும் போதெல்லாம் மின்னவன் கண்டிக்கவும் தவற மாட்டான். கண்டித்தாலும் என்ன பயன்? அவர் கேட்கவா போகிறார்?
இவர்கள் உறவு ஆரம்பித்த இடமோ உணவில் தான். அது ஒரு இனிய கதை. தனது அசாதாரணமான சமையல் கலையால் பல காலங்களாக மின்னவனின் நாவை மயக்கி வைத்திருப்பவர் இந்தக் கிழவர்.
ஓர் காலத்தில் பாண்டியப் பேரரசின் தலைசிறந்த சமையல் வல்லுனராக இருந்த அச்சடா கிழவர் முதிர்ச்சி காரணமாக விடைபெறுவதாக பாண்டியப் பேரரசன் குலசேகரனிடம் தெரிவிக்க, அதை இன்முகத்தோடு ஏற்றுக் கொண்ட பாண்டிய அரசன் குலசேகரன் ஓர் தங்குமிடத்தை அவருக்கு கொடுத்தாலும் அதை அன்போடு மறுத்துவிட்டு தனது துணையுடன் இந்த வைகை ஆற்றின் கரையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் அச்சடா கிழவர்.
நீண்ட காலமாக அச்சடா கிழவரின் சமையலை ருசித்து அதற்கு அடிமையாகிய படைத்தலைவன் மின்னவன், அவர் ஓய்வு பெற்ற பிறகும் வம்படியாக வேட்டைக்குச் சென்று எதையேனும் பிடித்து வந்து சமைத்து தருமாறு கேட்பான். அச்சடா கிழவரும் அதை மகிழ்ச்சியோடு ஏற்று சமைத்து தருவார். அன்றும் அதுபோல் ஒரு மானை கொண்டு வந்திருந்தான் மின்னவன்.
குடிலுக்குள் முதலில் அச்சடா கிழவர் நுழைய பின்னரே மின்னவன் நுழைந்தான்.
அந்த மூங்கில் குடிலினுள் அமைந்திருக்கும் ஒற்றை விளக்கொளியின் உதவியோடு கயிற்றுக் கட்டிலின் மேல் படுத்திருந்தார் அச்சடா கிழவரின் வாழ்க்கை துணைவி மங்கம்மாள்.
வயது முதிர்ந்துவிட்டதால் மாலை வேலையில் குறைந்த பார்வை திறனைக் கொண்ட மங்கம்மாள் மின்னவன் நடந்து வரும் சத்தத்தைக் கேட்டு எழுந்தமர்ந்து கைக் கூப்பி
“மின்னவரே! வருக வருக!” என மகிழ்வோடு அழைத்தார்.
“ம்ம்ம்! வந்துவிட்டேன்! வந்துவிட்டேன்! எப்போது வந்தாலும் இதே மரியாதை! இது என்ன அரசவையை இல்லை அரச கூட்டமா?” கேட்டவன் “மங்கம்மாள் கிழவிக்கு பார்வை மங்கிவிட்டாலும் நடந்து வரும் சத்தத்தை வைத்தே என்னை கண்டறிந்து விட்டார்! சரியான காதுகள் கிழவி உமக்கு” என அவர் கையைப் பற்றிய மின்னவன் “கிழவி! உனக்கொன்று தெரியுமா? உன் கணவருக்கு நான் அருகில் வந்து நிற்பது கூட தெரியவில்லை உன்னிடம் இருக்கும் திறமை அவரிடம் மிகக் குறைவு” என்றான்
“அந்த கிழவனுக்கு பகலிலேயே பசுமாடு தெரியாது! இந்த மாலைப்பொழுதில் மாணிக்கம் எங்கே தெரிய போகிறது மின்னவரே?”
நகையாடிய படைத்தலைவன் கட்டிலுக்கு கீழே தரையில் அமர்ந்தான்.
“அச்சடா படைத்தலைவரே! தரையிலா? நாற்காலியில் அமருங்கள்” என தோளில் மாட்டியிருந்த இறைச்சியை சமையற்கட்டிற்குள் வேகவேகமாக கொண்டுச் சென்று வைத்து விட்டு, நாற்காலி ஒன்றை தூக்கினார் அச்சடா கிழவர். அவரை ஒரே பார்வையில் அடக்கி விட்டான் மின்னவன். பிறகு அவனது பார்வை கனிவாக மங்கம்மாளை நோக்கித் திரும்பியது
“படைத்தலைவரே! தரையிலா! அங்கு அரண்மனையில் பஞ்சனை ஆசனத்தில் அமர்பவர் இங்கு இந்த ஏழைகளின் குடிலில் தரையில் அமர்வது நியாயமா?”
“பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள் கிளம்பி விடுகிறேன்” எனப் பொய்க் கோபம் காட்டினான் மின்னவன்.
“படைத்தலைவரே!” என இருவரும் பதறினார்கள்
“இந்த கிழவிக்கு இதே வேலை! பார் அவர் கோபித்துக் கொண்டார். அவர் இந்த மண்ணுக்குரியவர் மண்ணும் அவருக்கு ஆசனம் தான் நீங்கள் அமருங்கள் படைத்தலைவரே!” என்றார் அச்சடா கிழவர்
“ஆமாம்! ஆமாம்! நான் தான் அனைத்திற்கும் காரணம் ஆரம்பித்தது நீர்தான் கிழவரே!”
“ஆரம்பித்து விட்டீர்களா..?” கண்டிக்கும் தொனியில் கேட்டான் மின்னவன்.
அவனிடமிருந்து குரல் வந்ததும் கிழவியும் கிழவரும் அமைதியானார்கள். பிறகு அவன் மங்கம்மாளிடம் பேசத் தொடங்கினான்
“என்ன தாயே நலமாக இருக்குறீர்களா?”
“எனக்கு என்ன? நன்றாகத்தான் இருக்கிறேன்” என்ற மங்கம்மாள் கிழவி சலிப்புடன் “அந்தப் பரமசிவன் தான் என் தலையில் ஒன்றை கட்டி விட்டானே அதன் தொல்லையை தான் தாங்க முடியவில்லை” என்றார்
மங்கம்மாள் கிழவி சாடையாக தன்னைத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்பதை அறிந்ததும் அச்சடா கிழவருக்கு கோபம் மூக்கின் மேல் ஏறி நிற்க
“அச்சடா உன் தலையில் எண்ணை கட்டியவன் பரமசிவன் அல்ல கிழவி உன் அப்பன் கோனவாயன். அவன் தான் என்னை ஏமாற்றி உன்னை என் தலையில் கட்டிவிட்டான்” வெடுக்கென கூறினார்
“ஓகோ! அப்படியா? என்னை மணமுடிக்க நஞ்சுண்டு அடம்பிடித்தது மறந்துவிட்டதா” எதிர் தாக்குதல் கொடுத்தார் மங்கம்மாள் கிழவி.
“உண்ட நெஞ்சு அன்றே வேலை செய்திருந்தால் உன்னுடன் இத்தனை வருடப் போராட்டம் நடந்து இருக்காது!”
“இப்போது மட்டும் என்ன கெட்டு விட்டது செய்து தொலையும்” என கிழவனும் கிழவியும் சண்டைக் கோழிகளாக மாறி ஒருவரை ஒருவர் கொத்திக் கொல்வதை சிரிப்புடன் இரசித்துக்கொண்டிருந்தான் மின்னவன்.
“கேட்டீர்களா படைத்தலைவரே! இவள் பேசும் பேச்சை?”
“அவர் எப்போதும் என் பக்கம் தான் என்ன படைத்தலைவரே?”
“யார் சொன்னது? அவர் எப்போதும் என் பக்கம் நிற்பவர் இந்தப் பிரச்சினைக்கு தாங்களே ஒரு தீர்வு கூறுங்கள் என் மீது தவறா அந்தக் கிழத்தியின் மீது தவறா?”
மின்னவன் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துவிட்டு
“உங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை அப்படித்தானே?” எனக் கேட்டான்
“ஆமாம்!” திடமாக பதிலளித்தனர் இருவரும்
“ஓகோ! அப்படியென்றால் இருவருக்கும் எத்தனை வாரிசுகள்?”
“பதினைந்து”
அதைக் கேட்ட பிறகு குலுங்கி குலுங்கி சிரிக்க தொடங்கினான் மின்னவன். சிரித்துமுடித்தவன், தான் கேட்ட கேள்வி அங்கு பெரும் சோகத்தை உண்டாக்கக்கூடியது என்பதை மறந்துவிட்டான்.
காதலித்து மணமுடித்து பதினைந்து முத்துக்களைப் பெற்றெடுத்த இம்முதிய தம்பதியினர் அந்தப் பதினைந்து முத்துக்களையும் நாட்டுக்காக போர்க்களத்தில் தொலைத்து விட்டு இப்படி தன்னந்தனியே ஒருவர் மீது ஒருவர் அன்பும் அக்கறையும் கொண்டு தனித்து வாழ்ந்து வருபவர்கள். ஆதலால் இவர்கள் இருவருக்கும் தன் மன சிம்மாசனத்தில் ஓர் சிறப்பிடம் மின்னவன் எப்போதும் வைத்திருக்கிறான்.
குபுகுபுவென எழுந்த சிரிப்பை சிறிது நேரத்தில் படைத் தலைவன் நிறுத்தியதை அறிந்த இருவரும் மனதில் ஆழிப்பேரலைப் போன்று எழுந்த சோகத்தை மறைத்துவிட்டு அவனிடம் பேசத் தொடங்கினார்கள்
“படைத்தலைவரே! பதினைந்து மகன்களையும் எங்கள் பாண்டிய நாட்டிற்காக இழந்ததை எண்ணி நாங்கள் இன்றும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக ஒருபோதும் நாங்கள் வருந்த மாட்டோம். என் பதினைந்து முத்துக்களும் வீர சொர்க்கம் புகுந்தன! யாருக்குக் கிட்டும் இப்படி ஒரு குடுப்பனை! இன்றும் நாங்கள் மதுரை நகரின் வீதியில் நடந்துச் சென்றால் முத்துக்களின் பெற்றோர் என போற்றும் அளவிற்கு நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் பெருமை சேர்த்து விட்டு சென்றுள்ளார்கள்! அவர்களது பிரிவு சோகத்தினை தந்தாலும் அதே அளவு மகிழ்ச்சியும் தருகிறது. தாங்கள் பேசியது எங்கள் மனதை ஒருபோதும் புண்படுத்தாது! குற்ற உணர்வு வேண்டாம் படைத்தலைவரே” என பேசி முடித்த மங்கம்மாள் மின்னவனின் மனதை மாற்ற
“எல்லாம் இந்தக் கிழவரால் தான் இவரால் தான் பதினைந்து பிள்ளைகள்!” என மீண்டும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்
“அடியேய் மங்கம்மா! நானா? நானா காரணம்? என்னை மயக்கியவளே நீதான்!”
“ஆமாம் இவர் பெரிய ஆணழகன் மயக்குகிறார்கள்”
அதைக்கேட்டு மின்னவனின் புன்னகை மீண்டும் பூத்தது
“இவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாது மின்னவரே வயது முதிர்ந்து பார்வை மங்கிய இந்த காலத்தில் கூட என்னை சுருக்குப் பையில் வைத்து இருக்கிறாள் என்றால் அந்த காலத்தில் யோசித்துப் பாருங்கள்! கண்களில் மை தீட்டி சடை பின்னி அலங்காரம் செய்து கொண்டு நான் காய்கறிகள் வாங்க அங்காடிக்கு வரும் வேளையில் இவளும் வருவாள் என்னை கண்களாலேயே மயக்கி விடுவாள் பிறகு இரகசியமாகச் சந்திக்க அழைப்பு வேறு விடுப்பாள்! இத்தனையும் செய்துவிட்டு இப்படி பேசுகிறாள். பார்த்தீர்களா!” என அச்சடா கிழவர் கூறியதைக் கேட்டதும் படைத்தலைவன் மின்னவனின் கண்கள் விரிந்தன. எதையோ மறந்தவனுக்கு அது சட்டென நினைவுக்கு வந்ததும் பட்டென எழுந்து நின்றான்.
“என்னாயிற்று படைத்தலைவரே?”
தங்க மீன் இன்னும் வளம் வரும்…
3 Comments
நல்ல துவக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள். சில எழுத்துப்பிழைகளைத் தவிர்த்தால் நன்றாக இருக்கும். அதுவும் இந்த மாதிரி சரித்திரக் கதைகளுக்கு அது அவசியம் கூட. இது அறிவுரை அல்ல. கருத்து தான்.
பாய்ந்து வரும் அருவிபோல் சொல்வளம்!..
தங்குதடை ஏதுமில்லாத நதிபோல் நடை!
சிறகடிக்கும் பறவைபோல் கற்பனைத் திறன்!
அனைத்துக்கும் மேலாகத் தமிழ்பால் ஈர்ப்பு!
இளம் தென்றலாய் எழும்புகின்ற வில்லரசன்
இருபது வயதில் திறன்மிகு எழுத்தாணி!
இப்புரவி பாய்ச்சலில் தனியொரு பரணி!
இதன் எழுத்து ஆளவேண்டும் தமிழ்த் தரணி!
-கொற்றவன்
வெகு அழகான ஆரம்பம். தொடருங்கள் அன்புடன் சின்னக் கண்ணன்