தாத்தா மரம் | ஆர்னிகா நாசர்

 தாத்தா மரம் | ஆர்னிகா நாசர்

விஞ்ஞான சிறுகதை தொடர் – 4

கிபி 2042ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி காலை ஒன்பதுமணி

இந்தியாவின் கேரள கடற்கரை கொச்சியிலிருந்து 496கிமீ தொலைவில் லட்சத்தீவுகள் அமைந்திருந்தன. 36தீவுகள் அடங்கிய யூனியன் பிரதேசம் லட்சத்தீவுகள்.

அந்த குளிர்சாதன வசதியுள்ள சுற்றுலா பேருந்தில்16மாணவர்கள் 16மாணவிகள் இரு ஆசிரியர்கள் அமர்ந்திருந்தனர். பேருந்துக்குள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.

கோவை பள்ளி மாணவர்கள் சுற்றுலா நோக்கத்துடன் லட்சத்தீவுகள் வந்திருந்தனர். கோகுலபிரசாத் ஓட்டுநருக்கு பின்னிருக்கையில் அமர்ந்திருந்தான், வயது15 உயரம் 155செமீ. சில வயதுகள் கூடிய சின்சான் சாயல். தலைகேசத்தை நடுவகிடு எடுத்து வாரியிருந்தான். பவர் கிளாஸ்.

கோகுலபிரசாத் அருகில் பௌசியா இக்பால் அமர்ந்திருந்தாள். அவளுக்கு வயது 15. சந்தன நிற அழகி.

பேருந்து ஒருஇடத்தில் நின்றது. வழிகாட்டி அழகிய ஆங்கிலத்தில் அறிவித்தார். “எல்லாரும் இறங்குங்க. நாம பாக்க வேண்டிய எடம் வந்திருச்சு!”

சங்கீதமாய் சிரித்தபடி அனைவரும் இறங்கினர்.

“இந்த செயற்கை காடு 40ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குறுங்காட்டில் நூறுவகை மரங்கள் உள்ளன. அதோ தெரிகிறது பாருங்கள் ஒரு கண்ணாடி கூடாரம் அங்கு இருக்கும் ஒற்றை மரத்தைதான் பார்க்க வந்திருக்கிறோம்!”

கண்ணாடி கூடாரம் அரைக்கோளமாய் கவிழ்ந்திருந்தது. கோகுல பிரசாத் பௌசியாவை இழுத்துக் கொண்டு ஓடினான்.

கண்ணாடிக் கூடாரத்துக்குள் பிரவேசித்தனர்.

கூடாரத்தின் நடுவில் அந்த மரம் நின்றிருந்தது. மரத்தின் உயரம் 70அடி, மரத்தின் தண்டுபகுதி 13அடி விட்டத்துடன் கூடிய வட்டமாய் தடித்திருந்தது. நாற்பதடி உயரத்துக்கு மரத்தின் தண்டு நீண்டிருந்தது. மரத்தின் உச்சியில் பாப்செய்யப்பட்ட தலைகேசமாய் கிளைகள். பூக்கள் பச்சை நிறத்திலும வெள்ளைநிறத்திலும் மலர்ந்திருந்தன. பழங்கள் சிவப்பு இளஞ்சிவப்பு ஊதா நிறங்களில் பழுத்திருந்தன.

மரத்துடன் பல வயர்கள் இணைக்கப்பட்டிருநத்ன. வயர்கள். ஒரு கணினியுடன் கோர்க்கபட்டிருந்தன.

கணினியின் திரை மின்னி பளபளத்தது. அதில் பல எழுத்துகள் பச்சை பூரானாய் ஓடின.

“மாணவமாணவியரே! வாருங்கள் வந்து இந்த மரத்தின் முன் கூடுங்கள்… நாம் இந்த தாத்தாமரத்தைதான் பார்க்க வந்திருக்கிறோம்!”

அனைவரும் வந்து நின்றனர். மரத்திலிருந்து ஒரு நறுமணம் கமழ்ந்தது. யாரோ சர்ப்பசீறலாய் மூச்சு விடுவது போலவும் ஆயிரம் கண் கொண்டு பார்ப்பது போலவும் பிரமை கூடியது.

“மாணவசெல்வங்களே! இந்த மரத்தின் வயது 6050. இது பூமியின் வயது மூத்தமரம். இந்த மரங்கள் பொதுவாக மேற்கு மொராக்கோவிலும் கேனரி தீவுகளிலும்தான் அதிகம் காணப்படும். இந்த மரத்தின் பெயர் ட்ராகன் மரம். இதன் தாவரவியல் பெயர் டிராசினா டிராக்கோ. இந்த மரம் பத்து வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும். இப்போது பூத்துள்ளது. இந்த மரத்தை ஒரு விஞ்ஞானி தத்தெடுத்துள்ளார். இந்த மரம் மனிதரை போல பார்க்கும் இதன் தண்டுபகுதி முழுக்க கண்கள்தான். கணினி வழியாக இது நம்முடன் பேசும்… இந்த மரத்தின் ஐக்யூ 500. இதனை ஒரு ஆண் மரமாக கருதி இதற்கு பெயர் வைத்துள்ளார்கள். இந்த மரத்தின் பெயர் பொன்முடி!”

கோகுலபிரசாத் ஓடிப்போய் மரத்தை அணைத்தான். நூற்றுக்கணக்கான முத்தங்களை இட்டான்.

“பொன்முடி! உன்னை சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!”

பிரசாத் பேசியது மொழிமாற்றம் செய்யப்பட்டு கணினி திரையில் ஓடியது. மரம் நினைப்பது வார்த்தைகளாகி அது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு செயற்கை குரல் நாண்மூலம் தமிழில் ஒலித்தது.

“செல்லக்குட்டி! நான் உன்னை சந்திப்பதில் பேரானந்தம் கொள்கிறேன். நீ கொடுத்த முத்தம் ஒவ்வொன்றும் என் வேர் வரை சென்று தித்தித்தது!”

மரத்தின் குரல் மிடுக்காக இருந்தது.

“ஆறாயிரத்து அம்பது வருஷமா ஒரே இடத்தில் நிற்கிறாயே… உனக்கு போரடிக்கவில்லையா?”

“நான் ஒரு இடத்தில் நின்றாலும் எனது கிளைகள் காற்றில் நடனமாடுகின்றன. எனது கிளைகளில் தினம் நூற்றுக்கணக்கான பறவைகள் வந்து இளைப்பாறுகின்றன. அவைகளின் பாடல்களை கேட்டு ரசிக்கிறேன். எனக்கு கால்கள் இருந்தால் இந்த தீவுக்கூட்டங்களை சுற்றி வருவேன். இல்லாத கால்களை பற்றி விசனப்பட நான் தயாரில்லை!”

“தத்துவார்த்தமாய் பேசுகிறாய்!”

“உன்னுடைய பெயர் என்ன சிறுவனே?”

“கோகுலபிரசாத்!”

“நீ எங்கிருந்து வருகிறாய்?”

“நான் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலிருந்து!”

“நீ எனக்கு மிகவும் பரிச்சயமானவன் போல் உணர்கிறேன். நாம் முன்பே சந்தித்திருக்கிறோமா?”

“நாமென்ன காதலன் காதலியா முன்னமே சந்தித்தோம் என உணர… மரங்கள் என்னுடன் படிக்கவில்லை… மரங்கள் என்னுடைய விளையாட்டு தோழர்கள் அல்ல… எந்த மரத்துக்கும் காக்காகடி கடித்து நான் கமர்கட் கொடுத்ததில்லை…”

“இதற்கு முன் லட்சத்தீவு வந்திருக்கிறாயா?”

“இல்லை.. இதுவேமுதல் தடவை!”

“உன்னுடைய தந்தை பெயர் என்ன?”

“கிருஷ்ணமூர்த்தி!”

“உன் தாத்தா பெயர் என்ன?”

“முகுந்தன்!”

“உன் கொள்ளுதாத்தா பெயர் என்ன?”

“தெரியாது!”

“உன் எள்ளுதாத்தா பெயர் என்ன?”

“தெரியாது!”

“சோம்பேறி மனிதர்கள் நீங்கள்! குறைந்தபட்சம் பத்து தலைமுறை தாத்தன்கள் பெயர்களையாவது நீ தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?”

“அதற்கு எங்களிடம் மனமும் இல்லை நேரமும் இல்லை. பணம் பணம் புகழ் புகழ் என்று ஓடிகொண்டே இருக்கிறோம்…”

“உனக்கும் எனக்கும் இடையே ஒரு கண்ணுக்கு தெரியாத பந்தம் இருப்பதாக உணர்கிறேன். எனக்காக ஒன்று செய்வாயா?”

“சொல்லுங்கள் செய்ய காத்திருக்கிறேன்!”

“ உனது தலைமுடி ஒன்று எடுத்து என் தண்டுபகுதியில் தேய்த்து விடு. உன் உமிழ்நீரை ஒரு கொத்து எடுத்து என் மேல் தடவி விடு!”

“எதுக்கு?”

“சொன்னதை செய்!”

தலை முடியை எடுத்து மரத்தின் தண்டுபகுதியில் தேய்த்தான் கோகுலபிரசாத். முடி பவுடராய் மரத்தில் ஒட்டிக் கொண்டது. தடவிய எச்சில் மரத்துக்குள் ஊடுருவியது.

கணினி திரையில் பொரபொரத்தது.

வளைந்து நெளிந்து ஒன்றை ஒன்று பின்னி பிணைந்த இரட்டை படிக்கட்டுகளாய் கோகுலபிரசாத்தின் மரபியல் வரைபடம் தோன்றியது.

பிரசாத்தின் மரபியல்வரைபடம் இடப்பக்கம் நகர்ந்தது. வலப்பக்கம் ஆயிரக்கணக்கான மரபியல் வரைபடங்கள் ஓடின.

நூறு நொடி கரைசலில் மரபியல் வரைபட ஒப்பீடு முடிந்தது.

“வாவ்!” என கும்மாளித்தது பொன்முடி.

கிளைகள் நீண்டு கோகுலபிரசாத்தை வாரி அணைத்துக் கொண்டது. ஒரு ட்ராகன் பழத்தை நீட்டியது. “தின்னு கோகுலபிரசாத்!”

“என்ன திடீர் பாசமழை பொழிகிறாய்!” ஒருமைக்கு தாவினான்.

“பேராண்டி! ஒரு வகையில் பார்த்தால் நானும் உனக்கு தாத்தன் முறைதான். முந்நூறு தலைமுறைக்கு முன் உன் தாத்தனுக்கு தாத்தன் ஆதன் இங்கு காடுகளில் ஆதிவாசியாய் திரிந்தான். ட்ராகன் பழத்தை தின்றுவிட்டு கொட்டையை தனது உமிழ்நீருடன் மண்ணில் புதைத்தான். நான் மரமாய் முளைத்தேன். அவனது உமிழ்நீர் என்னுள் இரண்டற கலந்துள்ளது. ஆதனின் டிஎன்ஏவையும் உன் டிஎன்ஏவையும் ஒப்பிட்டு அவன் உன் தாத்தாவுக்கு தாத்தா என் கண்டுபிடித்தேன். எனக்கு உயிர் கொடுத்தது உன் முந்நூறாவது தலைமுறை தாத்தா. உங்கள் குடும்பத்துக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்!”

“தீவில் ஆதிவாசியாய் வசித்த என் எதாவது ஒரு தலைமுறை தாத்தா தமிழ்நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார். நீ என் தாத்தாவின் நண்பன். உன்னை சந்தித்தது டைம் ட்ராவல் போய் என் தாத்தாவை சந்தித்தது போல… என் தாத்தா ஆதனின் புகைப்படம் எனக்கு கிடைக்குமா?”

“இரு… என் நினைவுதிரளிலிருந்து உன் தாத்தா ஆதனின் உருவத்தை அகழ்ந்தெடுத்து கணினி மூலம் பிரிண்ட் அவுட் எடுத்து தருகிறேன்!”

ஐந்து நிமிட இடைவெளியில் கணினி ஒரு புகைப்படத்தை துப்பியது. ஆதன் மரஉரியை கோவணமாக கட்டியிருந்தார். தலையில் ஜடாமுடி. முகத்தில் திரிதிரியாய் தாடி. தோளில் வேட்டையாடிய மானின் மாமிசம்.

ஆதன்தாத்தா புகைப்படத்தை வைத்துக்கொண்டு கூத்தாடினான் கோகுலபிரசாத். பொன்முடியுடன் சுயமி எடுத்துக் கொண்டான்.

பொன்முடி நெட்டுயிர்த்தது. “பார்த்தாயா கோகுலபிரசாத்? உன் தாத்தா 6050ஆண்டுகளுக்கு முன் ஒரு மரம் நட்டார். அதன் பயனாய் உனக்கு உன் தாத்தாவின் புகைப்படம் கிடைத்தது. அவரை பற்றியும் அறிந்து கொண்டாய். எனக்கு நன்றி சொல்ல ஆசைபட்டாய் என்றால் எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும்!”

“சொல்லுங்க பொன்முடி தாத்தா!”

“உன் வாழ்நாளில் நீ கோடிமரம் நடவேண்டும். நீ நடும் மரங்கள் பின்னாளில் உன் பேரனை பேரனுக்கு பேரனை சந்தித்து அளவளாவும். மனிதனுக்கும் மரங்களுக்கும் உள்ள உறவுமுறை உன்னதமானது. மனிதன் ஒன்று கொடுத்தால் மரங்கள் நூறு கொடுக்கின்றன”

“கட்டாயம் கோடி மரம் நடுவேன் பொன்முடி தாத்தா!”

“நீ மட்டுமல்ல உன் நண்பர்களும் மரம் நடும் பணியை சிரமேற்கொள்ள வேண்டும்!”

“சரி!”

கிளைகளால் கோகுலபிரசாத்தை கட்டிக்கொண்டு ஆனந்தகண்ணீர் வடித்தது ட்ராகன்மரம். பிரியாவிடை பெற்றான் கோகுலபிரசாத்

-ஊர் திரும்பியதும் நூறு நண்பர்கள் உதவியுடன் ஆதன் தாத்தா மரம் நடும் திட்டத்தை ஆரம்பித்தான் கோகுலபிரசாத்.

ஒவ்வொரு மரம் கோகுலபிரசாத் நடும்போதும் பொன்முடி ட்ராகன்மரம் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி பரவசப்பட்டது.

யார் கண்டது? கோகுலபிரசாத் நடும் ஆலமரம் முன்னூறு வருடங்கள் கழித்து கோகுலபிரசாத்தின் பேரனை சந்தித்து அளவளாவினாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை! ●

கமலகண்ணன்

2 Comments

  • ஆச்சர்யமாக இருக்கிறது.

    கோகுலின் தாத்தாவின் உமிழ்நீரில் கலந்து வளரப்பட்ட பொன்முடி, அவனைப் பார்த்ததும் பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, மரம் நடுவதற்கும் ஊன்றுகோலாக அமைந்து விட்டதென்று

    வாழ்த்துகள் சார்💐💐💐

  • புதுமையான கதை மூலம் மரம் நடுவதின் அவசியத்தை சொல்லி இருக்கிறார் ஆசிரியர்… புருவம் உயர்த்தி உதடுகள் வாவ் சொல்ல வைக்கிறது… அற்புதம்… நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...