களை எடுக்கும் கலை – 1 | கோகுல பிரகாஷ்

 களை எடுக்கும் கலை – 1 | கோகுல பிரகாஷ்

அத்தியாயம் – 1

நேரம் காலை 8:00.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்க, அந்த ஞாயிற்றுக் கிழமையின் காலை வேளையில், சூரியன் மெல்லக் கண் விழித்துக் கொண்டிருந்தது. கள்ளக்குறிச்சி நகரின், புறநகர் பகுதியில் இருந்த துர்கா காலனியின், கடைசித் தெருவில் இருந்தது அந்த அபார்ட்மெண்ட். படபடவென சதாசிவத்தின் வீட்டுக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, அந்த அபார்ட்மெண்டில், அதே வரிசையில் இருந்த பல கதவுகள் திறந்து கொண்டன. சில தலைகள் வெளியே எட்டிப் பார்க்கவும் தொடங்கின.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, எரிச்சலுடன் கண் விழித்த சதாசிவம், மெல்லக் கதவை நோக்கி நடக்கத் தொடங்கினார். வேகமாக கதவைத் திறந்தவர், வெளியே நின்றிருந்த பரிமளத்தை பார்த்ததும் கோபமாக கத்தத் தொடங்கினார்.

”காலிங் பெல் எதுக்கு வச்சிருக்கு… எதுக்கு இப்படி கதவு போட்டு தட்டுற… என்ன வேணும் உனக்கு?”

“ஐயா அங்க, அங்க…” பரிமளத்தின் கண்களில் மிரட்சியும், வார்த்தைகளில் பயமும் நிரம்பிக் கிடந்தது.

“என்ன அங்க இருக்கு…? சொல்லித் தொலையேன்…” சதாசிவத்தின் குரலில் தூக்கம் தொலைந்து போனதன் எரிச்சல் எதிரொலித்தது.

“ஐயா அங்க ஒரே ரத்தமா இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” இன்னும் பதட்டம் தணியவில்லை பரிமளத்தின் குரலில்.

‘ரத்தம்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சற்றேத் திகிலுடன் வெளியே எட்டிப் பார்த்தவர் கண்களில், பக்கத்து வீட்டுக் கதவுக்கு வெளியில், உறைந்து போன நிலையில் இருந்த ரத்தக் கோடு தென்பட்டது.

வேகமாக வெளியே வந்தவர், கதவைத் தள்ளிப் பார்த்தார், திறக்கவில்லை. ஜன்னலின் அருகே வந்தவர், ஜன்னலைத் தள்ள, உட்புறம் தாழ் போடாமல் இருந்ததால், திறந்து கொண்டது. ஜன்னலின் வழியே எட்டிப் பார்க்க, ஹாலில் உள்ள சோஃபாவில், தலை தொங்கிய நிலையில், கழுத்திலிருந்து இரத்தம் வழிந்து, தரையில் பரவியிருக்க, சர்வ நிச்சயமாய் செத்துப் போயிருந்தார், பரந்தாமன்.

அந்தக் காட்சியை காண சகிக்காமல், நெஞ்சைப் பிடித்தபடி, பின்னால் திரும்ப, அதற்குள் ஒரு கூட்டமே கூடியிருந்தது அங்கே. பரந்தாமன் செத்துப் போனது உண்மை தான் என்பது ஊர்ஜிதமாக, பரிமளம் வாயில் சேலையைத் திணித்துக் கொண்டு விசும்பத் தொடங்க, கூட்டத்திலிருந்து ஆச்சரியத்துடனும், அனுதாபத்துடனும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

“பரந்தாமன் சாருக்கா இப்படி ஒரு நெலமை… நம்பவே முடியலையே…?”

“ரொம்ப நல்ல மனுஷன், எல்லாருக்கிட்டையும் ரொம்ப அன்பா பேசுவாரே… இவருக்கு கூடவா எதிரிங்க இருப்பாங்க…?”

“உயிர் இருந்தாலும் இருக்கும், கதவை உடைச்சு பாத்துடலாமா…?”

“வேணாம், வேணாம்! இது கொலைக் கேஸ். யாராவது முதல்ல போலிஸுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க…”

யாரோ மொபைலில் போலிஸைத் தொடர்பு கொள்ள, கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது; கூச்சலும் குழப்பமுமாய், கூட்டத்தின் சலசலப்பும் தொடர்ந்தது.

“யாரு கடன் கேட்டாலும் இந்தக் காலத்திலும், இல்லைன்னு சொல்லாம கொடுக்குற மஹாபிரபுவாச்சே…”

“வீட்டுல ஏதாவது திருட்டு போயிருக்கா என்னன்னு தெரியலையே…”

“உள்ள லாக் ஆகியிருக்கு… கொலை பண்ணிட்டு எப்படி தப்பிச்சு போயிருப்பான்…?”

“இது ஆட்டோமேடிக் டோர் தானே.. வெளியே போனதும், தானாவே லாக் ஆகியிருக்கும்.”

“ஏம்மா பரிமளம்… உன்கிட்ட ஏதாவது சாவி இருக்கா…?” சதாசிவத்தின் குரல்.

விசும்பிக் கொண்டிருந்தவள், வாயிலிருந்து சேலையை எடுத்துவிட்டு, “இல்லைங்க ஐயா, நான் வந்து காலிங்பெல் அடிப்பேன். ஐயா வந்து கதவைத் தொறப்பாரு… நான் வீட்டை சுத்தம் பண்ணிட்டு, சமைச்சு வச்சிட்டு போயிடுவேன்.” என்று சொல்லிவிட்டு, மீண்டும் வாயில் சேலையை வைத்துக்கொண்டு விசும்பத் தொடங்கினாள்.

“கடைசியா நீ எப்போ அவரைப் பாத்த…?” சதாசிவம் போலிஸ் அதிகாரியைப் போல் விசாரிக்கத் தொடங்கினார்.

அவள் ஏதோ சொல்லத் தொடங்கும்போது, வெளியே போலிஸ் வாகனத்தின் சைரன் சத்தம் கேட்கத் தொடங்கியது. சத்தம் கேட்ட நொடியிலேயே, கூட்டத்தின் அடர்த்தி குறையத் தொடங்கியது. திறந்திருந்த கதவுகளும் ஒவ்வொன்றாக மூடிக் கொண்டன.

காரிலிருந்து இன்ஸ்பெக்டர் ராம்குமார் இறங்கி, காரைச் சூழ்ந்த கூட்டத்தை பார்த்து விட்டு, பின்னால் நின்றிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களை பார்த்து கண்ணசைக்க, அவர்கள் கூட்டத்தை கலைக்கத் தொடங்கினர். “எந்த ஃப்ளோர்யா…?” என்று கேட்டவாறே, மேலேயிருந்த கூட்டத்தை பார்த்தவர், நேராக மூன்றாவது மாடியை நோக்கி நடக்கத் தொடங்கினார். போலிஸை பார்த்ததும், எஞ்சியிருந்த கூட்டத்தில் இருந்தும் ஓரிருவர் கழன்றுக் கொள்ள, இன்ஸ்பெக்டர் அந்த அரதப் பழசான கேள்வியை கூட்டத்தைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்.

“பாடியை மொதல்ல பார்த்தது யாரு…?”

அனைவரும் திரும்பிப் பார்க்க, கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்த பரிமளம், முன்னால் வந்தாள்.

“நான் தாங்கய்யா…”

“உன் பேர் என்ன…?”

“பரிமளம்”

“சரி! இங்கேயே இரு, எங்கேயும் போயிடாத…” என்று சொல்லிக்கொண்டே, காலால் கதவைத் தள்ளிப் பார்த்தார்.

“ஆட்டோமேட்டிக் டோர் சார், கதவை சாத்தினா, தானா லாக் ஆயிடும்” என்றவாறே பக்கத்தில் வந்தார் சதாசிவம்.

“நீங்க…?”

“சார் என் பேரு சதாசிவம், ரிடைர்டு போஸ்ட் மாஸ்டர், பக்கத்து வீட்டுல தான் குடியிருக்கேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தவரை சைகை காட்டி நிறுத்தியவர், “இந்தக் கதவுக்கு டூப்ளிகேட் சாவி இருக்கா…?” என்று கேட்டார்.

“இல்லை சார், இது அவரோட சொந்த வீடு. டூப்ளிகேட் சாவி இருந்தாலும் அவர்கிட்ட தான் இருக்கும்.”

கான்ஸ்டபிளிடம் கதவை உடைக்க ஏற்பாடு செய்ய சொன்னவர், “கதிரவன் வந்துட்டாரா, தகவல் சொன்னீங்களா, இன்னும் இல்லையா…?” எனக் கேட்க,

“பக்கத்துல ஒரு கேஸ் விஷயமா போயிருக்கார் சார், பிங்கர் பிரிண்ட்டுக்கும், போலீஸ் டாக்குக்கும், சொல்லிட்டு வந்துட்டே இருக்கார் சார்.”

“சரி, கதவை ஓப்பன் பண்ணதும் எனக்கு சொல்லு…” என்றவாறே, பரிமளத்தையும், சதாசிவத்தையும் ஓரங்கட்டினார்.

“சொல்லுமா… உன் பேர் என்ன சொன்ன…?” மீண்டும் அதே கேள்வி.

“பரிமளம்”

“உனக்கும் அவருக்கும் என்ன உறவு?”

“ஒறவுலாம் இல்லீங்க… நான் வீட்டு வேலை செய்யுறேன், வீடு வாசல் பெருக்கி சோறாக்கி வச்சிட்டு போவேன்… வழக்கம் போல காலையில வந்தேன், கால் செருப்புல ஏதோ பிசுபிசுன்னு ஒட்டவும், என்னன்னு பார்த்தேன்… செவப்பா ரத்தம், சரி எதோ எலிய கிலிய அடிச்சுப் போட்டிருப்பாங்கன்னு நெனைச்சிட்டு காலிங்பெல் அடிச்சேன், ஆனா கதவைத் தொறக்கவே இல்லை. அதான் பயந்துட்டு, பக்கத்து வீட்டு ஐயாவை கூப்பிட்டேன்.” இன்ஸ்பெக்டரின் தொடர் கேள்விகளுக்கு பதில் சொல்லி சொல்லி, பரிமளம் களைத்து போன நிலையில், கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரை நோக்கி வந்தார்.

“சார், கதவை ஓப்பன் பண்ணியாச்சு, கதிரவன் சார் வந்து, ‘சீன் ஆஃப் கிரைம்’ பாத்துட்டு இருக்காரு.”

ராம்குமார் எழுந்தவுடன், சதாசிவமும் அவரைப் பின்தொடர்ந்தார்.

“என்ன கதிர், சீன் ஆஃப் க்ரைம் என்ன சொல்லுது…?”

இன்ஸ்பெக்டரை பார்த்ததும், ஒரு விரைப்புக்கு வந்த கதிரவன், உத்தியோகபூர்வமான சல்யூட் அடித்தவராய், “சார், கத்தியால கழுத்த அறுத்துருக்காங்க சார், பெருசா எதிர்ப்பு இருந்த மாதிரியும் தெரியல. ஒரு வேளை போதையில இருந்திருக்கலாம்.”

“ஓகே கதிர், நீங்க ஃபார்மாலிட்டிஸ முடிச்சு, பாடியை போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிட்டு, சின்னதா ஒரு ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டு, ஸ்டேஷனுக்கு வாங்க…”

“ஓகே சார்!”

“சார்! நீங்க என்கூட ஸ்டேஷன் வரைக்கும் கொஞ்சம் வாங்க…” என்று சதாசிவத்தை ராம்குமார் அழைக்க, “சார், இங்கேயே பேசலாமே…” என்று தயங்கினார்.

“ஒன்னும் பயப்பட வேண்டாம், இங்க ஃப்ரியா பேச முடியாது, வாங்க…” என்று வலியுறுத்த, வேறு வழியில்லாமல் அவருடன் கிளம்பினார் சதாசிவம்.

ஸ்டேஷனில் நுழைந்ததும், தயங்கிக் கொண்டே நின்ற சதாசிவத்திடம், “அட! நீங்க என்ன சார், கொலை பண்ணுன மாதிரி பயந்துட்டு நிக்குறீங்க, வாங்க! வந்து இப்படி உக்காருங்க…” என்று தனக்கு முன்னால் இருந்த நாற்காலியை காட்டினார், ராம்குமார்.

“உங்களைப் பத்தி சொல்லுங்க சார். முதல்ல டீ சாப்பிடுங்க… அப்புறம் பேசலாம்…”

“காஃபி சொல்லுங்க சார். காலையில எழுந்ததுல இருந்து பச்சைத்தண்ணி பல்லுல படல….”

காஃபி வந்ததும், அதை சதாசிவத்திடம் நீட்டியவாரே, அவர் முகத்தை பார்த்ததும், இன்ஸ்பெக்டரின் பார்வையின் அர்த்தம் உணர்ந்து பேசத் தொடங்கினார் சதாசிவம்.

“சார், நான் ரிடைர்டு போஸ்ட் மாஸ்டர். சொந்த ஊரு இந்தக் கள்ளக்குறிச்சி தான். பதினைஞ்சு வருஷமா, இதே துர்கா காலனியில தான் இருக்கேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தான், இந்த அப்பார்ட்மெண்ட் கட்டுனாங்க. என்னோட செட்டில்மென்ட் பணத்தை வச்சி, இந்த ஃப்ளாட்டை வாங்குனேன். எனக்கு மனைவி, ஒரு பையன் இருக்காங்க. பையனுக்கு கல்யாணம் ஆகி, நாலு வயசுல ஒரு பொண்ணு இருக்கா. இப்போ எல்லாரும் மைசூர்ல ஒரு ஃபங்ஷனுக்கு போயிருக்காங்க, வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்.”

“நீங்க ஃபங்ஷனுக்கு போகலையா…?”

“இல்லை சார், இப்போல்லாம் ரொம்ப தூரம் பயணம் பண்ண முடியலை.”

சரி! இப்போ பரந்தாமனைப் பத்தி சொல்லுங்க…”

“சொந்த ஊர் திருநெல்வேலி பக்கம்னு நெனைக்கிறேன். இந்த அப்பார்ட்மெண்ட் கட்டுன உடனே அவரும், ஃப்ளாட் வாங்கிட்டு இங்க வந்துட்டாரு. எக்ஸ்-மிலிட்டெரிமேன், ஒண்டிக்கட்டை, குழந்தை இல்லை. மனைவியும் ரொம்ப வருஷம் முன்னாடியே இறந்துட்டாங்க. எல்லாருக்கிட்டயும் நல்லாப் பழகுவார். அப்பார்ட்மெண்ட்ல இருக்க குழந்தைங்களுக்கெல்லாம் கூட அவரை ரொம்ப பிடிக்கும். அவ்ளோ நல்ல மனுஷன்.”

“சரி, அவருக்கு குடிப்பழக்கம் இருந்துச்சா…?”

“மிலிட்டரில இருந்தவர், ரெகுலரா ராத்திரியில குடிப்பார்”

“நீங்க கம்பெனி குடுப்பீங்களா அவருக்கு…?”

“சார்….”

“சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன். சொல்லுங்க…”

“ரெண்டு பேரும் ஒன்னா குடிச்சிருக்கோம் சார்… ஆனா அடிக்கடி இல்லை.”

“நேத்து ராத்திரியும் ரெண்டு பேரும் ஒன்னா தான் குடிச்சீங்களா…?”

“……”

“சொல்லுங்க சார், அதான் ஸ்மெல் இன்னும் அடிக்குதே…”

“நேத்து நான் குடிச்சது உண்மைதான். ஆனா, அவரோட சேர்ந்து குடிக்கலை.”

“ஏன், என்ன பிரச்சனை உங்களுக்குள்ள…?”

“சார், பிரச்சனைலாம் ஒன்னும் இல்லை. நான் தான் சொன்னனே, எப்பவாவது தான் அவர்கூட குடிப்பேன். ஆனா, நேத்து அவர்கூட குடிக்கலை.”

“அப்படியா…?” அவரை நம்பாத பார்வைப் பார்த்தார் ராம்குமார்.

“நீங்க கேக்குறதை பாத்தா, என்மேல் சந்தேகப்படுற மாதிரி இருக்கு.’

“இது நார்மல் என்கொய்ரி தான் சார், பயப்பட வேண்டாம். மத்தவங்கள விட, பக்கத்து வீட்டுக்காரர், உங்களுக்கு நெறைய விஷயம் தெரியுமேன்னு தான் உங்களை கேட்டுட்டு இருக்கேன். அந்த வேலைக்காரி பரிமளம் எப்படி…?”

“அதிகம் தெரியாது சார், அவ வர்றதும் தெரியாது, போறதும் தெரியாது… ஆனா அடிக்கடி, பரந்தாமன் கிட்ட ஏதாவது காரணம் சொல்லி பணம் வாங்கிட்டு போவா…”

“எப்பவாவது பணம் தர மாட்டேன்னு சொல்லியிருக்காரா…?”

“அதெல்லாம் தெரியலை சார், ஆனா, ‘பாவப்பட்ட பொண்ணு, குடுக்குறது தப்பில்லை’ன்னு, பரந்தாமன் சொல்லியிருக்கார்…”

“அவர் வீட்டுல பார்த்தவரைக்கும், பணம், நகைக்காக கொலை நடந்த மாதிரி தெரியல… வேற என்ன காரணமா இருக்கும்னு நெனைக்குறீங்க…?”

“எனக்கு தெரிஞ்சு யார் கூடவும் அவருக்கு விரோதம் இல்லை. என்ன காரணம்னு தெரியலை சார்…”

“ஓகே சார், நீங்க போகலாம்… சிரமத்திற்கு மன்னிக்கவும்…”

“பரவாயில்லை சார், ஏதோ என்னால முடிஞ்ச உதவி…” ஸ்டேஷன் வாசல் வரை சென்றவர், தயங்கியவாறே திரும்பி பார்த்தார்.

“என்ன சார், ஏதோ சொல்லத் தயங்குற மாதிரி இருக்கு… சும்மா சொல்லுங்க…”

“ஏதோ சொல்லனும்னு நெனைச்சேன். அதுக்குள்ள மறந்துட்டேன். வயசாகுதில்லையா…?”

“சரி, ஞாபகம் வந்ததும் ஃபோன் பண்ணுங்க…”

“ஓகே சார்…” என்று சொல்லிக்கொண்டே வெளியேச் செல்ல எத்தனித்தவர், மீண்டும் திரும்பினார், “சார், எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கு…”

ஆர்வமாய் நிமிர்ந்து உட்கார்ந்தார் இன்ஸ்பெக்டர் ராம்குமார்.

களை கலைவது தொடரும்

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...