விக்ரம் நடித்த ‘மகான்’ படத்துக்கு தமிழருவி மணியன் கண்டனம்

 விக்ரம் நடித்த ‘மகான்’ படத்துக்கு தமிழருவி மணியன் கண்டனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்  விக்ரமும் அவரது மகன் துருவ்வும் இணைந்து நடித்துள்ள படம்  ‘மகான்’ இந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர்.

இந்தப் படம் சார்ந்த இயக்குநரோ,  தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர் களோ காந்தியத்தின் அரிச்சுவடி கூட அறியாதவர்கள். இன்றைய இளைய சமூகத்திடம் காந்திய நற்பண்புகளை விதைப்பது இவர்கள் நோக்கமில்லை. நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும் என்பதற்குமேல் இவர்களுக்கு எந்தச்  சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. கருவாடு விற்றுப் பெற்ற பணம் நாறவா போகிறது என்று யோசிக்கப் பழகியவர்களிடம் ஒரு சமூகத் தையே புரட்டிப் போடும் புரட்சிகரமான கலைப் படைப்பையா நாம் எதிர்பார்க்க முடியும்?

 அரிதினும் அரிதாய் வரும் சில நல்ல படங்களை மட்டுமே பார்க்கும் வழக்க முடையவன் நான். சினிமாவைப் போன்று சக்திமிக்க ஊடகம் உலகத்தில் வேறு எதுவுமில்லை. படிப்பறியாப் பாமரனையும் எளிதில் சென்றடையும் ஆற்றல் சினிமாவுக்கு மட்டுமே உண்டு. கடைசி கிராமத்து மனிதனையும் பெரிதாகப் பாதிக்கும் ஆற்றல் மிக்க இந்த சினிமா உலகம் சமூகப் பொறுப் பற்று இன்று இயங்குவதுதான் மிகவும் கவலைக்குரியது.

மனிதர்களின் சிந்தனைகளைச் செழுமைப்படுத்துவதோ சமூகநலனை மேன் மைப்படுத்துவதோ  இன்றைய திரையுலகப்   பிரும்மாக்களின் நோக்க மில்லை. நாங்கள் கலைச்சேவை செய்ய வரவில்லை என்று கூச்சமற்றுப் பிரகடனம் செய்யும் ‘மகான்கள்’  

இவர்கள். எப்படியாவது மக்களை மலினமான மயக்கங்களில் ஆழ்த்தி,  அவர் களுடைய அடிமனத்தில் உறங்கிக் கிடக்கும் மன்மத உணர்வுகளை உசுப்பி விட்டு,   வன்முறை கலாசாரத்தை வளர்த்தெடுத்துக் காசு பறிப்பதையே தங்கள் வாழ்வியலாகக் கொண்ட இந்த நவீன நடிப்புச் சுதேசிகளிடம் உயர்ந்த கலைப் படைப்புகளை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?

காந்தியம் என்பது பின்பற்ற முடியாத ஒரு வறட்டுத் தத்துவம் இல்லை. அது ஓர் அற்புதமான நடைமுறை வாழ்வியல் என்பதை கார்த்திக் சுப்புராஜோ,  நடிகர் விக்ரமோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. உயர் ஒழுக்கங்களையும், நற்பண்பு களையும்,  புலனடக்கத்தையும்,  சக மனிதர்களின் நலன் குறித்த சிந்தனைகளை யும்,  சமத்துவத்தையும் பெரிதாகப் போற்றி வாழ்பவர்களே காந்தியைப் பின்பற்ற முடியும். சினிமா கலைஞர்கள் செல்வத்தைக் குவிக்கவும்,  மனம்போன போக் கில் இன்புற்று வாழவும்,  பொய்யான விளம்பர வெளிச் சத்தில் பூரித்துப்போகவும் கலைச்சேவை செய்ய வந்தவர்கள். இதில் விதி விலக்காகச் சிலர் இருக்கக்கூடும். விதிவிலக்குகள் பொது விதியாவதில்லை. 

காந்தி அரசியல்வாதிகளுக்கு இடையே ஒரு துறவியாகவும்,  துறவிகளுக்கு இடையே ஓர் அரசியல்வாதியாகவும் வாழ்ந்தவர். இந்தப் புரிதலோடு காந்தியை அறிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும். காந்தியம் ஒவ்வொரு தனி மனிதனுக்குரிய வாழ்க்கை விதிகளையும் வரையறை செய்து வைத்திருக்கிறது. சத்தியம், அகிம்சை,  பிரம்மச்சரியம்,  திருடாமை,  உடைமையின்மை, உடல் உழைப்பு, நாவடக்கம், அஞ்சாமை,  சமய ஒற்றுமை,  சுதேசி,  தீண்டாமை ஒழிப்பு ஆகிய  11  மகாவிரதங்களை வலியுறுத்துவதுதான் காந்தியம். இவற்றுள் எந்த ஒன்றையும் ஏற்று நடக்க இன்றைய இளைய தலைமுறையில் பெரும்பாலான வர்கள்  மனத்தளவில்கூடத் தயாராக இல்லை. இவர்களின் இச்சைகளுக்குத் தீனி போட்டுக் காசு சேர்ப்பதே இப்போதைய கலையுலகப் பிரும்மாக்களின் ஒற்றை  நோக்கமாகிவிட்டது.

காந்தி வலியுறுத்திய கொள்கைகளில் மதுவிலக்கு என்பது மிகவும் முக்கிய மானது. மதுவிலக்கு என்பது காந்தியத்தின் உயிர்த்தலம். ஏழ்மையின் கொடிய பிடியிலிருந்து வறியவர்களை மீட்டெடுப்பதற்காக வாழ்நாள் முழுவதும் மது வுக்கு எதிராகப் போராடியவர் மகாத்மா.  1930-இல் நடந்த சட்ட மறுப்புப் போரை முடிவிற்குக் கொண்டுவர காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவானபோது,  கள்ளுக் கடை மறியலை மட்டும் கைவிட மறுத்தவர் காந்தி என்பதையும்,  அதை வேறு வழியின்றி வைஸ்ராய் இர்வின் ஏற்றுக்கொண்டதையும் மகான்கள் சுப்புராஜும்,  விக்ரமும் அறிவார்களா? 

சிறிதளவாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் சுப்புராஜ் மகான் படத்தை இயக்கியிருப்பாரா?  பிதாமகன்,  சேது, காசி போன்ற படங்களில் தன் அளப்பரிய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க இசைந்திருக்க லாமா? பணம்தான் இவர்களது ஒற்றை நோக்கமா?

நான் பள்ளியில் பயின்றபோது பாகப்பிரிவினை பார்த்தேன். அது எனக்குக் கூட்டுக் குடும்பத்தின் சிறப்பைச் சொல்லிக் கொடுத்தது. பாசமலர் பார்த்தேன். அது சகோதர பாசத்தின் மேன்மையை உணர்த்தியது. பாலும் பழமும் பார்த்தேன். அது கணவன் – மனைவியின் ஆன்மநேயக் கலப்பை அறிமுகப்படுத்தியது. பாவமன்னிப்பு எனக்குச் சமய நல்லிணக்கத்தைப்   பாடமாகப் போதித்தது. அக் காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலம். ஆனால் இன்று? பேட்டை ரௌடி யாகவும்,  பாலியல் பிறழ்ந்த காமுகனாகவும், எல்லாவித இன்பங்களையும் மனச்சான்றின் உறுத்தலே இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் விடலையாகவும் நம் இளைஞர்களை மாற்றும் சீரழிந்த படங்களே பெரும்பாலும் சமூகத்தை முற்றுகையிடுகின்றன. பணம் சம்பாதிக்க நல்ல வழியில்லையா? நோய் தீர்க்கும் மருந்து விற்பவரும், பசி தீர்க்கும் அரிசி விற்பவரும் ஒரு வகை. உயிர் கெடுக்கும் கஞ்சா விற்பதும், சாராயம் விற்பதும் வேறு வகை இல்லையா? மகான் படம் எடுத்தவர்களுக்கும்,  மராட்டியத்தில் கோட்சேவை வழிபடு நாயகனாக வடி வமைத்து நாடகம்  நடத்துபவர் களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை.

இன்றைய சினிமா உலகம் தவறுகளுக்குத் தலைவாரிப் பூச்சூட்டுவதையே தன்னுடைய வேலையாகச் செய்து வருகிறது. இந்தப் பாழ்பட்ட சினிமா உலகத் தில் உள்ள ரஜினியைத்தானே நீ அரசியலுக்கு அழைத்தாய் என்று நீங்கள் என்மீது விமர்சனக் கணைகளை வீசலாம். தனி வாழ்வில் தூய்மை, பொதுவாழ்வில் நேர்மை, வார்த்தைகளில் வாய்மை என்பதுதான் காந்தியம் வளர்த்தெடுத்த அரசியல். அந்த மேலான அரசியல் இந்த மண்ணில் சீரழிந்து கிடந்ததை என் 53 ஆண்டுப் பொதுவாழ்வில் பார்த்து அன்றாடம் மனம் வெதும்பியவன் நான்.

கெட்டுக் கிடக்கும் அரசியல் அமைப்பு முறையை நான் சரிப்படுத்துவேன் என்றார் ரஜினி. தமிழக மக்களிடம் சினிமாவுக்குள்ள மிகப் பெரும் செல்வாக்கையும்,  ரஜினிக்கிருந்த அளவற்ற ஆதரவையும் நான் விரும்பிய நல்ல அரசியலுக்குப் பயன்படுத்த விரும்பினேன். முள்ளை முள்ளால் எடுப்பதும்,  வைரத்தை வைரத் தால்  அறுப்பதும்தானே நம் முன்னோர் பயன்படுத்திய முறை! அந்த முயற்சி தோற்றுப்போனதில் எனக்கு ஆழ்ந்த வருத்தம் உண்டு. 

தமிழருவி மணியன்,

தலைவர்,

காந்திய மக்கள் இயக்கம்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...