சிவமலர் – மொட்டு – 3 | பஞ்சமுகி
“வாங்கோ! நஞ்சுண்டனைத் தரிசிக்க வந்தேளா?” குருக்களின் கேள்வியில் கலைந்த விபுலானந்தன் “ஆ… ஆமாம்” என்று தடுமாறினான்.
“பட்டணத்திலிருந்து வராப்ல இருக்கு! இந்தப் பட்டிக்காட்டுக்கும் வரணும்னு தோணித்தே! ஏதாவது பரிகாரத்துக்காக வந்திருக்கேளோ? விஷபயம் ஏதாவது இருக்கா? ராகு, கேது தோஷம் ஏதாவது…” பேசிக்கொண்டே வெளிமண்டபத்தில் இருந்த ஒரு விளக்கை ஏற்றிக் கையில் எடுத்துக் கொண்டார் நீலகண்ட குருக்கள்.
விபுலானந்தனுக்குச் சிரிப்பு வந்தது. “இல்லைங்க ஐயா, நான் எனக்காக வரலை. சிவனுக்காகத்தான் வந்தேன்” என்றான்.
வெளிமண்டபத்தின் வழியே நடந்து பிரமாண்ட நந்தியை அடைந்திருந்த குருக்கள் நின்று திரும்பிப் பார்த்தார்.
“என்ன சொல்றேள்னு புரியலை. சிவாயலத்திற்கு வர்றவா சிவனுக்காகத்தானே வருவா?” என்று கேட்டார்.
“சிவன் எனக்கு எந்த நன்மையையும் செய்யணும்னு கோரி, அதாவது எந்தப் பிரார்த்தனையோடும் நான் இங்கே வரலைன்னு சொல்லவந்தேன்” என்றான் விபுலானந்தன். “அதுக்குப் பதிலா சிவனுக்கு நான் செய்ய விரும்பித்தான்…”
“அபச்சாரம்! அப்படிச் சொல்லாதீங்கோ! நாம கடவுளுக்குச் செய்யறோம் என்ற எண்ணம் வந்துட்டா மனதில் அகந்தை வந்துடும், உடனே நாத்திகம் வந்துடும், அப்புறம்? மனுஷன் அழிய வேண்டியதுதான்! ஹிரண்யகசிபு கதை படிச்சிருப்பேளே! கடவுளைவிட நாம பெரியவா என்ற எண்ணம் வரவே படாது!”
விபுலானந்தன் புன்னகைத்தான்.
“தனக்கு அறுசுவை உணவு கொடுக்கிற தாய்க்கு, நாலு அரிசியைச் சொப்பு சாமானில் போட்டு அம்மா மம்மு சமைச்சிருக்கேன்னு குழந்தை ஊட்ட வருதே, அந்த மாதிரி எனக்கு எல்லாம் தந்த சிவனுக்கு என்னாலான காணிக்கையைச் செலுத்த வந்தேன்னு சொன்னேன், அவ்வளவுதான்.
நான் திரவிய காணிக்கையை மட்டும் சொல்லல, நான் ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளன். இந்த ஆலயத்தைப் பற்றி உலகத்திற்குத் தெரியவைத்து, அதோட பழைய பெருமைகளை அடையப் பாடுபடணும்ங்கறதுதான் என் எண்ணம்” என்றான்.
குருக்கள்மீது மிகுந்த மதிப்புத் தோன்றிவிட்டாலும், பொக்கிஷத்தைப் பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்று அவன் மனம் எண்ணமிட்டது.
எல்லோரும் ஸ்வர்ணா அல்ல.
“சந்தோஷம், சிவ கைங்கரியம் பண்ணக் கிடைக்கறதே பாக்கியம். அப்படிப்பட்டவாளோட யோகக்ஷேமத்தை அந்தச் சிவனே பார்த்துப்பான்” என்றார் குருக்கள்.
விபுலானந்தன் அவரை ஏற இறங்கப் பார்த்தான்.
“என்ன பார்க்கறேள்? வாலிபப் பிராயம் முதலா இந்தச் சிவனுக்குக் கைங்கரியம் பண்றேனே, எனக்கு இந்தச் சிவன் என்ன செய்துட்டான்னு நினைக்கறேள், இல்லையா?” குமிழ்சிரிப்புடன் கேட்டார் குருக்கள்.
அவர்கள் அப்போது உள்பிராகாரம் கடந்து அர்த்த மண்டபத்திற்குள் நுழைந்திருந்தார்கள்.
“அதெல்லாம் இல்லைங்க” என்றான் விபுலானந்தன் அவசரமாக.
“தம்பி! என் சிவனுக்குக் கைங்கரியம் பண்றதே இந்த ஜன்மாவுக்குப் போதும்ப்பா! ஆனா, என் மனசில் தோணிண்டே இருக்கு,
என் சிவன், இந்த நஞ்சுண்ட சிவன், இத்தனை நாளா இருட்டில் மறைஞ்சிருந்த இந்த அருட்பெரும் ஜோதியான சிவன், என்றைக்காவது ஒரு நாள் விசுவரூபமா வளர்ந்து தன்னை வெளிக்காட்டிப்பான்னு!
அந்த நாள் எப்போதோ யுகம் முடியும் காலத்திலே இல்லை, என் வாழ்நாளிலேயே அந்த நாள் வரும்னும், அவனுடைய திருவிளையாடல்களில் எனக்கும் பங்கு இருக்கும்னும் நான் உறுதியா நம்பறேன்…” ஆவேசமாகச் சொன்னார் குருக்கள்.
வாய் பேசிக் கொண்டிருந்தாலும், கைகள் கருவறையிலிருந்த விளக்குகளை ஏற்றிக் கொண்டிருந்தன.
“சரி விடுங்கோ, என் கதை எதுக்கு இப்போ? வாங்கோ தீபாராதனை காட்டறேன். அர்ச்சனை உண்டா, தங்கள் பேரென்ன?” என்று கேட்டார்.
“அர்ச்சனைக்கு உண்டான பொருளெல்லாம் எடுத்துட்டு வரலை. நாளைக் காலையில அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் பண்ணிக்கலாம். இப்போ தீபாராதனை மட்டும் காட்டுங்க” என்றான் விபுலானந்தன்.
“சரி, உங்களுக்காக ஒரு சங்கல்பம் பண்ணிடறேன். உங்க பெயர் நட்சத்திரம் சொல்லுங்கோ” என்றார் குருக்கள்.
“விபுலானந்தன், திருவாதிரை நட்சத்திரம்” என்றதும் அவனை உற்றுப் பார்த்தார் குருக்கள்.
“சிவனுக்கு உகந்த நட்சத்திரம், சந்தோஷம். பெயரும் அபூர்வமா இருக்கு. விபுலம்னா – அதிகமான, அளவிட முடியாதன்னு அர்த்தம் சொல்லுவா. அளவிட முடியாத ஆனந்தம்னா – அது ஆத்மா தான். சிவம் தான். எல்லோருக்குள்ளும் இருக்கற ஆனந்தம்தான் சிவம்னு சொல்றது. சிவோஹம்னு சொல்றதில்லையா? அந்தச் சிவத்தை, மங்களத்தை, ஆனந்தத்தை நாம் உணர முடியாமல் கர்மா, தீய குணங்கள் எல்லாம் விஷமா பரவியிருக்கு. அந்த விஷத்தை முறிக்கறவன் தான் நஞ்சுண்டன். பகவான் கருணையைப் பாருங்கோ! விஷத்தை அவன் அழிக்கலை, மாறாக அதை உண்டு தன்னில் ஒரு பாகம் ஆக்கிண்டுட்டான்! அழிக்கற நஞ்சுக்கும் அழியாப் பெருவரம் கொடுத்துட்டான்! அதைக் காட்டற மாதிரித்தான் சிவனுக்கு நாகாபரணம் அமைஞ்சிருக்கு! நாகங்களுக்கு விசேஷ சக்தியும் அவனால் கொடுக்கப்பட்டிருக்கு”
குருக்கள் சொல்லி வருகையிலேயே, தன் கையிலிருந்த நாகலிங்கப் பூவைப் பார்த்தான் விபுலானந்தன். என்ன தோன்றியதோ, அதைக் குருக்களிடம் நீட்டினான்.
அதை வாங்கிக் கொண்ட குருக்கள் “பார்த்தேளா, இந்தப் பகவானுடைய சக்தியை உங்களுக்குச் சூசகமா உணர்த்தற மாதிரி இந்த மலர் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. இதை அவனுக்கே அர்ப்பணம் பண்ணி உங்க பக்தியைக் காட்டிட்டேள். இனி உங்களுக்கு எல்லாத்திலையும் வெற்றிதான்” என்றவர்
அந்த மலரைச் சார்த்தி இறைவனுக்குச் சாங்கோபாங்கமாக ஆரத்தி காட்டினார். பிறகு திருநீற்றுப் பிரசாதத்தோடு நாகலிங்க மலரையும் நீட்டினார்.
தயங்கிய விபுலானந்தனிடம் “வாங்கிக்குங்கோ தம்பி! சிவன் சொத்தை எடுக்கறோமோன்னு நீங்க தயங்கறேள்! இந்த ஆலயத்திற்கு இருந்த சொத்தெல்லாம் இப்போ எங்கெல்லாமோ போய் எப்படியெல்லாமோ இருக்கு! இந்தக் கோயிலைக் கட்டிய குடும்பத்திற்கே இதைப் பற்றிக் கவலை இல்லே! கலிகாலம் இப்படி இருக்க, உங்க நல்ல மனசைப் பாராட்டறேன். இப்போ இந்தப் புஷ்பம் உங்களுக்கு சிவப் பிரசாதமா கிடைச்சிருக்கு, வாங்கிக்குங்கோ!” என்றவர்
“இதேபோல, சிவனுக்கு அர்ப்பணமான பொருளை நமக்குன்னு எடுத்துக்கப்படாது, அவன் பிரசாதத்தை மட்டுமே ஸ்வீகரிக்கணும்ங்கற எண்ணம் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்” என்றார் எச்சரிக்கை போல.
“சரிங்க ஐயா” என்றான் விபுலானந்தன், அவர் எதற்காகச் சொல்கிறார் என்று புரியாமலேயே.
பிறகு “ஐயா! நான் இந்த ஊரிலேயே கொஞ்ச நாள் தங்கி, இந்த ஆலயத்தில் சில ஆராய்ச்சிகள் செய்யணும்னு விரும்பறேன். எனக்குத் தங்க ஏற்பாடுகளுக்கு நீங்கதான் உதவணும். எந்த இடமானாலும் பரவாயில்லை.
அதோட இந்தக் கோயிலோட ட்ரஸ்டி யாரோ அவங்களைச் சந்திச்சு, அவங்ககிட்ட அனுமதி வாங்கிக்கிட்டுத்தான் இந்த வேலையைத் தொடங்க விரும்பறேன். அதுக்கும் நீங்க உதவி செய்யணும்” என்று கேட்டுக் கொண்டான்.
“அதுக்கென்ன? தங்கறதுக்கு இடமா கிடைக்காது? வாடகைதான் கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார் குருக்கள்.
“அதை உங்களுக்கே தரேனே! உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை இல்லேன்னா, உங்க வீட்டிலேயே தங்கிக்கறேன்” என்றான் விபுலானந்தன்.
“தம்பி… அது உங்களுக்கெல்லாம் தோதுபடாது. வேற வீடு பார்த்துத் தரேன்” என்று முடித்துவிட்டார் குருக்கள் சுருக்கமாய். அதற்குமேல் விபுலானந்தனும் அவரை மறுத்துப் பேசவில்லை.
ஆலயத்திற்கு வெளியே வரும்போது, மகாமண்டபத்திலிருந்த ஒரு தூணைப் பார்த்ததும் நின்றுவிட்டான் விபுலானந்தன். அவன் கண்கள் அதீத வியப்பால் விரிந்தன.
“என்ன தம்பி?” என்று கேட்டார் முன்னால் போய்க் கொண்டிருந்த குருக்கள்.
“ஐயா, அந்த விளக்கைக் கொஞ்சம் இங்கே கொண்டுவாங்க” என்றான். குருக்கள் அவன் காட்டிய இடத்தை நோக்கி விளக்கைத் தூக்கிப் பிடித்தார்.
“இருதலைப் பறவை!” என்று ஆச்சரியத்துடன் முணுமுணுத்தான் விபுலானந்தன்.
“ஓ! இந்தப் பக்ஷியா? இந்தச் சிற்பம் சில கோயில்களில்தான் இருக்கும். புதைபொருள் ஆராய்ச்சியாளரோன்னோ, அதான் சரியா கவனிச்சிருக்கேள். இதுக்குக் கண்ட பேருண்டப் பக்ஷின்னு பேரு. சரபேச்வரர் அவதாரக் கதையில் இதைப் பற்றிய பிரஸ்தாபம் வரது. மிகுந்த சக்திவாய்ந்தது,
மகாவிஷ்ணுவாலேயே படைக்கப்பட்டதுன்னு சொல்லுவா. இருந்தாலும் நல்லவைகளைக் காத்துத் தீமைகளை அழிக்கவும் செய்யறதுனால, இது சிவன்-விஷ்ணு இரண்டு பேருடைய அம்சமும்னு சொல்றதும் உண்டு – இரண்டு தலை இருக்கு பாருங்கோ! சில கோயில்களில் கண்ட பேருண்டப் பக்ஷி வாகனம்கூட உண்டு. பிரபலமா சொல்லணும்னா மன்னார்குடி!”- குருக்கள் உற்சாகமாகப் பேசிக் கொண்டே போக, விபுலானந்தன் ஆழ்ந்த வியப்பிலாழ்ந்தான்.
மன்னார்குடி! அங்குதானே இருதலைப் பறவை இலச்சினையுள்ள காசுகள் கிடைத்தன? அதே இலச்சினையுள்ள ஆலயத்தைப் பற்றிக் குறிப்பும் கிடைத்தது? சிவன்-விஷ்ணு அம்சமுள்ள இருதலைப் பறவை! அங்கே மாலாலயம். இங்கே சிவாலயம்.
ஸ்வர்ணாவிடம் இன்றிரவு விளக்கமாய்ப் பேசிவிட வேண்டும்.
அவன் சிந்தித்துக் கொண்டிருக்கையிலேயே, சடாரென்று ஆலய மேற்சுவரிலிருந்து ஏதோ அவன் கைமீது விழுந்தது. உள்ளுணர்வின் தாக்கத்தால் கையைச் சட்டென்று உதறினான் விபுலானந்தன்.
“ஊ…ஷ்” என்ற சீறல் ஒலி கேட்டது. குருக்கள் பதறி விளக்கை அந்தப்பக்கம் காட்டினார்.
பளபளக்கும் இரண்டு மாணிக்கக் கற்கள். இல்லை, படமெடுத்துச் சீறிக் கொண்டிருந்த நாகத்தின் பளபளக்கும் இரு கண்கள்.
“ஈச்வரா!” என்று அலறிவிட்டார் குருக்கள்.
விபுலானந்தன் அசையாமல் நின்றான். மெஸ்மெரிஸத்தில் ஆழ்ந்தவன்போல் அந்த நாகக் கண்களையே உற்றுப் பார்த்தான்.
ஏன் நாகம் என்னை அப்படிப் பார்க்கிறது? ஏதோ… ஏதோ சொல்கிறது.
ஒரு தலை வந்துவிட்டது…
ஒரு தலையா? அப்படியென்றால் என்ன அர்த்தம்?
நானே ஆள்வேன் அண்ட பேரண்டம்! எனை
நசிக்க முடியாது கண்ட பேருண்டம்!
ஆம், ஆம்! நீயே சக்தி! நீயே ஜயசாலி! சஹஸ்ர சீர்ஷா புருஷ:…
“தம்பி! தம்பி! என்னப்பா ஆச்சு?” என்று குருக்கள் அவனை உலுக்க, நினைவுக்கு வந்தான் விபுலானந்தன்.
“என்னவோ… தெரியலைங்க. ஏதோ தலை சுற்றின மாதிரி….”
“திடீர்னு நாகம் மேலே விழுந்த அதிர்ச்சியால் இருக்கும். அது போயிட்டது, வாங்கோ” என்றார் குருக்கள்.
தலையை அப்பக்கமும் இப்பக்கமும் அசைத்து, அதிர்ச்சி மாறாதவனாக அவரோடு நடந்தான் விபுலானந்தன்.
ஆலய வாயிலில் “அவன் அருளிருந்தால் அரவமும் கயிறு தான்னு சொன்னேனே, சரியாப் போச்சா?” என்று இடிக் குரல் கேட்டது.
“சன்னாசி! என்ன சொன்னேன் உங்கிட்ட? போ பேசாம” என்றார் குருக்கள் கோபமாய்.
“போறேன், போறேன்” என்று கையை விரித்துத் தடுப்பது போல் பாவனை செய்தான் சன்னாசி. “தம்பி! நாக தோஷம் இதோடு போகல! இப்போதான் அது தன் ஆட்டத்தை ஆரம்பிச்சிருக்கு! கவனம் தம்பி! சிவமலரைப் பார்த்துக்கோ! சிவமலரைப் பார்த்துக்கோ!” என்று உரத்த குரலில் சொல்லிக் கொண்டே நகர்ந்து போய்விட்டான்..
விபுலானந்தன் தன் கையிலிருந்த மலரைப் பார்த்தான்.
சிவமலர்?
**
சரியாக அதே நேரத்தில், கண்களை மூடி அமர்ந்திருந்த சிவமலருக்கு மனக்கண்ணில் ஒரு காட்சி தோன்றியது. அவள் கனவில் தோன்றிய அதே காட்சி. காடும் மலையும் தாண்டி ஓடுகிறாள். குளக்கரை. ஐந்துதலை நாகம் அவளைத் தீண்ட வருகிறது.
“உன் அண்ணன் எங்கிட்ட வந்துட்டான் . நீ எப்போ என்னைத் தேடி வருவே, சிவமலர்?” கேள்வி துல்லியமாக இப்போது அவள் காதில் விழுந்தது.
“வருவே! சீக்கிரம் வருவே! அவன் வந்துட்டான், நீயும் வருவே!” என்று சீறும் குரல் சிரித்தது, இடியோசைபோல் கேட்டது.
“அண்ணா, அண்ணா!” என்று அலறினாள் சிவமலர்.
(மொட்டு விரியும்)