நம்முடன் வாழும் மாமனிதர்

 நம்முடன் வாழும் மாமனிதர்

வணக்கம் நண்பர்களே! உங்களிடம், ஒரு முதன்மையான செய்தியை நான் பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன்!

உங்களில் பலருக்கு அந்தச் செய்தி ஏற்கனவே தெரிந்திருக்கவும் கூடும்! அந்தச் செய்திக்கு முன்பாக, வேறு ஒரு செய்தியைப் பார்ப்போம்.

அண்மைக் காலமாக தழிழ்நாட்டில், தமிழ் மொழி சார்ந்த விருதுகள் பற்றிய அறிவிப்புகளும், அவற்றைப் பெறுகிறவர்கள் தொடர்பான பாராட்டுப் புகழோசை களும் மட்டுமீறிக் கேட்டுக் கொண்டிருக்கின்றன!

இதுபோன்ற விருது நிகழ்வுகளால் நமது தாய் மொழியான தமிழ், தனது மண்ணில் அனைத்துவிதமான உரிமைகளையும் பெற்றுக் கிளைத்துச் செழித்து, வேரூன்றி வளர்ந்து, வானுக்கும் பூமிக்குமாக நெடுவடிவமெடுத்து நிலைபெற்று விட்டதைப் போன்றதொரு தோற்றம் இங்கே வேகமாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஆனால், தமிழர் வாழ்வியலின் கல்வி, இசை, நிர்வாகம், வணிகம், வழிபாடு, நீதி, உரையாடல் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும், நமது தாய்மொழியாம் தமிழின் உண்மை நிலை முற்றிலும் வேறாக இருப்பது, அதன் மீது வண்ணங் களைப் பூசி உண்மைகளை மறைக்கிற அனைவருக்கும் தெரியும்!

இப்போது, நமது செய்திக்கு வருவோம்!

இன்றைய இந்தப் பின்னணியில் தான், நான் அப்பழுக்கற்ற ஒரு தமிழ் உணர்வுப் போராளியின், மூன்றாண்டுகளைக் கடந்த ஒரு, ‘மௌனப் போராட்டத்திற்கு’ உங்களை அழைத்துச் செல்ல முனைகிறேன்!

தமிழக அளவிலும், உலக அளவிலும் வாழுகின்ற தமிழ் உணர்வார்கள் அனை வருக்குமே அவரை நன்கு தெரியும்!

‘டிட்டோனி’ முத்துச்சாமி, ‘இயற்கை வாழ்வகம்’ க.இரா. முத்துச்சாமி ஆகிய பெயர்களால் தமிழுலகில் நன்கு அறியப்பட்ட, திருப்பூர் ஐயா க.இரா.முத்துச்சாமி அவர்கள்,

‘இயற்கை வாழ்வகம்’

எண்: 216, மங்கலம் சாலை, கருவம்பாளையம், திருப்பூர்- 641604 என்னும் முகவரி யில், தனது- 83 ஆம் அகவை கடந்தும், தனக்கே உரிய தமிழ்க் கம்பீரத்துடன் வாழ்ந்து வருகிறார்!

தமிழின், தமிழ் இனத்தின் அனைத்து விதமான உரிமைகளுக்காகவும், தனது வாழ்நாள் நெடுகிலும் அவர் மேற்கொண்ட போராட்டங்களின் பட்டியலும், அவற் றில் அவர் வெற்றி கண்ட சாதனைகளின் பட்டியலும், பல் வேறு களப்பணிகளின் பட்டியலும் மிகவும் நீளமானவை, உற்று நோக்குவோரின் வியப்புக்கு என்றென் றும் உரியவை!

தனது வாழ்வின் நெடும் பயணத்தில், தமிழின் பொருட்டு இடையறாது அவர் மேற்கொண்டு வந்த பல்வேறு வகையான போராட்டங்களின் தொடர்ச்சியாக, கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், தான் உயிரென நினைத்துப் போற்றிப் பாதுகாக்கின்ற பனை மரங்களின் முன்பாக நின்று,

‘தமிழ் நாட்டின் அனைத்து நிலை கல்வி நிலையங்களிலும் தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல,தமிழை ஆய்ந்தறிந்து உணர்ந்த பல நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்களின், பல லட்சக்கணக்கான தமிழ் உணர் வாளர்களின், கோடிக்கணக்கான தமிழ் மக்களின் பன்னெடுங்காலக் கோரிக்கை!

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் நாள் வரை நான், ‘பேசா நோன்பு’ போராட்டத்தை மேற்கொள்வேன்!’

என்று அறிவிப்பு செய்துவிட்டுத் தன் உயிரில் கலந்திருக்கும் தமிழ் மொழியை,

எண்பது ஆண்டுக் காலம் தங்கு தடையற்றுத் தான் உரையாடிய தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை, தனக்குள் வைத்து விலங்கிட்டுக் கொண்டார்!

இப்போராட்டத்தை அவர் தொடங்கிய நாள்,(24.3.2018) அவரது எண்பதாம் ஆண்டு, ‘முத்துவிழா’ பிறந்த நாளாகும்! முத்துச்சாமி ஐயா அவர்களின் ‘முத்துவிழா’ பிறந்த நாள் இப்படித்தான் கொண்டாடப் பட்டிருக்கிறது!

அதற்குப் பிறகு அவர் ஒருவருடனும், ஒரு சொல்லையும் பேசவில்லை! அவர் அந்த ‘பேசா நிலை’ப் போராட்டத்தைத் தொடங்கி, இன்னும் இரண்டு மாதங்களில் நான்கு ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன!

அந்தப் போராட்டத்தை அவர் தொடங்கிய புதிதில் அரசியல் கட்சிகளின் பேராளர் களும், தமிழ் உலகின் பல்வேறு வகையான ஆளுமைமிக்கத் தமிழ் உணர்வாளர் களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க வந்தார்கள்….. சென்றார்கள்.. காலப்போக்கில் அவரைப் பற்றிப் பேச மறந்தே போனார்கள்!

ஆனாலும் கூட, மறந்தும் நாம் ‘பேசிவிட’க் கூடாது என்பதில், ஐயா க.இரா.முத்துச் சாமி அவர்கள் இப்போது வரையிலும் மிகவும் உறுதியாக இருக்கிறார்!

அவருக்கென்று மிகப் பெரிய பல போராட்ட வரலாறுகள் உண்டு!

தமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி, ஐயா நா.அருணாசலம் அவர்களின், ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ சார்பில், 25.4.1999-ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத் தில் தொடங்கிய, 102 தமிழ் அறிஞர்களின் சாகும் வரையிலான பட்டினிப் போராட் டத்தில், முந்திக்கொண்டு வந்து முதல் போராளிகளின் வரிசையில் நின்று பங்கெடுத்துப் பட்டினி கிடந்து, ‘மொழிப்போர் மறவர்’ விருது பெற்றவர் ஐயா க.இரா.முத்துச்சாமி அவர்கள்!

அப்போது அவ்வமைப்பின் நிர்வாகிகளில் ஒருவனாக இருந்து அப்போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த நான், முத்துச்சாமி ஐயா அவர்களின் போராட்டக் குணம் மிக்க, அப்பழுக்கற்ற, தமிழுணர்வை நேரில் கண்டு நெகிழ்ந்து போனேன்!

தமிழைச்,’செம்மொழி’ என்று அறிவிக்க வலியுறுத்தி, புலவர் த.சுந்தரராசன் அவர்களின் ‘தலைநகர்த் தமிழ்ச் சங்கம்’ டெல்லியில் நாடாளுமன்றத்தின் முன்பாக, 18.8.2003-ஆம் நாள் நடத்திய பட்டினிப் போராட்டத்தில் முந்திக்கொண்டு வந்து பங்கேற்று,’செம்மொழிப் போராளி’ விருது பெற்றவர் ஐயா க.இரா.முத்து சாமி அவர்கள்!

அப்போராட்டத்தில் நானும் பங்கேற்றுப் பட்டினி கிடந்த அந்த நினைவுகள், இனிய நினைவுகளாக இப்போது என்னுள்ளிருந்து மேலெழுகின்றன!

இவை மட்டுமல்ல, இவைபோன்ற ஏராளமான விருதுகளையும், சமூகச் சேவை யின் பாற்பட்ட சாதனைகளையும் சாத்தியப்படுத்திய பெருமை அவருக்கு உண்டு!

வண்டி இழுக்கின்ற கூலித் தொழிலாளியான திரு.இராமசாமி-அவர்தம் வாழ்க்கைத் துணை முத்தம்மாள் ஆகிய இணையருக்கு மகனாகப் பிறந்த முத்து சாமி ஐயா அவர்கள், தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாக ஏழாம் வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. ஆனால், இன்றைக்கு அவர் அறநெறி சார்ந்து இயங்கு கின்ற ஒரு வாழ்வியல் பல்கலைக் கழகமாக விளங்குகிறார்!

திருப்பூரில், பின்னலாடை நிறுவனம் ஒன்றில் ஒரு கூலித் தொழிலாளியாக தனது பொருளாதார வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னாளில் ஒரு கைக் கடிகாரத்தின் பெயரில் (டிட்டோனி) ஒரு பின்னலாடை நிறுவனத்தைத் தொடங்கி, ‘டிட்டோனி’ முத்துச்சாமியாக அறியப்பட்டு உழைத்து உழைத்துப் பொருளாதாரச் செழுமை பெற்றார்!

ஒரு முதலாளியாக அவர் மாறினாலும்‌, அவரது செயல்பாடுகள் அனைத்தும் கூலித் தொழிலாளர்களையும், தமிழ்- தமிழ் இன உரிமைகளையும், தமிழ்வழிக் கல்வியையும், தமிழ் மரபு உணவு வகையான சிறுதானியங்களையும், தமிழ் மண்ணுக்கே உரிய இயற்கையையும், இயற்கையின் மூலிகைகளையும், பறவை கள் உள்ளிட்ட சூழல் நலம் சார்ந்த உயிரினங்களையும், திருவருட்பிரகாச வள்ள லார் வழியையும், உணவே மருந்து என்னும் உயரிய வாழ்வியல் கோட்பாட்டை யும், பனைமரங்களின் பாதுகாப்பையுமே சுற்றிச் சுற்றி வந்தன!

ஐயா முத்துச்சாமி அவர்கள் தனது வாழ்வில் சந்தித்த துயரங்கள் ஏராளம்!

பல ஆண்டுகளுக்கு முன்பு,பள்ளி மாணவரான அவரது ஒரே மகன் ஸ்டாலின் மணிக்குமார், காங்கேயம் சாலையில் தன் நண்பருடன் இருசக்கர வாகன விபத் தில் சிக்கி உயிரிழந்தார்!

உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்த ஐயா முத்துச்சாமி அவர்கள், இறந்து கிடந்த தன் மகனை அப்படியே விட்டுவிட்டு, உயிருக்குப் போராடிக் கொண் டிருந்த தனது மகனின் நண்பனைத் தூக்கிக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்!

அப்போது அவரது செயலைக் கண்டு நெகிழ்ந்தவர்களுக்கு அவர் சொன்ன செய்தி,

‘எவ்வளவுதான் அழுது புரண்டாலும் என் மகன் எழப் போவதில்லை! இருப் பவனையாவது உடனடியாகக் காப்பாற்றுவதுதானே நமது கடமை!’ என்பது தான்!

எதையும் சொல்வது மட்டுமல்ல, சொல்வது போல் வாழ்ந்து காட்டுவதையே அவரது வாழ்வின் தலையாய கோட்பாடாகக் காணமுடிகிறது!

தமிழ்வழிப் பள்ளிகள், இயற்கை மூலிகைத் தோட்டங்கள் உள்ளிட்ட எதையெதை யெல்லாம் அவர் வலியுறுத்திப் பேசிப் போராடினாரோ, அதையெல்லாம் தன்னள வில் அவர் நிறுவனங்களாக மெய்ப்பித்தும் காட்டி நிலை நிறுத்தினார்!

அவினாசிக்கு அருகில் மங்கலம் சாலையில், தான் வாங்கிய எட்டு ஏக்கர் நிலத் தில் ஐயா க.இரா.முத்துசாமி அவர்கள் அமைத்த, ‘அன்னைப் பொழில்’ என்கிற பெயரிலான மாபெரும் மூலிகைப் பெருந் தோட்டம் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமான பறவைகளோடும், தமிழ் மண்ணுக்கே உரிய மரங்களோடும், நூற்றுக் கணக்கான மூலிகைச் செடிகளோடும், சிறுதானியங்களின் பயிர் வகையினங் களோடும் சூழல் நலங்களோடு பசுமையாகச் செழித்திருந்தது.

அந்த மூலிகைத் தோட்டத்தில் ஐயா நம்மாழ்வார் அவர்களைப் போல, இயற்கை யான முறையில் தனக்கென ஒரு குடிலை அமைத்துக்கொண்டு அங்கேயே தங்கிக் கொண்டும் வாழ்ந்தார், முத்துச்சாமி ஐயா!

கடன் சிக்கல் காரணமாக, பிற்காலத்தில் அவரது அந்த ‘அன்னைப் பொழில்’ கைமாறிப் போய் பெருகியிருந்த அவரது கடனை அடைத்தது!

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மூத்த மகள் அமுதா அவர்கள், தான் பயணித்த இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்தார்!

அவரது வாழ்வில் நேர்ந்த பல்வேறு வகையான வளங்களும், விதம் விதமான வீழ்ச்சிகளும் கடுகளவும் அவரது தமிழியக் கோட்பாடுகளை அசைத்துப் பார்க்க முடியாமல் தோற்றுப்போயின, இந்த நிமிடம் வரை தோற்றுக் கொண்டே இருக் கின்றன!

அவரது தமிழ் உணர்வுச் செயல்பாடுகள் அனைத்தும் சுயநலம் சாராதவை, உண்மை யானவை, நேர்மையானவை, எதன் பொருட்டும், எவரிடத்தும், நாக் கைத் தொங்கப் போட்டுக்கொண்டு கெஞ்சிக் கூத்தாடி அரசியல் செய்து அலை யாதவை!

ஐயா க.இரா முத்துச்சாமி அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்த ‘பேரன்னை’ சுப்புலட்சுமி அம்மையாரை, ஐயா அவர்களின் இன்னொரு வடிவம் என்றே சொல்ல வேண்டும்!

1962-ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விருவரின் இல் வாழ்க்கை, தமிழ்ச் சமூக மேம்பாட்டையே முதன்மையான நோக்கமாகக் கொண்டும், இம்மியளவும் பிசகாத அறநெறிகளையே ‌துணையாகக் கொண்டும் இன்றுவரை பயணித்துக் கொண்டிருக்கிறது!

அம்மையார் சுப்புலட்சுமி அவர்களும், மார்க்சிம் கார்க்கியின்,’தாய்!’ போன்றவர் தான்!

ஐயா அவர்கள் தன் பேச்சை நிறுத்திய பிறகு கடந்த இத்தனை ஆண்டுகளில். ஐயாவின் ‘குரலாக’ நாள்தோறும் மணிக்கணக்கில் அனைத்துத் தமிழ் உணர் வாளர்களிடமும் உரையாடிக் கொண்டிருப்பது இந்தத் ‘தமிழ்ப் பேரன்னை’தான்!

ஐயா க.இரா.முத்துச்சாமி அவர்கள், தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்திற்கும், பின்பற் றுதலுக்கும், நன்றிக்கும் என்றென்றைக்கும் உரியவர்களில் ஒருவராவார்!

இதுநாள் வரையிலும் அரசின் உயரிய விருது, தொகை, அங்கீகாரம் என்று அவர் எதையும் எங்கிருந்தும் பெற்றதில்லை!

மாறாக, தான் பெற்றதையெல்லாம் தமிழின் பொருட்டே அவர் இழந்திருக்கிறார்!

தமிழ்ச் சமூகத்தின் குரலாக, இடையறாது ஒலித்துக் கொண்டே இருந்த அவரது குரல், கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்ற ஆழ்ந்த ‘மௌனம்’ அவரை அலட்சியப்படுத்திக் கொண்டிருப்போரிடம் நிச்சயமாக பல கேள்வி களைக் கேட்கும்!

மாமனிதனாகப் பரிணாமம் பெற்ற ஒரு மனிதன், ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகே தனது புரட்சியைத் தொடங்குவான் என்பதே உலக வரலாறு!

இந்த வரலாற்றை மெய்ப்பிப்பதற்கான ‘நெருப்புப் பொறி’ ஒன்று நீர்த்துப் போகாத வீரியமான நிலையில் ஐயா க.இரா.முத்துசாமி அவர்களின் நான்கு ஆண்டுக்கால மௌனத்திற்குள் உறைந்திருக்கிறது, ஓர் எரிமலைக் குழம்பைப் போல!

அது சராசரியான மேம்போக்கான விருதுகளுக்கும், அதன் தொகையினத்திற்கும் அப்பாற்பட்டது, மிகவும் அரிதானது!

அரசிடம் அவர் விருது எதையும் கேட்கவில்லை, தன் இனத்தின் பிள்ளைகளுக் குத் தமிழைக் கேட்கிறார்!

அவர் கேட்பது இப்போதைக்குக் கிடைக்கிறதோ இல்லையோ அது நமக்குத் தெரியாது! ஆனால்,யார் எவ்வளவு அலட்சியப்படுத்தினாலும் என்றேனும் ஒரு நாள் வெற்றியடையப் போவது அவரது,’மௌனம்’ தான்!

உயிர்த் தியாகி சங்கரலிங்கனாரின்கோரிக்கைப் போராட்டத்தின் மீது காட்டப் பட்ட அலட்சியம் பொடிப் பொடியாகி பின்னொரு நாளில் அவர் வெற்றியடைந் தார் அல்லவா? அதைப்போல!

இப்போதைக்கு ஐயா க.இரா.முத்துச்சாமி அவர்களிடமிருந்து நாம்.. ‘ம்ம்ம்….ம்ம்ம்’ என்கிற ஒலியை மட்டும் தான் கேட்க முடிகிறது!

மற்றபடி நாம் பேசுகின்ற அனைத்தையும் அவர் முழுமையாகக் கேட்டுக் கொள் கிறார்!

தான் உயிரெனக் கருதுகின்ற தனது தாய்மொழியை, பேசாமல் ஒருவர் நான்கு ஆண்டுக் காலத்தை நிறைவு செய்து கடக்கப் போகிறார் என்பதும், அரசுத் தரப்பில் அவர் பொருட்படுத்தாமல் கைவிடப்படுகிறார் என்பதும் நமது நிகழ்காலத்தின் பேரவலம்!

ஐயா க.இரா.முத்துசாமி அவர்களுக்கு இப்போது நாம் சொல்லிக் கொள்வது இதுதான்!

நீங்கள் பேசாமலே இருங்கள் ஐயா…. நாளை, கோடிக்கணக்கான தமிழ்ப் பிள்ளை கள் உங்களைக் குறித்து நிச்சயமாகப் பேசுவார்கள்!

‘மௌனம்’ மகத்தானது! உங்களின் மிகவும் உயர்ந்த ‘மௌனப் போராட்டத்திற்கு’ எங்களின் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

  • கவிஞர் ஜெயபாஸ்கரன்

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...