தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் | 8 | தனுஜா ஜெயராமன்
சாயங்காலம் கிளப்பில்… “டேய்…என்னடா என்னமோ மாதிரி இருக்க..?” என்ற ஹரிஷின் குரலுக்குக் கலைந்தவன்…
“ஒரு சின்ன பிரச்சினைடா… ஒரே குழப்பமா இருக்கு… உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தான்…” எனத் தயங்கியவன்,
“டேய் முகேஷ் … என்கிட்ட என்னடா தயக்கம் உனக்கு..? நான் என் வெளியாளா..?”
“அதில்லைடா… நான் உன்கிட்ட ஒரு அனானிமஸ் போன்காலை பத்தி சொல்லியிருந்தேன்ல…”
“ஆமாம்… யார்ன்னு கேட்டியா..?”
“ம்.…” எனச் சற்றுத் தயங்கியவன்… “நாம திருச்சியில இருந்தப்ப எதிர் வீட்ல இருந்தாளே அந்த அம்ரிதா.. அவ தான் போன் செய்தா…”
“ஓஓஓஓ… அந்த ஃபிகரா..?” என நாக்கைக் கடித்தவன்… “சரி, கடியாகாத… சொல்லு….” என்றான்.
“அவ… அவ… நேத்து என் ஆபீஸ்க்கு வந்திருந்தா.”
“அவ ஏண்டா இங்கே வர்றா..? வந்தாலும் உன்னை ஏண்டா வந்து பாக்கணும்.. ஒண்ணுமே புரியலையே…” என இழுத்தான் ஹரிஷ்.
அவள் தன்னை தொடர்வது, போனில் பேசியது…என இன்றுவரை நடந்ததை ஒன்றுவிடாமல் ஒப்பித்தான் முகேஷ்.
“அவ ஏண்டா உன்னை ஃபாலோ பண்றா..? டேய் மச்சி… எனக்குத் தெரியாம ஏதாவது லவ்வு கிவ்வுன்னு ஏதாவது….” எனக் கிண்டல் செய்தவனை…
“ச்சீ.. வாயைக் கழுவுடா… நானே பயந்து போயிக் கெடக்கேன்.. நீ வேற ஏண்டா வெறுப்பேத்துற..? உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்…” எனக் கடுப்படித்தவனை..
“கோவிச்சிக்காத மச்சி… எப்பவுமே வலப்பக்கம் ஓடுற நரி ஏன் இப்ப இடப்பக்கமா ஓடுதுன்னு சிந்திச்சேன்.. வேற ஒண்ணுமில்லைடா…” எனக் கண்சிமிட்டிச் சிரித்தவனை முகேஷ் முறைக்க…
“ஏதாவது ஐடியா கொடுறான்னா சும்மா நக்கலடிச்சுகிட்டு…” எனக் கடுப்பானான் முகேஷ்.
“என்னதான் வேணும்னு அவளையே கேட்டுறேண்டா.… இதுல என்னடா உனக்கு தயக்கம்..?” என்றான் ஹரிஷ்.
“க்கும்… கேட்டேனே…”
“என்னடா சொன்னா..?”
“நீ தான் வேணும்ங்குறா….”
“நோ வே.… எனக்கு கல்யாணம் ஆகிடுச்சிடா… நான் ஏகபத்தினி விரதன்…” என ஹரிஷ் தோளைகுலுக்க…
“டேய்..! சும்மா கடுப்பேத்தாதடா… அவள் சொல்றது என்னை…”
“என்னடா சொல்ற..?”
அவள் ஆபிஸிற்கு வந்து முகேஷிடம் சொல்லியதை பயத்துடன் கூறினான்.
“அவளுக்கு என்னடா உரிமை உன்மேல..? உரிமை கடமைன்னு ஏதோ உளறி உன்னை கன்பீயூஸ் பண்ணிருக்கா..” என சீரியஸாக யோசித்தவன்… “டேய்… இதை அப்படியே விடமுடியாது. நாளைக்கு அவளை எங்காவது சந்திச்சு பேசிரு.. இந்த பிரச்சனையை முடிச்சி விட்றுடா.. சுதாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சா தேவையில்லாத தலைவலியா போயிரும்.”
“ஆமாம். அதான் எனக்கும் பயமாயிருக்கு… சரிடா கிளம்புறேன்…” என்று யோசனையுடன் வண்டியைக் கிளப்பி வீடு நோக்கி விரைந்தான்.
வீட்டை அடைந்து மொபைலை டேபிள் மீது வைத்தவன்… குறுஞ்செய்தி வரும் சத்தம் ஒலிக்க.… முகேஷிற்கு கடுப்பாக வந்தது… இப்போதெல்லாம் குறுஞ்செய்தி ஓசையே வயிற்றை பிசைந்தது. வேறுவழியின்றி எடுத்து பார்த்தான். அம்ரிதா தான் ‘சாப்டியா..?’ என கேட்டிருந்தாள்.
எரிச்சலுடன் போனை வைக்கச் சென்றவனுக்கு அவளது ப்ரொபைல் படம் கண்ணில் பட்டது. ஒரு குட்டிச் சிறுவனின் சிரித்த படம்…எங்கேயோ பார்த்த முகமாக தோன்றியது. அவளது மகனாக இருக்குமோ..? அவளுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை தானே… என்ற எண்ண அலை எழ.. ‘இது என்ன தேவையற்ற சிந்தனை… அது யாராயிருந்தால் நமக்கென்ன.. தேவையில்லாமல் அவளை பற்றிய சிந்தனை நமக்கெதுக்கு’ என நினைத்து துரத்தும் அவளது கொடும் நினைவுகளை ஒதுக்கியபடி தூங்கச் சென்றான்.
கனவில் அம்ரிதா வந்து ஏதேதோ கடுமையாக மிரட்டிச் சென்றாள். அம்மாவும் சுதாவும் ‘ஓ’வென அழுது கொண்டிருந்தனர். அப்பா காச் மூச் என கத்திக் கொண்டிருந்தார். திடுக்கிட்டு விழித்தவனுக்கு.. ‘சே… இதென்ன கனவில் கூட அவள் இப்படி துரத்துகிறாளே’ என வெறுப்பாக இருந்தது.
அருகில் சுதாவும் குழந்தையும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி கவலையற்றுத் தூங்கி கொண்டிருந்தார்கள். அவர்களை பார்க்க பொறாமையாக இருந்தது.
‘கடப்பாரையை முழுங்கியாயிற்று. தண்ணீரை குடிக்க அது உள்ளே போகுமா..?’ என மனதில் அச்சம் எழ தொடங்கியது. இதிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் எனக் கவலை மனதை அரித்தது.
அந்த இரவின் இருட்டில் மொபைலில் குறுஞ்செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க அதன் வெளிச்சத் திரைகள் கண்ணோடு சேர்த்து மனதையும் கூசச்செய்தது. மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து குழந்தையை அணைத்தவாறு தூங்க முயன்றான். எவ்வளவு முயன்றும் தூக்கம் வரமறுத்தது.
திருச்சியின் அன்றைய சம்பவங்கள் ஒவ்வொனறாக நினைவுக்கு வர, நடுக்கம் உடலெங்கும் பரவியது. குப்பென்று ஏசியையும் மீறி வியர்த்தது. அன்று மட்டும் அந்த சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இன்று இப்படி கண்டவர்களை நினைத்து பயங்கொள்ள தேவையிருந்திருக்காதே.. என்ற குற்றவுணர்வு வாட்டியது. கஷ்டப்பட்டு நினைவுகளை ஒதுக்கி உறங்க முயன்று ஒருவாறு தூங்கி போனான்.
காலையில் எழுந்ததும் மொபைலை சுவிட்ச் ஆன் செய்ய ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்து திரையில் கொட்டியது. அம்ரிதா தான்.… கூடவே அவளது பையனின் விதவிதமான புகைப்படங்கள்… இதை எதற்கு அனுப்பியிருக்கிறாள்… ஒரே குழப்பமா இருந்தது. இதற்கு மேல் இதை வளரவிடக்கூடாது.. இன்று அவளுடன் பேசி இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று தோன்றியது. உடனே அம்ரிதாவை தொடர்பு கொண்டவன்…
“ஹலோ….நான் முகேஷ் பேசுறேன்..”
“சொல்லு.… நீ கட்டாயம் கால் பண்ணுவேன்னு எதிர்பார்த்தேன்… இவ்ளோ காலைல பண்ணுவேன் நினைக்கல..” எனக் கலகலவெனச் சிரித்தாள்.
எரிச்சலை அடக்கி கொண்டு… “நான் உன்கிட்டக் கொஞ்சம் பேசணும்..”
“ஓஓஓ.. பேசேன்…” என்றாள் அலட்சியமாக.
“நேர்ல பேசணும்…”
“பேசலாமே…”
“விளையாடாத… இன்னைக்கு பதினொரு மணிக்கு ஹோட்டல் மூன்லைட்ல சந்திக்கலாம். வந்துரு…”
“வரேன்…” என்றாள் உற்சாகத்துடன்.
போனை கட் செய்து ரூமை விட்டு வெளியே வந்து ஸோபாவில் அமர்ந்தான்.
“ஏண்டா இவ்ளோ நேரமா தூங்குவ…? இரு, காப்பி எடுத்துட்டு வரேன்” என்றாள் அம்மா.
“சரிம்மா..” அலுப்புடன் மொபைலை நோண்டியபடி தலையாட்டியவன்… மறுபடியும் அம்ரிதா அனுப்பிய குழந்தையின் புகைப்படத்தை உற்றுப் பார்த்தான்… எங்கேயோ பார்த்த முகமாக இருந்ததே தவிர சட்டென நினைவுக்கு வரவில்லை.
“இந்தாடா” என காப்பியை நீட்டியவள்… “யார்ரா.. இது கொழந்த?” என எட்டிப் பார்த்தாள்.
“என் ப்ரண்ட் கொழந்தைம்மா…” என எரிச்சலுடன் சொன்னான்.
“அட… அழகா இருக்கே.…” என மொபைலை வாங்கிப் பார்த்தவள்… “இதைப் பார்த்தா உன் சின்ன வயசு ஞாபகம் வருதுடா.… அந்த புஸு புஸூ கன்னமும், குட்டிக் கண்ணும்.” என்றவளை…
சடாரென துணுக்குடன் நோக்கியவன்… மொபைலை அவசரமாக அணைத்து வைத்தவன்… “ஆமா… சுதா எங்கம்மா..?” எனப் பேச்சை மாற்றினான்.
“குளிக்குறாடா….”
“அப்பாவை எங்க காணோம்…?”
“அப்பா கொழந்தையைத் தூக்கிட்டு கடைக்குப் போயிருக்கார். நீ காபியைக் குடி. நான் டிபனை ரெடி பண்றேன்… நீ குளிச்சிட்டு கிளம்பு… ஆபீஸ் போகணும்ல… என பேசிக்கொண்டே வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தவளை பயப்பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்..
‘அம்மா.. நிஜத்தைத்தான் சொல்லுகிறாளா..? இல்லை.… யதார்த்தமாகச் சொல்லுகிறாளா?’ என குழப்பமாக உணர்ந்தான். மறுபடியும் போட்டோவைப் பார்த்தான்… பயம் அடிவயிற்றை பிசைந்தது. ஒரு முடிவுக்கு வந்தவனாக இன்று அவளைப் பார்த்தே தீரவேண்டும் என்ற உறுதியுடன்… அலுவகத்திற்கு லீவை சொல்லிவிட்டு வேகவேகமாக ரெடியானான் அவளை சந்திக்க.
அங்கே அம்ரிதா என்னும் நச்சு பாம்பு. அவனை வலையில் சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டி கொண்டிருந்தது முகேஷின் விதியா எனத் தெரியவில்லை. முகேஷ் அதில் சிக்குவானா..? இல்லை, அந்த சிக்கலில் இருந்து வெளிவருவானா என்பது கடவுளுக்கே வெளிச்சம்..!
1 Comment
In every episode the last paragraph type of writing is not needed.