பத்துமலை பந்தம் | 36 | காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் | 36 | காலச்சக்கரம் நரசிம்மா

36. ரகசியம் தெரிந்தது!

த்து எஸ்டேட்டின் அடர்ந்த மரங்களை ஊடுருவி அதன் நிலப்பகுதியில் தனது ஆளுமையைச் செய்ய இயலாத காலைக் கதிரவன், கோபத்தில், அந்தப் பிரம்மாண்ட மாளிகையின் மொட்டை மாடியைத் தகித்துக் கொண்டிருந்தான். ஆனால் சுள்ளென்று அடித்த அந்த வெய்யிலை இலட்சியம் செய்யாமல், குகன் மணி சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்தான். இடுப்பில் கரிய நிற ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். மற்றபடி, அவனது தேகம் ஒரு மலைக்குன்றைப் போன்று வெயிலில் சுழன்றாட, அதன் உச்சியில் இருந்து பாயும் அருவிகளைப் போன்று, வேர்வை ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.

மொட்டைமாடியின் ஒரு பக்கமாக கொலுப் படிக்கட்டுகளை போன்று வரிசையாக ஸ்டாண்டுகள் நிற்க, அவற்றில் மண்தொட்டிகளில் விதம்விதமான செடிகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த செடி ஸ்டாண்டின் பின்பாக மறைந்து நின்று, குகன்மணியின் தேகத்தையே அனல் பெருமூச்சுடன் உறுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள், கனிஷ்கா.

‘அடேய் பாவி, குகன்மணி..! நீ சினிமாவுல நடிச்சா, எல்லா ஹீரோக்களையும் பண்டல் செஞ்சு வீட்டுக்கு அனுப்பிடுவே..! உன்னைக் கண்ட நாள் முதலா எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை..! இவ்வளவு கம்பீரமா..? போயும், போயும், அந்த மயூரி மேலே எதுக்கு அவ்வளவு அக்கறை காட்டறே..? உனக்கு ஏத்த ஜோடி நான் இருக்கறப்ப’ என்று மனதிற்குள் அரற்றியபடி நின்றாள்.

இப்போது குகன் மணி சிலம்பத்தை அப்பால் வைத்து விட்டு, கர்லாக்கட்டை ஒன்றை அனாயசமாக ஒரு கையால் தூக்கித் தலைக்கு உயரே சுழற்றிக் கொண்டிருக்க, அவனது தசைகள் முறுக்கேறுவதை கண்டு, கனிஷ்கா பரவசத்துடன் பார்த்தபடி நின்றாள்.

அப்போது மெதுவாக வந்து ஒரு ஓரமாக நின்றாள், மயூரி. குகன் தனது உடற்பயிற்சியை முடிக்கட்டும் என்பது போலக் காத்திருக்க, அவளது வருகையைக் கவனித்து விட்ட குகன், கர்லாக்கட்டையைக் கீழே வைத்துவிட்டு, டவல் ஒன்றை எடுத்து தனது உடலைத் துடைத்தபடி அவளை பார்த்தான்.

“என்னைத் தேடி மொட்டைமாடிக்கு வந்திருக்கேன்னா ஏதோ முக்கியமான விஷயம் பேசப்போறேன்னு நினைக்கிறேன்..!” —குகன் தனது முகத்தைத் துடைக்க, அவனது உறுதியான உடலைப் பார்க்க இயலாமல், தலையைத் தாழ்த்தியபடி பேசினாள் மயூரி.

“என்னோட தம்பி தேஜஸ், அமீரோட வலது கரம், அபிகிட்டே சிறை இருக்கானாம். என்னோட அக்கா கனிஷ்கா ரொம்ப கவலைப்படறா. எப்படியாவது தேஜஸை மீட்கணும்.” —மயூரியின் முகத்தில் கவலைக் கோடுகள்.

“உன் தம்பி எப்படி அவங்ககிட்டே சிக்கினான்..? உன் அக்காவும், உன் தம்பியும் எதுக்குக் கோலாலம்பூர் வந்திருக்காங்க..? அபியும் அவன் ஆட்களும், எதுக்காக மில்லினியம் ஹோட்டல்ல அறை 606ல உன்னைத் தேடினாங்க..? இதுக்கெல்லாம் உங்க அக்காகிட்டே விடை கேட்டியா..?” —குகன் சற்றே காட்டத்துடன் கேட்க, மயூரி என்ன பதில் கூறுவது என்று திணறிப் போனாள்.

கனிஷ்காவும் அவன்து பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனாள்..! தனது அடி மடியிலேயே அவன் கை வைக்கிறான் என்பது ஒரு புறம் இருக்க, அவன் மயூரியிடம் உரிமையுடன் பேசியது அவளை எரிச்சல் கொள்ளச் செய்தது.

மயூரியின் மீது இவ்வளவு அக்கறையுடன் பேசுகிறான் என்றால், உள்ளத்தில் அவள் மீது அவனுக்கு மிகபெரிய அபிப்ராயம் இல்லாமல் இருக்குமா என்ன/.? கூடாது..! இவ்வளவு பெரிய பணக்காரன், கம்பீரன், பேரழகன், இவளுக்குத்தான் சொந்தமாக வேண்டும்.

மயூரி சொல்வதை உன்னிப்பாகக் கவனித்தாள்.

“என்ன செய்யறது குகன்..! நான் அப்படி வளரலை..! ஒரு ஞானப்பழம் கிடைக்கலேன்னு முருகனை மாதிரி குடும்பத்து கிட்டே கோவிச்சுக்கிட்டு போகவும் முடியலை..! அதே சமயம் அப்பா அம்மா தான் தெய்வம்ன்னு பிள்ளையாரை மாதிரி என்னோட அப்பா அம்மாவைக் கொண்டாடவும் விரும்பலை. என்னோட நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பு தான். நான் என் குடும்பத்து உறுப்பினர்கள் கிட்டே காட்டறது பாசம் இல்லே. மனிதாபிமான அடிப்படையிலதான் கருணை காட்டறேன்..! அவங்க மேல மேல தப்பு செஞ்சுக்கிட்டே போறாங்க. ! ஏதாவது ஒரு முயற்சி செய்து, அவங்களைக் காப்பாத்தினா, ஒருவேளை, நல்ல பாதைக்குத் திரும்புவாங்களோங்கிற ஒரு நப்பாசைதான். அதனாலதான், தேஜஸைக் காப்பாத்த நினைக்கிறேன். அவனை காப்பாத்தினா ஒருவேளை, கனிஷ்காவும், தேஜஸும் தாங்க செய்யற தப்பை உணர்ந்து நல்ல பாதைக்கு திரும்பலாம் இல்லே..”

மயூரியின் பேச்சு கனிஷ்காவை நெகிழ்த்தவில்லை. எரிச்சலைத் தான் அதிகப்படுத்தியது. பேசாமல், மயூரி, ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு, மத்தியான சீரியலில் நடிக்க போகலாம். வளவள என்று டயலாக் பேசுகிறாள்.!

துடைத்துக்கொண்ட டவலை தனது தோளின் மீது போர்த்தியபடி, அவளை மதிப்புடன் நோக்கினான் குகன்.

“உனது நம்பிக்கை வெற்றியடைய வாழ்த்துகள்..! சரி, நாம அடுத்த ஞாயிற்றுக்கிழமை நவபாஷாணச் சிலையை தரிசிக்க குனாங் தகான் மலைக்கு போறோமே..! இந்த நேரம் பார்த்து உன் சிஸ்டர் வந்திருக்காளே..! நாம போறதுக்கு முன்னாடி அவள் கிளம்பிடுவாளா..?” —குகன் கேட்க, தயக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

“அபிக்குப் பயந்து அவள் என்கிட்டே அடைக்கலம் கேட்டு வந்திருக்கா.! அவள் பாட்டுக்கு இங்கே இருக்கட்டும். நாம எல்லோரும் போயிட்டு வரலாம்.” — மயூரிகூறினாள்.

“அவளை மட்டும் எதுக்குத் தனியா இங்கே விடணும்..? அவளும் நம்ம கூட தகான் மலைக்கு வந்து மூன்றாவது நவபாஷாணச் சிலையைத் தரிசிக்கட்டுமே..!” —குகன் கூற, கனிஷ்காவின் இதயம் துள்ளிக் குதித்தது.

“குகன்..! யோசிச்சுத்தான் பேசறீங்களா..? மூணாவது நவபாஷாணச் சிலையை அபகரிக்க நினைக்கிற என் குடும்பத்துல, முக்கிய மூளையே கனிஷ்காதான். அவளுக்கு அந்தச் சிலையைப் காட்டறது ஆபத்தில்லையா..? எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவள் நம்மோட வரக்கூடாது..!” —மயூரி கூற, கனிஷ்கா ஏமாற்றத்துடன் பல்லைக் கடித்தாள்.

குகன்மணியே அழைத்துச் செல்லலாம் என்றுகூற, மயூரி அதனைத் தடுக்கிறாள் என்றதும், அவளுக்கு ரத்தம் கொதித்தது. மயூரியின் குரல்வளையைக் கடித்துத் துப்பிவிடலாம் போன்ற வெறி ஏற்பட்டது.

குகன்மணி புன்னகைத்தான்.

“நீ என்ன சொல்றேன்னு நூல் விட்டுப் பார்த்தேன். முதல்முறையாக, புத்திசாலித்தனமாப் பேசியிருக்கே. யாராவது பூனையை மடியில கட்டிக்கிட்டுச் சகுனம் பார்ப்பாங்களா..?” —என்றபடி மாடிப்படிகளை நோக்கி நடந்தான், குகன்.

காலம் மனிதர்களுக்காக காத்திருக்காது. மனிதர்களும் காலத்திற்காக காத்திருக்க கூடாது. அப்போது நிலவும் சூழ்நிலையில் தங்களுக்குச் சாதகமாக ஏதாவது ஒன்று நிகழ்ந்தால் அதை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். அப்படி தனக்கு ஒரு சாதகமான நிலையை குகனுக்கும் மயூரிக்கும் இடையே நடந்த உரையாடலில் கேட்டாள். உடனே அதனை செயல்படுத்தத் துணிந்தாள்..

குணசுந்தரி திக்பிரமையுடன் போனில் கனிஷ்கா கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“ஹவ் இஸ் இட் பாசிபிள் கனிஷ்கா..? திடீர்னு எங்க எல்லோரையும் மலேசியா கிளம்பி வரச்சொல்றே..? எப்படி சாத்தியம்..?”

“இது ஒரு பிரச்னையா..? மத்திய அமைச்சர் ஷைலஜா சேத்தி உன் தோழிதானே..! அவள் மூலமா ஏற்பாடு செய். தாத்தா உட்பட அனைவரும் கிளம்பி வாங்க..! மூணாவது நவபாஷாணச் சிலை நமக்குக் கிடைக்கப் போகுது..!” —என்றவுடன் திகைத்தாள் குணசுந்தரி.

“எப்படி வர முடியும்..? மாமி சத்யவதிக்கு பெயில் கிடைச்சிருந்தாலும், அவளால வெளிநாடு வரமுடியும்னு தோணலை.”

“அதையும் கேட்டுட்டேன். மாமி வெளிநாடு செல்ல எந்த தடையும் இல்லை. ஆனா வழக்கு விசாரிக்கப்படற நேரத்துல ஊர்ல இருந்தா போதும். அதனால எல்லாரும் கிளம்பி மலேசியா வாங்க. அப்புறம், அந்த பிரத்யங்கரா உபாசகி அலங்காரினு ஒருத்தி வந்தாளே..!”

“ஆமாம்..!”

“அவகிட்டே சொல்லி ஒரு வாலிபனை வசியம் செய்யறதுக்குத் தேவையான உபகரணங்களைக் கேட்டு வாங்கிட்டு வா. இங்கே ஒருத்தனை வசியம் செஞ்சு என் காலடியில கிடக்க வைக்கப் போறேன்..!” —கனிஷ்கா கூற, குணசுந்தரி திகைத்தாள்.

“என்னடி விஷயம்..? மிதுன் ரெட்டி மீண்டும் மக்கர் செய்யறானா..? அவனை வசியம் செய்ய போறியா..?”

“அதை வசியம் வேற செய்யணுமா..? ஏற்கனவே போமெரனியன் மாதிரி பின்னாடியே வந்துக்கிட்டு இருக்கான்.! நான் அவனைவிடப் பெரிய ஆளா பார்த்திருக்கேன். பெரிய எஸ்டேட் முதலாளி..!” —கனிஷ்கா கூறினாள்.

“கொஞ்சம் விவரமாச் சொல்லுடி..! நாளைக்கு கிடைக்கிற பலாக்காயை நம்பி கையில இருக்கிற களாக்காயை விட்டுடாதே.” —குணசுந்தரி எச்சரித்தாள்..!

“இப்ப சொன்னே பாருரொம்ப கரெக்ட்..! வெளியில கரடுமுரடா இருந்தாலும், நான் பார்த்திருக்கிற ஆள் பலாக்காய்தான், கம்பீரத்துல..! மிதுன்ரெட்டியோட கம்பீரம் நிச்சயம் களாக்காய்தான்..!” —என்று சிரிக்கத் தொடங்கினாள் கனிஷ்கா.

“கொஞ்சம் விவரமாச் சொல்லுடி..!” —குணசுந்தரி ஆவலுடன் கேட்டாள்.

“எல்லாத்தையும் நேர்ல சொல்றேன்..!” —என்றபடி போனைக் கட் செய்தாள் கனிஷ்கா.

–தொடரும்…

ganesh

2 Comments

  • Super. Kathai mudivinai nokki ppkirathu

  • Looks like nearing climax…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...