வாகினி – 31| மோ. ரவிந்தர்

 வாகினி – 31| மோ. ரவிந்தர்

மனிதனுக்கு நிம்மதி என்பது அவன் உறக்கத்தில் கிடைக்கின்ற நிம்மதியை விடவும் பெரிதாக எங்கும் கிடைத்துவிட்டது.

என்னதான் அனுதினமும் ஏதோ ஒரு தேடலைத் தேடிக்கொண்டிருந்தாலும், கடைசியில் கிடைத்தது, தேடிக் கொண்டிருப்பது எல்லாம் ஒரே முற்றுப்புள்ளி வந்து நிற்பதுதான் வாழ்க்கை.

‘என் மகளே! நானும் உனக்கு நிலையானவள் அல்ல. இன்றுடன் நானும் இறக்கப் போகிறேன், இந்த உலகத்தில் இனி வாழ நான் அருகதையற்றவள். என் சுகந்திற்காகக் குடும்பம், கணவர் என்று பாராமல் தங்கள் வாழ்க்கையும் சேர்த்து சீர் அழித்திருக்கிறேன்.

பெண்களிலே நான் ஒரு தலைக்குனிவு, என் கண்ணீரையும் காயத்தையும் தாங்கி நின்ற கட்டிலையும் களங்கப் படுத்தி இருக்கிறேன். ஒரு தூக்குத் தண்டனை கைதிக்குத் தீர்ப்பு எழுதிய பேனா இறுதியில் உடைக்கப்படுவதைப் போல, இந்த நிமிடம் நான் உடைந்தாக வேண்டும்’ என்று டைரியில் எழுதிக்கொண்டே, பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த வாகினியைப் பார்த்து இருமினாள், கஸ்தூரி.

தாய் இருமுவதைக் கண்டு மருந்து எடுத்து வர வேறொரு அறைக்கு வேகமாக ஓடினாள், வாகினி.

“அம்மா, உனக்குக் காலையிலிருந்தே இருமல் இருமலா இருக்கு. இந்தாம்மா இந்த மருந்தைக் குடி…” என்று கூறிக்கொண்டே, தன் அம்மா கையில் மருந்து பாட்டிலை கொடுத்தாள், வாகினி.

‘எனக்கு இருமல் என்று நினைத்து வாகினி இப்போது மருந்து கொடுக்கிறாள், இன்பமாக அவள் தரும் விஷத்தைக் குடிக்கிறேன். ஆம்! நான் அந்த மருந்து பாட்டிலில் ஏற்கெனவே விஷத்தைக் கலந்துவிட்டேன். அது விஷம் என்று தெரியாது அவளுக்கு, தெரிந்திருந்தால் இந்த மருந்தை எனக்குக் கொடுத்திருக்க மாட்டாள். நான் செய்த பாவத்தை எல்லாம் அவள் கைகளாலே கழுவி கொண்டு இருக்கிறேன்.

‘இந்தக் கடிதத்தை எழுதுவதற்குப் பதிலாக, அவளிடம் நான் இறக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கலாமே என்று ஒரு கேள்வி எழும். இது அவளுக்கு என்னவென்று தெரியாத வயது. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று சொன்னாள், அவளுக்கு என்ன தெரியும்? அதனால்தான் எதுவும் அவளிடம் சொல்லாமல் இதை எழுதுகிறேன்.

எனக்கு இப்போது உறக்கம் வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் நான் இறக்க போகிறேன் என்று நினைக்கிறேன். என் சமூகமே, என் மகளுக்காவது எந்த ஒரு தீங்கும் செய்யாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தச் சமூகத்தின் நீதி தெரியாது அவளுக்கு.

அவளை இந்தச் செயல் செய்யத் தூண்டியதற்கு என்னையும், எனக்குத் தீர்ப்பு எழுதிய என் பேனா அன்பு மகளையும் மன்னித்துவிடுங்கள்.

இப்படிக்கு,

இந்தச் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டாள் – என்று

கையில் வைத்திருந்த டைரியில் எழுதிவிட்டு, அதைக் கட்டில் மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்தாள், கஸ்தூரி.

சில நிமிடம் வரை வாகினியின் முகத்தையே, ஏதோ ஒரு யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள், கஸ்தூரி.

“வாகினி… நீ, அப்பா எப்ப வருவாரு… எப்ப வருவாருன்னு கேட்டுக்கிட்டே இருந்தியே? நான் சாமிக்கிட்ட போய் அப்பாவைக் கூட்டிக்கிட்டு வந்துடறேன். அதுவரைக்கும் தம்பி, தங்கைகளை நீ பத்திரமாகப் பாத்துக்கிறியா?”

“ஓ! அதுக்கு என்னம்மா? நீ போய் அப்பாவைக் கூட்டிக்கிட்டு வா ! நான் தம்பி, தங்கையைப் பார்த்துக்கிறேன்” என்று மழலை பேசும் மொழியால் கூறினாள், வாகினி.

தாயின் அன்பில் ஆயிரம் முத்தங்கள், வாகினியின் கன்னத்தை அலங்கரித்தது.

“சரிம்மா, நீ போய் விளையாடு. அம்மாவுக்குத் தூக்கம் தூக்கமா வருது. நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என்றாள், கஸ்தூரி.

கபடம் அறியாத பிஞ்சு மகள், அம்மா உறங்கப் போகிறாள் என்று கையினால் “டாட்டா… டாட்டா…” என்று கூறிக்கொண்டே விளையாடுவதற்கு வெளியே ஓடினாள், வாகினி.

கஸ்தூரி, அப்படியே கட்டில் மீது பெரும் உறக்கத்தோடு விழுந்தாள்.

இப்பொழுது அவளின் உயிர் அந்தப் பொய் உடலைவிட்டு மெல்ல பறந்து கொண்டிருந்தது.

தகவலறிந்து, சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரிகள் தன் வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தி கொண்டிருப்பது உறக்கத்தில் இருந்த வாகினியின் நினைவலைகளில் வந்து வந்து சென்றது.

என்னதான் நாம் நிகழ்காலத்தில் இருந்து கொண்டிருந்தாலும், நம்முடைய வாழ்க்கை கடந்தகால வாழ்க்கையை ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு விஷயத்தைத் தேடிக்கொண்டு தான் இருக்கிறது. தன் அத்தை மரகதம் வீட்டில், தன் தாய்- தந்தையர் பெரும் நினைவுகளுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்த வாகினியை. அடித்து மிதித்துப் பெரிதாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்தது, அந்தக் கனவலைகள்.

அவள் தாய் கஸ்தூரி கட்டில் மீது இறந்து கிடப்பதும், ஊரே தாய்க்காக அழுது புலம்பிக் கதறுவதும். திக்குத் தெரியாத காட்டில் மூன்று பிள்ளைகளின் சிறுவயது கூக்குரல் வாகினியை அலற செய்தது.

“ஆன்ட்டி, எங்க அம்மாவுக்கு நான்தான் மருந்து கொடுத்தேன். அம்மா இன்னும் தூக்கத்தை விட்டு எழுந்திருக்கலை… அவங்களை எழுப்புங்க ஆன்ட்டி… எழுப்புங்க…” என்று கனவில் தோன்றிய காவல்துறையிடம் பெரும் சத்தத்துடன் புகார் தெரிவித்துக்கொண்டு நிகழ்கால வாழ்க்கைக்கு அலறி அடித்துக்கொண்டு எழுந்தாள், வாகினி.

உண்மையில் இது கடவுள் மீது பழி போட முடியாத ஒரு சுமை, பாவம்.

வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்கக்கூடாத பெரும் தண்டனை.

சிறுவயதிலேயே தன் தாய்- தந்தையரை இழந்து நிர்க்கதியாக நிற்கும் காட்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், வாகினியின் வாழ்க்கையில் இன்று அதுதான் அரங்கேறி இருக்கிறது.

வாகினி அப்படியே அலறியடித்துக்கொண்டு எழுவதைக் கண்ட மரகதம் அடுப்படியில் இருந்த வனிதாவுக்கு ஒரு பெரும் கூக்குரல் கொடுத்தாள்.

“வனிதா… சீக்கிரம் கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா. அக்கா தூக்கத்துல அலர்றா..” என்று கூறிக்கொண்டே வாகினி இருந்த இடத்திற்கு ஓடினாள், மரகதம்.

தனது கைகளை இரண்டு பக்கம் படுத்திருந்த பாய் மீது ஊன்றி வைத்துக்கொண்டு, கால்களை நீட்டிக் கொண்டு, உடல் முழுதும் வெடவெடத்து வியர்த்துக் கொட்ட பேய் அறைஞ்சதைப்போல் அமர்ந்திருந்தாள், வாகினி.

அதற்குள் வனிதா அங்குத் தண்ணீர் எடுத்தவர “இந்தாம்மா இந்தத் தண்ணியைக் கொஞ்சம் குடி” என்று வாகினிக்குத் தண்ணீர் கொடுத்தாள், மரகதம்.

“அது ஒண்ணுமில்லடா, அக்கா ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு வந்திருக்கா. அப்பா- அம்மாவை பற்றி நினைச்சு இருப்பா. அதான், இப்படிப் பயந்திருக்கா.” என்று வனிதாவிடம் கூறிவிட்டு “எதற்கும் பயப்படாதம்மா. உங்க அப்பா- அம்மா கடவுள் மாதிரி உன்னோட பக்கத்துல இருக்காங்க” என்று வாகினியைச் சாந்தப்படுத்தினாள், மரகதம்.

“அக்கா, நம்மளோட வாழ்க்கையில நடந்தது நடந்ததாக இருக்கட்டும். திரும்ப அதை எல்லாம் நினைச்சு என்ன ஆகப்போகுது? இனி நம்ம வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போம்” என்று வாகினிக்கு ஆறுதல் கூறினாள், வனிதா.

‘அக்கா, இத்தனை வருஷங்களா வனவாசம் போயிவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறாளே. அவள் வாய்க்கு ருசியாக ஒரு வேளையாவது நல்லா சாப்பிடட்டுமே’ என்ற எண்ணத்துடன் ஆட்டுக்கறியுடன் வீட்டுக்குள் நுழைந்தான், பாபு.

“அம்மா வாகினி, உனக்காகச் சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் சாப்பிடம்மா” என்று பாசத்துடன் வீட்டுக்குள் நுழைந்தாள், திலகவதி.

இந்தப் பெரும் படையின் பாசம் வாகினியை என்னவோ செய்து விடுவதைப் போல் இருந்தது.

‘வாழ்க்கையில் என் தாயைக் கொலை செய்துவிட்டுச் சிறைவாசம் சென்று திரும்பி வந்திருக்கிறேன். எனக்கு இது தேவைதானா? நீங்கள் தரும் பாசத்திற்கு நான் தகுதியா? நீங்கள் யாராவது என்னைக் கொன்று விடுவீர்கள் என்று நினைத்தால், இப்படிப் பாசத்தில் அணைக்கிறீர்கள்’ என்று எண்ணித் தவித்தாள், வாகினி.

“அக்கா, எதைப் பத்தியும் நீ நினைக்காதே! நீ தனியாளாக அந்த ஜெயிலுக்குள்ள பல கஷ்டத்தை அனுபவிச்சிட்டு வந்திருக்க. நாங்க எல்லாரும் உன்னை நெனச்சு தினம் தினம் கஷ்டத்தை அனுபவிச்சு செத்துக்கிட்டு இருக்கோம்” என்று கூறிவிட்டு அழுதாள், வனிதா.

“அப்படியெல்லாம் நான் எதையும் நினைக்கல” என்று வனிதாவைக் கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள், வாகினி.

“நீ அவங்கள நினைக்கிறீயோ இல்லையோம்மா, தினம் தினம் உன்னோட தம்பி தங்கச்சியும், உன்ன நெனச்சு அழுது புலம்பாத நாளே கிடையாது. அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் அது தெரியும்” என்று கூறிவிட்டு, மரகதமும் அழ ஆரம்பித்தாள்.

“என்ன பெத்த ராசாத்தி, நீ அழுது கண்ணீர் வடிச்சதெல்லாம் போதும். ஒருவாய் சாப்பிடு, மத்ததை அப்புறம் பார்த்துப்போம்” என்று அழுதுக்கொண்டே வாகினிக்கு ஒரு கைப்பிடி சாதத்தைப் பிசைந்து ஊட்டினாள், திலகம்.

‘இவர்களை இந்தத் துக்கத்திலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டு, திலகத்தைப் பார்த்து மெல்ல கேள்வி எழுப்பினாள், வாகினி.

அம்மா, மகாலட்சுமி அக்கா இப்ப எப்படி இருக்காங்க. கபிலன் மாமாவுக்கும் அக்காவுக்கும் கல்யாணம் எப்படி நடந்தது. இப்போ அவங்க எங்க எப்படி இருக்காங்க?” என்று கேட்டாள்.

தொடரும்…

< முப்பதாம் பாகம் |  முப்பத்தி இரண்டாம் பாகம் >

கமலகண்ணன்

1 Comment

  • கஸ்தூரி மரணம் வருத்தம் அளிக்கிறது.ஆனால்,வாகினிக்கு நல்லது நடக்கும் என்று எண்ணுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...